விஜயநகரத்தை நோக்கி

ஒரு முறை வரலாற்றுத்தேடலில் ஈடுபட ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது என்றே சொல்லலாம். புதியதாக ஒன்றைத் தேடத் தோன்றும். அறியாத ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். அந்த வகையில் ஒரு வரலாற்றை தேடிச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்புகள் தான் இந்தப் பதிவு.

நம் அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும் ஆயிரம் வருடம் பின்னோக்கி பயணிக்க வேண்டும் அப்பொழுது இருந்த நகரங்களையும், மக்களையும் அவர்களின் வாழ்வியில் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எப்பொழுதும் நமக்கு உண்டு, உண்மையிலே காலப்பயணம் சாத்தியம் தானா? ஒளியை விட வேகமாகப் பயணித்துக் காலத்தில் பின்னோக்கி நம்மால் செல்ல முடியுமா என்ன? இவற்றை உணர்ந்த காலம் நமக்காகச் சில அரியப் பொக்கிஷங்களை இந்தப் பூமியில் விட்டுச் சென்று உள்ளது அவற்றில் ஒன்று தான் ஹம்பி.

ஹம்பி துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். பல வரலாறுகளையும் தன்னுள்ளே கொண்டு அதன் நினைவாக உள்ள ஒரு ஊர், ஒரு காலத்தில் விஜயநகரத்தின் தலைநகராக விளங்கியது, நவரத்தினங்களும், வைரங்களும் இந்த நகரத் தெருவில் கீழே விழுந்து கிடந்தது. இது இருநூறு வருடங்களுக்குத் தென்னகத்தின் இணையில்லா அரசாக விளங்கியது

ஆனால் இன்று கற்களைக் கொண்டு கவி பாடி வருகிறது. ஹம்பே என்று மற்றொரு பெயரும் இந்த நகரத்திற்கு உண்டு.

இந்தப் பயணம் தற்செயலாக நடந்த ஒன்றா? இல்லை.. இல்லை.. நான் இந்த நகரத்தைக் காண வேண்டும் என்ற வீதியின் செயலா? என்று தெரியவில்லை, எந்த விதத் திட்டமும் இல்லாமல், இரண்டு நாட்களுக்குத் தேவையான துணிகளும் சிறுபணமும் எடுத்துக் கொண்டு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையம் சென்றேன். எங்கோ செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் எங்குச் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சொல்வது போல “மனிதனுக்கு பிரச்சினை வந்தால் எதிரில் எதாவது ஒரு வண்டி வரும்” என்பது ஹம்பி செல்லும் பேருந்து என் கண் முன்னே வந்து நின்றது,

ஹம்பியை பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இதற்கு முன் சென்றதில்லை. ஹம்பி என்ற பெயரைப் பார்த்தவுடனே இங்குத்தான் செல்ல வேண்டும் என்று மனம் சொல்லியது, பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். பதினான்கு மணி நேரப் பயணத்திற்கு பின் ஹம்பி ஊருக்குள் நுழையும் போதே இரண்டு பக்கமும் வயல்வெளிகளின் காட்சிகள் கண்களுக்கு இதமாய் அமைந்தன.

பேருந்திலிருந்து கீழே இறங்கியபோது ஒரு சிறுவன் என்னை நோக்கி ஓடி வந்து கன்னடத்தில் உங்களுக்குத் தங்குவதற்கு ரூம் வேண்டுமா என்று கேட்டான்? நானும் ஆம் என்றேன் அந்தச் சிறுவனும் என்னிடம் பேசிக் கொண்டே வந்தான் “எங்கள் ஊருக்கு வந்துள்ளீர், நிச்சயம் இங்கு இருக்கும் நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாகத் தான் அமையும் அதை நீங்களே உணர்வீர்கள்” என்றான்.

நான் பேசும் அரை குறை கன்னடத்தை வைத்தே அவன் நான் வெளியூர்க்காரன் என்று கண்டுபிடித்து விட்டான். ரூமிற்கு அழைத்துச் செல்வான் என்று நினைத்தால், துங்கபத்திரை நதிக்கரை அருகே இருக்கும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். “இந்த வீட்டில் இருக்கும் மேல் மாடியில் நான் தங்கலாம் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வாடகை என்றான். உணவும் வீட்டிலேயே உண்ணலாம்”, என்றான். பார்த்தவுடனே அந்த வீடு எனக்கு மிகவும் பிடித்தது அங்கையே தங்க ஒப்புக்கொண்டேன்.

பொதுவாக வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்கள் ஓடுகின்ற ஆற்றைக் காண்பது மிகவும் அரிது. அந்த வகையில் நானும் துங்கபத்திரை நதியைப் பார்த்தவுடனே ஒரு குளியல் உடனே தேவை என்று நினைத்தேன், மனதார குளித்துவிட்டு, சிற்றுண்டியைச் சாப்பிட வீட்டிற்கு வந்தேன். வீட்டில் இருக்கும்  வயதான தம்பதிகளுக்கு ஐம்பது வயதைக் கடந்திருக்கும். அவர்களின் மகன் இராணுவத்தில் பணிசெய்ய, தங்களின் பூர்விகம் இடமான ஹம்பியில்  விவசாயம் செய்துவருகின்றனர்.் இடையில் வருமானத்திற்கு வீட்டை வாடகைக்கு விடுகின்றனர்.

கிராமத்தில் இருக்கும் வெகுளித் தனமான அன்பு அவர்களிடம் இருந்தது, நான் ஒரு வழிப்போக்கன் என்றாலும், நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளி என் மகனுக்கும் உன் வயது தான் நீயும் என் மகன் போன்றவன்! இந்த வார்த்தைகளைக் கேட்ட நான் உலகில் நல்ல மனிதர்கள் உள்ளார்கள், நாம் தான் அவர்களைத் தேடி செல்ல வேண்டும், இல்லை சில சமயம் அவர்கள் நம்மைத் தேடி வருகிறார்கள், குளித்து முடித்த எனக்குக் குளிர் எடுத்து விடக் கூடாது என்பதற்குப் பாலில் பனைவெல்லம் கலந்து கொடுத்த தாயின் அன்பிற்கு இணை எதுவும் இல்லை. சிற்றுண்டிக்குப் பிறகு தேடலுக்குச் சென்றேன்.

முதலில் சென்றது விருபாக்ஷா சிவன் கோயில், கோயிலில் புகைப்படங்கள் எடுக்க மிகுந்த தடைகள் இருந்தன. பெரும்பாலானோர் கோயிலுக்கு வருவது இறைவனைத் தரிசிக்க தான் புகைப்படம் எடுப்பதற்கில்லை. ஆனால், எதோ என்னால் முடிந்த புகைப்படங்களை எடுத்தேன், அடுத்து கோயிலுக்கு அருகே சாளுக்கிய மன்னர்களால் கட்டப் பட்ட சமண கோயில்கள் கவனத்தை ஈர்த்தன. விஜயநகரக் காலத்திற்கு சாளுக்கிய மன்னர்களின் கட்டுப்பாட்டில் ஹம்பி இருந்துள்ளது, சமண கோயில்களின் தரிசனத்திற்குப் பின்பு “கடே கல்லு கணேஷா” கன்னட மொழியில் ஒரே கல்லில் செதுக்கப் பட்ட பிள்ளையார் அமைதியாக வருபவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அதன் பிறகு சென்றது கலிங்க கிருஷ்ணர் கோயில். கலிங்க நாட்டை வென்ற கிருஷ்ண தேவராயர் அங்கிருந்து ஒரு கிருஷ்ணர் சிலையை வெற்றியின் நினைவாகக் கொணர்ந்து அதற்குக் கோயிலை எழுப்பியுள்ளார். இப்பொழுது கிருஷ்ணர் சிலை அங்கில்லை. ஆனால் இன்றும் பழைய கம்பீரத்தை இழக்காமல் அக்கோயில் உள்ளது. அதன் பிறகு புகழ்பெற்ற பதவ லிங்கத்தை காண சென்றேன். லிங்கத்தை நீர் சூழ்ந்து இருக்கும், அதன் அருகிலே நரசிம்மர் சிலையும் இருந்தது.

இந்திய தொல்லியல் துறை, மண்ணில் புதைந்து கிடந்த சிவபெருமானின் ஆலயத்தை வெளியில் கொண்டு வந்துள்ளது. இந்த ஆலயத்தைத் தனியாகச் சுற்றி பார்க்கும்போதே ஒருவித திகில் மனதில் ஏற்படுகிறது அங்கிருந்து அரண்மனை இருந்த இடத்திற்குச் சென்றேன்.

எத்தனை மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை அது இப்பொழுது வெறும் கற்களும் சில தடயங்களும் அரண்மனை இருந்தற்கு சான்றாக உள்ளது, அரண்மனை பார்த்து முடிப்பதற்குள் மழை பெய்ய ஆரம்பித்தது அதுவும் இடைவிடாமல் மதியம் ஆரம்பித்த மழை மாலை ஆறு மணிக்கு மேல்தான் நின்றது.

இரண்டாம் நாள் பயணம் தொடங்கியது. தாமரை அரண்மனை மற்றும் யானைகள் தங்கும் இடத்தைப் பார்த்தேன். ஹம்பியின் கலைநயம்மிக்க கோயில்களில் ஒன்றான இராமர் கோயிலைக் கண்டேன். கோயில் சுவர்களில் முழுவதும் இராமாயணச் சிற்பங்கள் இருந்தன. அதன் பின்பு செல்கின்ற வழி எல்லாம் அழிந்து போன மண்டபங்கள், கோயில்கள் இருந்தன,

ஒரு பாறையில் ரங்கநாதரின் புடைப்பு சிற்பம் என்னை மிகவும் கவர்ந்தது. இறுதியாகக் கிருஷ்ண தேவராயரின் கனவு படைப்பான, கல்லில் செதுக்கிய ரதம். உலகில் அழியாமல் இருப்பது கலை மட்டும்தான். கலைக்கு அழிவே கிடையாது என்பதற்கு சான்றாக உள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றையும் அதனால் ஏற்பட வலிகளையும் கொண்டு வாழ்ந்து வருகிறது. ஹம்பி, “இன்று நான் அழிந்து போன நகரம் தான், ஆனால் ஒரு காலத்தில் நான் எவ்வாறு வாழ்ந்து இருப்பேன், என்று நீயே கற்பனை செய்துகொள்” என்று ஹம்பியில் இருக்கும் ஒவ்வொரு கற்களும் நமக்கு ஒரு பாடமும் கதையும்  சொல்கின்றன.

– சீனிவாசன்

Leave a Reply