தென்னவர் வைத்த சுந்தர முடி – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #17

பாண்டியர்கள் வழிவழியாய் செங்கோலோச்சிய மதுரை நகரம் பல நூற்றாண்டுகளுக்குப் பின் இத்தகைய மாபெரும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது. வீதி எங்கும் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள் வாழை மரம், தென்னங்குருத்து அலங்காரங்கள் வாசல் எங்கும் வண்ணமிட்ட மாக்கோலம் என மதுரை நகரமே தன்னை அழகுபடுத்தி காத்திருந்தது. ஒவ்வொரு வீதியிலும் மக்கள் ஆட்டம், பாட்டம் என எவ்வகையில் எல்லாம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியுமோ அனைத்து வகையிலும் வெளிப்படுத்தினர். ஆங்காங்கே மூங்கிலால் ஆன காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அங்கே காவலர்களுக்கு பதில் நடன மங்கைகள் கூடையில் மலர்களோடு காத்திருந்தனர். ஆம் அன்று மதுரை நகரமே மணிமுடிக்காக காத்திருந்தது.

கிபி. 919 ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ராஜசிம்ம பாண்டியனுக்கும் பராந்தக சோழருக்கும் நடைபெற்ற வெள்ளூர் போரில் ராஜ சிம்ம பாண்டியன் தோற்று தப்பியோடி இலங்கை மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். அப்போது இலங்கை மன்னன் காசிபனிடம் கொடுத்து பாதுகாப்பதாக நினைத்து தொலைத்துவிட்ட தமிழர்களின் அடையாளத்தை, இந்திரனால் பாண்டியர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் மணிமுடியையும், இந்திர ஆரத்தையும், ஸ்ரீ உடையார் இராஜராஜ சோழரின் மைந்தர் தோல்வியே காணாத வெற்றி வேந்தர் சோழ சிம்மம் இராஜேந்திர சோழ தேவர் அவர்கள் மீட்டெடுத்து மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

தங்களால் காணவே இயலாது என்று எண்ணிய தங்கள் இன பெருமையினை இன்று காணப்போகிறோம் என்ற களிப்பில் திளைத்துக் கொண்டிருந்தது மதுரை மாநகரம். இலங்கை போரில் பங்கு கொண்டு திரும்பிய வீரர்களிடம் அங்கு நடந்த போரின் நிகழ்வுகளை கதை கதையாக கேட்டு திகைத்துக் கொண்டிருந்தனர் மக்கள். அவ்வீரர்களும் தாங்கள் இராஜேந்திர சோழரோடு களம் கண்ட பெருமையினையும் தங்கள் வேந்தரின் வீரத்தையும் சலிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

“படையே தேவையில்லை அவர் நடை போதுமே எதிரியை பயமுறுத்த”

“கால்பதித்த மறுகணமே கிடுகிடுக்க துவங்கிவிடும் களம்”

“பிடித்தவாள் பிளிரும் அடுத்த நொடி அலறும் எதிரியின் கூட்டம்”

“சுழலும் திசை கணிக்க முன்னே அவயம் அறுபடும்”

“வாள் பதிந்ததை உணரும் முன்னே சிரம் உருளும்”

“எதிரியின் குருதியில் குதித்தாடும் உருத்திரன் ஆவார்”

“ அவரது சோழம் என்ற கர்ஜணையே எங்களை சோர்வடைய விடாத சூத்திரம்”

இவ்வாறு தங்கள் மன்னர் களம் கண்டதையும், அதனை அவர் அருகிருந்து தாங்கள் கண்டதையும், நடராஜப் பெருமானின் ருத்ர தாண்டவத்தை வர்ணிப்பதாக நினைத்து வர்ணித்துக் கொண்டிருந்தார்கள். உடன் அருண்மொழி பிரம்மராயர், அரையன் ராஜராஜன் போன்றோரின் வீரப் பிரதாபங்கள் கூறப்பட்டாலும் கூட இராஜேந்திர சோழரின் கள விளையாட்டை கேட்பதில் தான் மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.

போரில் தோற்று ஓடிய இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு, ரோகணத்தின் காடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாண்டிய மணிமுடி மீட்கப்பட்டது. உடன் இலங்கை மன்னர்கள் வழிவழியாக வழிவழியாக சூடிக்கொண்டு ஆட்சிசெய்த இலங்கை வேந்தன் மகிந்தனின் மணிமுடியும், விலைமதிப்பில்லா பேரெழில் கொண்ட அவரது அரசியின் மணிமுடியும், சோழ தேசம் கொண்டுவரப்பட்டது. சோழர் படை கொண்டு கடல் கடந்து போய் சென்றிருக்கிறார். நாம் இங்கு மதுரையை எப்படியாவது பிடித்து விடலாம் என்று திட்டம் தீட்டிய பாண்டியர்கள் கூட ஈழத்தை வென்று மணி மூடிக்கொண்டு மதுரையை நோக்கி மன்னர் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தவுடன் சேரம் ஓடி ஒளிந்து கொண்டனர்.

போரின் நிகழ்வுகளை வீரர்களிடம் கேட்டு வியந்து கொண்டு இருந்த மக்கள் அதோ அங்கே வெண்புரவியில் வேங்கையென கம்பீரமாய் வீற்று வருகிறது சோழசிங்கம் வீரத்திற்கு உருவென்றால் இதுதானோ என்று அதிசயத்தினர் .

“இராஜேந்திரசோழர் வாழ்க வாழ்க” என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது. மங்கள வாத்தியங்கள் மதுரையை கிடுகிடுக்கசெய்தது. கோபுரங்களில் காத்திருந்த நடன மங்கைகள் தங்கள் கைகளில் இருந்த பூக்களை மன்னர் மீது தூவி வரவேற்றனர். வீதி எங்கும் மங்கல வாழ்த்துக்கள் பாடப்பட்டன. அவர் பின்னே அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையில் மிடுக்காய் பவனி வந்த தங்கள் இன அடையாளமான இந்திர மணிமுடியையும், ஆரத்தையும் மக்கள் கண்குளிர கண்டு வணங்கினர்.

மக்களின் வரவேற்பை ஏற்று மதுரையை வலம் வந்த மன்னர் மகுடாபிஷேகத்திற்காக புதிதாக நிர்மானிக்கப்பட்டிருந்த மாளிகையை வந்தடைந்தார். வாயிலில் வல்லவராயர் வந்தியதேவர், முதலமைச்சர் கிருஷ்ணர் பிரம்மராயர், அருள்மொழி பிரம்மராயர், அரையன் இராஜராஜன் ஆகியோர் நிற்க மாமன்னர் இராஜேந்திரனை வந்திய தேவர் கட்டி அணைத்துக்கொண்டார்.

‘ இராஜேந்திரா இப்பெருமையை காண உன் தந்தை இல்லையே’ எனக் கூறும் போது அவரது கண்கள் கலங்கின .

“மாமா எனக்காக எனது தந்தை விட்டுக்கொடுத்த ஒரே சாதனை இதுதானே மாமா, அவரது வழிகாட்டுதலும் ஆசிர்வாதமும் தானே என்னை இதை பெற செய்தது இதோ எதற்கும் கலங்காத என் மாமாவின் கண்களில் பெருகும் கண்ணீரே போதும் இராஜராஜரின் கனவை பறைசாற்ற நம்மை சுற்றி எப்போதும் வட்டமிடும் அவரின் ஆன்மாவை அந்தக் கண்ணீரில் காண்கிறேன் மாமா. வாருங்கள் உள்ளே செல்லலாம்” என முன் நடந்தார் இராஜேந்திரர் ‘பிரம்மராயரே அரசவையில் எல்லாம் தயார் தானே’ என கேட்டபடி

“அனைத்தும் தயார் அரசே உங்களுக்காகவே அரசவை காத்திருக்கிறது” என்றார் பிரம்மராயர் .

“முதன்மந்திரி, சேனாதிபதி, படைத் தலைவர்கள் என எல்லோரும் இங்கேயே நிற்கவும் ஒருவேளை அரசவையை மாளிகையின் வாயிலிலேயே கூட்டி விட்டீர்களோ? என்று நினைத்துவிட்டேன்” என சிரித்தார் ராஜேந்திரர்.

சோழ தேசத்தின் அதிமுக்கிய மாந்தர்கள் எல்லோரும் மதுரை அரசவையில் மன்னரின் வருகைக்காக காத்திருந்தனர். அரசவையின் நுழைவுவாயிலில் காவல் புரிந்த வீரன் மன்னரின் வருகையை அறிவிக்க அனைவரும் வாசலை நோக்கினர். அங்கு வீறுநடையிட்டுவந்த வேங்கை நேரே தனது குருவாகிய ஈசான சிவ பண்டிதரிடம் சென்று காலிட்டு வணங்கினார். “எட்டுத்திக்கும் உன் அடிபணியும் இராஜேந்திரா”என மன்னரை கட்டித் தழுவினார் ஈசான சிவ பண்டிதர்.

அருகில் அன்னை பஞ்சவன்மாதேவி, அத்தையார் குந்தவைதேவியும் நிற்க அவர் பாதம் வணங்கி “பராந்தகர் காலம் முதல் தந்தை இராஜராஜர் காலம் வரை மீட்க முடியாமலிருந்த பாண்டியனின் மணிமுடியையும், இந்திரா ஆரத்தையும் மீட்டு விட்டேன் இதுவே என்பேன் பிறவியின் பெரும் கடனாக எண்ணுகிறேன் இனி எமன் என்னை அழைத்தாலும் கவலை இல்லை தாயே” என்றார்.

“இராஜேந்திரா கடலுக்கு அப்பாலும் இமயத்திற்கு அப்பாலும் இன்னும் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் உன் காலடியில் விழ காத்திருக்கின்றன. அதற்குள் எமன் அத்தனை அலட்சியமாக உன்னை அணுகி விடுவானா என்ன ? சரித்திரத்தில் உன் பெயரையும், உன் தந்தை பெயரையும் எவராலும் அத்தனை சுலபமாக அழிக்கமுடியாது ராஜேந்திரா” என ஆசீர்வதித்தார் சிற்றன்னை பஞ்சவன்மாதேவி.
அரசவையில் தனது மைந்தர்கள், மற்ற அரசவை தலைவர்கள் அனைவரும் தங்கள் சிரம் தாழ்த்தி வணங்க, தானும் அரசவையை சிரம் தாழ்த்தி வணங்கி அரியணையில் அமர்ந்தார்.

முதலமைச்சர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர் எழுந்தார், “சரித்திரத்தில் பொன் ஏடுகளில் பதியப்பட போகின்ற பெயர்கரிய அரசவையில் நான் நிற்பதையே பெரும் பேராக கருதுகிறேன். நூற்றாண்டுகளுக்கு முன் சக்கரவர்த்தி பராந்தக சோழர் அவர்கள் ராஜசிம்ம பாண்டியனை வென்று மதுரையில் தனது ஆட்சியை அமைக்க எத்தனிக்கும் போது பாண்டிய மன்னர்கள் வழிவழியாக அணியும் மணிமுடியும், இந்திரா ஆரமும் இல்லாமல் மதுரை மக்களை ஆட்சி செய்ய முடியாது என்பதை அறிந்த போது மணிமுடியும் ஆரமும் ராஜசிம்ம பாண்டியனால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அன்று முதல் இன்றுவரை சோழ மன்னர்கள் தொடர்ந்து இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்றாலும் கூட இலங்கை மன்னர்கள் போரில் தோற்று எங்கேனும் சென்று ஒளிந்து கொண்டு மணி மடியை தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தனர். இவ்வாறு நான்கு தலைமுறை கடந்து இன்று இராஜேந்திர சோழரால் மணிமுடி மீட்கப்பட்டது. இத்தனை காலம் மதுரை சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தாலும் மணிமுடி இல்லாது எவரையும் தங்கள் அரசராக ஏற்றுக் கொள்ள முடியாத மதுரை மக்களின் மனநிலைக்கு மதிப்பளித்து இதுவரை பாண்டியநாடு சோழரின் நேரடி ஆட்சிக்கு உட்படாமலிருந்தது. அதனாலேயே பாண்டிய மன்னர்கள் முழுவதுமாக அடக்கப் பட்டிருந்தாலும் அவ்வபோது கிளர்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இப்போது கூட மன்னர் இலங்கையை நோக்கி படை நடத்திச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்து மன்னர் இல்லாத நேரம் மதுரையை தாக்கி கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்ட பாண்டியன் சோழர் மதுரையை நோக்கி வருகிறார், என அறிந்தவுடன் ஓடி சேரத்தில் பதுங்கிக் கொண்டான். பாண்டியமும் அல்லாது சோழமுமல்லாது ஒரு நிலையற்ற வாழ்வை பாண்டிய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்குத் தீர்வாக மன்னர் இன்று பாண்டிய பகுதியின் பிரதிநிதியை ” எனக் கூறி முடிக்கும்போது அவையில் கரகோஷமும் ராஜேந்திர சோழர் வாழ்க என்கிற வாழ்த்து கோஷம் அவையை அதிரவைத்தது.

மக்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆகும் என்பதை உணர்ந்த மன்னர் ராஜேந்திரன் அரியணை விட்டு எழுந்தார் அவர் அசைவை கண்டு அரசவை மண்டபம் அமைதி ஆயிற்று ‘ ஆஹா எத்தனை அழகு எத்தனை கம்பீரம் எத்தனை வீரம் எத்தனை கருணை அத்தனையும் தன்னில் அடக்கிய மகாபுருஷர் தலைமையில் குடிகளாய் வாழ நாமல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என மதுரை மக்கள் எண்ணினர் .

“ சங்கம் வைத்து தமிழ் காத்த மதுரை மாநகர் பெருங்குடிகளுக்கு இராஜேந்திர சோழனின் பணிவான வணக்கங்களை காணிக்கையாக்குகிறேன். பாண்டியருக்கும் சோழர்களுக்கும் தொன்றுதொட்டு பகை இருந்து வருகிறது‌. பங்காளிகள் பகை என்பது நீறு பூத்த நெருப்பு போல சிலநேரம் தனியும், சில நேரம் தகிக்கும் ஆனால் அதில் அன்னியரை குளிர் காய விடுவது தவறு கடந்த நூறாண்டுகளாக சோழம் ஈழத்தை நோக்கி படை எடுத்துக் கொண்டே இருந்தது. மண்ணாசையாலோ, பொன்னாசையாலோ அல்ல நம் இனத்தின் பெருமையை மீட்பதற்காக நிகழ்ந்த போர்  பாண்டியதிற்கான போர் என்பதே உண்மை. பாண்டியர் அறியாமையால் ஈழத்தில் தவறவிட்ட மணிமுடியை மீட்பதற்காக. நான் சோழன், நீங்கள் பாண்டியர்கள் என்பதையும் தாண்டி, நாம் தமிழர் என்கின்ற உணர்வே தமிழின அடையாளத்தை மீட்க வேண்டும் என்கின்ற வேட்கை அளித்தது”.

“ நாட்டையும் மக்களையும் காக்க தகுதியற்ற மன்னனிடம் தேசம் பாழ்பட்டுப்போகும். பன்னெடுங்காலம் வீரத்தோடு கோலோச்சிய பாண்டியவம்சம் தன் வீரத்தால் ‌ மதுரையை மீட்கும் பட்சத்தில் நிச்சயமாக அவரிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் பாண்டியர்கள் இதுவரை குறுக்கு வழியை மட்டுமே கையாண்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு என் பெரிய தந்தை ஆதித்த கரிகாலரின் படுகொலை இன்றுவரை சான்றாக நிற்கிறது. இப்போதுகூட நான் இல்லை என்று எண்ணி மதுரையை பிடிக்க நினைத்த பாண்டியன் நான் வருவது தெரிந்தது ஓடி ஒளிந்து கொண்டான். வீரத்தோடு என் எதிர் நின்று அறைகூவல் விடுத்திருந்தாலே போதும் அவன் வீரத்தை மதித்திருப்பேன். என் செய்வது தன் அவசரத்தால் நீதி தவறி செங்கோல் வளைந்ததே என்று அரியணையிலேயே உயிர் நீத்த நெடுஞ்செழியன் பாண்டியன் அலங்கரித்த அரியணை இன்று தலைவன் இன்றி தனித்திருக்கிறது. காரணம் மணிமுடி!  எந்த மணிமுடி இன்றி மதுரையை அரசாள முடியாது என்று தேடி திரிந்தோமோ அந்த மணிமுடி இன்று உங்கள் முன் காட்சிப்படுத்தப்பட்டு விட்டது. இனி இந்த பாண்டிய பகுதி சோழ தேசத்தின் ஒரு பகுதியாக எனது பிரதிநிதியின் தலைமையில் செயல்படும். எனது பிரதிநிதியாக பாண்டிய மக்களின் தலைவனாக உங்களுக்கு கடமையாற்ற ஜடாவர்மன் என்ற பாண்டியர்களின் பட்டத்தை தாங்கி சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரோடு எனது மைந்தனையே, இந்த நாட்டின்சோழ பிரதிநிதயாக நியமிக்கிறேன். பாண்டிய மக்களாகிய உங்களுக்கு எவ்வித வேறுபாடுமின்றி ஒரு மன்னனாக தன் கடமையை நிறைவேற்றுவான் என உறுதியளிக்கிறேன். என மன்னர் கூறி முடிக்கும் முன் இராஜேந்திர சோழ தேவர் வாழ்க வாழ்க என்ற கோஷம் அவையை அதிரச் செய்தது இராஜேந்திர சோழரின் கண்ணசைவில் குறிப்பை உணர்ந்த தனயன் தந்தையின் அருகில் வந்தார்
பன்னெடுங்காலம் பாண்டியர்களின் சிகையை அலங்கரித்த பாரம்பரியமிக்க மணிமுடி இன்று சோழனை மன்னனாய் ஏற்று சரித்திர நீகழ்வாய் பொன்னேடுகளில் பதிக்கப்படுகிறது.

“ராஜேந்திர சோழர் வாழ்க, சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியர் வாழ்க,” என்கின்ற கோஷங்களுடன் சுந்தர சோழ பாண்டியருக்கு முடி ராஜேந்திர சோழர் திருக்கரங்களால் சூட்டப்பட்டது சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் தந்தையின் திருப்பாதங்களை தொட்டு எழுந்தான்.

– ஆனந்த் பாரதி

Leave a Reply