நெற்றிக்கண் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #21

“டக் டக் டக்”

கடந்த சில மாதங்களாக சதுர்வேதி மங்கலத்து மக்களுக்குப் பழகிப் போய் விட்டிருந்த அந்த ஓசை அதிகாலையிலேயே கேட்க ஆரம்பித்தது. கைலாசநாதர் கோவிலையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பந்தலில் சிற்ப வேலை அதிகாலையிலேயே தொடங்கிவிட்டிருந்தது. பொருநை நதியின் ஒரு கிளையான சிற்றாறு, திரிகூட மலையில் துவங்கிய தன் நெடும் பயணத்தில் பெரும்பகுதியைக் கடந்து விட்டிருந்ததால் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

சிற்ப வேலை செய்பவர்களைச் சில சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாரையும் பொருட்படுத்தாது இறுக்கமான முகத்துடன் சிற்பிகள் தம் போக்கில் வேலை செய்து கொண்டே இருந்தனர்.

“இப்படி வெயிலிலும் மழையிலும் விடாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறார்களே? கேட்டாலும் ஒன்றும் சொல்வதில்லை.. என்னதான் நடக்கிறதாம்?” புதிதாக அந்த ஊரைக் கடந்த வணிகர் ஒருவர் தான் சந்தித்த மனிதரிடம் கேட்டார்.

“யாருக்கும் தெரியவில்லை. ஊர்த் தலைவர் வந்து கேட்டதில் சோழர் முத்திரை பதித்த இலச்சினையை மட்டும் காட்டிவிட்டு தொடர்ந்து வேலையை செய்து கொண்டே இருக்கிறார்கள். வேறு என்ன கேட்டாலும் பதில் சொல்வதில்லை. அவர்களுக்குள்ளாக எதுவும் பேசிக்கொண்டும் இன்னும் யாரும் பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஊரின் ஒவ்வொரு குடும்பமும் முறை வைத்துக் கொண்டு தினம் கொடுக்கும் உணவை மட்டும் மறுவார்த்தை பேசாமல் வாங்கி உண்டு கொள்கிறார்கள்”

“வினோதமாகத் தான் இருக்கிறது. மேற்பார்வை பார்த்து, பொருட்களை எடுத்துக் கொடுப்பனைப் பார்த்தால் ஆஜானுபாகுவாக மேலெல்லாம் தழும்புகளுடன் சிறந்த படை வீரனைப் போல் தோன்றவில்லை?”

“ஆம்! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் இவர்கள் எல்லாம் ஏன் இங்கு வந்து இப்படி வாய் பேசாமல் வேலை பார்க்கிறார்கள். அது தான் புரியாத புதிராக இருக்கிறது. அந்தப் புதிரும் இப்போது பழகிவிட்டது. என்றாவது ஒரு நாள் விடை தெரியட்டும்”

“இவர்கள் சோழர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. அகத்தியர் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலை செப்பனிட யாருக்கும் மனமுமின்றி, செல்வமுமின்றி இவ்வளவு காலம் பராமரிப்பின்றி இருந்தது. அதை இந்தச் சோழர்கள் எடுத்துச் செய்வது சிறப்பு. யார் செய்தால் என்ன?”

“ஆம் இங்கிருந்து ஒரு யோசனை தொலைவில் அமைந்திருக்கும் வேணுவனத்தின் சிவாலயத்தை சிவபெருமானின் வலது கண்ணாகக் கருதுகிறார்கள். அதில் நல்ல முறையில் நித்தம் வழிபாடு நடக்கிறதாம். அதேபோல அம்மையப்பனின் இடது கண்ணாகக் கருதப்படும் குற்றாலநாதர் கோவிலும் சிறப்பாகத்தான் இருக்கிறது. சிவனின் நெற்றிக்கண்ணாகக் கருதப்படும் நம் கைலாசநாதர் ஆலயம் மட்டும் ஏனோ இவ்வளவு காலம் ஆட்சியாளர்கள் பார்வை படாமல் இருந்தது. இப்பொழுது நிலை மாறியிருப்பது மகிழ்ச்சி தானே?”

“கிட்டத்தட்ட இந்த சிற்பிகள் வந்த காலகட்டத்திலேயே மேலும் சிலரும் வந்து சேர்ந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு கல் தொலைவில் ஒரு பெரிய ஏரியை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்”

“நல்லதுதான். வருடத்தில் பாதி நாட்கள் சிற்றாற்றில் நீர்வரத்து குறைவாக இருப்பதால் தண்ணீருக்குக் கஷ்டப்படுகிறோம். பாசனத்துக்கு இந்த ஏரி பேருதவியாக இருக்கும். உழவர்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்”

“சோழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். சோழர் ஆட்சியை ஏற்றுக்கொண்டு நம் பாண்டிய மன்னன் ஆட்சி புரியும் இந்தக் காலகட்டத்தில் அவர்களது பார்வை இங்கும் படுவது நாம் செய்த நல்வினை”

இதைப் போன்ற உரையாடல்கள் கடந்த சில தினங்களாக சதுர்வேதி மங்கலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சோழ மன்னன் இராசேந்திர சோழன் ஆணைப்படி தான் இந்த வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார்கள். இராசேந்திர சோழனின் தந்தை இராசராசன் காலத்திலும் இதுபோல் சில பராமரிப்பு பணிகள் இந்த ஆலயத்தில் நடந்ததை முதியவர்கள் சிலர் நினைவு கூர்ந்தார்கள்.

இன்னும் ஓரிரண்டு திங்கள் அந்த மர்மம் விலகாமலேயே இரண்டு வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சோழ நாட்டின் அரசப் பிரதிநிதி ஒருவன் ஒருநாள் தூது ஓலை ஒன்றைக் கொண்டு வந்தான்.

“அடுத்த திங்களின் முழுமதி நாளன்று சோழப்பேரரசின் இளவரசர்களுள் ஒருவரான பராக்கிரம சோழன் வந்து சிறப்பிப்பார். ஆலய குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை செய்யவும். குடமுழுக்கு முடிந்தவுடன் அருகில் வெட்டிக் கொண்டிருக்கும் மாபெரும் ஏரியை நாட்டிற்கு மக்கள் பயன்பாட்டிற்காக அற்பணிப்பார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓலை கொண்டுவந்த தூதுவன் கூடவே செலவுகளுக்காக ஒரு பெரும் தொகையையும் அளித்தான்.

“சோழ இளவரசர் இங்கு வருகிறாரா? நாங்கள் பாக்கியம் செய்திருக்கிறோம்”

“ஆம்! கூடவே பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியரும் கலந்து கொள்வார் என்று தகவல் வந்தது” தூதுவன் சொல்ல,

“நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள். தாங்கள் இங்கு தங்கி ஓய்வெடுத்து விருந்தினராக இருந்து எங்களை சிறப்பிக்க வேண்டும்” ஏற்கனவே களைத்துப் போயிருந்த தூதுவன் ஊர்த் தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான்.

“எதனால் இந்த சிற்பிகள் பேசாமல் வேலை செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாமா? ஏரியில் வேலை செய்பவர்களும் கூட ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. பார்த்தால் அனைவரும் வீரர்களைப் போலத் தோன்றுகிறார்கள்”

“அது ஒரு பெரிய கதை! கடாரம் கொண்ட சோழன், எங்கள் மாமன்னர் இராஜேந்திர சோழனின் படைகள் வடக்கே படையெடுத்துச் சென்றபோது அங்கு பல சைவசமயக் கோயில்களைக் கண்டோம். அந்த கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் கவனித்து உள்வாங்குமாறு சில சிற்பிகளையும் மன்னர் அனுப்பியிருந்தார். மாபெரும் கலாரசிகரான நம் மாமன்னர் அவற்றை ரசிக்க மட்டுமே விரும்புவார். ஆனால் வெற்றி மிதப்பில் நமது வீரர்கள் அங்கு பல சிலைகளை சிதைத்துக், பலவற்றைக் கவர்ந்து கொண்டும் வந்துவிட்டனர். அதில் மாமன்னருக்குப் பெரும் கோபம். சிலைகளை சேதப்படுத்தியவர்கள் சிலரது விரல்களை வெட்டி விட்டார். செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாகத் தெற்கே சென்று சிவாலயங்களில் பராமரிப்பு பணி செய்யுமாறு ஆணையிட்டார்”

அவன் சொன்னத் தகவலில் ஆச்சரியமடைந்த குழுத் தலைவர் “சிற்பிகளுமா அந்தத் தீய செயலைச் செய்தார்கள்?”

“இல்லை! ஆனால் கோவில்களின் அமைப்பைக் கற்றுணரச் சென்ற சிற்பிகள் இந்தச் செயலைத் தடுக்க வில்லை என்பதும் மாமன்னரின் மனவருத்தம். ஒரு நாட்டை வெற்றி கொள்ளும் போது அங்குள்ள பொருட்களைக் கவர்வதும், பாரம்பரிய அடையாளங்களை அழிப்பதும் அறிவிலிகள் செய்யும் செயல் என்பது அவரது எண்ணம். அதனால் அவர்களுக்கும் தண்டனை. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் சிற்பிகள் அமைதி காத்ததால் இந்தப் பணியை முடிக்கும் வரை அவர்கள் பேசக்கூடாது என்பதும் கட்டளை”

“அந்தத் தண்டனையால் பயனடைந்தது எங்கள் பகுதி தான். தவறாக நினைக்க வேண்டாம்.. நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். அதைத் தீர்க்க நீங்கள் தான் சரியான ஆளாக இருப்பீர்கள். தந்தையை விட சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதைவிடப் பெரிதாக கோவிலைக் கட்ட திட்டமிட்டான் இராசேந்திர சோழன் என்ற செய்தி உலா வருகிறதே.. தங்கள் கருத்து?”

“காய்த்த மரம் கல்லடி படும் அல்லவா.. வெற்றிபெற்றவர்கள் என்றாலே அபகீர்த்திகள் இருக்கத்தானே செய்யும்? தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே கங்கை கொண்ட சோழபுரத்தில் நமது மாமன்னர் ஆலயத்தை நிர்மாணிக்கத் தொடங்கிவிட்டார். இரண்டு ஆலயங்களுக்குமே தங்கள் கரங்களால் திருப்பணிபுரிந்த சிற்பிகள், கலைஞர்கள் ஏராளம். மன்னருடன் நெருங்கிப் பழகியவர்கள் ஒருவன் என்பதால் கூறுகிறேன். தஞ்சைக் கோவில் கம்பீரமாக பெரிய கற்களுடன் ஆண் தன்மையுடன் அமைந்திருக்கிறது என்றால், அதைப்போலவே அம்மனின் வடிவாக நளினமிகு சிற்பங்களுடன் பெண் தன்மை கொண்ட கோவில் ஒன்றும் அமைக்க வேண்டும் என்பதே தந்தை-மகன் இருவருக்கும் ஏற்பட்டிருந்த ரகசிய உடன்படிக்கை என்றும் சிற்பிகள் சொல்கிறார்கள்”

“இருக்கலாம். மேலும் ஒரு ஐயம்! கங்கை கொண்ட சோழ புரக் கோவில் கட்டத் தொடங்கியதிலிருந்து துயரங்கள் பல வரிசைகட்டி வந்ததாகக் கூறுகிறார்களே?”

“தவறாக ஏதும் மன்னரைப் பற்றிக் கூற முடியாததால் பரப்பி விடப்பட்ட புரளிகள் அவை. இடியும் மின்னலும் இயற்கையின் ஒரு பகுதிதானே? அதையும் மீறி இன்று கன கம்பீரமாக நிற்கிறது அல்லவா எங்கள் ஆலயம்? நூற்றாண்டுகள் கடந்தும் இதேபோல் இரண்டு ஆலயங்களும் நிற்கும் என்பதில் எங்களுக்கு ஐயம் ஏதுமில்லை”

“உண்மை! உண்மை! சாளுக்கிய தேசத்தில் இருந்து கவர்ந்து வரப்பட்ட துர்க்கை சிலையையும் கூட உள்ளே வைத்து பூஜிப்பதாக கேள்விப்பட்டேன். அனைத்து நாட்டு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரை வைத்து எழுப்பப்பட்ட கேணியும் இருக்கிறதாமே?”

“ஆம்! உண்மைதான். எல்லா நாடுகளும் செழித்து வளர வேண்டும் என்பதே எங்கள் மாமன்னரின் தினசரி வேண்டுதல்”

“மிக்க மகிழ்ச்சி! என் சந்தேகங்கள் தீர்ந்தன. நாங்கள் சோழ மன்னரின் வீரர்களையும் சிற்பிகளையும் எங்கள் குடும்பத்தினராகவே கருதி வருகிறோம். அந்தச் செய்தியையும் மன்னருக்குத் தெரிவித்து விடுங்கள்” ஊர்த்தலைவர் உவகையுடன் கூறினார்.

திட்டமிட்டபடியே அதன்பின் பராமரிப்புப் பணிகள் முடிந்து சிற்பிகளால் செதுக்கப்பட்ட புதிய துவாரபாலகர் சிலைகள், ஐம்பொன்னால் ஆன நடராஜர், சிவகாமி சிலைகள் நிறுவப்பட்டன.

பாண்டிய மன்னனும் சோழ இளவலும் வருகை புரிந்ததால் அருகில் இருந்த ஊர்கள் அனைத்தும் திருவிழாக்கோலம் பூண்டன. வெற்றிகரமாகக் குடமுழுக்கும் நடந்தேறியது.

சோழ இளவரசர் மக்களின் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் கண்டுவிட்டு, “இந்த கோவிலுக்கென்று ஒரு தனி நந்தவனம் அமைத்து நிர்வகிக்கவும் ஆறு கால பூஜைகள் சிறப்பாக செய்வதற்கும் மாமன்னர் இராசேந்திர சோழன் பெயரால் பெரும் தொகை ஒன்றை அளிக்கிறேன்” என்று அறிவிக்க, “சோழப் பேரரசர் வாழ்க!” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

பாண்டிய மன்னன் ஜடாவர்மன், “சைவ மதம் தழைத்தோங்க அரும்பணியாற்றிக் கொண்டிருக்கும் தங்கள் தந்தை எங்கள் நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஒரு சிற்றுரைத் தேர்ந்தெடுத்ததில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. பாராட்ட வார்த்தைகளே இல்லை. தங்கள் தந்தையின் வெற்றியை நினைவு கூறும் விதமாகவும், செய்த திருப்பணிகளுக்கு நன்றி கூறும் விதமாகவும் இந்த சிற்றூர் இனி ‘கங்கைகொண்டான்’ என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும்” என்று பெருமை பொங்க அறிவித்தார்.

– Dr. S. அகிலாண்ட பாரதி

(கங்கைகொண்டான் என்று ஒரு சிற்றூர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இந்த ஊரின் பெயர்க் காரணம் எப்பொழுதுமே என்னை யோசிக்க வைத்திருக்கிறது. அதன் காரணத்தை அறிய முற்பட்டபோது சில தகவல்கள் கிடைத்தன.. (www.wisdomlib.org/gangaikondan)

அதேபோல் பல ஏரிகள் சோழர்காலத்தில் அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜேந்திர சோழன் தன் ஆட்சி காலத்தில் கர்நாடகத்திலும், தமிழகத்திலும் பல கோயில்களில் திருப்பணி புரிந்தான் என்பதையும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன

(கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு.. திரு. நாகசாமி)

பிற நாடுகளிலிருந்து கவர்ந்து வந்த சிலைகளை கங்கை கொண்ட சோழபுரத்தில் வைத்து பூஜை செய்ததும் (உ.ம். சாளுக்கிய தேசத்தின் துர்க்கை சிலை) குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றளவும் அவை அங்கு காணப்படுகின்றன.

4 Comments

  1. கங்கை கொண்டானையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் இணைத்த சிறுகதை அருமை. கங்கை கொண்டான் பெயரை கேள்வி படும் பொழுதெல்லாம், எனக்குள் எழும் கேள்விக்கான விடையை, இக்கதை எனக்கு தந்தமைக்கு நன்றி.

    -தேவி பிரபா

Leave a Reply