வழிபாடு சடங்கு முறைகளில் ஆரிய, சமண, பௌத்தக்கலப்பு

பழங்காலத் தமிழர்கள் இயற்கையை இறைவனாக் கருதினர். இயற்கையை வழிபட்டால், அவை தங்களைப் பாதுகாப்பவை, என்று எண்ணியே இயற்கையை வழிபட்டனர். அவ்வாறு வழிபட்ட தெய்வங்கள் பின்னாளில், ஆரியரின் வருகைக்குப் பின்னர்ப் பலப் பல கட்டுக் கதைகளுடன் தமிழ் மரபில் சேர்ந்து, தனித்தமிழ் மரபு எது என்று தெரியாத அளவிற்குக் கலந்து விட்டது என்பதே உண்மை.

பொய்யை ஆவணப்படுத்தினால் அது காலத்தின் கோலத்தில் உண்மையாகி விடும் அந்த விதத்தில், பின்னால் சேர்க்கபட்டு ஆவணப் படுத்தப்பட்டதே தற்போதுள்ள சமய வரலாறு ஆகும். அவை எவ்வாறு கலந்தன என்பதைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழர்களின் வழிப்பாட்டு முறைகளும் சடங்குகளும்சங்க காலத் தமிழர்களின் வழிபாடுகளும் ,சடங்குகளும் சமயத்திற்கு ஏற்றபடி அமைந்தன. முதலில் ஐவகை நிலங்களுக்குத் தகுந்தவாறுக் கடவுள்களையும் வழிபட்டனர். நிலத்திற்கு ஏற்றத் தொழில் தொழிலுக் கேற்றக் கடவுள் என்பதில் தெளிவாக இருந்துள்ளனர். குறிஞ்சி மக்கள் வேட்டையாடியுள்ளனர், முல்லைநில மக்கள் ஆனிரைகளை மேய்த்துள்ளனர், மருத நில மக்கள் ஆற்றுப்படுகைகளில் பயிர் செய்துள்ளனர், நெய்தல் நில மக்கள் மீன்பிடித்து வாழ்ந்துள்ளனர். ஞாயிறு,திங்கள், தீ என்ற மூன்றையும் வாழ்த்துவதும் அமரர் வாழ்த்துப்பாடல் போலவே வரும் என்பதாகும். பல தெய்வங்களை வணங்கியுள்ளனர்.

இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்ற மாயேன், பகைவரை எதிர்க்கொள்ளச் சேயோன், இயற்கைச் சீற்றத்திலிருந்து காப்பாற்ற இந்திரன், நீர்வழி அச்சம் நீக்க வருணன். கடவுள்கள் கற்பிக்கப்படுகிறார்கள். திருமால், முருகன், இந்திரன், வருணன் கொற்றவையும் ஆகும். தொல்காப்பியர் காலத்தில் நடுகல் வணங்கும் முறையும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. குறிப்பிடத்தக்கது “மாயோன் மேய காடுறை உலகம் (தொல்.பொருள்.5) என்ற பாடல் மூலம் அறியலாம். முற்காலத்தில் தமிழரின் சமயம் பகுத்தறிவுப் பூர்வமானது இயற்கையோடு இயைந்தது. அனைவருக்கும் பொதுவானது.

மரங்களின் கீழ்த் தெய்வங்கள் தங்கிருந்தன என்று அக்காலத்து மக்கள் நம்பினர். ஆலமரத்தின் கீழ்ச் சிவபெருமான் அமர்ந்திருப்பதாக வரலாறு சொல்கிறது மன்னர்களும் தங்களுக்கெனக் காவல் மரங்களை வைத்திருந்தனர். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறையை வணங்கும் வழக்கம் இருந்தது. தொல்காப்பியர் தனது பொருளதிகாரத்தில், மக்களின் அகம்,புற வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதில் சமயம் மதம் என்ற குறிப்பு இல்லை. சமயம் என்ற குறிப்பும் இல்லை ஏனென்றால் தொல்காப்பியர் காலத்தில் சமயம் என்ற ஒர் அமைப்பே இல்லை. பரம்பொருள், கடவுள் என்ற வரைவிலக்கணம் எதுவுமில்லை. கடவுள் என்பதே தேவர்கள் என்றே குறிப்பிடுகிறார்.

“கொடி நிலை கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (புறம் 27)

தொல்காப்பியத்தில் பல மெய்யியல் சார்ந்த கருத்துக்களும் பழந்தமிழர், இயற்கையின் தன்னமையை அறிந்து கொள்ள ஆவல் கொண்டே மருத்துவக்கலை, தற்காப்புக்கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும் பல கலைகலைக்களைக் கண்டுபிடித்துச் செம்மைப் படுத்தியிறுக்கிறார்கள் என்பதே உண்மை. மேலும் சிவ வழிபாடு இருந்தாகத் தெரியவில்லை உருத்திரன்–சிவன் என்றும் அச்சம் தரும் தெய்வமாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறான். மேலும், பின்னாலில் கிபி.7ஆம் நூற்றாண்டு வாக்கில் சிவன் முழுமுதற் கடவுளாகவும் மதமாகவும் உருவாக்கப்பட்டது.

தமிழர்கள் ஏதாவது ஒருவகையில் புலால் உண்ணுபவர்களாகவே (குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை) பலி கொடுத்தும் பின்பு அதைச் சாப்பிடுவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இவை பாவச் செயலாகக் கருதப்படவில்லை. சங்கத் தமிழரின் சமயத்துக் கேற்ப வழிபாடுகளும் விழாக்களும், சடங்குகளும் அமைந்தன. கொற்றவை வழிபாடு, வருண வழிபாடு, இந்திரன் வழிபாடு, திருமால் வழிபாடு, பத்தினி வழிபாடு, உயிர் நீர்த்த வீர்ரகளுக்கு நடுகல் வழிபாடு ஆகியவை முக்கியமாகச் செய்யப்பட்டன.

மேலும் நடுகற்களுக்கு மலர் மாலை அணிவித்து, மயிற்பீலிகளால் அணி செய்தனர். வருடந்தோறும் இவ்வழிபாடுச் சிறப்பாக செய்யப்பட்டு வந்தது. விழாக்களுள் சிறப்பானவை, இந்திர விழா, காமன்விழா, உள்ளிவிழா, விளக்கேற்றும்விழா, திருவாதிரை விழா ஆகியவை. சடங்குகளில் பிரதானமானதாக தை நீராடல் இருந்தது. சங்க காலத்தின் பிற்பகுதியில் நிமித்தம் பார்த்தல், உளழ்வலி, மறுபிறப்பு, உருவ வழிபாடு போன்றவற்றைப் பின்பற்றினர்.” தீயக் கனவுகள் ,பறவை நிமித்தங்கள், விண்ணினின்றும், கொள்ளிமீன் விழுவதிலும், உன்னமரம் பூத்தலிலும்,மக்கள் பின்னர் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்னரே அறிவிக்கும் குறிகளைக் கண்டனர்.

முருக வழிபாடு தமிழகத்தின் தொன்மையான வழிபாடுகளுள் ஒன்று. குறிஞ்சி நில மக்கள் முதன்மைக் கடவுளாக வழிபட்டுள்ளனர். முருகள் வெற்றிக் கடவுளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான். குறிஞ்சி நிலத்துக் குறவர்களுடன் தொடர்புபடுத்திச் சேவற் கொடியுடையோன் என்று அழைத்துள்ளனர். வெறும் சேவற்கொடியை மட்டும் வெட்டவெளியில் நட்டுப் பூசைகள் செய்துள்ளனர். வேலாட்டமும், வெறியாட்டமும் இந்த வழிபாட்டுடன் தொடர்புடையன. குறிஞ்சி மலையும் மலைச் சார்ந்தப் பகுதி ஆதலால் மலை இருக்கும் இடத்திலெல்லாம் முருக வழிபாடுச் சிறப்பு பெற்று விளங்கியது.

தாய் தெய்வ வழிபாட்டையும், பெண் தெய்வத்தைக் கன்னியாகவும் வழிபட்டுள்ளனர்.

கொல்லிப்பாவை, கொற்றவை ,குமரி, காமனர் செல்வி, சூலி போன்ற பலப்பெயர்களில் அழைத்துள்ளனர். பெண் தெய்வ வழிபாட்டில் பூசாரித்திகள் பூசை செய்துள்ளனர். இவர்களே அச்சம் தரும் படியான ஆயுதங்களை ஏந்தி மயிர் சிலிர்க்க வைக்கும் வெறியாட்டுகளை ஆடியுள்ளனர். கொற்றவையைக் கிராமத் தெய்வமாகவும் வழிபட்டுள்ளனர்.

சிவனையும் சக்தியையும் ஒன்றிற்குள் ஒன்று வைத்து ,மெய்ஞானத்திற்குள், விஞ்ஞானம் இருப்பதைக் கண்டறிந்தனர் என்பதைச் சங்கப்புலவர் பெருந்தேவனார் தனது புறப்பாடல்களில் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்க காலத்தில் அறிவியல் கண்ணோட்டத்தில் பரம்பொருளை ஆராய்ந்தவர்களுக்கு முதலில் பஞ்ச பூதங்களை வழிபட்டனர். அவற்றின் இயல்பையும் அறிந்தனர். பிறகு பூமியின் சுழற்சியுடன் ஒப்பாய்வு செய்தனர். விஞ்ஞான விளக்கம் கொடுத்தனர். சமய நோக்கில் விஞ்ஞானத்தை அறிந்தனர். பொழுதையும் நிலத்தையும் முதற்பொருள் என்றனர். தெய்வம் மனிதனை, தோன்று பொருள் என்று வரையறுத்தனர். ஒழுக்கத்தை உரிப்பொருளாக வைத்தனர்.

ஐம்பூதங்களில் சூரியனின் இயக்கத்தைக் கணக்கிட்டனர் ,அதன் மூலம் மற்ற மற்ற கோள்களின் இயக்கங்களைக் கணக்கிட்டனர். பிறகு சூரியனை வைத்து சுழலும் காற்றைக் கணக்கிட்டனர், அதன் மூலம் பருவ மாற்றங்களைக் கணக்கிட்டு வருடம் ,மாதம் நாட்கள், நாழிகைகள் எனக் கணக்கீடுகளைக் கொண்டு கணித்தனர். இதனை வானசாஸ்திரம் என்றனர்.
முதுமக்கள் தாழி என்பது இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.இறந்தவர்களை வழிபட்டு இருக்கின்றனர்.

சிறு தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாட்டில் ஆடு,மாடு பலியிடுவதை வழக்கமாகக் கொண்டனர்.  

பேய்பிசாசுகள் நம்பிக்கை இருந்தது. வேப்பந்தழை, இரவம் தழை, வெண்சிறு கடுகு போன்றவை பேய்களை விரட்டக்கூடியவை என்று பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆல்,வேல்,கடம்பு, வில்வம், கொன்றைப் போன்ற மரங்கள் கடவுள் வாழும் மரம் என்றும் ,அவை புனிதமானவை என்றும் நம்பினர். ஐம் பூதங்களிலும் கடவுள் வாழ்கிறார் என்று வணங்கினர்.

சமய வழிபாட்டின் ஒரு பகுதியாகக் குளித்துக் கோவில்களுக்குச் சென்று வழிபடும் முறை இருந்துள்ளது. பூவும் ,தண்ணீரும் பயன் பட்டமையால் ,வழிபாட்டிற்கு “பூசை” என்று பெயரிட்டனர். பின்னாலில் ஆரியர்கள் வடமொழி கலந்து “பூஜை” என்றனர். வீட்டில் இன்று இருப்பது போன்று “பூசை” அறை எனத் தனியே ஓர் அறை வைத்து ,அதனைச் சாணமிட்டு மெழுகிச் சுத்தப் படுத்தியுள்ளனர். மாலையில் விளக்கேற்றி தெய்வ வணக்கம் செய்துள்ளனர்.

சமணமும் பௌத்தமும்

சங்க காலத்திலேயே தோன்றிய மதங்களில் ஒன்று புத்தசமயமாகும். பார்பனீயச் சமயத்தைப் போன்றே வெளியிலிருந்து இறக்குமதியானதே ஆகும்.புத்தசமயமும் சமண மதமும் கொள்கைளால் ஒன்றாகி ,சடங்குகளால் வேறானவை. புத்த சமயம் பார்பனீயக் கொள்கைகளுக்கு எதிரானது. சமஸ்கிருதத்தைக் கடவுள் மொழி என்றது பார்பனீயம், மேலும் மக்களைச் சாதி அடிப்படையில் பிரித்தது,இதனை எதிர்த்தது புத்தசமயம்.
சமணர்கள் கிராமங்களில் தங்களின் கடமைகளைச் செய்தனர். அசோகர் காலத்திலேயே ,அதாவது தோன்றியப் புதிதிலேயே தமிழகத்தை அடைந்த மதம் பௌத்தம். இலங்கையை முகாமாக்கியது. பின் பாண்டிய மண்டலம் வழியே செல்வாக்கைப் பெற்றுச் செழித்தது. சமணப்பள்ளிகளும், பௌத்த விகாரங்களும், முனிவர்களுக்கான படுக்கைகளும் பெருகின, பௌத்தத் துறவிகள் விகாரங்களை அமைத்து, தத்தம் கொள்கைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தனர். சமூகத்திலும் ,இலக்கியங்களிலும் அவர்களது கொள்கைகளைப் பின்பற்றி வந்தன. இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றன. ஈகை, கொல்லாமை, தவம், துறவறம் முதலியவற்றைப் பரப்பியும், இதனால் மட்டுமே சொற்கத்தை அடைய வழி என்று பரப்பினர் இதனை மக்கள் கண் மூடித்தனமாக நம்பினர். தற்கால ஆராய்ச்சியாளர்கள் திருவள்ளுவரும் தொல்காப்பியரும் சமணர்கள் என்று சொல்வோரும் உண்டு. சமுதாயத்திற்குப் பல நன்மைகளைச் செய்தனர். தமிழைக் கற்று அதன் மூலம் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டாற்றினர்.
“அதியமான் நெடுமான் அஞ்சி சமணர்களுக்கு மலைகலைக் குடைந்துப் படுக்கைகள் அமைத்துக் கொடுத்ததாகக் கல்வெட்டுச் சான்று உள்ளது. சங்க காலப்பாண்டியன் மதுரையில் இடமளித்துக் கடலன் விபூதியில் சமணப் படுக்கை அமைத்துத் தந்துள்ளதை நாம் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்”.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலக உறவுக் கோட்பாடு சமணர்கள் காலத்தில் உருவானதே. பின்னாலில் புத்தரின் திரிபிடக்கருத்தை வெளிப்படுத்தும் பாடலாக ஔவையாரின் “நாடாகொன்றோ” என்ற பாடல் விளங்குகிறது.

சமணர்கள் பள்ளிகளை அமைத்துக் கல்விச் செல்வத்தைச் சாதாரண மக்களுக்கும் ஊட்டினர். தமிழர்கள் பலர் பௌத்த ,சமணச் சமயக்கொள்கைகளால் ஈர்க்ப்பட்டனர். மன்னர்களின் ஆதரவும் இருந்ததால், ‘மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்று தமிழர் வாழ்வியல் முறைகளைத் தாங்களே புறந்தள்ள ஆரம்பித்தனர். வேறு சிலரோ பௌத்த, சமண கருத்துக்களில் சில நல்ல பழக்கங்களை மட்டும் எடுத்துத் தமிழர் வாழ்வியல் முறைகளில் சேர்த்துக் கொண்டு தனி வழியே சென்றனர்.
ஆரியக்கலப்பு கிமு 3ஆம் நூற்றாண்டில் தமிழத்திற்கு குடியேறிவிட்டனர்.

அவர்களுடையக் குடியிருப்புகள் ‘சேரிகள்’ என்றும் பின்னர் ‘மங்கலங்கள்’ என்றும் அழைக்கப்பட்டன. தமிழர்களை ஆண்ட மன்னர்களின் செல்வாக்கைப் பெற்று வழிபாட்டு முறைகளை மாற்றினர். வேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இவர்களின் வரவால் பல கட்டுக் கதைகள் வழுக்கட்டாயமாக புராணக்கதைகள் ஆக்கினர், அவற்றை நேர்த்தியாக புனைந்து ஆவணமாக்கினர். அனைத்துத் திருவிழாக்களும் தீயை முன்னிருத்தி பல சடங்குகளைச் செய்தனர். புரோகிதம் வலிமை பெற்றது. அதனை நம்பிய அவர்களும் கடவுளுக்குப் பிறகு கடவுளின் தூதுவரகாப் போற்றப் பெற்று ஏற்றம் பெற்றனர். உழைக்காமலேயே வசதியாக வாழும் இரகசியத்தைத் தன்னிடத்தே கொண்டிருந்தனர்.

சிறுதெய்வங்களாக இருந்தவற்றைப் பெருந்தெய்வங்களாக ஆக்கி அவைகளுக்கும் ஆகம விதியின் படிப் பூஜைகள் செய்தனர். ஶ்ரீ முனீஸ்வரன் என முனியன்,என்றச் சிறு தெய்வத்திற்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்துப் பழங்களை படையல் இடுகின்றனர்.இவ்வாறு அனைத்து சிறு தெய்வங்களையும் மாற்றிப் பெருந்தெய்வ வழிபாடு செய்து தமிழ்ச் சமயத்திற்குள் கலந்தனர்.

பல யாகசாலைகளை மன்னரின் உதவியுடன் கட்டமைத்துக் கொண்டு மன்னர்களுக்காகப் பல யாகங்களை செய்தனர். பல யாகங்கள் செய்யத் துணை நின்ற மன்னர்களுக்குப் பல பட்டங்களைக் கொடுத்து தங்கள் வசம் வைத்திருந்தனர். பரந்த மனம் படைத்த தமிழர்கள், சாதிகளே இல்லாமல் இருந்த மக்களைச் செய்யும் தொழில் கொண்டு சாதி வாரியாகப் பிரித்துத் தனிச் சமூகமாகப் வைத்தனர். ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கித், தாழ்ந்தவன் பூசை, செய்வதும் கோவிலுக்குள் வருவதும், தவறு, தீட்டு என்ற ஒரு முறையை நடை முறைப்படுத்தினர்.

ஆரியர்களுக்கு ஒரு நாளின் தொடக்கம் என்பது காலைச் சூரிய உதயத்திலிருந்தே கணக்கிடப் படுகின்றது. ஆனால் பழந்தமிழருக்கு ஒரு நாளின் தொடக்கம் என்பது பகல் 12 மணியிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது அதனாலேயே அந்த நல்ல நேரத்தில் திருமணம் நடத்தல் என்பது தமிழ் மரபைக் கடைபிடிக்கும் சில குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. பறவைகளையும் விலங்குகளையும் தொடர்புறுத்தும் வழக்கம் ஆதி ஆரியரிடம் காண முடியாது. அஃது அவர்களுடைய சமயத்தில் பிற்காலத்தில் தான் நுழைந்தன. விநாயக் கடவுளின் பெருச்சாலியும், சிவபெருமானின் எருதும், துர்கையின் சிங்கமும் முருகனின் மயிலும் ,திருமாலின் கருடனும் ஆரியர்கள் செய்தக்கலப்பாகும்.
முடிவுரை

உலகத்தில் எந்த ஒரு நாடும் பிற மக்களின் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து விட முடியும் என்று நினைப்பது முட்டாள் தனம். மேலும் பக்கத்து நாட்டின் படையெடுப்புகளின் மூலம், அவர்கள் ஆட்சி செய்ய முற்படும் போது அவர்களின் கலாச்சாரம் மொழி ,பண்பாடு,கலை ,கலாச்சாரம் இவைகள் கலப்பது என்பது தவிர்க்க இயலாத ஒன்று. இவற்றுள் அவர்கள் சமயமும் அடங்கும். தனித்தமிழ் நாகரீகம் ஒன்றே பரவியிருந்தக் காலத்தில் சிறு சிறு குழுக்களாக வந்துக் குடியேறிய வடநாட்டவர் தமிழரின் பழக்க வழக்கங்கள், கலைகள், இசை, நாடகம் ,நாட்டியம் உணவு என எல்லாவற்றிலும் ,எது தமிழர்ச் சமயம், கலை என்று அடையாளம் காண முடியாத வகையில் கலந்து விட்டனர்.

மேலும் மொழிக்கலப்பு “வடசொற்கிளவி வடவெழுத்து ஒரீயி” என்ற நூற்பாவின் மூலம் தொல்காப்பியர் காலத்திலிருந்தே மொழிக்கலப்பு ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். வடநாட்டவர்களிடம் வேதம் ,மந்திரம் என்பது மிகப்பெரிய மதிப்பான விசயம் என்று மன்னர்களும் ஆதரித்து உயர்ந்த இடத்தில் வைத்தனர்.

தவிர்க்க இயலாத குடி மக்களும் அவர்களை மதிக்கலாயினர். அவர்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு தமிழர்கள் மண்ணில் கோவில்கள் எழுப்பினர் ,தமிழ் தெய்வங்களுடன் பினைத்து கதைகளையும் எழுதி வைத்தனர். வடமொழிக்கும் அவர்கள் தமிழைத் தழுவி இலக்கணம் எழுதினர். தமிழர்கள் வந்தாரை வாழவைக்கும் குணத்தால் நமது அறிய பண்பாடு மொழி, சமயம் என அனைத்தின் தனித்தன்மையையும் இழந்தனர்.

மெல்ல மெல்லக் குடியேறிகளாக வந்து தமிழர்களின் அனைத்துத்தனித் தன்மைகளிலும் இரண்டரக் கலந்துத் தமிழ் படித்தவர்கள் ஆனாலும் தனித்தமிழ் சொற்கள் எவை, வடசொற்கள் எவை எனக்கண்டறிய முடியாத அளவிற்குக் கலந்து விட்டது என்பது நாம் மறுக்க முடியாத உண்மை. மேலும் சங்க காலங்களில் தமிழர்கள் அறிவியல் முதல் சமயம் கலாச்சாரம் வரை அனைத்திலும் ஒரு தெளிவு பெற்ற சமுதாயத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்திருக்கின்றனர், என்று நினைக்கும் போதே பெருமையாக உள்ளது. வரும் காலங்களில் இருப்பதைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதையும் உணர்கிறேன்.

– திருமதி. வாசுகி குமாரவேல்

நூல்பட்டியல்
1. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர் கே.கே. பிள்ளை,2011. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், Internation Institute of Tamil Studies, இரண்டாம் முதன்மைச் சாலை,மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113.
2.முற்கால தமிழ்நாட்டு வரலாறு, டாக்டர் க.வெங்கடேசன்,2012. விசி.பப்ளிகேஷன்ஸ், இராஜபாளையம்.
3. தமிழக வரலாறும் பண்பாடும், பேரா.வே.தி.செல்லம்,மணிவாசகர் பதிப்பகம்,31 சிங்கர் தெரு,பாரிமுனை, சென்னை600 108.
4. தமிழக வரலாறும் பண்பாடும், டாக்டர் மா.இராசமாணிக்கனார் 2011,சாரதா பதிப்பகம்,சென்னை 600 014.
5.தற்கால தமிழ்நாட்டு வரலாறு டாக்டர் க.வெங்கடேசன் 2011, விசி.பப்ளிகேஷன்ஸ், இராஜபாளையம்

Leave a Reply