விதி எழுதும் வரிகள் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #12

இருகைகளிலும் வழிந்த ரத்தத்தின் வாசனை மூளையில் எட்ட, அப்படியே விக்கித்து அமர்ந்தார் சோழியவரையன். என்ன ஆயிற்று எனக்கு என்ற கேள்வி அவர் மனதில் பேயாட்டம் போட்டது. கண்கள் இருட்டினார் போல தோன்றியது. இன்று காலை நேரம் மீண்டும் திரும்பாதா… திருத்திக் கொள்வேனே… என்று பரிதவிப்புடன் சற்று மயக்கம் வந்தது அவருக்கு.

இன்று காலை சோழியவரையன் மெதுவாக சென்றடைந்தபோது பிரம்மராயன் வீட்டில் இல்லை. தூரத்தில் இருந்து வந்த களைப்பின் வலி தெரிய, அப்படியே ராயனின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். சிறிது தண்ணீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என தோன்ற சுற்றிலும் தேடி, மூலையில் இருந்த பானையிலிருந்து எடுத்து அருந்தினார்.. அதை எடுக்கும்போது ஜன்னலின் வழியே பிரம்மராயனின் சிற்பங்கள் கண்ணில் பட்டன. அழகழகான தெய்வ உருவங்கள். உயிரோட்டம் ததும்பும் வேலைப்பாடு. பிரம்மராயனின் திறமையை கேள்விபட்டதுண்டு. எனினும் நேரில் காண  அது இன்னமும் அதிகரித்தது.

தான் வந்த காரியத்தின் பாரம் புரிய, சோழியருக்கு இரசனையின் ஆர்வம் மட்டுபட்டது. இன்று அறுபது கழஞ்சு தருவதாக ராயன் சொல்லியிருந்தான். அரசுக்கு கட்டத்தவறிய நிலவரியின் தொகை நாற்பது இருக்கும். கடன்கள் ஆக ஒரு பத்து கழஞ்சு போகும். மீதம் வைத்து மகளின் திருமணத்துக்கு ஏதேனும் செய்யவேண்டும்.  நேற்று வந்திருந்த வரி அதிகாரியின் கோபமான பேச்சு சோழியவரையனுக்கு நினைக்கவே பயமாக இருந்தது. அதிகாரி மிக கண்டிப்பானவர் மட்டுமல்லாமல், சோழபுரம் கோயிலும் முடியும் தருவாயில் இருப்பதால் அதன் தேவைக்கு, அரசின் கடுமையான ஆணையின்படியும் அவர் செயல்படவேண்டியிருந்தது வரையனுக்கு புரிந்தது.

வைத்திருந்த ஆறு காணியிலும் சோழியவரையனுக்கு நல்ல வருவாயே இருந்தது. ஆசை யாரையும் விடுவதில்லையே. தூரத்து துறைமுக நண்பர்களுடன் இணைந்து  கப்பல்களில் துணிவகைகளை பாரசீக நாட்டுக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு, கவிழ்ந்த கப்பலுடன் அவரது செல்வங்களும் மூழ்கியது. அனுபவமில்லாத கப்பல் வியாபாரிகளை, அதிக லாபம் ஈட்டும் பொருட்டு அமர்த்தியதால் ..இருப்பதையும் இழந்தார். ஆனாலும் யாரையும் ஏமாற்றாத குணமும், தர்மங்களும் சோழியவரையனுக்கு பாதுகாப்பாய் இருந்தது. அந்த மான வாழ்வு,  நாளை வரி செலுத்தாது போனால் பறிபோகும் அபாயம். 

பிரம்மராயன் நூறுக்கு நாற்பது வீதம் காசுகள் தருவதாக கேள்விபட்டு அவனிடம் கேட்டது நல்லதாக போயிற்று. அவனை வரையனுக்கு அறிமுகம் இல்லையே தவிர ராயனுக்கு அவரை நன்கு தெரிந்திருந்தது. உடனே சம்மதம் சொல்லி இன்று வரச்சொல்லியிருந்தான். சிற்ப வேலைகளில் சிறப்பான வருமானம் மட்டுமல்லாமல், வட்டிக்கு கொடுத்து வாங்குவதிலும் வல்லவனான பிரம்மராயனுக்கு சேரும் செல்வத்தை அவன்பின் அடக்கியாள குடும்பமோ, வாரிசுகளோ இல்லையென்பது இயற்கையின் விசித்திரமாக அவருக்கு தோன்றியது. நடந்து வந்ததின் அசதியில் அப்படியே திண்ணையில் சாய்ந்து கண்ணயர்ந்தார். எவ்வளவு நாழிகையோ….

“ அய்யா… எழுந்திருங்க… அய்யா…….” என்ற பிரம்மராயனின் குரல் அவரை எழுப்பியது.

“ ஆ…மன்னிக்கனும் பிரம்மராயா… அசந்துவிட்டேன்… “

“தெரிகிறது அய்யா… ஒரு அவசர வேலையாக கோயில் வரை போய் வந்தேன். முதலில் இதை சாப்பிடுங்கள்…பிறகு எதுவும் பேசலாம்… “ என்ற ராயன், இரு அப்பங்களையும், நான்கைந்து பணியாரங்களையும் அவருக்கு அளித்தான். மனது மறுக்கச்சொன்னாலும் அதை மீறி பசி அவற்றை சாப்பிடத் தூண்டியது. சாப்பிட்டுக்கொண்டே அவனிடம் பேச ஆரம்பித்தார்.

“ விழாவுக்கு நாள் நெருக்கமே… கோயில் வேலை எவ்வளவு ஆகியிருக்கிறது தம்பி…”

“முடியும் தருவாய்தான் அய்யா… இன்னும் ஒருவாரத்தில் கங்கைகொண்டானாம் உத்தமசோழன் வருகிறார். வந்த இருநாட்களில் கும்பாபிஷேகம் ஆகிவிடும் “

“ ஓ…. சரி… ம்ம்… மகிழ்வான நிகழ்வுதானப்பா… “

கும்பாபிஷேக நிகழ்வுகூட மனதில் நிலைக்காத அவரின் மனநிலை அவருக்கு சுயவிரக்கத்தை தோற்றுவித்தது.

“ நான் அதில் பெரும் வேலைகளை செய்யவில்லை அய்யா… ஆனாலும் கடைசி நேரத்து அதிர்ஷ்டமோ என்னவோ… இராஜேந்திரனின் திருவுருவச்சிலையை செய்யும் பேறு எனக்கு வாய்த்தது.. இன்று அதன் கண்திறக்கும் வேலை மட்டுமே… “ என்ற ராயன், சோழியவரையருக்கு அருந்த சிறிது நீராகாரத்தை கொடுத்தான்.

“ இது மிகப்பெரும் பேறுதானப்பா… திருவாதிரை நாளில் உதித்த, வானவன்மாதேவியின் வாரிசுக்கு சிலை வடிக்கும் பேறு… பாக்கியம். “

“ஆமாம் அய்யா… நேற்றுவரை… அதன் படைப்பில் திருப்தி இல்லாமல் பயந்துகொண்டிருந்தேன். இன்று முடித்துவிடும் ஆர்வம் வந்துவிட்டது… காலத்திற்கும் நிலைக்கும் படைப்பல்லவா… “

“ ஆனால், ரத்த ஆறு ஓடிய கங்கை போரை நினைவுபடுத்தும் அந்த பெயர்தான் சற்று உறுத்துகிறது… கங்கைகொண்ட சோழபுரம்… “

“ அந்த போர்… ஆக்ரமிப்புக்கு இல்லையே…. சோழகங்க ஏரியை சுத்தப்படுத்த கங்கா நீரை கொண்டு வரச் சென்றபோது இகழ்ந்து தடுத்தவர்களை எதிர்த்து வென்றது… உத்தமசோழனின் தவறில்லையே… “

“ அதுவும் சரிதான்… ஏரி நன்றாக அமைந்துள்ளதா…. “

“ கடல் போல் உள்ளது அய்யா… கோயிலை இதுவரை நீங்கள் பார்வையிடவில்லையா… “

“இல்லை… தம்பி.. சிறிது வேலைச்சுமை… தவிர முடிவடைந்து… அரசர் வரும்போது பார்த்துக்கொள்ளலாமென…. “

“அரசருடன் இளவல் இராஜகேசரியும் வருகிறாராம். இங்கே மாளிகைமேட்டு அரண்மணை தயாராகிறது “ என்று சொல்லியபடியே பிரம்மராயன் வீட்டுக்குள் சென்றான். ஏதோ பெரும் மூட்டையை தூக்கி வைக்கும் ஓசையும், தொடர்ந்து நாணயங்களின் உலோக ஓசையும் கேட்டது. மனநிறைவுடன் அமர்ந்திருந்தார் சோழியவரையன். சிறிது நேரமாக…

“அய்யா… உள்ளே வாருங்கள்… இங்கே அமர்ந்து பேசலாம் “ என்ற பிரம்மராயனின் குரலுக்கு அவசரமாக எழுந்து உள்ளே சென்றார் சோழியவரையன். அங்கே பிரம்மராயன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். அவன் முன் ஒரு பெரிய பானை கவிழ்ந்து இருந்தது. அதில் இருந்து கழஞ்சுகளும், செப்பு ,கருங்காசுகள் அத்துடன் ஈழகாசுகளும் சிறு மலையாக கொட்டப்பட்டிருந்தது. ராயன் அவற்றை ரகவாரியாக பிரித்து, பக்கத்தில் இருந்த ஒரு ஓலையில் எழுதிக்கொண்டே வந்தான்.

“ இதெல்லாம் என் மொத்த சேமிப்பு அய்யா…. “ என்றபடி எண்ணிக்கொண்டே பேச ஆரம்பித்தான் ராயன்.

அவனது செழிப்பை காட்டுகிறானோ என்று ஒரு நிமிடம் தோன்றிய எண்ணத்தை ராயனின் இயல்பான பேச்சு துடைத்தது.

“ நல்லது ராயா…  உழைப்புக்கேற்ற சேமிப்பு. இதை செய்யத்தவறியதன் விளைவுகள் நான் அனுபவித்திருக்கிறேன்… “

‘ நீங்கள் பெரியவர் … உங்களிடம் மனம்விட்டு பேசுகிறேன். என் உழைப்பின் பலன் இதில் பத்தில் ஒரு பகுதியே… மீதமெல்லாம் பாவத்தின் சம்பளம். ஆமாம் … ஒன்றுக்கு நான்காக சிலைகளுக்கு ஏமாற்றி பெற்றது… தவிர அநியாய வட்டியின் மொத்த உருவம் இந்த காசுகள்.. “ என்று ராயன் சொல்ல… அதற்கு என்னவிதமாக பதிலுரைப்பது என்று திணறினார் சோழியவரையன்.

“ தவறாக எண்ணாதீர்கள்… இன்று கோயிலில் ஒரு மூதாட்டி தன் மொத்த சேமிப்பான பத்து கழஞ்சுகளை கோயிலுக்கு கொடுக்க … அவளிடம் உனக்கு சேமிப்பு வேண்டாமா என கேட்டேன்… ‘யாருக்காக நான் சேர்த்து வைக்க வேண்டும்’ என்ற அவளின் ஒரு கேள்வி என் கண்களை திறந்தது… “

“ அதிசயம்தான்… திறப்பு காணாத கோயிலிலும் ஆண்டவனின் திருவிளையாடல்… “

“ஆமாம் அய்யா… ஊர் தூற்ற சேர்த்து… ஆறடி மண்ணில் புதைய… தேவையா… அதுதான்.. ஒரு தெளிவுடன் வந்தேன். மனம் நிறைவாக இருக்கிறது. இந்த பொன் கழஞ்சுகளை கோயிலின் கலச வேலைகளுக்கும், மீதமுள்ளதை வேதபாடசாலைகளுக்கும் என் பங்காக ஓலை எழுதிக்கொண்டிருக்கிறேன். தவிர இராஜேந்திரனின் உருவுக்கு சன்மானமாய் நாளை கிடைக்கும் நூறு கழஞ்சுகளை சிங்கமுக கிணற்றின் பராமரிப்புக்கு தரவும் எழுதி வைத்திருக்கிறேன். “

“ சற்று அவசரப்படுகிறாயோ… உனக்கு அதிக வயதாகவுமில்லை… சிறிதை தானம் செய்… முன்னூற்றம்பது காணிக்கு மேல் நிலமுள்ள கோயிலுக்கு வராத வருவாயா… “

“ இல்லை அய்யா… தந்தையாக நினைத்து உங்களிடம் சொல்கிறேன்… ‘யாருக்காக… ‘ என்ற கேள்வியின் வீரியம் மனதில் ஆழ பதிந்துவிட்டது. தவிர எனக்குள்ள மூன்று வேலி நில வருவாயும்… சிற்ப வேலையின் வருவாயும் போதும் எனக்கு… “

“உன் விருப்பமப்பா… சரி… நேரம் வெகுவாக ஆகிறது.. மகளும் தேடுவாள்… நான் விடைபெறவா…. “

“ சரி அய்யா… “ என்று ராயன் சொல்ல… தயங்கியபடி… கேட்டார் சோழியவரையன்.

“தம்பி… ஒரு அறுபது கழஞ்சு கேட்டேனே….. “

“ ஓ …… அதை மறந்தேனே….. எனக்கு இரு நாளில் பழைய நிலுவைகள் வர இருக்கிறது. ஒரு எண்பது கழஞ்சு இருக்கும். அதை அப்படியே உங்களுக்கு தருகிறேன். வட்டிகூட வேண்டாம்… முடியும்போது சிறுகசிறுக தாருங்கள்… “

சோழியவரையனின் தலையில் இடிவிழுந்தார்போலிருந்தது.

“ அடடா… தம்பி… எனக்கு நாளை தான் தேவை.. மிக அவசரம்… நாற்பது மட்டும் தந்து உதவு.. அதுகூட போதும்…. “

“ மன்னிக்கவும் அய்யா… தவறாக எண்ணவேண்டாம். இந்த செல்வம் முழுதும் தானம் செய்ய சபதம் எடுத்துக்கொண்டேன்… இரு நாட்கள் மட்டும் பொறுங்கள்… “

“ இந்த தானம் தர சில நாட்களாவது ஆகுமே… எனக்கு உதவுவதும் தானத்தில் தானப்பா சேரும். உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்… என்னை காப்பாற்று… “ 

என்று சோழியவரையனின் நா தழுதழுக்க… அவர் குரல் உடைந்து போனது. அவரின் அந்த திடீர் உணர்ச்சி கொப்பளிப்பை எதிர்பாராத பிரம்மராயன் விக்கித்து நிமிர்ந்து பார்க்க… தான் கொட்டிய வார்த்தையின் வீரியம் உறைத்தது சோழியவரையருக்கு. இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த பெயர், மதிப்பு அனைத்தையும் வெறும் நாற்பது கழஞ்சு பொன்னுக்கு விலைபேசிய உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ராயனின் வெறித்த பார்வையும்.. அவன் முன் குவிந்து கிடந்த செல்வமும் மூளையில் கிறுகிறுப்பை ஏற்படுத்தியது. என்ன நடந்தது என்று ராயன் யூகிக்கும் முன்னே… அருகில் இருந்த முடித்து வைக்காத ஒரு சிலையின் முனை அவன் தலையில் தாக்கியது. தெறித்த ரத்தம் சோழியவரையரின் கையெல்லாம் வழிந்தது.

இருகைகளிலும் வழிந்த ரத்தத்தின் வாசனை மூளையில் எட்ட, அப்படியே விக்கித்து அமர்ந்தார் சோழியவரையன். என்ன ஆயிற்று எனக்கு என்ற கேள்வி அவர் மனதில் பேயாட்டம் போட்டது. கண்கள் இருட்டினார்போல தோன்றியது. இன்று காலை நேரம் மீண்டும் திரும்பாதா… திருத்திக் கொள்வேனே… என்று பரிதவிப்புடன் சற்று மயக்கம் வந்தது அவருக்கு.

சுதாரித்து எழுந்தவர்..கைகளை கழுவினார். ஒரு கயிறை கொண்டு ராயனின் உடல் தூக்கில் தொங்குவது போல கட்டி… வீட்டின் பழைய உத்திரத்தில் மாட்டிவிட்டார். அந்த பொன் கழஞ்சு மூட்டையை மட்டும் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு… கண்களை துடைத்தவாறு வெளியேறினார். அவர் கால்கள் அவரை மீறி கோயிலை நோக்கி இட்டுச்சென்றது. பாணர் தெரு… குயவர் தெரு… அடுத்து அந்தணர் வீதி… தாண்டி சென்றார். கடைவீதியில் தங்க வைர வைடூரிய கடைகளை பார்த்தபடி… இதெல்லாம் வாங்குவேன் என்று மனதில் நினைத்தபடி சென்றார். பின் காவலர் வீதியை கடக்கும்போதும் அவர் மனதில் பயம் தோன்றவேயில்லை. கோயிலின் நூற்றியெண்பது அடி மதிலை சுற்றிச்சுறி வந்தார். ஆறடி உயர்ந்த நந்தியை பார்த்து… ‘ நான் உன்னை விட பெரியவன் நந்தியே..’ என்றார். உயர்ந்த துவாரபாலகர்கள் இவரைப்பார்த்து முறைப்பதாய் தோன்றியது. அந்த பார்வையை தவிர்க்க வெளிவந்தவர் விமானம் அருகே வர… மேலே ஏற்ற வைக்கப்பட்டிருந்த அந்த பிரமாண்ட சிகரத்தின் மீது மெதுவாக சாய்ந்து ஆசுவாசம் கொண்டார். மனதில் இருந்த கவலைகள் மறைவதாய் பிரமை ஏற்பட்டது.

முகத்தில் நிழல் பட நிமிர்ந்து பார்த்தவர் மேலே அந்த கழுகைக் கண்டார். அதன் கைகளில் ஒரு பெரிய முயலை தூக்கியபடி சுற்றிச்சுற்றி வந்தது.

‘கழுகே… நானும் உன்னைப்போலதான். பார்ப்பவர்… முயல் பாவமென்பர்… ஆனால் வேட்டை உன் நியதி… நானும் என் பசிக்கு வேட்டையாடினேன்… தவறில்லையே… ‘ என்று சிறு மர்மப் புன்னகையுடன் முணுமுணுத்தார். சிறிது சாய்ந்து கண்மூட… அந்த கழுகு பாரம் தாளாமல் தவறவிட்ட முயல் படுவேகமாக அவரின் தலைமீது விழுந்தது. விழுந்த வேகத்தில்… நிலைதடுமாறி அவர் சரிய… அந்த பொன் மூட்டை… கைநழுவி… அந்த சிகரத்தின் மையதுளையில் போய் விழுந்தது.

********

“ஆஹா… அதிர்ஷ்டகாரன்தான் நீ சோழியவரையா… “ என்ற குரலை கேட்டு மெதுவாக கண்விழித்தார் சோழியவரையன். அது மருத்துவர் அமரபரணன். அவரருகே வரையனின் ஒரே மகள் கண்களை துடைத்தபடி… சிறிது புன்னகையுடன் அவரருகே வந்தாள்.

“என்ன… ஆயிற்று… எனக்கு… மருத்துவரே… “

“ ஒன்றுமில்லை… ஓய்வு போதும்… தேறிவிடுவாய்.. “

“ கும்பாபிஷேகம் பார்க்கவேண்டும்… வரி கட்ட வந்து விடுவார்கள்.. என்னை தூக்கிவிடுங்கள்… “

“ அட கடவுளே… வரையா… உனக்கு தலையில் அடிபட்டு விபத்து அப்பா…. ஒரு மாதகாலமாக மயக்க நிலையில் இருந்தாய்… நீராகாரம்… பால் மூலம் உன்னை காப்பாற்றினோம். இந்த மாதிரி மீண்டு தெளிவது அதிசயம்தான். சோழ அரசில் அதிசயத்துக்கு பஞ்சமேது… “

“ என்ன… ஒரு மாதமா…. அரசர் வந்து போய்விட்டாரா… என் நிலம்… வரி… “

“பதறாதே… ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. நீ விபத்தில் சிக்கிய அன்று… பிரம்மராயன் என்ற ஒரு சிற்பியும் இறந்திருக்கிறான். தான் இதுவரை சேமித்த செல்வங்களை கோயிலுக்கு ஓலை எழுதிவிட்டு… வாழ்வின் நிறைவில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். ஆனால் உத்திரம் அவன் கனம் தாளாமல் முறிந்து விழுந்து தான் வடித்த சிலையில் மோதி இறந்துவிட்டான். அவன் தேடியதை கிடைத்த மகிழ்வுடன். அவன் வடித்த தன் உருவசிலையையும், அவனது பெருமையையும் கேட்டறிந்த அரசர் அவன் பெயரில் ஒரு பள்ளிபடைக்கோயில் எழுப்ப ஆணையிட்டதோடு… நிலவரி நிலுவைகளையும் ரத்து செய்துவிட்டார். “

அவரையே உறுத்துப்பார்த்தார் சோழியவரையன்.

“விமானம் மேலே சிகரத்தை ஏற்றும்போது… மேலிருந்து பொன் கழஞ்சுகளும் கொட்டியது அதுதான் மிக சிறப்பான அதிசயமப்பா… அரசர் மெய் மறந்தார். உனக்குதான் இதெல்லாம் பார்க்க கொடுத்துவைக்கவில்லை. “

தன் விழியோரம் கண்ணீர் வழிவதை உணரமுடிந்தது சோழியவரயருக்கு.

எழுதியவர் : அப்புசிவா

மூலங்கள் நன்றி:

முதலாம் இராஜேந்திர சோழன் – ம.இராசசேகர தங்கமணி

சோழர் வரலாறு – மா.இராசமாணிக்கனார்

இராஜேந்திர சோழன் – மா.இராசமாணிக்கனார்

கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு – முனைவர். சீ. வசந்தி

பயனளித்த தகவல்கள் :

  • *கழஞ்சு, செப்பு , கருங்காசுகள், ஈழகாசுகள்
  • *நிலவரி
  • *காணி 
  • *கப்பல்களில் துணிவகைகளை ஏற்றுமதி 
  • *நூறுக்கு நாற்பது வீதம் வட்டி 
  • *உணவு அப்பங்கள், பணியாரங்கள் 
  • *கங்கைகொண்டானாம் உத்தமசோழன் 
  • *திருவாதிரை நாளில் உதித்த, வானவன்மாதேவியின் வாரிசு 
  • *“ அந்த போர்… ஆக்ரமிப்புக்கு இல்லையே…. சோழகங்க ஏரியை சுத்தப்படுத்த கங்கா நீரை கொண்டுவரச்சென்றபோது இகழ்ந்து தடுத்தவர்களை எதிர்த்து வென்றது… உத்தமசோழனின் தவறில்லையே… “
  • “அரசருடன் இளவல் இராஜகேசரியும் வருகிறாராம்.
  • மாளிகைமேட்டு அரண்மணை 
  • *வேதபாடசாலைகள்
  • *சிங்கமுக கிணறு
  • *அவர் கால்கள் அவரை மீறி கோயிலை நோக்கி இட்டுச்சென்றது. பாணர் தெரு… குயவர் தெரு… அடுத்து அந்தணர் வீதி… தாண்டி சென்றார். கடைவீதியில் தங்க வைர வைடூரிய கடைகளை பார்த்தபடி… இதெல்லாம் வாங்குவேன் என்று மனதில் நினைத்தபடி சென்றார். பின் காவலர் வீதியை கடக்கும்போதும் அவர் மனதில் பயம் தோன்றவேயில்லை. கோயிலின் நூற்றியெண்பது அடி மதிலை சுற்றிச்சுறி வந்தார். ஆறடி உயர்ந்த நந்தியை பார்த்து… ‘ நான் உன்னை விட பெரியவன் நந்தியே..’ என்றார்
  • *பள்ளிபடைக்கோயில் 

 

 

————————————————நன்றி———————————

 

Leave a Reply