பாரதி கண்ட சோழன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #6

வளர்பிறையின் இரண்டாம் நாள், வானில் சிறு கீற்றாய், வெண்மதியும், மினுக்கும் நட்சத்திரங்களும் இரவைப் போர்த்தியிருந்த இருளின் கருங்கரங்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்க, கீழே ஆங்காங்கே மினுத்த தீப்பந்தங்கள் அந்தப் பணியைச் செய்ய முயன்று கொண்டிருந்தன. அது அந்த சிற்றூரின் பரபரப்பான கடைத்தெரு.  விளைந்த நெல்லைக் கொடுத்து, வாங்குவதற்கென, நெருப்பில் சுட்ட வண்ணக்கலவைகள் பூசிய பானைகள், குவளைகள், முத்து மாலைகள், பலகாரங்கள், காய் கனிகள்‌ என்று அனைத்துக் கடைகள் முன்னும் சிலர் நின்றிருந்தனர்.

அறுவடை முடிந்து சில நாட்களேயான இந்த நேரத்தில் கடைத் தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.  ஆனால், அதில் இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த வெல்லமும் பச்சரிசியும் கலந்து செய்த ஓர் இனிப்பு பலகாரத்தை வாயிலிட்டு மென்றபடி ஒவ்வொரு கடையாகப் போய்வந்தனர்.  ஒவ்வொரு கடையையும் அவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பதைப் பார்த்தால் எதையோ அல்லது எல்லாவற்றையோ வாங்குவது போலத் தெரிந்தாலும், அவர்களின் வெற்றுக் கைகள் எதையும் வாங்கும் உத்தேசமில்லை என்று சொல்லின. இருவருமே திண்ணென்ற தோள்களும், இறுகிய  மார்பும், ஒட்டிய வயிறும், முறுக்கேறிய கைகால்களும், நிமிர்ந்த நடையுமென,  அச்சில் வார்த்தது போல, ஒரே போலிருக்க இருவரையும் எப்படி வேறுபடுத்திச் சொல்லுவது?  ஆஹா! ஒரு சின்ன வேறுபாடு..  ஒருவன் முறுக்கிய மீசையோடு இருக்கிறான். மற்றவனுக்குக் கேசம், சிங்கத்தின் பிடரி முடி போல, அவன் ஒவ்வொரு அசைவிற்கும் காற்றில் துள்ளி எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது.

  சிறிது நேரத்தில், அந்த கடைகளிலிருந்து விலகி, அலுப்புற்றவர்களாய், ஊரிலிருந்து வெளியே செல்லும் மண்சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.  இரண்டு மூன்று மாட்டு வண்டிகள் ஒரே நேரத்தில் செல்வதற்கு ஏற்ப அகண்ட அந்த மண் சாலையில் மரங்களும் மனிதர்களும் ஓய்வெடுக்க, இருபுறமும் அடர்ந்த மரங்கள் ஓங்கியெழுந்திருந்தன. எதுவும் பேசாமல் நடந்தவர்கள், சட்டென்று  மண்சாலையிலிருந்து விலகி, வலப்புறமிருந்த வாழைத் தோப்பிற்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.  இருபுறமும் தன் வாழை இலைகளால் இங்கும் அங்கும் யாருமில்லாத இடத்தில் சாமரம் வீசிக் கொண்டிருந்தன நீண்ட வாழை இலைகள். 

  அப்போது  பிடரிமுடிக்காரன்  முறுக்கு மீசையைப் பார்த்துக் கேட்டான், “மாறனைப் பார்த்தாயா?” 

“ம்.. பார்த்தேன்.  நாளை தன் தோழர்களுடன் நம் குழுவில் இணைந்து கொள்வதாக வாக்களித்திருக்கிறான்.”

” நல்லது.. அறுவடை முடிந்து, மூன்று வேளையும் உண்டு உறங்கினார்கள் என்றால் இரவில் கலகம் செய்யத்தான் தோன்றும்.  நம்மோடு சேர்ந்து, நம் பணிக்கு ஒரு கை தந்தால்  இரவில் நித்திரை நிச்சயம்.. ”  பேசியபடி வந்தவன்,  சட்டென்று தன் இடக் கரத்தை அருகில் இருந்த வாழை மரத்தின் பின் விட்டான்.  அவன் கையை மரத்திற்குப் பின்னிருந்து  எடுத்த பொழுது,  அது மற்றொரு கரத்தைப் பிடித்து இழுத்து வந்தது.   அந்த இரும்புப்  பிடியிலிருந்து தன் கையை விலக்கிக் கொள்ள,   அந்த கைக்குச் சொந்தமான உருவம், தன்னால் ஆன முயற்சியை செய்தது.  

 உடனே முறுக்கு மீசை,  தன் இடுப்பிலிருந்த கத்தியின் உறையினில் கையை  வைத்தான். ” இந்தப் பெண்ணிற்கு உன் ஆயுதம் அதிகமாகத் தெரியவில்லையா அருண்மொழிபட்டா? “

 “கவனம்.. அரையா.. ஒற்றன் ஆயுதங்கள் வைத்திருக்கலாம்.” அந்தப் பெண்ணை மேலும் கீழும் பார்த்தான். இளம்பச்சை நிறத்தில் மேல்சட்டையும் வெள்ளை நிறக் கால் சட்டையும் அணிந்திருந்தாள். கழுத்தில், கையில், காதுகளில் மெல்லிய தங்க ஆபரணங்கள் தவழ்ந்தன.

 ” எந்த நாட்டு ஒற்றன் நீ?”

”  நா..  நான்..” அவள் உதடுகள் நடுங்கியதில் வார்த்தைகளும் தந்தியடிக்க, அவன் தன் கைகளின் அழுத்தத்தைக் கூட்டினான்.  “என்னதான் புது ஒற்றன் என்றாலும் கொஞ்சமேனும் சாமர்த்தியம் வேண்டாமா? உன்னைப் பார்த்ததாக, ஐந்து வயது மழலை   முதல் அறுபது வயது கிழார் வரை அனைவரும் கட்டியம் கூறுகின்றனர்.”கேலியாக அவன் இதழ்கள் வளைய, அவன் கைகள் கொடுத்த அழுத்தத்தில் பாரதியின் வலக்கை வலித்தது. அந்த வலி சொன்ன,  இல்லை.. இது கனவு இது கனவு என்று ஐந்து நாட்களாக தான் உருப்போட்டிருந்தது பொய்யானது, என்ற சேதியில் கண்களில் நீர் துளிர்த்தது. தான் நம்ப முடியாமல் தவிக்கும் ஒன்று உண்மைதான் என்று மூளை உணர்ந்த நொடி, அவள் தேகத்தில் ஒரு சிலிர்ப்பு  தலை முதல் பாதம் வரை மின்னலாய்ச் சென்றது.  “யார் இவர்கள்? இவளை யார் என்று கேட்கிறார்கள். இல்லை.. கேட்கவில்லை. ஏதோ நாட்டு ஒற்றன் என்று தன்னை ஒற்றனாக முடிவே செய்து விட்டார்கள். நான் ஒற்றனா? ஹாஹா.. ஒரு மோசமான நாடகத்தின் மோசமான பகுதியின் நாயகியாகத் தான் இருப்பது போல் தெரிய, வாய் விட்டு சிரிக்க வந்த உந்துதலை முயன்று அடக்கினாள். பைத்தியமே பிடித்து விட்டதா? 

இல்லை.. பாரதி.. தைரியமாக இரு.. இவர்களிடம் சொல்லி, உதவி கேட்கலாம். ஒரு வேளை, இந்த காலத்தில் இருப்பவர்களுக்கு டைம் டிராவல் சாதாரணமான விஷயமாக இருக்கலாம். எதற்காகவாவது தன்னை வரவழைத்திருக்கலாம். இல்லை யாருக்கும் பதிலாகவோ தான் வந்திருக்கலாம். இவர்களிடம் விவரம் சொல்லி உதவி கேட்கலாம். முடிவெடுத்தவள் அவன் முகம் பார்த்து பேச ஆரம்பித்தாள்,

“சார்.. எ.. என் பெயர் பாரதி.. நான் இங்கே தெரியாமல் வந்து விட்டேன்..” 

“உன் கதையைச் விரைந்து சொல்.” வேலை இருக்கின்றது”.

” எந்த நாட்டு பெண் நீ?”

” நான் சென்னையில் இருக்கிறேன். சொந்த ஊர் விருதுநகர்..” 

அவர்கள் கண்கள் யோசனையாய் அவள் மீது படிய, ” சென்னை எந்த நாட்டில் இருக்கிறது?” என்றான்‌ அருண்மொழிபட்டன்.

 “அது.. தமிழ்நாட்டில்..  இல்லை.. இல்லை.. இந்தியாவில் இருக்கிறது..”

” என்ன உளறுகிறாய்?”

 கோபத்தில் கைகளை மேலும் அழுத்தினான். 

இதை எப்படி சொல்வது.‌ ” சார்.. தயவுசெஞ்சி நான் சொல்வதை நம்புங்க..இது சோழபுரம் னு சொன்னாங்க..  நிஜம் தானா?”

” நீ எங்களை விசாரணை செய்கிறாயா?”

“இல்லை..   நான் சொல்வதைக் கேளுங்கள்.நான் சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நான் சொல்வது உண்மை..” ஏதும் பேசாமல் அவர்கள் தன்னையே பார்க்க அதையே வாய்ப்பாக எண்ணிப் பேச ஆரம்பித்தாள்,  “மாந்தோப்பிற்கு  வெளியே ஒரு குடிசையில் ஒரு பாட்டி இருக்கிறார்கள். அவர்களிடம் பேசியதில் இது ராஜாக்கள் ஆட்சி செய்யும் காலம் என்று தெரிந்தது. உண்மைதானா?” இன்னும் கலையாத நப்பாசையோடு ஏக்கமாய்க் கேட்டாள். 

“எங்களிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று சொன்னேன்..”

” சரி.. சரி.. நான்..‌அதிலிருந்து எனக்கு இப்போது தெரிய வந்திருப்பது என்னவென்றால்,”  தான் கூறுவதை அவர்கள் எப்படியும் நம்ப மாட்டார்கள் என்பது புரிந்தாலும் சொல்லித்தானேயாக வேண்டும் என்ற எண்ணத்தில் காற்றை  ஆழ உள்ளிழுத்துச் சொன்னாள்,  “நான் எதிர் காலத்தில் இருந்து வந்திருக்கிறேன்..”

  முன்னின்ற இருவரும் ஒரு நொடி அவள் சொல்வது புரிபடாமல் குழப்பமான‌ கண்களோடு  அவளைப் பார்த்தனர்.  அடுத்த நொடி அந்த அரையர், “ஹாஹா வெனச் சிரிக்க, அருண்மொழி பட்டன் முகத்திலோ எரிச்சல் மண்டியது. 

“என்ன கதை சொல்கிறாய்?” என்று அருண்மொழிபட்டன்‌ இயம்ப, அரையனோ , “இத்தனை காலத்தில் பிடிபட்ட எந்த ஒற்றனும் இத்தனை கற்பனை வளத்துடன் கதை சொல்லியதில்லை..” என்று கேலி கலந்த குரலில் பேச ஆரம்பித்து, பற்களைக் கடித்தபடி பேசி முடித்தான்.

” இல்லை.. இல்லை.. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். இது ராஜாக்கள் ஆட்சி செய்யும் காலம் என்று தெரிகிறது. ஆனால் நான் வாழும் காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. அது.. நான் சொல்வதை நம்புங்கள் தயவுசெய்து நான் நிஜமாகவே எதிர்காலத்திலிருந்துதான் வந்திருக்கிறேன்.”

“என்ன அருண்மொழி,  கத்தியை நீ பூஜை செய்வதற்கு வைத்திருக்கிறாயா..” என்று கையைப் பிடித்திருந்த அரையன் தன் நண்பனிடம் கேட்க, பாரதிக்கு உலகமே சுற்றியது..”  “வேண்டாம்.. வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள்.. ப்ளீஸ்..”

” அவசரமேன் அரையா..  இராஜேந்திர சோழரிடம் கொண்டு நிறுத்துவோம்.  ஒற்றனின் உதடுகள்  உயிருள்ள உடலில் இருப்பதுதான் உத்தமம்..” என, பாரதிக்கு மீண்டும் அந்த சிலிர்ப்பு தலை முதல் கால் வரை பரவியது.. ” என்ன? என்ன? இராஜேந்திர சோழனா?”

திகைத்தவள்  கண்களில் அந்த இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட பளுதூக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்ட புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருந்த இராஜேந்திர சோழனின் படம் மின்னலாய் வந்து போனது. ” இராஜேந்திர சோழன் என்று சொன்னீர்களே இது அந்த ராஜாவுடைய காலமா?” கண்கள் விரித்துக் கேட்டவளைப் பார்த்து, “சட்..!”என்று அலுத்துக் கொண்டவன், “ஆகட்டும்..  அழைத்து வா.. இன்று இரவு இந்தப் பெண்மணியோடுதான்  நம் காலம் போக வேண்டும் என்று இறைவன் எண்ணம்  போலும்..” என்று பற்றியிருந்த கரங்களால் பாரதியை முன்தள்ள,   கண்களில் அச்சத்துடன் இருவரையும் நோக்கினாள். மனமோ,   காற்றில் அவள் கூந்தல் அலைபாய்ந்ததைவிட அதிகமாய் அலைப்புற்றது, ‘இதெல்லாம்  நிஜமாகவே நடக்கிறதா? நான் டைம் ட்ராவெல் பண்ணியிருக்கிறேனா? எப்படி?  அந்த புத்தகத்தால்தான் இருக்க வேண்டும்.  அப்போதே அந்த லைப்ரரி அண்ணா சொன்னார்.  சாயங்காலம் ஐந்து மணிக்கு இந்த புத்தகத்தை ஏனம்மா எடுக்கிறாயென்று? அவர் பேச்சைக் கேட்டிருக்கலாம்.. “

“ம்.. சீக்கிரம் நட” அருண்மொழிபட்டன் அவளுடைய தயங்கிய நடையைக் கண்டு,  அவசரப்படுத்தினான். ‘இப்போது இவர்கள் என்னை இராஜேந்திர சோழனிடம் அழைத்துப் போகிறார்கள். அவர் எப்படி இருப்பார்?. வேதா தான் அந்த ராஜாவைப் பற்றி சில நாட்களாக ஆஹா ஓஹோ என்று பேசிக்கொண்டிருந்தாள்.  வேதாவிடம் இராஜேந்திர சோழனை நேரிலே பார்த்தேன் என்று சொன்னாள் தைய தக்க என்று குதித்து விடுவாள். ஆனால் அதைப்பற்றி இப்போது ஏன் யோசிக்க வேண்டும்.  எதிர்காலத்திற்கு போவேனா? வேதாவிடம்  சொல்வேனா?’

 குறுக்கும் நெடுக்குமாக அவர்கள் சென்ற பாதை,  ஒரு பெரும் சமவெளியில்  சென்று முடிந்தது. அந்த பெரும்பரப்பில் ஒரு பக்கம் கடல் போல பெரும் ஏரி நீரால் தழும்பிக் கொண்டிருந்தது. அந்த பரப்பில் அடர்த்தியான துணியால் கூடாரங்கள் பல இருந்தன.  கார்த்திகைத் திருநாளின் மூன்றாவது நாள், போல ஆங்கொன்றும் இங்கொன்றுமாய்  தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒரு கூடாரத்தை நோக்கிப் போனார்கள்.

  இங்கேயா இருக்கிறார் ராஜா? ராஜா என்றால் அரண்மனையில் அல்லவா இருப்பார்கள்… ராஜாவிடம் தான் அழைத்துச் செல்கிறார்களா? இல்லை, இராஜேந்திரன் என்ற பெயரில்  வேறு யாரேனும் இருக்கிறார்களா? கூடாரத்தின் துணியை நீக்கி உள்ளே செல்லுமாறு, அருண்மொழிபட்டன் சைகை செய்ய,  பாரதிக்கு உள்ளத்தில் இருந்த சந்தேகமெல்லாம் அந்த கூடாரத்திற்குள் சென்று, அங்கிருந்த மனிதனின் முகத்தைத் கண்டதும் மறைந்தன.  

ஆம்.. முகத்தைப் பார்த்துதான். உடல் உருவத்தில் இவனும் அரையனையும் அருண்மொழிபட்டனையும் போல்தான் இருந்தான்.   ஆனால் அவன் முகமோ, காலை எட்டுமணிக்கு  சூரியன், விடிகாலை இதத்திற்கும், உச்சிவெயிலின் உக்கிரத்திற்கும் இணையாக காட்சிதருமே, அது போல ஒளிர்ந்தது.   அதில் பௌர்ணமி நிலவு போல, சாந்தமாய் பார்க்கும் கண்கள்; அந்தக் கண்களிலோ,  விடிவெள்ளியைப்  போல ஒளிரும் ஞானமும்  தெளிவும்.   இவன்தான் இராஜேந்திரன் என்று யாரும்‌சொல்லாமலே பாரதியால் உணரமுடிந்தது. தன்னை மீறிய பிரமிப்புடன் , அவள்  மூச்சு விடவும் மறந்து நிற்க,  “யாரிது?” என்ற பெண்குரல் கேட்டது. அப்போதுதான் குரல் வந்த திசையில் திரும்பிய பாரதி, அந்த அறைக்குள் மற்றொரு பெண் ஒருவள் இருப்பதை உணர்ந்தாள்.    

பிரமிப்பிலிருந்து விலகாத பாரதியிடமிருந்து கண்களையெடுத்த அரையன் தான் அப்பெண்ணின் கேள்விக்குப் பதில் சொன்னான்,” சில நாட்களாக, யாரோ ஒரு பெண் ஐயப்படும்படி, கிராமத்திற்க்குள் புலப்படுவதாக,  கிராமத்து ஆசாரி சொன்னாரே..  அந்தப் பெண் இவள்.. “

இதைக் கேட்டதும்‌ அப்பெண்ணின் கரங்களும் இடையிலிருந்த கத்தியின் உறைக்குப் போக, நடப்பிற்கு வந்த பாரதிக்கு அலுப்பு தட்டியது.  இவர்களுக்கு வேலையே இதுதானா? ” இல்லை.. இல்லை..  நான் ஒற்றன் இல்லை..”

” பின்னே ஏன் அங்கும் இங்கும் ஒளிந்து வாழ்கிறாய்?”

 இராஜேந்திரனின் குரலில் திரும்பியவள், மீண்டும் பிரமிப்பில் மூழ்க, தலையை உலுக்கிக் கொண்டாள், ‘ம்கூம்.. அசந்து போய் நிற்பதற்கு  இப்போது நேரமில்லை. அப்புறம் இவரும் இடைக்கத்தியில் கை வைத்து விடுவார்.’ ஆனால் இவர் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வது. தான் சொல்வதை யார் நம்புவார்கள். ஆனால் நடந்ததைத்தானே சொல்ல முடியும். உண்மை நம்புவதற்குக் கடினம் என நம்பும்படியாக, நடக்காத ஒன்றையா சொல்ல முடியும்?.. என்ன செய்வது? சில நேரங்களில் பொய்களை விட உண்மை நம்புவதற்குக் கடினமாயிருக்கிறது.. பாரதி.. சூப்பர்.. தத்துவமெல்லாம் சொல்கிறாயே.. ஆனால் இதையெல்லாம் இப்போது வாயைத் திறந்து சொல்ல முடியாதே.. 

“சொல் பெண்ணே.. நீ யார்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?”

“ராஜா!  நான் சொல்வது உங்களுக்கு நம்புவதற்கு ரொம்ப கஷ்டம்தான்.. ஆனால் அதுதான் உண்மை.. ப்ளீஸ் என்னை நம்புங்கள்..”

” நீ சொல்லாத ஒன்றை நான் எப்படியம்மா நம்புவது?”  சிறு கேலி கலந்து  வந்த இராஜேந்திரனின்  அமர்ந்த குரலில் சிறிது தைரியம் வரப்பெற்றவள் சொன்னாள், ” நான் எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கிறேன் சார்.‌”

” இது என்ன புதுக் கதை?”  என்று அந்தப்பெண் கூற, ” நிஜம் தான்..  நிஜம் தான் மேடம். நம்ப முடியாதுதான்; ஆனால் அதுதான் உண்மை.  இப்போதிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்குக் கழித்த காலத்திலிருந்து வந்திருக்கிறேன்..”

 ” இதையேதான் இளவரசே எங்களிடமும் கூறினாள்.. ” அரையன் கோபமாய்க் கூற, ” அதுதான் உண்மை ராஜா” என்று பாரதி பாடிய பாடலையேப் பாட, “நீ சொல்வதற்கு என்ன ஆதாரம்? எப்படி நிரூபிப்பாய்?”” என்று அருண்மொழி பட்டன் வினவினான்.

தானே  நம்ப முடியாமல் திகைத்திருக்கும்  ஒன்றை, தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை எப்படி நம்ப வைப்பது? 

“எப்படி நீரூபிப்பது என்று தெரியவில்லையே..” கலங்கிய குரலில் கைகளை இறுகப் பற்றியபடி சொன்னவளைப் பார்த்த இராஜேந்திரனுக்கு ஆச்சர்யம்தான். இப்பெண் உண்மைதான் சொல்கிறாள். பொய் சொல்பவன்தான்‌தன் கதையைப் பிறர் நம்ப ருசுவோடு செல்ல வேண்டும். உண்மை சொல்பவனுக்கு அது தோன்றாதே.. அவ்வாறு எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குப் பயணம் செய்ய முடியுமா?

மறுமொழி கூறாமல் தன்னையே பார்த்திருந்த  இராஜேந்திரனைப்  பார்த்த பாரதிக்கு சற்றே நம்பிக்கை வந்தது.  ” நிஜம்தான் சார்! நான் இங்கு வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன.. எப்படி வந்தேன்; ஏன் வந்தேன் என்று தெரியவில்லை..  எப்படி என் காலத்திற்குத் திரும்பிச் செல்வது என்றும் புரியவில்லை..  ரொம்பவும் பயமாக இருக்கிறது சார்.. நீங்கள்தான் எப்படியாவது என்னைக்  காப்பாற்ற வேண்டும்..”  அழுத்தமாகப் பேச ஆரம்பித்து மன்றாடும் குரலில் முடித்தவளைப் பார்த்த இராஜேந்திரன், அவளின் வலப்பக்கமிருந்த மரப்பலகையின் மேலிருந்த மண் குவளையைக் கண்களால் சுட்டிக் காட்டினான், “அந்தக் குவளை நீரை எடுத்து குடி.. பிறகு  நிதானமாகச் சொல். உனக்கு நாங்கள் செய்யக் கூடியது என்ன?”

 ” வேந்தே! இன்று நமக்கு முக்கிய அலுவல் இருக்கிறது..”

” சற்றுக் காலம் கழித்து செய்யலாம் அரையா..” அரையனிடம்‌ உரைத்தவன் கண்கள் பாரதியிடம் நிலைக்க, பாரதிக்கும் குழப்பம். எங்கிருந்து ஆரம்பிப்பது.. ” சார்.. என் பெயர் பாரதி..நான் ஒரு டீச்சர்.. அதாவது ஆசிரியை..   கணக்கு ஆசிரியை.   எங்க பள்ளிக்கூடத்தில் ஒரு விவாதப் போட்டி வச்சிருந்தாங்க.‌ அதில் தமிழர் வரலாற்றில் சிறந்த பேரரசு பல்லவராட்சியா? சோழராட்சியா? என்ற தலைப்பில் நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்து  விவாதம் செய்ய வேண்டும்.

“இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது?”  குறுக்கிட்ட அரையன் இராஜேந்திரன் பார்வையில் அமைதியாக,  அவன் பேச்சை சற்றும் கவனியாத  பாரதி தொடர்ந்தாள்.  “என் தோழி பெயர் வேதா.  அவள்தான் வரலாற்று ஆசிரியை. அவளுக்கு உடம்பு சரியில்லை என்று அவளுக்குப் பதிலாக நான் போட்டியில் பங்கேற்பதற்காக கடைசி நேரத்தில் முடிவானது.  எனக்கு வரலாறு பற்றி ரொம்ப தெரியாது சார். அதனால் சோழர் ஆட்சி பற்றி படிப்பதற்காக நூலகம் போனேன். அங்கே ராக்கின், அதாவது மர அலமாரியின், மேல் தட்டில்,  ஓரத்தில்  ஒரு பெரிய புத்தகம் இருந்தது. இராஜேந்திர சோழனை, அதாவது உங்களைப் பற்றிய வரலாற்று புத்தகம். அதை எடுத்துப் படித்தேன்.. நீங்கள் இளவரசராக இருந்த நேரம் பற்றிய பகுதியைப் படித்துக் கொண்டிருந்தேன். பெரிய படையை வைத்து போர் செய்ய அரசாணை வருவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் ஏரி வெட்டிக்கொண்டிருந்தீர்கள் என்று சொன்னார்கள்..”

மீண்டும் மூவர் கைகளும் இடைக்கத்திக்குப் போக, பாரதி பொங்கி விட்டாள். பள்ளி மாணவியாக மாறி வம்பு செய்யும் குழந்தைகள் டீச்சரிடம் முறையிடும் பாவனையில், ” இப்படியே இவங்க செய்து கொண்டிருந்தால் எப்படி சார் தைரியமாகப் பேச முடியும்?” என்று முறையிட, அருண்மொழிபட்டன்‌ பேசினான்‌, “போருக்குப் தயாராகும் நேரத்தில்தான்‌ நாங்கள்‌ ஏரி வெட்டுகிறோம் என்று‌ யார் சொன்னது உனக்கு?”

” அந்த புத்தகத்தில் அப்படிதான் போட்டிருந்தது சார்.. ஏன்.. ஓ.. அது ரகசியமா? யாருக்கும்‌ நீங்கள் போருக்குத் தயார் நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரியாதா?” கண்கள் விரித்து அவள் ஆச்சர்யப்பட, இராஜேந்திரன்தான் இடைமறித்தான், “உன் கதையைச் சொல்லி முடி பாரதி.. என்னைப் பற்றிய நூலைப் படித்தாய். அடுத்து?”

 வெட்டப்பட்ட ஏரியையும் அது நீர் தரும் நில வளத்தையும் ரொம்ப அழகாக வர்ணித்து எழுதியிருந்தார் சார் அந்த நூலின்‌ ஆசிரியர்.  நானும்  “ஆஹா! இப்படி ஒரு இடத்தில் நாம் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவ்வளவுதான்.  அதுதான் நான் கடைசியாக நினைத்த வார்த்தைகள்.  அடுத்த நொடி இவர்கள் என்னை பிடித்து வந்த வாழைத்தோப்பிற்குப் பக்கத்தில் இருக்கும் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.” 

 இப்படியும் நடக்குமா என்னும் அவர்கள் எண்ணம் நால்வர் முகபாவனையிலும் வெளிப்பட, பாரதிக்கு சற்றே தைரியம் வந்தது. தான் நம்பவே முடியாத ஒன்று என்று சிந்தனையில் ஒதுக்கி வைக்க முயல்வதை ,  இவர்கள் நம்ப முயற்சி செய்கிறார்களே.. அது நல்ல அறிகுறியல்லவா? எப்படியாவது இவர்களை நம்ப வைத்துவிட வேண்டும் என்ற‌ எண்ணம் ஊக்கம் தர, மேலும் பேசினாள், “அந்த புத்தகத்திலிருந்த வேறு தகவல்கள்,  இராஜேந்திர சோழன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்; இவர் தந்தை இராஜராஜ சோழன்; தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினார்.”

“இது இங்கிருக்கும் சிறார்க்கும்  தெரியும்.”

“ஓ..! வேறு… ம்.. இவர் படைத்தளபதிகள் பெயர் அரையன், அருண்மொழி பட்டன்,  இவருடைய மனைவி வீரமாதேவி.” அவளது இறுதி வார்த்தையில், அந்த அறையில் இருந்த நால்வர் உடல்களும் ஒரு நொடி விறைத்தன.  அடுத்த நொடி அரையனும் அருண்மொழி பட்டனும்  இடி முழங்குவது போல சிரிக்கத் தொடங்கினர். அங்கிருந்த பெண்ணோ,  சில நொடிகள் முகம் மாறாமல் இருக்க முயற்சித்து, பின் அது இயலாமல் போக, முகத்தில் புன்னகை தவழக் கூடாரத்தை விட்டு  வெளியேறினாள்.

இராஜேந்திர சோழனின் முகமும்  ஒரு சிறு குழைவோடு இன்னும் அழகாய்க் காட்சியளித்தது. ” ஏன் சிரிக்கிறீங்க?” பாரதி கேள்வியோடு அருண்மொழிபட்டனை நோக்க, எப்போதும் போல அரையன்தான்  பதில் சொன்னான், “நீ சொன்ன வீரமாதேவி என்ற பெண் தளபதி அவர்தான். ஆனால் இன்னும் மனைவியாகவில்லை. ”  அந்த, ‘இன்னும்’ என்ற‌ சொல்லில் அவன் நன்கு  அழுத்தம் தர,  மீண்டும் இருவரும் சிரிக்கத் தொடங்கினர். ஆஹா! கடந்த காலம் வந்து ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைத்த புண்ணியம் கட்டிக்கொண்டாய்  பாரதி..  “போதும் விளையாட்டு அரையா..  நீ சொல்லம்மா..”

” அதெப்படி போதும் இளவரசே.. எதிர்காலத்திலிருந்து வந்தாகக் கூறும் இப்பெண் நமக்கு எத்தனை உதவக்கூடும். சொந்த கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு மிகவும் முக்கியமான ஒன்றைக் கேட்கிறேன்.”  இராஜேந்திரனிடம் நட்பாய் உரைத்த அரையன், பாரதியிடம் கேட்டான், “சொல் பெண்ணே.. இந்த போர் எப்போது தொடங்கும்.. எத்தனை நாளில் வெற்றி பெறுவோம்.. “

ஆர்வமாக நோக்கியவனைப் பார்க்க குற்றவுணர்வு மேலெழ, எழும்பாத குரலில் சொன்னாள், “அது.. அவ்வளவுதான் சார் படித்தேன். அந்த இடத்தைப் படிக்கும் போதுதான் இங்கே வந்துவிட்டேனே..”  அருண்மொழி பட்டன் கேலியாய் சிரிக்க, அரையன் முகம் கன்றியது.. அவள் முகம் தானே கன்ற வேண்டும். இன்னும் ஏதாவது நியாபகம் வருகிறதா என்று எத்தனை யோசித்தும் ஒன்றும்‌ பாரதிக்குப் புலப்படவில்லை. நெப்போலியன் அலெக்சாண்டர்‌ கதைகளைப் பற்றி அறிந்தது போல இவன் வரலாறு தெரியவில்லையே..‌ 

 கைகளைப் பிசைந்தபடி அவள் நிற்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த இராஜேந்திரன் நிதானமாகக் கேட்டான், “சோழப்பேரரசைப் பற்றிய வரலாற்று நூலைப் படித்தேன் என்று சொல்கிறாயே.. உன் காலத்தில் சோழப்பேரரசு  ஆட்சியில் இல்லையா?”

 சரியாக பாயிண்ட்டைக் கண்டுபிடித்து விட்டாரே..‌ அந்த கோணத்தில் சிந்தித்திராத இருவரின் கண்களும் கவலை காட்ட, அது ஏனோ பாரதிக்கு வலித்தது. “இல்லை மன்னா.. என் காலத்தில் சோழர்கள் ஆட்சியில் இல்லை. ஆனால் உங்கள் சோழ ராஜ்ஜியம் பல நூறு வருடங்களாக தமிழகத்தை ஆண்டு வந்தது. இந்த குலத்தில் தாங்கள் ரொம்பவும் புகழ் பெற்ற மன்னன்..”  இராஜேந்திரனின்  யோசனையான  பார்வை, அவளின் சமாதானப் பேச்சு வேலை செய்யவில்லை என்று காட்டியது.  

“சோழர்கள் யாரிடம் தேசத்தை இழந்தார்கள்.. பல்லவர்களிடமா? சாளுக்கியர்களிடமா? இல்லை.. சேர பாண்டியர்களிடமா?”

“இல்லை சார்.. நம்ம நாட்டைக் கைப்பற்றியது, பிரிட்டிஷ்காரங்க..”

“எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?”

“இங்கிலாந்துன்னு சொல்லுவோம்.  அது கடலில் இருக்கும் ஒரு சின்ன தீவு.. அங்கிருந்து கப்பலில் நம் தேசத்திற்கு வந்தாங்க.. வந்து நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு அவங்க கிட்ட இருந்து சுதந்திரம் வாங்கினோம்..” நல்ல வேளை இந்த மட்டுமாவது வரலாறு தெரிந்திருக்கிறதே..

“ம்..” என்ற ஒற்றையெழுத்துப் பதிலோடு  இராஜேந்திரன் அவள் சொன்னதைக் கிரகிக்க முயற்சித்துக் கொண்டிருக்க, அங்கு சில நொடிகள்  அமைதி நிலவியது. நிமிர்ந்தவன், பாரதியைத் தீர்க்கமாகப் பார்த்தான், “சரி பாரதி..  இப்போது என்ன செய்யலாம்?”

“அது தெரியாமல்தான் ஐந்து நாட்களாக இங்கே  சுற்றிக் கொண்டிருக்கிறேன் சார்..”

“அதனால் என்ன? இங்கேயே  இருந்து விடுங்கள்..  எங்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேர்த்து விடுகிறோம்..” அரையனின் பதிலில் பாரதியின் முகம் ஒரு நொடி பளிச்சிட்டுப் பின் சோர்ந்தது,

“இங்கேயே இருந்து விடுவதா? நன்றாகத்தான் இருக்கும். நல்ல சுத்தமான காற்று; இந்த ஊர் மக்களும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்; இந்த ஊரும் நன்றாகத்தான் இருக்கின்றது;  ஆனால் அங்கே என் அம்மா, அப்பா, தம்பி இருக்கிறார்கள் சார்.. இந்த ஒரு வாரத்திலேயே, நான் காணாமல் அவங்க ரொம்ப தேடி இருப்பாங்க..‌இங்கேயே தங்கிவிட்டால் அவங்க தாங்க மாட்டாங்க.. அதற்கு என்ன செய்வது?” அரையனிடம் ‌பேச ஆரம்பித்து, இறுதிக் கேள்வியை இராஜேந்திரனிடம் கேட்டு முடித்தாள்.  

கண்களில் கூர்மையுடன், அவளைப் பார்த்த, இராஜேந்திரன் கண்களில் சிந்தனையின் தீவிரம் கூடியது. ” நீ சொல்வது சரிதான். நீ  உன் காலத்திற்கு செல்வது தான் சரியான முடிவாகும். உன்னால் ஏன் செல்ல‌முடியவில்லை என்பதற்கான காரணம் பற்றியும் எனக்கு ஒரு அனுமானம் இருக்கிறது..”

“அப்படியா?” என்று மூவரும் ஆச்சர்யமாய் இராஜேந்திரனைப் பார்க்க,  வீரமாதேவி  திரையை விலக்கி மீண்டும் உள்ளே வந்தாள்.  வந்து நேரே சோழனின் அருகில் சென்று அவன் காதருகில்  ஏதோ செய்தி சொன்னாள். அந்த  கூடாரத்திற்குள்‌ ஒரு மீட்டர் தொலைவில் ஐந்து நபர் நிற்கும்போது மற்றவர் கேளாமல் இருவர் பேச முடியுமா? முடியும் என்பதை பாரதி நேரில் தெரிந்து கொண்டாள்.

” என்ன வீரமாதேவி.. அரசகட்டளை வந்தததா?” அரையனின் குரலில், கட்டுப்பாட்டை மீறிய ஆவல் துள்ளியது.  சோழன் தன் கண்களால் அனுமதி அளிக்க,  வீரமாதேவி இருவரையும் நோக்கிக் கூறினாள்,  “நம் இளவரசை வீழ்த்துவதற்கென, நம் படையோடு கலந்திருந்த பல்லவ வீரர்களுக்கு,  இன்று தங்கள் இலக்கை அடைய ஆணை வந்திருக்கின்றது..” 

இருவர் வலக்கையும்‌ மீண்டும் தங்கள் இடைக்கத்திக்குச் செல்ல இந்த முறை பாரதியின் கைகளும் இல்லாத கத்திக்குத் துறுதுறுத்தன.   கண்களை ஒரு நொடி, மூடித்திறந்த சோழ இளவல், ” சரி.. நீங்கள் உங்கள் கூடாரத்திற்குச் செல்லுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன். வேலை முடிந்ததும் உங்களுக்குச் சொல்கிறேன்.” என்றான்.

“ஆனால்..”  அரையன் மறுக்க ஆரம்பிக்க, இராஜேந்திரன் தன் இடக்கரத்தை உயர்த்தினான். “அவர்கள் அனுப்பியிருக்கும் இருபது என்ற கணக்கு ஒருவருக்காகத்தான் இருக்கும்.  நால்வருக்கு அல்ல.  அதனால் நீங்கள் கூடாரத்திற்குள் இருக்கும் வரை அவர்கள் வரமாட்டார்கள்.  நீங்கள் உங்கள்  கூடாரத்திற்குச் செல்லுங்கள்.. வேலை முடிந்ததும் நான் அழைக்கிறேன்..” என்க, அந்த வார்த்தைகளில் இருந்த உறுதியில், மூவரும் “அப்படியே ஆகட்டும்” என்றனர்.  அரையன் பாரதியிடம் திரும்பி, ” சரி.. நீ வீரமாதேவியின்  கூடாரத்தில் இன்று இரவு தங்கிக் கொள்.   என்ன செய்வதென்று நாளை முடிவு செய்யலாம்” என்று கூற, இராஜேந்திரன் இடையிட்டான். ” எப்படியேனும் காப்பாற்றுங்கள் என்று சோழ தேசத்தின் பிரதிநிதியான நம்மிடம் கேட்டிருக்கிறார் இந்த பெண். அவள் வேண்டுதலை நிறைவேற்றாமல், அல்லது அதற்காக ஆவண செய்யாமல், எப்படி துயில் கொள்வது.. ஏதேனும் வழி உண்டா என்று ஆராய்கின்றேன். நீங்கள் செல்லுங்கள்..” மறுமொழியின்றி மூவரும் விலகினர்.

சுற்றி நடப்பதை அச்சமும், ஆர்வமும்  கலந்த  கண்களுடன் நோக்கினாள் பாரதி.  தன்னைக் கொல்ல வரும் பகைஞருக்காகக் காத்திருப்பது போலவா பேசுகிறார்கள். ஏதோ, போர்வை விற்பதற்கு வருபவர்களைப் பற்றிப் பேசுவது போலல்லவா பேசுகிறார்கள்” 

“இருபது  பேரை நீங்கள் ஒருவரே தோற்கடித்துவிடுவீர்களா?”

“சென்ற முறை பதினைந்து வீரர்களை வீழ்த்தியிருக்கிறேன். இருபது வீரர்களை வீழ்த்த  முடியுமா என்று இன்று‌ தான் பார்க்க வேண்டும்” மேட்டர் ஆஃப் ஃபேக்ட் என்பார்களே அது போலச் சொல்லி‌, அருகிலிருந்த பழத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்து, பாரதியையும் சாப்பிடுமாறு விருந்தோம்பினான். 

‘சூப்பராக சீன் போடுகிறாரே..!’ ஆனால் எத்தனை முக்கியமான இரவு இது. சாளுக்கியர்களுக்கான போருக்காக ஏரி வெட்டுவதற்கு என்ற பெயரில் இராஜேந்திர சோழன் படை திரட்டிக் கொண்டிருக்கிறார். இராஜராஜ சோழனின் ஆணைக்காகக் அவரும் அவர் படைத்தளபதிகளும் காத்திருக்கிறார்கள். பின்னாளில்  மலர்ந்து என்றும் மணம் வீசப்போகும் நேசம், அரும்பாக கண் கவருகிறது. இந்த சூழ்நிலையில், எதிரி நாட்டு வீரர்கள் இருபது பேர் இளவரசனை தாக்கவிருக்கிறார்கள்.  இதில் தான் எதுவுமாகவே இல்லாதது சிறிது வருத்தமாயிருந்தாலும் இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்றதே பெரும்பாக்கியமாய் உணர்ந்தாள்..

“என்னால் செய்யக்கூடிய ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் சார்.  செய்கிறேன்.  எனக்கு கராத்தே கொஞ்சம்‌ தெரியும். கெட்டவங்க உங்களைத் தாக்கும்போது மறைந்திருந்து தாக்கவா?” 

 “இரண்டு தவறான கருத்துக்கள் பாரதி..”

பேசியதே இரண்டு பாயிண்ட் தான். அந்த இரண்டும் தப்பா? அவள் கேள்வியாய் பார்க்க, இராஜேந்திரன் தொடர்ந்தான், ” ஒன்று, அவர்கள் கெட்டவர்கள் அல்ல. தங்கள் அரசின் ஆணையை நிறைவேற்ற வருகிறார்கள். தங்கள் கடமையைச் செய்ய வருகிறார்கள். என் நாட்டை உயிர் கொடுத்தேனும் காப்பது எப்படி என் ‌கடமையோ, அப்படி தங்கள்‌ இன்னுயிர் ஈந்தியும் தங்கள் நாட்டிற்காக போராடுவது அவர்கள் கடமை.  மற்றொன்று, ஏற்கனவே நீ எனக்கு மிகப்பெரிய உதவி செய்துவிட்டாய். அதைவிடப் பெரியதாய் நீ எதுவும் செய்வதற்கில்லை.  அதனால் இவ்வேளையில் நீ பாதுகாப்பாக உன் காலம் போவதே இப்போதைய நம் இலக்கு..”

” நான் உதவி செய்தேனா? நான் என்ன செய்தேன்?”

“ஆம் பாரதி..  இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் கழித்து வாழ்பவர்களும், எங்கள் ஆட்சியை வியந்து,  இக்காலத்தில் வாழ விருப்பம் கொள்ளும் படி எங்கள் ஆட்சி இன்று இருக்கிறது என்று நீ சொன்னது எத்தனை மனசாந்தியாக இருக்கிறது தெரியுமா? எனக்கும் எங்கள் வீரர்களுக்கும் இனி வருங்காலத்தில் எங்கள் தேசத்திற்காகப்  போராட இந்த எண்ணமே பெரும் உத்வேகம் தரும்.”

வேந்தனின் சிந்தனை செய்யும் விதம்‌ அவளை வியப்பில் ஆழ்த்த என்ன சொல்வது என்று மலைத்து நின்ற நொடி, மின்னல் வேகம் என்பது போல காட்சிகள் கண்முன் அரங்கேற ஆரம்பித்தன.   வீரர்கள் தடதடவென்று கூடாரத்திற்குள் நுழைந்தனர்; வாளும் வேலும் மோதிக்கொள்ளும் சத்தம் தொடர்ந்து கேட்டது.

 சில நொடிகளில் எல்லாம் முடிந்திருந்தது. கூடாரத்தில் பல மனித உடல்கள் மார்பில் குருதி வர வீழ்ந்திருக்க, இராஜேந்திரனின் இரு கைகளை இருவர் பற்றியிருக்க, ஒருவன் பின்னிருந்து இளவரசனின் கழுத்தில் தன் கைகளை வளைத்துப் பிடித்திருந்தான்.  இன்னொரு வீரன், கூடாரத்தின் இன்னொரு பகுதியிலிருந்து ஒரு குறுங்கத்தியைக் கைகளில் ஏந்தி இராஜேந்திரனை நோக்கி வந்தான். 

வீரர்கள் உள் நுழைந்ததும், மர இருக்கைக்குப் பின் ஒளிந்த‌ பாரதி, நிகழப்போகும் அபாயம் புரிய,  மேஜை மேலிருந்த பழக்கூடையை கத்தியுடன் வந்த வீரன் மேலெறிய, அவன் “ஆ!” என்ற அலறலுடன் தலையைப் பிடித்துக் கீழே விழுந்தான்.

இந்த தருணத்திற்காகவேக் காத்திருந்த, நான்கு வீரர்களின் நடுவில் சிக்குண்டிருந்த இராஜேந்திரன் பாரதியைத் தீர்க்கமாகப் பார்த்தான். அவளும் அவன் கண்களையன்றி வேறு பார்க்கவில்லை. “பாரதி.. நான் சொல்வதைத் தெளிவாகக் கேள். நீ இங்கிருந்து செல்ல முடியாததற்குக் காரணம் நீ செல்ல வேண்டும் என்று முழு உள்ளத்தோடு எண்ணவில்லை என்பதே.. என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். இந்த நால்வரை வீழ்த்தி விடுவேன். ஆனால் இன்னும் சில நொடிகளில் நீ மரணமடையலாம். கண்களை மூடி இந்த நொடி இங்கிருக்க வேண்டாம் என்று ஈசனிடம் வேண்டு.. ” என்று அழுத்தமாகச் சொன்னான். 

இராஜேந்திரனின் கழுத்தை முழங்கையால் வளைத்துப் பிடித்திருந்த பல்லவ வீரன், விஷமம் கலந்த குரலில் பேசினான், “என்ன இராஜேந்திரா? உன் பாதுகாவலுக்கு இன்னொரு பெண்ணைப் படையில் சேர்த்திருக்கிறாயா? இவள் கதையை முடித்து விட்டு உன்னிடம்‌ வருகிறேன்”  என்றபடி தன் இடைக்கத்தியைப்  பாரதியை நோக்கி வீசினான். 

மறு நொடி,கூர்மையான கத்தி தன் நெஞ்சை நோக்கி வர, கண்களை இறுக மூடியவள், அடுத்துக் கேட்டது, “த்தட்.. த்தட்” என்ற‌ ஓசையை. கண்களைத் திறந்து பார்க்க பக்கத்தில் நூலக மேலாளர், அவளருகில் நின்று மேஜையைத் தட்டிக் கொண்டிருந்தார். பாரதி, கண்களைத் தட்டி விழிக்க, “ஸ்கூல் போயிட்டு வந்த அலுப்போட, ஏம்மா இந்த புக்கைத் தூக்குறேன்னு அப்போவே சொன்னேன்ல.. போம்மா.. வீட்ல போய்த் தூங்கு” 

அவரையே கண் தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டவர், “என்னம்மா? என்ன ஆச்சு?”

“நான் அந்த சோழர்‌ காலத்துக்கே போயிட்டு வந்துட்டேன்‌ அண்ணா!” 

“ஹா ஹா.. அது அந்த புத்தக ஆசிரியரின் எழுத்துத் திறமை ம்மா.. அந்தப் புக்கைப் படிச்ச நிறைய பேர் அப்படிதான் ஃபீல் பண்ணுவாங்க” சொல்லியபடி புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு போய் மர அலமாரியில் வைத்துவந்த போதும் சிலையென அமர்ந்திருந்தவளை வித்தியாசமாகப் பார்த்துச் சென்றார். 

அடுத்த நாள், விவாதப்போட்டியில் எதிரணியில், அதாவது பல்லவரணியில் அமர்ந்திருந்த தமிழாசிரியை அர்ச்சனா,   பேசிக்கொண்டிருந்தார், “சோழர்களைப் போல, பல்லவர்கள் கடற்படையில் பெரும் ஆற்றல் கொண்டு விளங்கவில்லையென்று சொல்கிறீர்கள். இராஜராஜ சோழனாவது இலங்கை வரை வென்றான். அவன் மைந்தன் இராஜேந்திர சோழன், இந்தியப் பெருங்கடலில் இலங்கை, மாலத்தீவு, மியான்மர், இந்தோனேசியா என்று பெயர் தெரிந்த தீவுகளையும்,  பெயர் தெரியாத பல தீவுகளையும் வென்றான்.. ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை,  அந்தத் தீவுகளில் இவன் ஆட்சி செய்யவில்லை; தளபதி யாரையாவது ஆட்சிப் பொறுப்பில் இருத்திவிட்டு, அடுத்த தீவை நோக்கிப் போயிருக்கிறான். அந்த தீவுகளிலிருந்து கப்பமாகப் பொன்னோ, பொருளோ வந்ததாகவும் எந்த கல்வெட்டுகளும் கூறவில்லை.. பின் இந்த படையெடுப்புகளால் என்ன பயன்? இதில் எத்தனை உயிர் மற்றும் பொருள் விரயமாகியிருக்கக் கூடும். ” என்று கேள்வியெழுப்ப,  ஒரே இரவில் ராஜேந்திரன் வரலாற்றை கரைத்துக் குடித்திருந்த சோழர்களின் அணியில் அமர்ந்திருந்த பாரதி, அந்த கேள்விக்கு அவள் மூளை சொன்ன பதிலில் பிரமித்தாள்.. அப்படியும்‌ இருக்குமா? நேற்று வந்தது கனவுதானா? இல்லை, காலத்தின்‌ விளையாட்டேதானா?  தன்னிச்சையாக, அருகிலிருந்த தோழியிடமிருந்து,  மைக்கை வாங்கி தன் மனதில் தோன்றியதை அப்படியே சொன்னாள்,  ” இராஜேந்திர சோழனின் எல்லாப் போர்களுக்குமே பொருளாசை, நிலத்தாசை தாண்டி ஏதாவது காரணம் இருந்திருக்கின்றது மேடம்.. தன் ஒற்றனை மதித்து நடத்தவில்லையென்று உதகையை வென்றான். தன் தந்தையின் தீரா விருப்பமான பாண்டியனின் மணிமுடியைத் தர மறுத்தற்காக இலங்கையை வென்று, தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினான். தன் தேசத்தில் கங்கையின் புனித நீரால் மக்கள் பயனடைய வேண்டும் என்று வட இந்திய திக்விஜயம் சென்றான். அது போல, அவன் கடல் படையெடுப்பிற்கும் ஏதேனும் காரணம் இருக்கும்.”

“அப்படியெந்த காரணமும் நாமறிந்த கல்வெட்டுகளில் கிடைக்கவில்லை பாரதி டீச்சர்..”

“அது.. ஒரு வேளை,  யாராவது,  ஒரு அரைகுறை தீர்க்கதரிசி, அந்த தமிழ்வேந்தனிடம், தூரத்திலிருக்கும்,  தீவிலிருந்து வரும் அந்நிய மொழி பேசும் மனிதர்கள், நம் தேசத்தைக் கொள்ளையடித்து, நம் மக்களை அடிமையாக்குவார்கள்  என்று சொல்லியிருப்பான். அந்த வீரனும்  ஐந்நூறு  ஆண்டுகள் கழித்து தன் தாய்நாட்டிற்கு வரும் ஆபத்திலிருந்து அதைக் காக்க தன்னாலான  முயற்சிகளென, தானறிந்த கடலிலிருந்த தீவுகளைக் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்திருக்கலாம்” என்று பேசி முடிக்க,  “இது என்ன சம்பந்தம் இல்லாத பதில் பேச்சு?”  என்பது போல் எதிரணியினர் பார்க்க, கூட்டத்தில் இருந்த சிலர், “ஹா ஹா!” என்று சிரித்தனர்.  புரியாத பலர் இந்த  விவாதம் எப்போது முடிந்து, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கும்  என்று காத்திருக்க,  பாரதி குனிந்து பார்த்தபோது,  அவள்‌ மடியிலிருந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில், கம்பீரமும் பெருமிதமுமாய்ப்  புன்னகைத்துக் கொண்டிருந்தான் இராஜேந்திர சோழன்.

– வித்யா செல்வம்

மூலங்கள்

1.இராஜேந்திர‌சோழன் போருக்கு ஆயத்தமாகி‌ அரசாணை காத்திருக்கும் பொழுதில் சோழபுரம் ஏ‌ரியை அமைத்தான்.

2.இராஜேந்திர சோழனின் மனைவி வீரமாதேவி

3.அவன் படைத்தளபதிகளின் பெயர் அரையன், அருண்மொழி பட்டன்.

4.பெரும்பாலும் இராஜேந்திர சோழனின் படையெடுப்புகளுக்கு இடத்தாசை, பொருளாசைக்கு மேலாக‌ஒரு காரணம் இருக்கிறது

Leave a Reply