கீழடி தொல்பொருள் கண்காட்சியகம்

கீழடியில் நடந்த நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களை மதுரை தமிழ்ச் சங்கத்தில் உள்ள அரங்கில் தமிழகத் தொல்லியல் துறை சார்பாகப் பொதுமக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை முதன்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளன.இதுவரை தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை அந்த பகுதியில் உள்ளூர் மக்களின் பார்வைக்கு மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக கீழடி ஆய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களை, பொதுமக்களின் பார்வைக்கும் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு மிகப்பெரும் அளவில் அரங்கம் அமைத்து மதுரை தமிழ்ச் சங்கத்தில் தமிழகத் தொல்லியல் துறை சார்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இருப்பது கீழடியில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகளில் மாதிரிகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அகழாய்வுகளை நேரடியாகக் காணமுடியாத வரலாற்று ஆர்வலர்கள் அதன் மாதிரியை இங்குக் காண முடியும். மேலும் அகழாய்வில் கிடைத்த பொருட்களையும் இந்த மாதிரிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. அகழ்வாய்வின் போது கிடைத்த உறைக் கிணற்றின் மாதிரியும் அதன் உண்மையான பாகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இது தொல்லியல் அரங்கில் நாம் நுழைந்ததும் மதுரையின் ஆதி கால வரலாறு முதல் சங்ககால வரலாறு மன்னார் கால வரலாறு மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை ஒரு சிறு அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி அகழாய்வு தளம் எவ்வாறு பல கட்ட மேற்பரப்பு ஆய்வுகள் செய்யப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும், கீழடி போன்றவையே ஆற்றங்கரையை ஒட்டியுள்ள தொல்லியல் சான்றுகள் கிடைக்கக்கூடிய இடங்களை மாதிரி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வரங்கில் வைக்கப்பட்டுள்ள கீழடி மாதிரி ஓவியமானது நம்மை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வைகை ஆற்றங்கரை நாகரீகத்தின் ஒரு சிறு பகுதிக்கு இட்டுச் செல்லும் விதமாக மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் ஆனது அங்கு நடந்த அகழாய்வில் கிடைத்த திமில்களுடைய காளையின் எலும்புக்கூடுகள் பறவைகள் சேவல்கள் மற்றும் காட்டுப்பன்றி மற்றும் இன்னும் சில விவசாயிகள் வாழும் பகுதிகளில் இருக்கும் விலங்குகளின் எலும்பு மாதிரிகள், விவசாய குடியிருப்புக்கான கூரை ஓடுகள் வீட்டின் அமைப்புகள், நதிக் கரை மற்றும் சில தொல்லியல் ஆதாரங்களைக் கொண்டே வரையப்பட்டிருந்தது. 

மேலும் இதனைத் தொடர்ந்து பிற்காலத்தில் ஏற்பட்ட நகர நாகரிகத்தைக் காண பெரும் கட்டடங்களின் அமைப்புகள் நீர் மேலாண்மை அமைப்புகளான சுடுமண் குழாய்கள், சுட்ட செங்கற்கள் ஆகியவை அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனை அடுத்து பிடியை நாம் திரும்பிப் பார்க்க வைத்த சிந்து சமவெளியை ஒத்த எழுத்து பொறுப்புடன் கூடிய பானை ஓடுகள் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு எழுத்தறிவு மிக்க சமூகம் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகின்றது. மேலும் பல்வேறு தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆய்வாளர்கள் கூறிவரும் தமிழுக்கும் சிந்துசமவெளி எழுத்துக்கும் மிக அதிக தொடர்புடையது என்ற கருத்துக்கு வழு சேர்க்கும் விதமாக இந்தப் பானை ஓடுகளில் உள்ள எழுத்து குறிப்புகள் உள்ளன.

மேலும் வெளிநாட்டிலிருந்து குறிப்பாக ரோமானியர் நாட்டிலிருந்து வந்த பானைகளின் ஓடுகள், அதனை ஒத்து இங்கு உருவாக்கப்பட்ட பானைகள், கீழடியில் தயாரிக்கப்பட்ட பானைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்ததாக கீழடியில் கிடைத்த சுடுமண் பொம்மைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பானைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழடியில் வாழ்ந்த நகர மக்கள் ஒரு உயர்ந்த நாகரீகத்தையும் கலைசார்ந்த அறிவையும் கொண்டிருந்தனர் என்பதை நமக்கு விளக்குவதாக உள்ளது.

இக்கண்காட்சியில் மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படுவது சூது பவளம் மணியில் பொறிக்கப்பட்ட காட்டுப் பன்றியின் உருவமாகும். காட்டுப்பன்றியானது வளமையின் அடையாளமாகவும், அரசுகளின் அடையாளமாகவும் வரலாற்றில் பல இடங்களில் காட்டப்படுகின்றது.

இரண்டாவது அரங்கில் கீழடி அகழாய்வின் போது கிடைத்த பல்வேறு வகையான பானைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை கட்டைவிரல் அளவில் துவங்கி மிகப்பெரிய அளவு வரை இருந்தன. பானைகளில் மிக முக்கியமாகக் கருதப்படுவது கருப்பு சிவப்பு பானைகள் ஆகும். இவை அக்காலத்தின் பானைகள் செய்யும் Inverted Firing என்ற தொழில்நுட்பத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இம்முறையில் செய்த பானைகளில் வைக்கப்பட்ட பொருட்கள் வெகு நாளைக்குக் கெடாது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். 

இரும்புக்கால நகர நாகரீகத்திற்கு எடுத்துக்காட்டாக இங்கு இரும்பினால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் வாழ்ந்த மக்கள் இரும்பு செம்பு மற்றும் தங்கத்தால் ஆன பொருட்களைச் செய்யத் தெரிந்தவர்கள் என்பதற்குச் சான்றாகப் பல்வேறுவகையான பொருட்கள் மற்றும் அணிகலன்கள் இங்கே கிடைத்துள்ளன.

இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இவ்வகையான உலோகங்கள் ஒரேமாதிரியான உலோகத்தால் ஆகாமல் பல உலோகங்களின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளன எனக் கூறுகின்றனர். அதன்மூலம் பண்டைய மக்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. 

இதனை உறுதி செய்யும் விதமாகச் சங்க இலக்கியங்களும் பண்டைய மக்கள் உபயோகித்த பல்வேறு வகையான உலோகங்கள் மற்றும் அணிகலன்களைப் பற்றித் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் சங்க இலக்கியத்தில் உள்ள வரலாற்றுத் தகவல்கள் நமக்கு தொல்லியல் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது.

வட இந்தியாவிலிருந்து பெறப்பட்ட கார்னிலியன் மணிகள் போன்றவை கீழடி பகுதியில் காணப்படுகின்றன இதன் மூலம் பண்டைய வணிகத் தொடர்புகளையும், இறக்குமதி பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சிலிருந்து நூல் எடுக்கும் தொழில்நுட்பத்திற்குச் சான்றாக கீழடியில் நமக்கு பல்வேறு வகையான கருவிகள், மற்றும் தக்களிகள் கிடைத்துள்ளன.

சுடுமண் பொம்மைகளில் அமைப்புகள் மற்றும் அணிகலன்களைப் பொருத்து அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஆடை அலங்காரங்கள் அணிகலன்கள் மற்றும் விலங்குகளுக்கு அவர்கள் பூட்டியிருந்த பல்வேறு வகையான அணிகலன்களைப் பற்றி நமக்குத் தெரியவருகின்றன. குறிப்பாக கீழடியில் கிடைத்த சுடுமண் பொம்மைகளில் காளைக்கு மணி கட்டியிருந்தது நமக்குத் தெரிய வருகின்றது. 

கீழடி அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்களை வைத்து இங்கு வாழ்ந்த மக்கள் ஒரு நகர நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பல்வேறு வகையான ஆடம்பர அணிகலன்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் என்றும் உயர்ந்த கலையை அறிவைக் கொண்டு தங்கள் வாழ்க்கையையும் வீடுகளையும் அலங்கரித்துக் கொண்டவர்கள் என்றும் இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது. 

Leave a Reply