தாரைமங்கலம் எனும் கலைக்களஞ்சியம் – மரபுநடை

சேலம் மாவட்ட தமிழக மரபுசார் தன்னார்வலர்கள் (Tamilnadu Heritagers Society) மற்றும் சேலம் வரலாற்று சங்கம் (Salem Historical Society) இணைந்து நடத்தியத் தாரமங்கலம் மரபு நடை எங்கள் இயக்கத்தின் குறிப்பிடதக்க நிகழ்வாக அமைந்தது. மே மாதம் 8ஆம் தேதியன்று நிகழ்ந்த இம்மரபு நடையில் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், இளமீஸ்வரர் கோவில், எண்கோண குளம், கோவிலுக்கு ஆயிரம்கால் மண்டபம் எழுப்ப கொண்டுவரப்பட்ட முழுமைப் பெறாத தூண்களை கண்டு அதன் வரலாற்றை விவாதித்தோம். காலை ஏழரை மணியளவில் துவங்கிய நிகழ்வில், தொல்லியல் அறிஞர். திரு. செல்வராஜ் அய்யா மரபு நடைஎன்றால் என்ன என்பதை பற்றியும், அய்யா அவர்களின் தொல்லியல் அகழ்வாய்வு அனுபவங்கள், காவிரிப்பூம்பட்டினம் கடல்சார் தொல்லியல் ஆய்வுகள் பற்றியும் பேசினார். பின்பு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தங்களைப்பற்றிய சுய விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர். தாரமங்கலம் கோவில் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது யாளியின் வாயில் உருளும் கல் தான் . ஆனால் அதைத் தவிர சிறப்புகளைக் கொண்டது என செல்வராஜ் அய்யா வரிசைப்படுதினார்.

  1. இதன் கலை கெட்டி முதலி கால பாணி எனப்பட்டாலும், அதற்கு முன்பே அரசாண்ட ஹொய்சாள மன்னர்கள், சோழமன்னர்கள் அளித்த கொடைபற்றிய கல்வெட்டு உள்ளது.
  2. தலையை காணிக்கையாக அளித்த வீரனின் தலைபலி கல்.
  3. இரும்பு சங்கலி போன்றே கல்லால் ஆனா சங்கிலி வளையங்கள்
  4. பழைய கோவில் கலை முறைக்கு சான்றாக இருக்கும் ஒன்பது கற்கள் கொண்டு கட்டப்பட்ட சிறு விநாயகர் கோவில். இதன் கலசம், பழைய கட்டிடகலை முறைப்படி, கல்லில் கலசம் உருவாக்கப்பட்டுள்ளது.
  5. சுழலும் மூன்றடுக்கு கற்தாமரையில் தேன் அருந்தும் கிளிகள் கொண்ட அழகிய சிற்பங்கள் மூன்று கருவறைக்கு முன்புறமாக உள்ளன
  6. இக்கோவிலிலுள்ள சிலைகளும் அவற்றின் பின் இருக்கும் திட்டமிடல்.
  7. கோவில் கோபுரத்திலும், நந்தி மண்டபத்திலும் சேர சோழ பாண்டியர் போன்ற தமிழக மன்னர்களின் சின்னங்களாக இருக்கும் வில், புலி மற்றும் மீன் இலட்சினைகளோடு தங்கள் வாடாத மாலையும் வண்ணத்தடுக்கு (பாய்) இலச்சினைகளையும் இணைத்து இருக்கும் கெட்டி முதலிகளின் அரசு சின்னமும் IMG_9968
  8. கோவில் உள்ள பிரகாரத்தில் வரிசையாக வைக்கபட்டுள்ள அழகிய பெரிய சிற்பங்கள்
  9. மன்மதன் பார்வையில் கூட படாமல் மறைந்து இருந்து, மன்மதன் தவிப்பதை பார்த்து ரசிக்கும் ரதியின் சிற்பம்.
  10. புராதான கதைகளைக் கூறும் சிற்பங்களுடன் தன் மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு கையில் கூடையுடன், மலைவாழ் பெண் ஒருத்தி வேலைக்கு செல்லும் காட்சி என அக்கால மக்களின் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்ற சிற்பதொகுதிகள்.
  11. எங்கே நேரடியாக தாக்கினால் தன்னுடைய பாதி பலம் போய்விடுமோ என்று வாலியை மறைந்து தாக்கும் ராமனைத் தத்ரூபமாக இரு தூண்களில் அமைத்துள்ள பாங்கு இக்கோவிலைக் கட்டிய வல்லுனரின் கலைத்திறனுக்கு எடுத்துகாட்டாக உள்ளது.
  12. இக்கோவிலின் இடப்புறத்தில் உள்ள அவிநாசியப்பர் ஆலயத்திலுள்ள சிற்பதொகுதிகள் வியப்பானவை. அது மாலிக்கப்பூரின் படையெடுப்பை நினைவுப்படுத்தும் விதமாக போர் காட்சிகள், பொன்னும் பொருளும் எடுத்துச் செல்லும் யானைகள், அதனை துரத்திச் சென்று மீட்கும் வீரர்கள், சுமையில்லாமல் வெறுமானே நடந்து செல்லும் யானை என விறுவிறுப்பான “பொருள் மீட்டல்” படலத்தைக் கூறுவனவாக உள்ளன.
  13. கோவிலின் கொடுங்கை எனப்படும் கூரை அமைப்பும், அதில் அமைத்துள்ள குரங்கு சிற்பங்கள் நம்மை மிரட்டவருவது என பாவனைச் செய்வது என்று பல வியத்தகு சிறப்புகளை உடையது இக்கோவில்.

சோழ நாட்டில் தமிழரின் கட்டடக் கலைக்கும் சிற்ப கலைக்கு எவ்வாறு தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளதோ அதே போல், கொங்குநாட்டின் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் உள்ளது. மேலும் நம் முன்னோர்களின் வானயியால் அறிவுக்கு சான்றாக இக்கோவில் உள்ளது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் சூரியனின் கதிர்கள் நேரடியாக இக்கோவில் மூலவராக இருக்கும் சிவ லிங்கத்தின் மீது படுகிறது. மேலும் இங்குள்ள சிற்பங்கள் வெறும் புராணங்களை மட்டும் கூறுவதாக அமையாமல், புராணக் கதைளோடு பொருந்தும் விதமாக அதன் அமைவிடத்தில் வடிக்கப்பட்டுள்ளது. விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், பிச்சாடனர் கதையில் வரும் ரிஷிபத்தினி பிச்சாடனர் ரூபத்தில் இருக்கும் சிவனைப் பார்த்துவுடன் தன்னிலை அறியாமல் சேலை விலகி மயங்குவது. ரதியைத் தேடும் மன்மதன் சிலையில் மன்மதனின் பார்வையில் ரதி படாமல் மறைந்து இருப்பது, ரதி மன்மதன் அறியாமல் அவனை ரசிப்பது என்பது. வாலியை வதம் செய்யும் ராமன் ஒளிந்திருக்கும் இடம்போன்றவைகள் ஒரே இடத்தில் வெறும் சிற்பத் தொகுப்பாக அமையாமல், அவரவர் சிலைகள் உள்ள இடத்தில் நாமும் நின்று பார்த்தல் அந்தக் காட்சியில் நுழைந்து நாமும் நேரடியாக காணுவது (4D) போல மற்ற சிலைகளின் அமைவிடம் உள்ளது. இங்கே சிலைகள் வெறும் காட்சிப்படுத்தவில்லை, அவை தங்களுக்குள் தினமும் உறவாடிக்கொண்டிருக்கின்றன. மருத்துவர் திரு. பொன்னம்பலநாதன் அவர்கள் ஏற்பாடு செய்த காலைச் சிற்றுண்டிக்குப் பின்பு, சரியாக எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட திருக்குளத்தைக் காணச் சென்றோம். நவீன கட்டணக் கழிப்பிடத்திற்கு அருகில் செப்டிக் டேங்கு இருக்கவேண்டிய இடத்தில் அழகாய் வீற்றிருந்தது தமிழரின் பெருமைச் சொல்லும் அக்குளம். பின்பு இலமீஸ்வரர் என்றழைக்கப்படும் ஏழம்பீஸ்வர் கோவிலுக்கு சென்று ஆலமர நிழலில் அமர்ந்து மோர் அருந்திக்கொண்டே , “காலனி ஆதிக்க கால சேலம்” என்ற தலைப்பில் பேசிய சேலம் வரலாற்று சங்க பொறுப்பாளர் திரு. பர்னபாஸ் அவரின் உரையினைக் கேட்டோம். இதுவரை சேலம் வரலாற்று சங்கம் நிகழ்த்திய அரும் பணிகள் பற்றியும், சேலத்திலுள்ள மரபு சின்னங்கள் மீட்பு பற்றியும் விளக்கினர். அவரைத் தொடர்ந்து வரலாற்று அறிஞர் திரு. மணி அவர்கள், சேலம் மாவட்டத்தின் பழங்கால வரலாறு முதல், தற்கால வரலாறு வரை விளக்கினார். நோக்கவுரையாற்றிய திரு. ராஜசேகர் பாண்டுரங்கன், தமிழகம் முழுவதும் திருப்பணி என்ற பெயரில் நடைபெறும் பழைங்கால சிலைகள் கடத்தல், பழங்கால மன்னர்களின் கல்வெட்டுகளை மறைத்து சிமென்ட் பூசி கல்வெட்டுகளை அழிப்பது , முறையாக எதுவும் ஆராயாமல் கோவில் கட்டடம் பாதித்துள்ளது எனக்கூறி முழுக் கோவிலையும் இடித்து தரைமட்டம் ஆக்குதல், நில தானங்கள் உள்ள கல்வெட்டுகளை அழிப்பது, தொல்லியல் சின்னங்கள் உள்ள இடங்களை கையகப்படுத்துவது போன்ற செயல்கள் பற்றியும் விளக்கினர். ஊருக்கு ஊரு எப்போதோ ஒருமுறை திருப்பணி நடந்தாலும், இம்மாதிரியான முறையற்ற செயல்கள் தமிழகம் முழுவதம் முழு வீச்சில் பல இடங்களின் நடந்து தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது என்றும், இதன் எண்ணிக்கை மிகப்பெரியது என்றும் கூறினார். மேலும் இதனை உள்ளூர் வரலாற்று ஆர்வலர்கள் முறையாக புகைப்பட ஆவணப்படுத்தி, திருப்பணிகளை தொடர்ந்து கவனித்து வரவேண்டும். முறையற்ற பணி நடைபெறுவதாக இருந்தால் திரட்டப்பட்ட ஆதரங்களுடன் அதனைப்பற்றி சம்பத்தப்பட்ட நபர்களுக்கு (தொல்லியல்துறை, இந்து அறநிலையத் துறை, மற்றும் மாவட்ட ஆட்சியர்) உடனே புகார் அளிக்கவேண்டும் என்று கூறினார். மேலும், தொழில் நுட்பம் வளர்ச்சியுற்ற இக்காலத்திலும் நினைவுச்சின்னங்களை புகைப்பட ஆவணப்படுத்த முயற்சி எடுக்காமல் இருப்பதினால் நம் கண்முன்னே அவற்றை இந்நூற்றாண்டோடு இழக்கப்போகின்றோம் என்று விளக்கினார். மரபு சின்னங்கள் அழியாமல் காக்கவேண்டும் என்றால் அதனை தமிழக அளவில் முறையாக புகைப்பட ஆவணம் எடுக்க கூட்டு முயற்சியாக செயல்பட வேண்டும் என்றும். அதன் மூலம் பலருக்கும் பாரம்பரிய சின்னங்கள் பற்றிய அறிவையும், அதனைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திட இயலும் என்றும் கூறினார். நிகழ்வின் இறுதியில் தமிழக மரபுசார் தன்னார்வர்களுக்கு கலந்துகொண்ட சான்றோர்களும், நண்பர்களும், சேலம் வரலாற்று சங்கமும், தங்களால் ஆனா பல உதவிகளை வழங்குவதாக அன்புடன் கூறினார். சுமார் 25 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வு ஆசிரியர் திரு. கலைச்செல்வன் மற்றும் நண்பர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் கடும் முயற்சியால் சிறப்பாகவும், மனதிற்கு நிறைவாகவும், மிகப் பயனுள்ளதாவும் அமைந்தது.   எழுத்து: வித்யா லட்சுமி ராஜசேகர்

Leave a Reply