முத்தரையச் சோழர் வரலாறு – சி. சுந்தரராஜன் சேர்வை

1977 ல் நான் நூல் நிலையங்களில் தென்னிந்தியக் கோயில்களின் கல்வெட்டுக்கள் நூலினைப் படிக்கும் போது தஞ்சை நாயக்கர் வெளியிட்டு இருந்த ஒரு கல்வெட்டில் ” வளைய சோழன் இருப்பு ” என்று ஒரு ஊரினை குறித்திருப்பதை காணநேர்ந்தது . சோழர்களை இப்படியும் கல்வெட்டுகளில் நாயக்கர்கள் கூறி இருந்த செய்தி என்னை சோழர் வரலாற்றையும் , அவர்களின் குடிவழியினரையும் ஆராயத் தூண்டியது . அதன் பயனாய் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் செப்புப்பட்டயத்தில் ” கரிகால் சோழன் குழுவினராகிய சூரிய குல முத்தரையர் ” என்று குறிக்கப்பட்டிருப்பதை திரு . புதுகை இரா . திருமலை நம்பி மூலம் அறியவும் நேர்ந்தது . இவ்விரு தடயங்களின் பேரில் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக எனக்கு பல புதிய செய்திகளும் , உண்மைகளும் தெரியவந்தன . தொடர்ந்து சோழர் வரலாற்றை படித்தும் , கல்வெட்டு ஆவணங்களை ஆராய்ந்தும் , செப்புப்பட்டயங்களைத் தேடி ஆராய்ந்தும் எனது முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்ததின் பேரில் சோழர்களின் வரலாற்றில் கி.பி. 530 க்கு உரிய நந்திவர்ம சோழன் குடும்பத்தில் தொடங்கி கி.பி. 1535 ல் தஞ்சை வீரசேகர சோழனிடமிருந்துநாயக்கர்கள் ஆட்சியைக் கைப்பற்றியது வரையில் உள்ள 1000 ஆண்டுகளுக்குரிய மரபுப்பட்டியலை தயாரிக்க முடிந்தது . ரே நாட்டுச் சோழர் , பல்லவர்காலத்து முத்தரையச் சோழர் , பிற்காலச் சோழர் , கொங்கு சோழர் , விஜய நகர அரசர்கள் காலத்துச் சோழர்
அப்பட்டியல் தொடர்ச்சியாக தயாரிக்கப்பெற்றது . அம்மரபுப்பட்டியலின் படி இந்நூலினை நான் எழுதியிருக்கிறேன் .

முத்தரையர் என்கிற வழங்கு பெயர் தொன்மையான அரையர் குலத்தவர் என்கிற பொருளை வழங்கி நிற்கிறது . அப்படி எனில் அவர் எந்த அரசமரபில் தொன்மையானவர் என்று அது குறிப்பிடுகிறது என்பதே நமது ஆய்வு . முத்தரையரைப் போன்று பாண்டியர் என்கிற சொல்லும் பண்டைய அரையர் என்றும் , பண்டைய அரச குலத்தவர் என்றும் கூறிநிற்கிறது . அவர்களையும் எந்த குடிவழியில் வந்தவர் என்றும் ஆராயவேண்டியுள்ளது . பாண்டியர் மீனவர் குடிவழியில் வந்தவர் என்று மிக எளிதாகக் கூறிவிடமுடியும் . அதற்கு ஆதாரம் நிறைய உள்ளன . ஒரு புலவர் தென்திசையில் இருந்த பாண்டியரைக் குறிக்கவும் , வடதிசையில் இருந்த கன்னட மற்றும் ஆந்திரர்களைக் குறிக்கவும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளதை பார்க்கலாம் .

“தென்பரதவர் மிடல் சாய வடவடுகர் வாளோட்டிய ” என்றுக் குறிப்பிடுகிறார் .

சோழன் இளஞ்சேட்சென்னி பாண்டியரையும் , வடுகரையும் வென்றதையே இவ்வாறு குறிப்பிடுகிறார் . எனவே பாண்டியர் பரதவ குலத்தவர் என்றும் , மீன் கொடி அவர்களுகடையது என்றும் கூறிவிடலாம் . ஆனால் சோழ நாட்டை ஆண்டுவந்த முத்தரையர் எக்குடியினர் என்பதை சற்று ஆழ்ந்து ஆராய்ந்துதான் கூறமுடியும் .

கன்னட நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மக்கள் சேர , சோழ , பாண்டிய நாட்டை கி.பி. 275 வாக்கில் கவர்ந்து ஆளத்தலைப் பட்டபோது , சோழநாட்டில் சோழர் அரசிழந்தனர் . பாண்டியர் இலங்கைக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர் . சேரரும் மலைக்காடுகளில் சென்று மறைந்து வாழ்ந்தனர் . இந்த நிலை கி.பி. 530 வரை நீடித்தது . கன்னட நாட்டாரின் ஆட்சி தமிழகத்தில் நடந்த போது , திருப்பதிக்கு வடக்கே இருந்த சோழர்கள் மட்டும் எஞ்சி இருந்து அப்பகுதிகளில் தொடர்ந்து அரசர்களாய் இருந்து வந்தனர் . கரிகால் சோழன் காலம் முதலே வடக்கே கிருஷ்ணா ஆறு வரையுள்ள நாட்டை சோழர்கள் ஆண்டு வந்துள்ளனர் . அவர்கள் ஆண்ட அந்த பகுதியை சூளியநாடு ( சோழ நாடு என்றும் அரையர் நாடு என்றும் வரலாற்றில் அழைக்கப்பெற்றுள்ளனர் . காஞ்சீபுரத்திற்கு தெற்கே உள்ள பகுதியை மட்டுமே கன்னட நாட்டுக் கலகக்காரர்கள் பிடித்து ஆண்டனர் . காஞ்சிபுரத்திற்கு வடக்கே உள்ள பகுதியை கரிகால் சோழன் வழிவந்தவர் என்று தங்களைக் கூறிக்கொண்ட அரையர் நாட்டு சோழர்கள் கன்னடரின் இடையீட்டுக் காலத்திலும் தொடர்ந்து ஆண்டு வந்தனர் . இவர்களின் அனேகக் கல்வெட்டுக்களில் தங்களை “ முத்துராஜா ” என்று குறிப்பிட்டதோடு சோழர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர் . ” அரையர் நாடு ” என்று அவர்கள் குறிப்பிட்ட நாடு கடப்பை , கர்நூல் , நெல்லூர் , சித்தூர், புத்தூர், பெல்லாரி , அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது . பிற்காலத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் அவர்கள் பரவி அரசர்களாக இருந்துள்ளனர் . வட கன்னட மாவட்டத்திலும் அவர்கள் பரவியிருந்தனர் .

ரேநாட்டுச் சோழர்கள் தங்களைக் குறிப்பிடும்போது தாங்கள் காவிரிக் கரையிலிருக்கும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும் , காவிரிக்கு கரைகட்டிய கரிகால் சோழன் வழிவந்தவர் என்றும் , மந்தார மரம் என்கிற ஆத்திமரத்திற்கு உரியவர் என்றும் , சூரிய குலத்தினர் என்றும் விடாது பல செப்பு பட்டயங்களில் கூறி வந்துள்ளனர் . சில பட்டயங்களில் ராமன் காலம் முதல் அரசாண்ட சூரியன் என்பவர் முதற்கொண்ட முழுப்பட்டியலையும் கூறி நிற்கின்றன . அரையர் நாட்டுச் சோழர்கள் என்கிற இவர்களை சற்று திரிந்த நிலையில் ரே நாட்டுச் சோழர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள் . இந்த ரேநாட்டுச் சோழர்கள் அப்பகுதியியைச் சுற்றி இருந்த எல்லா அரசமரபாருடனும் மணவுறவில் இருந்துள்ளனர் . கங்கர்கள் , மேலைச்சாளுக்கியர், கீழைச்சாளுக்கியர், கடம்பர்கள் , பல்லவர் என அப்பட்டியல் நீளும் , ஆனால் பல்லவரோடு அவர்களுக்கு இருந்த உறவு கொஞ்சம் அதிகம் எனலாம் .

Download: Click Here