கண்ணீர் அஞ்சலி: வரலாற்று ஆய்வாளர் புலவர். இராசு மறைவு.

கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்ற வரலாற்று ஆசான் புலவர் செ.ராசு ஐயா அவர்கள் சற்றுமுன் காலமானார்.

அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் அவரின் வாசகர்களுக்கும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரின் இறுதி சடங்குகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மின் மயானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

தான் வாழும் ஊர் வரலாற்றை அறியாத இக்காலத்தில் புலவர் . செ.ராசு அவர்கள் கொங்கு நாட்டின் வரலாற்றை நமக்கு எளிமையாக கிடைக்கவும் பிற்கால சந்ததியினருக்கு பாதுகாத்தும் கொடுத்துள்ளார் . இவரது தமிழ் பணி மற்றும் வரலாற்று பணி மகத்தானது . இவர் முயற்சியால்தான் இன்றைக்கு தமிழின் தொன்மையை உலகறியச்செய்த “கொடுமணல்” என்ற அறிய பொக்கிஷம் வெளிவந்தது . இவரது கண்டுஅறிந்த கல்வெட்டுக்கள் ஏராளம் . இனி இவரை பற்றி காண்போம் .

புலவர் இராசு அவர்களின் பணி:

புலவர் செ. ராசு அவர்கள் , ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் , வெள்ளோடு கிராமத்தில் உள்ள வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்ற குக்கிராமத்தில் 16.01.1938 ம் ஆண்டு சென்னியப்ப கவுண்டருக்கும் நல்லம்மாள் என்பவருக்கும் கடைசி மகனாக பிறந்தார் . ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு , திருப்பனந்தாள் காசி மடம் தமிழ்க் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்து புலவர் (வித்துவான் ) பட்டம் பெற்றார் . பின்னர் இவர் பயின்ற செங்குந்தர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றினார் .

தமிழ் ஆசிரியராக இருந்த போதும் வரலாற்று மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு , எங்கு பேச சென்றாலும் வரலாறு, கல்வெட்டு , செப்பேடு மற்றும் ஆவணங்களை மையமாக வைத்து பேசிவந்தார் . இவர் அப்பள்ளியில் பணியாற்றிய போது பள்ளியில் உள்ள புதிய கட்டிடம் ஒன்றை திறக்க அப்போதைய முதல்வர் காமராஜர் வந்தார் . இவரது யோசனையின் பேரில் அவருக்கு ஓலைச்சுவடியில் வரவேற்பு மடல் வழங்கப்பட்டது . முதல்வர் காமராஜர் ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சியுடனும் பெற்றுக்கொண்டார் . அப்போது இவர் கண்டுபிடித்த கல்வெட்டு ” கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவம்” ஈரோடு கல்வெட்டில் சாபம் என்ற தலைப்பில் செய்தி தாள்களில் வெளிவந்தது .

1991 ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தென்னிந்திய வரலாற்று பேரவை கருத்தரங்கில் “முதலாம் ராசேந்திர சோழன்” பற்றி கட்டுரை வாசித்தார் . “தமிழக அரசு தொல்லியல் துறை திரு . டி . என் . இராமச்சந்திரன்” அவர்களால் உருவாக்கப்பட்டு , முதல் இயக்குனராக திரு.நாகசாமி அவர்கள் பொறுப்பேற்றார் . இராசு அவர்களும் ஓர் ஆய்வாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு ” நொய்யல் கரை நாகரீகம் ” என்ற தலைப்பில் ஆய்வு செய்தார் .

தஞ்சையில் தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட தமிழ்ப்பல்கலை கழகத்தில் பணியாற்றிய போது” தஞ்சை மராட்டிய செப்பேடுகள் ” என்னும் அறிய நூலை வெளிக்கொணர்ந்தார் இந்நூல் தமிழ்ப்பல்கலை கழகத்தின் முதல் நூல் , இந்நூல் தமிழக அரசு பரிசினையும் வென்றது .

தொல்லியல் அறிஞர் முனைவர் எ.சுப்ராயலு அவர்கள் துறையில் சேர்ந்ததும் துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது . புலவர் ராசுவும் சுப்பராயலுவும் சேர்ந்து , தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் அனைவரையும் இணைத்து ” தமிழக தொல்லியல் கழகம் ” என்ற அமைப்பை தொடங்கினர் . இக்கழகத்தின் சார்பில் புதிய தொல்லியல் பதிவுகளை ” ஆவணம் ” என்ற பெயரில் ஆண்டு மலர் வெளிவர காரணமாக இருந்தார் .

மோடி ஆவணங்கள் :

தஞ்சையை 1676 ல் முதலாம் ஏகோசி முதல் 1855ல் இரண்டாம் சிவாசி வரை 13 மராட்டிய மன்னர்கள் 180 ஆண்டுகள் ஆண்டுவந்தனர் . இப்போதைய அரசின் ஆவண மொழியாக மராட்டி மொழியின் மோடி எழுத்துக்களை பயன்படுத்தினர் . “மோட்” என்றால் உடைத்தல் என்று பொருள் . வேதநாகரி எழுத்துக்களை உடைத்து கை எடுக்காமல் வேகமாக எழுத இந்த எழுத்து வகை பயன்பட்டது . 1950 -1952 வரை மோடி ஆவணங்களை ஆய்வு செய்த எஸ். என். கத்ரே அவற்றை ஏ , பி , சி என்று பிரித்தார் . அவற்றில் “ஏ” ஆவணங்கள் முக்கியமானது என்று சென்னை ஆவண காப்பகத்திற்க்கும் , “பி ” ஆவணங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் , “சி ” ஆவணங்களை பயனற்றவை என்றும் பிரித்து , “சி”ஆவணங்களை அழிக்ச் சொன்னார் . தஞ்சை மராட்டிய வழி வந்த ராஜா ராஜாராம் சாகேபு அவைகளை தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் சேர்ந்த்தார் .

சென்னையில் ஆவண காப்பகத்தில் இடநெருக்கடி காரணமாக தஞ்சையில் இருந்து வந்த மோடி ஆவணங்களை மராட்டிய மொழி ஆய்வு மையத்திற்கு அனுப்ப அரசு ஆணை பிறப்பித்தது . அவை மராட்டிய மொழியில் இருந்தாலும் தஞ்சை பற்றிய ஆவணங்கள் அவற்றை அங்கு அனுப்ப கூடாது என்று காரணங்களை விளக்கி தஞ்சை பல்கலை கழகத்திற்கே அனுப்ப ஏற்பாடு செய்தார் .

கண்டுபிடிப்புகள் :

1960 ம் ஆண்டு ,ஈரோடு அருகே அரச்சலூர் மலையில் உள்ள தமிழ் பிராமி இசை எழுத்துக்களை கண்டுபிடித்தார் . 1979 ம் ஆண்டு கொடுமணல் தொல்பொருள் வளத்தை கண்டுபிடித்தார் . பழமங்கல நடுகல் , சித்தோடு தமிழ் பிராமி கல்வெட்டு , திருக்குறள் கல்வெட்டு , விசயமங்கலம் பெருங்கதை கல்வெட்டு ஆகியவை இவரால் கண்டுயறியப்பட்டன . இவர் பதிப்பித்துள்ள கல்வெட்டுக்கள் அடங்கிய நூல்கள்

1) தஞ்சை மராட்டிய கல்வெட்டுக்கள்

2)ஈரோடு மாவட்ட கல்வெட்டுக்கள்

3)தமிழ் கல்வெட்டு பாடல்கள்

4)கொங்கு சமண கல்வெட்டுக்கள்

5)கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடல்களும்

6) தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் .

இவை அனைத்திலும் சேர்த்து 1500 கல்வெட்டுகளுக்கு மேல் உள்ளது .

கல்வெட்டுக்கள் மட்டும் அல்லாமல் இதுவரை 600 செப்புப் பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளன . இவற்றில் 300 செப்புப் பட்டயங்களுக்கு மேல் விளக்கத்துடன் பதிப்பித்துள்ளார் . தமிழகத்தில் எவரும் செய்யாத அரிய முயற்சி ஆகும் . கிழக்கிந்திய கம்பெனியர் எழுதிய ஆவணங்கள் குறிப்புகள் வந்த பின் நம் உள்ளூர் ஆவணங்களை படிக்கும் முயற்சி யாரும் செய்யவில்லை . இக்குறையை தீர்க்கும் வண்ணம் ஐயா அவர்கள் சில தனிப்பட்டவர்கள் செப்புப்பட்டயங்களையும் , சில பாளையக்கார்கள் செப்புப் பட்டயங்களையும் தேடி சேகரித்து படித்து வெளியிட்டு உள்ளார் .

1974ம் ஆண்டு யாழ்ப்பாணம் தமிழ் மாநாட்டிற்கு ஐயா சென்ற போது கச்சத்தீவு பற்றி கேள்விப்பட்டு அதன்மீது ஆர்வம் கொண்டு கச்சத்தீவு பற்றி செய்திகளை சேகரிக்க தொடங்கினார் . அப்போது கச்சத்தீவு இந்தியா வசம் இருந்தது . இராமநாதபுரம் சேதுபதிகள் அரண்மனை அலுவலகத்தில் , பத்திரப்பதிவு அலுவலகங்கள் ,மீனவர் சமூகத்தின் முக்கியமானவர்கள் மூலம் பல செய்திகள் ஆவணங்கள் கிடைத்தன . ராமநாதபுரம் அரண்மனை சேதுபதிக்கு இத்தீவு சொந்தமானது என்ற ஆவணங்களை சேகரித்து தந்துள்ளார் . இந்த ஆவணங்களைத்தான் தற்போதுவரை நடக்கும் கச்சத்தீவு உரிமை குறித்த வழக்குகளில் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது வரலாற்றில் மிகப் பெரிய சாதனை .

இதுவரை இவர் கண்டறிந்த மிக முக்கியமான செப்புப் பட்டயங்களுள்

1) தஞ்சை மராட்டியர் செப்புப் பட்டயங்கள்

2) இராமநாதபுரம் சேதுபதி செப்புப் பட்டயங்கள்

3)தொண்டைமான் செப்புப் பட்டயங்கள்

4) திருப்பனந்தாள் காசிமடத்து செப்புப் பட்டயங்கள்

5) கொங்கு நாட்டு செப்புப் பட்டயங்கள்

6) சிவகங்கை செப்புப் பட்டயங்கள்

ஆகியவை ஆகும், இவை தவிர சில தனிப்பட்டவர்களின் பட்டயங்கள் , சில பாளையக்காரர்களின் செப்புப் பட்டயங்களையும் கண்டறிந்து வெளியிட்டு உள்ளார்.

ஐயா தான் சேகரித்த செப்பேடுகள் , ஓலை சுவடிகள் , கற்கால ஆயுதங்கள் , நடுகற்கள் , சிற்பங்கள் ,முதுமக்கள் தாழி மற்றும் நாணயங்கள் ஆகியவற்றை ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியாகத்திற்க்கு அளித்து அங்கு மிக சிறப்பான ஒரு அருங்காட்சியகம் அமைய உதவினார் .

இவர் கொடுமுடி சண்முகத்துடன் இணைந்து 1971ல் “கொங்கு” என்ற இதழை தொடங்கினார் . இவை மட்டும் இல்லாமல் பிறர் நடத்திய “கொங்கு நண்பன்”, “கொங்கு செய்தி” போன்ற இதழ்களும் பல கட்டூரைகலும் எழுதினார் . பல உலக தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டு கட்டுரை அளித்துள்ளர்.

இவை மட்டும்மின்றி பல வெளிநாடுகளுக்கு சென்று கருத்தரங்குகளில் உரையாற்றி உள்ளார். இவர் பெற்ற விருதுகள் ஏராளம் . இவர் எழுதிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் ஏராளம் அவை வரலாற்று ஆர்வலர்களுக்கு பேர் உதவியாக உள்ளது . தமிழக தொல்லியல் ஆய்வாளர்களில் குறிப்பிட தக்கவர்களில் இவரும் ஒருவர் . இவர் இன்றி கொங்கு வரலாறு இவ்வளவு தெளிவாக நம்மால் உணரவோ படிக்கவோ முடியாது. ஓய்வுக்கு பின்னும் நிறைய நூல்கள் வெளியிட்டு உள்ளார் . 2017 ம் ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட “தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்” எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வரலாற்று சுவடுகள். இவர் கொங்கு மண்ணின் ஒரு அரிய பொக்கிஷம். இவரை வாழ்த்தி வணங்குவோம் .

புகைப்படக் கட்டுரை உதவி: சக்தி பிரகாஷ்

தமிழ் விக்கி தளத்திலிருந்து இவரின் நூற்பட்டியலைப் பகிர்கிறேன்.

சுவடிப் பதிப்புகள்

கொங்கு மண்டல சதகம் 1963
மேழி விளக்கம் 1970
மல்லைக் கோவை 1971
பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978
கொடுமணல் இலக்கியங்கள் 1981
பூந்துறைப் புராணம் 1990
மரபாளர் உற்பத்திக்கும்மி 1995
மங்கலவாழ்த்து 1995
ஏரெழுபது 1995
திருக்கை வழக்கம் 1995
கம்பர் வாழி 1995
ஞானமாலை 1997
புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் 1997
கல்வியொழுக்கம் 1998
திங்களூர் நொண்டி1998 (இணையாசிரியர்)
நீதியொழுக்கம் 2002
பஞ்சக்கும்மிகள்

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்

தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 1983
தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் 1987
கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் 1991
சேதுபதி செப்பேடுகள் 1994
சோழமண்டல சதகம் 1994
கல்வெட்டியலும் வரலாறும் 2001
தொண்டைமான் செப்பேடுகள் 2004

வட்டார வரலாற்று நூல்கள்

எங்கள் பவானி 1967
தங்கம்மன் திருக்கோயில் வரலாறு 1981
வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு 1987
முருங்கத்தொழுவு பெரியகுல வரலாறு 1989
நாகம்பள்ளி காணியாளர் வரலாறு 1989
அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர் வரலாறு 1990
பரஞ்சேர்வழி காணியாளர் குல வரலாறு 1990
தலையநல்லூர்க் கூறைகுல வரலாறு 1990
கொடுமணல் வரலாறு 1991
ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு 1993
கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு 1993
நசியனூர்க் காணியாளர் வரலாறு 1994
நசியனூர்க் கண்ணகுல வரலாறு 1994
சின்ன அண்ணன்மார் கோயில் வரலாறு 1994
காடையூர் முழுக்காதுகுல வரலாறு 1994
எழுமாத்தூர்ப் பனங்காடர்குல வரலாறு 1995
கொங்கு நாட்டுச் செம்பூத்த குல வரலாறு 1995
காங்கயம் அகத்தீசுவரர் கோயில் வரலாறு 1995
ஆனங்கூர்க் காணியாளர் வரலாறு 1997
கண்ணபுரம் செங்கண்ணர்குல வரலாறு 1997
ஊத்துக்குளி கதித்தமலை வரலாறு 1997
திண்டல்மலை வரலாறு 1997
அத்திப்பாளையம் செம்பூத்தகுல வரலாறு 1998
கொத்தனூர்க் குழாயகுல வரலாறு 1998
கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு 1998
பொன் ஆரியூர் வரலாறு 1998
கொங்கூர் வெண்டுவகுல வரலாறு 1999
குமரமங்கலம் தூரகுல வரலாறு 1999
நல்லூர் வரலாறு 2000
நீலம்பூர் வரலாறு 2000
புத்தரச்சல் குழாயகுல வரலாறு 2000
சிவன்மலை வரலாறு 2000
முத்தூர் வரலாறு 2001
அமுக்கயம் பொருள் தந்தகுல வரலாறு 2001
கொங்கலம்மன் கோயில் வரலாறு 2001
ஆயப்பரப்பு வரலாறு 2001
பிடாரியூர் வரலாறு 2001
நல்லூர் பனங்காடர்குல வரலாறு 2001
கிழாம்பாடி கண்ணகுல வரலாறு 2001
கொல்லன்கோயில் வரலாறு 2002
தாராபுரம் வரலாறு 2004
வள்ளியறச்சல் வரலாறு 2005
கோலாரம் வரலாறு 2005
கொளிஞ்சிப்பட்டி பண்ணைகுல வரலாறு 2005
மேல் ஒரத்தை வரலாறு 2005
மறவபாளையம் வரலாறு 2005
வரலாற்றில் அறச்சலூர் 2006
பருத்திப்பள்ளி செல்லகுல வரலாறு 2006
வெள்ளோடு காணியாளர் வரலாறு 2007
பொங்கலூர் பொன்னகுல வரலாறு 2007
ஈங்கூர் ஈஞ்சகுல வரலாறு 2008
தோளூர் காணியாளர் வரலாறு 2008

பொதுவரலாறு

கொங்கு குல மகளிர் 2008
ஈரோடு மாவட்ட வரலாறு 2008
காளிங்கராயன் கால்வாய் 2007
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி – 1) 2007
கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடல்களும் 2007
கொங்கு வேளாளர் செப்பேடு, பட்டயங்கள் 2007
தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் 2007
கொங்கு நாடும் சமணமும் 2005
வெண்டுவண் குல வரலாறு 2005
தொண்டைமான் செப்பேடுகள் 2004
உ.வே.சா பதிப்புப் பணியும் பன்முக மாட்சியும் 2003
கொங்கு நாட்டுவேளாளர் வரலாறு 2003
காடையீசுவரர் கோயில் பொருளந்தை முழுக்காது குல வரலாறு 2002
திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள் 1999
ஆரியூர் வெண்டுவன்குல வரலாறு 1998
கொத்தனூர்க் காணியாளர், குழாயர்குல வரலாறு 1998
வரலாற்றுக் கலம்பகம் 1998
விதரி அத்திப்பாளையம் செம்பூத்த குல வரலாறு 1998
ஆனங்கூர் கரியகாளியம்மன் கோயில் காணியாளர்கள் வரலாறு 1997
ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு 1997
கச்சத் தீவு 1997
கூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு 1994
நெஞ்சை அள்ளும் தஞ்சை 1994
பூந்துறைப் புராணம் 1994
செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று ஆய்வு 1985
கலைமகள் கலைக்கூடக் கையேடு 1984
கலைமகள் கலைக்கூடம் 1981
நன்னூல் உரை 1980
கண்ணகி கோட்டம் 1976
திருமந்திரம் 100 1967
சிவாக்கிர யோகிகள் ஆதீன வரலாறு 1959