அரக்கல் அருங்காட்சியகம் – பெருவாகை கொண்டான் விஜயகுமார்

 

கேரளமாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது அரக்கல் அருங்காட்சியகம். இது அரக்கல் ராஜ வம்சத்தின் அரண்மனையாக இருந்து பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

கேரளத்தில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமிய ராஜகுடும்பம் அரக்கல் குடும்பம் ஆகும்.

அரக்கல் ராஜ குடும்பத்தின் வரலாறு

அரக்கல் அரச குடும்பத்தின் ஆணிவேரை ஆராயும்பொழுது பல கதைகள் நமக்கு கிடைக்கின்றன.இது பல கற்பனை கதைகளையும் , வரலாற்றையும் உள்ளடக்கியதாக கருதப்படுகிறது. அவற்றை பார்ப்போம்.

அரக்கல் குடும்ப பதிவுகளின்படி கேரளத்தை ஆண்ட சேரமன்னனான சேரமான் பெருமான் மக்கா சென்று மதம் மாறியதை தொடர்ந்து அவரது தூதுவராக மகோத்யபுரம் (கொடுங்களூர்) வந்த மாலிக் பின் தினார் என்பவரால் அவனது தம்பி  ராமவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன்  இஸ்லாம் மதத்தை தழுவுகிறான். அவனது தலைநகரான கொடுங்களுரிலிருந்து மாலிக் பின் தினார் ஐ கூட்டிக்கொண்டு வட கேரளத்தில் தலைச்சேரிக்கு அருகில் தர்மடம் பகுதியில்  வசிக்கும் தனது தங்கையான ஸ்ரீதேவியை காண வருகிறான். அவரது தங்கை குடும்பமும் இஸ்லாத்தை தழுவவே அவனது தங்கை கணவர் மகாபலி என்பவர்  முகமது அலி எனும் பெயர் மாறுதலுடன் முடிசூட்டப்பட்டார். முதல் இஸ்லாமிய அரசன் அதாவது ஆதி ராஜா எனும் துணைபெயரையும் பின்னாளில் அலிராஜா அதாவது சிறந்த அரசன் எனும் பெயரையும் பெற்றான்.

ஏலிமலை துறைமுகத்தின் அழிவுக்கு பின்னர் கண்ணூர் ஒரு முக்கிய துறைமுக நகரமாக உருமாற்றப்பட்டது. அதுவரை சிரக்கல் அரசிடம் கடற்படை வீரர்களாய் இருந்தவர்கள் ஒன்றுகூடி மிகப்பெரும் வணிகனான ஒரு இஸ்லாமியரை அரக்கல் ராஜாவாக முடிசூட்டியதுடன் நாவாய் படையையும் பெரும் அளவில் கட்டிஎழுப்பினர்.

சிரக்கல் நாட்டின் அரண்மனையின் பின்புறம் ஒரு குளம் இருந்தது. அது அரச குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்கள் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரு குளியல் குளமாக திகழ்ந்தது. ஒரு நாள் சிரக்கல் ராஜ குடும்ப இளவரசி ஒருவள் அவளது தோழிகளுடன் குளத்தில் குளித்துகொண்டிருக்கையில் மூழ்கவே அவளது தோழியர் அவளை காப்பாற்ற பலமுறை முயற்சித்தும் அவர்களால் காப்பாற்ற இயலவில்லை.தோழியர்கள் கூச்சலிட்டு அழத்தொடங்கினர். முகமது அலி என்ற ஒரு வணிகன் அவ்வழியாக கடந்து சென்றான். பெண்களின் அழுகுரலை கேட்டு அங்கு ஓடிவந்த முகமது அலி யோசிக்காது அந்த இந்துக்களின் குளத்தில் குதித்தான். அவன் அவளை காப்பாற்றியதுடன் நில்லாமல் அவனது மானம் காக்க அவனது வேட்டியையும் அவளது உடலில் போர்த்தினான். அந்த காலகட்டத்தில் ஒரு வேட்டியை ஒரு பெண்ணுக்கு தருவது என்பது அவளை மணப்பதற்கு சமமாக கருதப்பட்டது. எனவே மணமாகாத ஒரு இந்து பெண்ணிற்கு ஒருதீண்டத்தகாத  இஸ்லாமிய வணிகன் வேட்டி கொடுத்த நிகழ்வு ஊர் முழுவதும் பரவியது. சிரக்கல் ராஜ்யம் முழுவதும் பரவிய இந்த நிகழ்வு மக்களிடையே ஒரு பெரும் விவாதத்தை ஏற்ப்படுத்தியது. அரசர் அவரது மகளை அரண்மனையினுள் அனுமதிக்கவில்லை. அவரது மகளின் பெரும் போராட்டத்திற்கு பிறகு அரசர் கனத்த இதயத்துடன் அவர்களது திருமணத்திற்கு சம்மதித்தார். சில நாட்களில் அரசரால் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அவரது அரசின் ஒரு பகுதியை தனது மருமகனுக்கு ஆள பிரித்துகொடுத்தார். அரசரால் பிரித்துகொடுக்கப்பட்ட ராஜ்ஜிய பகுதி பின்னலில் அரக்கல் ராஜ்ஜியம் ஆனது.இந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் தங்களை அரக்கல் குடும்பத்தினர் என அறிவித்துக்கொண்டனர்.

கோளத்திரி நாட்டின் அமைச்சன் கோளத்திரி ஆர்யன் குளங்கரை ராஜா என்பவன் இஸ்லாத்தை தழுவி அவனது பெயரை முகமது அலி என மாற்றிக்கொண்டான் என வில்லியம் லோகன் என்பவர் கூறியுள்ளார்.இவரது வாரிசுகள் தான் தற்போதுள்ள அரக்கல் குடும்பத்தினர் எனவும் கூறுகிறார்.

பொதுவாக அரக்கல் குடும்பத்தில் வயதில் மூத்தவர் அவர் ஆணாக இருப்பினும் , பெண்ணாக இருப்பினும் அரக்கல் குடும்ப தலைமை பொறுப்பை வகிக்கலாம்.அதன்படி பதவியேற்கும் நபர் ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர் ஆழி ராஜ எனவும், பெண்ணாக இருந்தால் அரக்கல் பீவி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

கண்ணூரும் , லட்ச தீவுகளும் அரக்கல் குடும்பத்தின் கட்டுபாட்டில் இருந்த பகுதிகளாகும். பிரெஞ்சுகாரர்களும், டச்சுகாரர்களும் , போர்ச்சுகீசியரும் அரக்கல் ரஜ்ஜியத்தினை அடிமைப்படுத்துதல் மூலம் கண்ணூரையும் , லட்சதீவுகளையும் அடையலாம் என கருதினர். கண்ணூரின் அடையாளமாக திகழும் செயின்ட் அஞ்சலினோ கோட்டையை 1772ஆம் ஆண்டு டச்சுகாரர்களிடமிருந்து அரக்கல் பீவி பெரும் விலைகொடுத்து வாங்கினார்.1772 முதல் 1790 வரை செயின்ட் அஞ்சலினோ கோட்டை அரக்கல் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.1784 இல் பிரிட்டீஷ்காரருடன்  மைசூர் சமஸ்தானத்தினரின் போரில் கண்ணூர் கோட்டை ப்ரிட்டிஷ்சால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 3 மாதங்கள் கழித்து மைசூர் சுல்தானுடன் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஏற்ப்பட்ட ஒரு ஒப்பந்தப்படி கண்ணூர் கோட்டை மீண்டும் அரக்கல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 1790இல் மைசூர் படைக்கும் , பிரிட்டிஷ்காரர்களுக்கும் தலைச்சேரியில் நடைபெற்ற போரில் அரக்கல் ராஜா கொல்லப்பட்டார். மேலும் கண்ணூர் கோட்டை, அரக்கல் கோட்டை இரண்டும் பிரிட்டிஷ் வசம் சென்றது.

பின்னலில் அரக்கல் குடும்பத்தின் வசம் இருந்த பெரும்பாலான நிலங்கள்,லட்சதீவுகள் இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் நிலம் கையகபடுத்தல் சட்டத்தில் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

திப்புவின் ஒரு மகளை அரக்கல் குடும்பம் மணம்முடித்ததாகவும் கூறப்படுகிறது.

மே 4 ,2019 ஆம் நாளன்று பாத்திமா முத்து பீவியின் மறைவிற்கு பிறகு சிறிய பிக்குன்ங்கு பீவி அரக்கல் பீவியாக பொறுப்பேற்றுகொண்டார்.

அரக்கல் அரண்மனை 1663இல் டச்சுக்காரர்களிடமிருந்து பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்டது.

   

அரக்கல் கட்டு என்னும் இவர்களது அரண்மனையின் தர்பார் ஹால்  90 லட்சம் செலவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு ஜூலை 2005 இல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இது அரக்கல் ராயல் டிரஸ்டின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அருங்காட்சியகம் கண்ணூர் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அயிக்கரை எனுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் ,வெளிநாட்டினருக்கு 50 ரூபாயும், காமிராவிற்கு 25 ரூபாயும் , பள்ளி குழந்தைகுக்கு 3 லிருந்து 5 ரூபாய் வரை அரக்கல் டிரஸ்டால் வசூலிக்கப்படுகிறது. அரக்கல் பீவி தற்போது தலசேரியில் வசிக்கிறார்.

 

0

 

Leave a Reply