வழுதி கண்ட தென்காசி பெருங்கோபுரமும் – பொன் கார்த்திக்கேயன்

வரலாறு குறித்து தேடத் தொடங்கிய போது எங்கெல்லாமோ தேடி அலைந்துவிட்டு சொந்த ஊரில் வாளாவிருக்கிறோமே என்ற குறை அடிக்கடி இருந்துவந்தது. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தூங்கி எழவே பொழுது சரியாயிருந்தது.

இம்முறை எப்படியேனும் காசி கண்ட பெருமாள் பராக்கிரம பாண்டியனது சிற்பத்தையும் தென்காசிப் பாண்டிய இலச்சினை (இரட்டைக் கயல்) யையும் காண வேண்டுமென்ற நோக்கில் நானும் எனது சகோதரனும் சென்றோம்.

  

முப்பெரும் வேந்தருள் ஒருவராயிருந்து பின் தம் குலப் பெருமை தாழ்ந்ததால் தெற்கே இடம்பெயர்ந்து தென்காசியினைத் தலைநகராக்கிக் கொண்டு தென்பாண்டி நாட்டினை ஆண்டோர் தென்காசிப் பாண்டியர் என்னும் பெயர் கொண்டு குறிப்பிடப்படுவோராவர். அக்குலத்தில் தோன்றிய சிறந்த மன்னவனாக அறியப்படுவான் ஜடிலனான பொன்னின் பெருமாள் எனும் பெயருடைய பராக்கிரம பாண்டியனாவான். இவன் ” பூமிசை வனிதை மார்பினில் பொலிய” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி கொண்டவன்.

இறைவன் தனது கனவினில் தோன்றி தான் உத்தர காசியில் இருந்த இடம் சிதைந்து போனதாலயே தனக்கு தக்‌ஷிண காசியாக ஆலயம் செய்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டமையாலே சித்ரா நதிக்கரையிலே பார் போற்றும் தக்கண காசியினை விசுவநாதன் மகிழ்ந்திருக்க நிர்மாணித்தான்.

இக்கோவிலாலேயே செண்பகப் பொழிலென பெயர் பெற்றிருந்த நகரம் தென்காசி என்றானது. இவனது மெய்க்கீர்த்தி வரிகளும் தென்காசிப் பெருங்கோவில் செய்வித்ததை அவனது சாதனைகளுள் ஒன்றாக விவரிக்கின்றன.

அக்கோவிலின் இராஜகோபுர கட்டுமானத் தொடக்கமும் இவனது காலத்தேயே தொடங்கியது. ஒன்பது நிலைகளைக் கொண்டதாக கட்டப்பட்ட இக்கோபுரச் சுவர்களின் இரு புறங்களிலும் அரசேறிய பாண்டிய மன்னர்களின் புகழையும் காலத்தையும் குறிப்பிடும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ்ப் பாடல் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கோவில் கட்டுமானம் 1446லேயே தொடங்கி விட்டாலும் கோபுரக் கட்டுமானம் 1457ல் பராக்கிரம பாண்டியனால் தொடங்கப்பட்டதை ஓர் பாடல் கல்வெட்டு தெரிவிக்கின்றது. கலியுக வருடம் 4558( 1457) ல் கார்த்திகை ஐந்தாம் தேதி திருக்கோபுரத்தின் உபானப் பகுதி கட்டுமானம் தொடங்கப்பட்டது.

“வடிவெழு தொணாத பராக்கிரம மகிபன் சொன்ன வரை போற் திருக்கோபுரமுங் காணத் துடியிடையா யுபானமுதல் துடங்கினானே”

இக்கோபுரந்தனில் முன்னர் ஒன்பது நிலைகள் இருந்ததை இப்பாடல் கல்வெட்டுகளே விவரிக்கின்றன.

“ஓங்கு நலை யொன்ப துற்ற திருக் கோபுரமும்
பாங்கு பதினொன்று பயில் தூணுந் தேங்கு புகழ்
மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி
தன்னிலன்றி யுண்டோ தலத்து”

கோபுரத் திருப்பணி முடிவுறும் முன்னரே பாரக்கிரம பாண்டியன் மரணமடைந்தான். இவன் மறைந்ததைக் குறிப்பிடும் மற்றோர் பாடல் கல்வெட்டு இவன் அறுபத்துமூவர் கூட்டத்திலோ வெள்ளி பொன் அம்பலங்களிலோ வேதத்திலோ சிவலோகத்திலோ விசுவநாதனின் பாதத்திலோ சென்றடைந்தான் எனக் குறிப்பிடுகிறது.

தனது அண்ணன் செய்வித்த பணி நிறைவுறாது குறையாய் கிடந்தன கண்டு வருந்திய அவனது சகோதரன் குலசேகரன் பணியினை முற்றுவித்தான். பராக்கிரம பாண்டியனுக்குப் பின் மூன்றாண்டு கழித்து கர்ப்பகிரகத்தையும் மகா கோபுரத்தையும் பணி முற்றுவித்து குடமுழுக்கும் நடத்தினான். இதுவும் பாடல் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“விண்ணாடர் போற்றுந் தென்காசிப்
பொற்கோபுர மீதிலெங்கண்ணாழ்வி
செய்த பணி யிப்படிக் குறையாய்க் கிட
க்க வொண்ணாதெனக் கண்டுயர்ந்த
தம்மோடெங்கு முன்றுரைத்தான்
மண்ணாளு மாலழகன் குலசேகர மன்னவனே”

பின்னர் இடி தாக்கியதாக கூறப்படும் இக்கோபுரம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதி வரையிலும் இடிந்த நிலையிலே காணப்பட்டது. அதன் பின்னான திருப்பணியினால் பழைய கோபுரம் அகற்றப்பட்டு ஏழு நிலையில் புதிய கோபுரம் நிறுவப்பட்டது.

கோவில் பின்னாளில் கேட்பாரற்றுப் போய்விடும் எனக் கருதினானோ என்னவோ பல பாடல் கல்வெட்டுகள் தனக்குப் பின்னால் அக்கோவிலை புரப்பார்களை வேண்டியே காணப்படுகிறது.

“இந்த தென்காசி பேராலயம் தெய்வச் செயலாலே செய்யப்பட்டது. என்னுடைய செயலால் அல்ல. இதனை புரப்பார்களை குற்றேவல் செய்து பணிவேன் பராக்கிரம பாண்டியனே”

“பொழில் சூழ் தென்காசியைப் இவ்வுலகில் தாங்கிப் புரப்பார்களை செந்தாமரையால் கணவனாகிய கொற்கை வேந்தன் பராக்கிரமன் பணிபவனாய் எந்நாளும் விளங்குவார்கள்”

“மனத்தாலும நினைக்க முடியாத கோவிலை வகுத்த பராக்கிரம மாறனாகிய நான் இக்கோவிலை புரப்பார்களின் பாத்த்தினை தன் தலை மீது வைத்து வணங்குவேன்”

“பொன் மேவும் தென்காசிக் கோவிலுக்கு யாரும் நினையாதோர் குற்றம் வந்தால் அதனை ஒழித்துப் புரப்பார்களை பாரார் அணியப் பணிவேன் இந்த பராக்கிரம பாண்டியனாவேன்”

” தென்காசிக் கோவில் வகுத்து புவி கடல் போற்ற வைத்தேன். இதனை திரிசேர் விளக்கென காப்பார் பாதமென் தலை மேலியதே”

தனது வாக்கினை மெய்ப்பிக்க தனது உருவத்தினை உலகம்மன் கோவில் சன்னதி வாயிலிலே தரையில் பதித்துக் கொண்டான். அருகிலேயே பாண்டியரின்இரட்டைக் கயலும் பொறிக்கப்பட்டுள்ளது.

காசி விசுவநாதர் எனும் நாமம் கொண்டிருந்தாலும் உள்ளூர் மக்களால் கோபுர வாசலென்றே அழைக்கப்படுகிறது. அக்கோபுர வாசலின் கோபுரத்திற்கு காற்று வீசும் கோபுரம் என்றோர் பெயருமுண்டு. கோபுரத்தில் உள் நுழையும் போது பின்பக்கமிருந்து வீசும் காற்று வெளி வருகையில் முன் பக்கமாக வீசுவது இதன் சிறப்பு.


நெல்வேலி மாறனான வீரவேள் குலசேகர செழியன் அரசனாக முடிசூடியது, அந்நிகழ்வின் போது அவன் மேல் வீரவெண்பாமாலை பாடப்பட்டது, சீவலவேளன் மகுடஞ் சூடியது, வேல் வீர மாறனான அபிராமன் அரசனானது அவன் மேல் காசிக்கலியன் கவிராயன் எனும் புலவர் பாடல்களை பாடியது,

வல்லமெறிந்த வீரபாண்டிய அபிரமான் மகுடம் புனைந்தது ஆகிய நிகழ்வுகளைக் குறிப்பிடும் பாடல் கல்வெட்டுகளும் அக்கோபுர வாயிலிலே பொறிக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பு கிடைப்பவர்கள் பராக்கிரம பாண்டியனுயும் அவன் தென்காசி கோபுரத்தையும் கண்டு வரலாம்

Leave a Reply