பழமையான அரிய தமிழி தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தமிழக வரலாற்றையே மாற்றக்கூடிய தமிழி கல்வெட்டு கிடைத்துள்ளது.

(செய்திகளை உடனுக்குடன் அறிய நம்முடைய telegram குழுவில் இணைக:
https://t.me/teamheritager)

இந்த கல்வெட்டில் “ஏகன் ஆதன் கோட்டம்….” என தொல் தமிழ் எழுத்தான தமிழி எழுத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள், “ஏகநாதன் எனப்படும் அரசன் அல்லது குடித் தலைவனின் ஆட்சிப் பகுதியாக இருக்கலாம்” என அறியப்படுகின்றது.

மதுரையை அடுத்துள்ள கிண்ணிமங்கலத்தில், அமைந்துள்ள ஏகநாதன் மடத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் எனப்படும் தமிழ் பிராமி கல்வெட்டு கொண்ட தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

படம்: Ananthan Sannasi

பன்னெடுங் காலமாகவே தமிழகத்தில் நடுகற்களை அமைக்கும் பழக்கம் உள்ளது. புலிமான் கோம்பை மற்றும் தாதகாபபட்டி ஆகிய இடங்களில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய நடுகற்கள் சுமார் கிமு 300 வரையிலான காலகட்டத்தை கொண்டுள்ளது.

தமிழ் பிராமி அல்லது தமிழி கல்வெட்டில் முதல்முறையாக அரசின் எல்லையைக் குறிக்கும் “கோட்டம்” எனும் சொல் காணப்படுகின்றது.

“தமிழகத்தில் கிடைக்கும் தமிழ் கல்வெட்டுகளில் “ஆதன்” எனும் சொல் மிக அதிக அளவில் பயன்பட்டு வந்துள்ளது. இதன் காலம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என பாறை ஓவிய ஆய்வாளர் திரு காந்திராஜன், C ராஜவேல் மற்றும் ஆனந்தன் ஆகியோர் கொண்ட குழு கூறியுள்ளது‌.

வட்டெழுத்து கல்வெட்டு

இந்த தமிழ் பிராமி கல்வெட்டு கிடைத்த அதே இடத்தில் பிரக்காலத்தில் தோன்றிய  வட்டெழுத்து உடன் கூடிய கல்வெட்டும் கிடைத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள செய்தி, “இறையிலியாக ஏகனாதன் பள்ளிபடை மண்டளி யீந்தார்…” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் ஏகநாதர் என்பவருடைய நினைவு கோயிலுக்கு சில கொடைகள் வழங்கியது பற்றி கூறுகிறது. இக்கல்வெட்டுகள் முன்பு கூறிய முற்கால தமிழ் பிராமி கல்வெட்டோடு வரலாற்று தொடர்புடையதாக இருக்கலாம்.

தமிழகத்தில் தூண் கல்வெட்டில் தமிழி எழுத்துக்கள் என்பது மிகவும் ஒரு அரிதான ஒன்று எனவே, இதனைப் பற்றி, மூத்த கல்வெட்டு அறிஞர் திரு வேதாசலம் அவர்கள், “தமிழி எழுத்துடன் கிடைத்துள்ள, இந்த தூண் கல்வெட்டினை ஒரு முக்கியமான தொல்லியல் அடையாளமாக நாம் எடுத்துக் கொண்டு, இப்பகுதியைத் தொல்லியல் துறையினர் முழுமையாக அகழாய்வு செய்தால் பல புதிய வரலாற்று தடயங்களை நாம் கண்டுபிடிக்கலாம்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைப் பற்றி மதுரையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுதர்சன் பாஸ்கர் கூறியதாவது, “அசோகனின் வெற்றித்தூண்களான கிமு 300க்கும் கிரேக்க வைணவ கல்வெட்டான கிமு100க்கும் இடையில் எழுத்து அமைப்பு கொண்டு கிமு 200 என கணக்கிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொடுமணல் அகழாய்வு கிமு 400 கீழடி கிமு 580 என கொண்டுபோனலும், பண்டைய எழுத்துமுறைகள் பலகாலமாக மறுஆய்வு செய்யப்படாமல் இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. கொடுமணல் கீழடி தமிழிகளைக் கொண்டு விரைவில் மறு ஆய்வு  செய்ய வாய்ப்புள்ளது. அதன் மூலம் பல அகழாய்வுத் தளங்களின் காலங்களே கூட மாற வாய்ப்புண்டு.

அசோகனது தூணும் கிரேக்கனது தூணும் முழுமையாக செதுக்கப்பட்டு வழுவழுப்பு  (Fine polish) செய்யப்பட்ட பெரிய தூண்கள். சமீபத்தில் மதுரையில் கிடைத்துள்ள தமிழி கற்தூண்  வழுவழுப்பு செய்யப்படாத ஒன்று எனினும் கற்தூண்களில் தமிழி எழுத்துப்பொறிப்பது இதுவரையில் தமிழகத்தில் கிடைக்காத ஒன்றாக இருந்த நிலையில், தற்போதைய கண்டுபிடிப்பால், இது இந்திய முழுவதிலும் இருந்துள்ள ஒரு வழக்கம், என்பதை உறுதி செய்கிறது.

இதுவரை கவனிக்காமல் காணாமல் ஆக்கப்பட்ட தூண்கள் எவ்வளவோ எனத் தெரியவில்லை, ஆனால் இனி இவை போன்ற கற்தூண்களும் அதிகம் வெளிவரும் என நம்பிக்கை உள்ளது. தமிழகம் முழுக்க அகழாய்வுகளில் பானைகளில் கிடைக்கும் சொல்லான “ஆதன்” என்ற பெயரே இங்கும் கிடைக்கிறது.”கோட்டம்” என்ற சொற்றொடரோடு கிடைப்பது சிறப்பு. இக்கல்வெட்டு நமது பழைய புரிதல்களை மாற்றியமைக்க வழிவகுக்கும் என்றே நம்புவோம்”.

(செய்திகளை உடனுக்குடன் அறிய நம்முடைய telegram குழுவில் இணைக:
https://t.me/teamheritager)

Leave a Reply