திருமுக்கூடல் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #5

பாலாறு தளிர்நடையோடும் செய்யாறு மணங்கமழ் மலர்கள் சுமந்தும் வேகவதி ஆறு தன்பெயருக்கேற்பவும் சுழித்தோடிக் கூடும் திருமுக்கூடல் ஆதுலர் சாலையில்இராஜேந்திர சோழ மாவலி வாண ராஜன்இருக்கையில் அமர்ந்தான் வீரராஜேந்திரன்.

முடிசூடிய ஐந்தாண்டுகளுக்குப்பிறகு திருமுக்கூடல் வருகை என்பது வெங்கடேச பெருமாளை தரிசிக்கவா…,

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, களத்தூர் கோட்டத்து, தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து வட பிடாகை திருமுக்கூடலில் ஐம்பத்தைந்து வரிகளில் பெரும் கல்வெட்டு எழுப்பிடவாஅல்லது பரந்து விரிந்த கூடத்தில்  செயல்படும் வேத கல்லூரியையும் மருத்துவமனையையும் பார்வையிடவா

இவ்வனைத்தையும் தாண்டிய பதிலொன்று துடுப்பாகி வீரராஜேந்திரனின் நினைவலைகளைப் பின்னோக்கித்தள்ளியது.

*******

வைகாசி மாத கீழைக் காற்றில் அசைந்த கடம்ப மரங்களின்  கிளையசைவுகளால் வீரர்களின் வியர்வையை உறிஞ்சிக் கொள்ள முடியவில்லைசித்ரா பௌர்ணமியன்று பழையாறையிலிருந்து கிளம்பி இன்றோடு பதினோரு நாட்கள் ஆகின்றன.. இன்னும் இருநாட்களில் திருமுக்கூடலை அடைந்துவிடலாம். அக்னி நட்சத்திர உக்கிரம் குறைந்தபாடில்லை..

அந்தச் சிறுவனத்திடையே இருந்த விருந்தினர் மாளிகையில் மாமன்னர் இராஜேந்திரன் தங்குவதற்கான 

ஏற்பாடுகளை செய்துவிட்டு வீரர்கள் ஓய்வெடுக்கத்தொடங்கினர்

பட்டீச்சுரம் அத்தை மகளின் நினைவோஉறக்கமின்றி புரண்டு கொண்டிருக்கிறாயேநண்பன் மருதனை சீண்டினான் வல்லபன்.

 “இந்த வியர்வை உப்பு அரிப்பெடுக்கிறது வல்லபா, வழியில் பார்த்தோமே அந்த நீர்நிலையில் நீராடி விட்டு வரலாம் வருகிறாயா

வெப்பம் உமிழ்ந்த தேகம் தட்பத்திற்கேங்க நண்பன் மருதனின் தோளில் கை போட்டு நடக்கத் தொடங்கினான் வல்லபன்.

சிற்றலைகளையும் சாந்தப்படுத்தி மௌனித்திருந்த நீர்நிலை மருதனை திகைக்க வைத்தது

நில்லுங்கள்முதற்படிக்கட்டோடு அவர்கள் பாதங்களை கட்டிப் போட்டது ஒரு குரல்.

கணநேரம் அதிர்ந்தடங்கிய இருவரும் பக்கவாட்டுக் கொன்றை மரக்கிளையில் அமர்ந்திருந்த பதினைந்து வயது சிறுவனின் குரலென்றறிந்த பின் கேலிப் புன்னகையுடன் முன் நகர்ந்தனர்.

சுற்றிலும் மூலிகை மரங்கள் சூழ்ந்த இந்நீர்நிலை மிகப்புனிதமானது. சாத்தியரோகம், அசாத்தியரோகம், யாப்பியரோகம் என மூவகைப்பட்ட நோய்களுக்கும் மருந்தாகும் தீர்த்தம். இங்குள்ள வன உயிரினங்கள் கூட இந்நீரில் கால் வைத்து நீரருந்துவதில்லை. கடுங்கோடையிலும் வற்றாத இந்நிலையில் பெருஉயிரினங்கள் கூட உடலமிழ்வதில்லை. ஆயுர்வேதமறிந்த ஆதுலர்கள் மட்டுமே இங்கு நீர் எடுக்க முடியும். நீங்கள் அருந்த வேண்டுமென்றால் இக்குடுவை நீரை அருந்துங்கள்…”

வேலளவே உயரமுள்ள நீ சோழ வீரனாகிய எங்களைத்தடுப்பதாவிறுவிறுவென படிக்கட்டில் இறங்கிய மருதனின் வலக்கரத்தைப் பதம் பார்த்தது குறுவாள்..

********

தனக்குப்பிறகு சோழ மகுடத்தைத் தரிக்கப்போகும் வீரராஜேந்திரன் கரத்தில் எலும்பு முறிவுகள் குணமாகியிருக்குமா.. நீண்ட இடைவெளிக்குப்பின் காணப்போகும் இளவரசனையும் அவனுக்காகவே திருமுக்கூடலில் தங்கி விட்ட அத்தை குந்தவையைப் பற்றியும் யோசனையில் ஆழ்ந்திருந்த இராஜேந்திரரை  புறத்தே ஒலித்த கலகக்குரல்கள் 

மாளிகையை விட்டு வெளியே வரச்செய்தன.

வல்லபா என்ன செய்கிறாய் இச்சிறுவனை

அதுவரை புலியின் உறுமலேயே அடிப்பணியவைத்து அச்சமூட்டக்கூடியது என்று எண்ணியிருந்த சிறுவன் சீராளனை சிலையென சமைத்தது அக்குரல்.

 குணக்கடலை ஏரியாகக்கொண்டு முந்நீர் கடந்து கடாரம் கொண்ட..கோப்பரகேசரி இராஜேந்திரர் முன் தாம் நிற்கிறோம் என்பதை நொடிப்பொழுதில் உணர்ந்தான் சீராளன்

நாவுலர்ந்த வல்லபன் கண்ணோடிய திசையில் கண்ட குறுவாளும் மருதனின் குருதியும் யாவும் உரைத்தன கங்கைகொண்டானுக்கு.

குளத்தில் கால்வைக்கக் கூடாதென தாக்கிவிட்டான் பேரரசே

குடிகள் பயன்பாட்டிற்குரியதே குளம். என் வீரனை தாக்கியிருக்கிறாயே எப்படி இனி அவன் வாள் வீசுவான்..?”

புனிதத்தன்மையுடைய குளம் என்று எச்சரித்தேன் அரசே..ஏற்கவில்லை அவர்கள்தாங்கள் அனுமதித்தால் சில நாழிகையில் இவரது காயத்தை ஆற்றிவிடுகிறேன்” 

ஆழமான காயத்தை சில நாழிகையிலா…. விளையாடுகிறாயாவிடுவியுங்கள் அவன் வாய்திறன் செய்திறனில் உள்ளதா பார்ப்போம்

சிட்டாய்ப்பறந்த சீராளன் சில நொடிகளில் சேகரித்த மூலிகைகளோடு புனிதகுளத்து நீர் சேர்த்து அருகிருந்த கருங்கல்லில் அரைக்கக் தொடங்கினான். மருதனின் காயத்தை நீரால் கழுவி, ஈரமின்றித் துடைத்து, மூலிகைச் சாற்றை மெல்ல ஊற்றினான். காட்டுக்கொடி கொண்டு காயத்தை சுற்றிவிட்டு, வாயிலும் புகட்டினான்இரண்டு நாழிகையில் வலிகுறைந்து நலமடைவார் அரசேஓரமாக நின்றான் சீராளன்.

இன்றிரவு இவனை நம் பாதுகாப்பில் வையுங்கள்..” நம்பிக்கையற்று நகர்ந்தார் பேரரசர்

மறுநாள் காலை வீரர்களின் வாட்பயிற்சி ஒலியில் முந்தைய நாள் நிகழ்வை மறந்த அரசரை விழிவிரியச்செய்தான் வாள்சுழற்றிய மருதன்

*****

திருமுக்கூடல் ஆதுலர் சாலை, சில வேலையாட்களோடு அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது.

மருமகனைப் பார்த்த மகிழ்ச்சி குந்தவை பிராட்டியாரிடம் முதுமையிலும் புதிய சோபையை ஏற்படுத்தியிருந்தது.

 “அத்தையாரே! என்னுடன் வந்த சிறுவன் சீராளனும் அவன் தமக்கை ஆதிரையும் அபூர்வ  மருத்துவ ஞானம் உடையவர்களாகத் தோன்றுகிறார்கள்

சீராளன் செய்த வினோத மருத்துவத்தை வல்லபன் கூறக் கேட்டேன் இராஜேந்திராநம் வீரராஜேந்திரனுக்கு இவனைக் கொண்டு மருத்துவம் பார்க்கச் சொல்லலாமா என உன்னிடம் ஆலோசிக்கவே வந்தேன்

 “தலைமை மருத்துவர் சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டரிடம் கலந்தாலோசித்துத் தாங்கள் எடுக்கும் எந்த முடிவும் எமக்கு சம்மதமே” 

மருமகனை ஆசீர்வதித்து விடைபெற்றார் குந்தவை பிராட்டியார்.

*****

குன்றத்தூர் நாடுமுழுவதும் மருத்துவம் செய்த அறிஞர் மங்களாதிராசன் வழித்தோன்றிய சீராளனுக்கு திருமுக்கூடல் ஆதுலர் சாலை  பயிற்சிப்பட்டறை ஆனது.

துள்ளித் திரியும் விடலைப் பருவத்தில் இத்தனை மருத்துவ அறிவா..’

சவர்ணன் கோதண்டராமன் வியந்து போனார்.

பேரரசரும் பிராட்டியாரும் தங்களையும் தங்கள் தமக்கையையும் அழைத்து வர என்னையனுப்பினர்என்ற வல்லபனிடம் பழைய சினம் தணிந்தபாடில்லை.

******

வணங்கி நின்ற சீராளனையும் ஆதிரையையும் வாஞ்சையுடன் பார்த்தார் பிராட்டியார்.

வீரராஜேந்திரன் உடல்நிலையை விளக்கிய சவர்ணன் பட்டர்..மன்னர் பேசவிழைவதறிந்து பேச்சை நிறுத்தினார்.

தம்பி சீராளா உன் நுணுகிய மருத்துவ அறிவால் இளவரசனை பழைய நிலைக்குக் கொணரவேண்டும்

அது எனக்கு மிக எளிது பேரரசேஆனால்…..”

தயங்காமல் சொல் சீராளாநீ நிற்பது கோப்பரகேசரி இராஜேந்திரர் முன் நீ கேட்பதனைத்தும் கிடைக்கும்குந்தவை

சீராளன் தமக்கையைப் பார்க்க ஆதிரைத் தொடர்ந்தாள்

இளவரசருக்கு மருத்துவம் தொடங்கும் முன் இவ்வாதுலர் சாலை, நாங்கள் விரும்பும் படியான மாற்றங்களை எய்த வேண்டும்

கேள் மகளேபேரரசர்

குடிமக்களுக்கு அறுவை சிகிச்சை செய்யசல்லியக் கிரியை பண்ணுவான்

மருத்துவப் பணி செய்யமருந்து அடும் பெண்கள்

மருந்து கொணர்பவர்

பேறுகாலம் பார்க்க மருத்துவச்சிகள்

நாவிதர்கள்

தண்ணீர் கொண்டு வந்து சாய்ப்பான்இருவர்

இவர்களனைவருக்குமான ஊதியம் குறித்து பெரியவர்களான தாங்கள் அறியாததல்ல

மேலும் வியாதிப் பட்டு கிடப்பார்க்கென 15 படுக்கைகள் மற்றும் நாங்கள் பட்டியலிடும் மருந்துகள், இவற்றை உடனடியாக வழங்கவேண்டும்.

புறத்தே நோயுற்றோரின் வேதனை முனகலைக்கேட்டுக் கொண்டு மனநிறைவோடு இளவரசருக்கு மருத்துவம் செய்ய இயலாது, அதற்காகவே எங்களது இக்கோரிக்கைகள்தெளிவாக உரைத்தாள் ஆதிரை. பிறர் நலம் பேணும் தம்குடிகளின் நன்மனம் பெரியவர்களைப் பூரிக்கச்செய்தது.

*****

வல்லபன் தலைமையில் அத்தனைப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்தேறின.

நேற்று முளைத்தவன் சொல்லுக்கு இத்தனை மதிப்பா….இவனை அக்காட்டிலேயே கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம்..’ தன்னையே நொந்து கொண்டான் வல்லபன்.

உயரத்தில் சிறு சாளரம் மட்டுமே இருந்த அறையில் சோர்ந்து படுத்திருந்த வீரராஜேந்திரன் அறைக்குள் நுழைந்த இருவரையும் உணர்ச்சியற்றுப் பார்த்தான்.

புரவிகளில் பாய்ந்து ஏறி….

களிறுகளின் மத்தகம் பற்றி..

வாளையும் வேலையும் சுழற்ற வேண்டிய தன் இளம்பருவம் வீணாகும் வருத்தத்தில் துவண்டிருந்தான்.

செய்யாற்றங்கரை சோலையின் பறவைகளொலி செவி தீண்டும் இடத்திற்கு இளவரசனின் அறையை மாற்றினாள் ஆதிரை.

சீராளன் சொற்படி இளவரசனுக்கு மருந்துப் பொருட்களை அளித்தாள்.

இளவரசே! தாங்கள் சினம் கொள்ள மாட்டீர்கள் என்றால் நான் தங்களிடம் ஒன்று கேட்கலாமா..?”

ம்சோலை வனத்திலிருந்து பார்வை மாறாமல் வீரராஜேந்திரனிடமிருந்து வெளிப்பட்டது.

தங்களுக்கு கையில்தானே எலும்பு முறிவு? கால்கள் நன்றாகத்தானே உள்ளனஇந்த ஆதுலர் சாலையில் சிகிச்சை பெறும் தங்கள் குடிகளுக்கான ஆறுதல் வார்த்தைகள் தங்களிடம் பஞ்சமா என்ன?”

தன் மனதுள் சாட்டை சுழற்றும் இவள் யார்?!’ என முகம் திருப்பியவன் முன் அவளில்லை.

மறுநாள் சீராளன் இளவரசனின் கையை மடக்கும் சிகிச்சையைத் தொடங்கதுடிதுடித்துப்போனான் வீரராஜேந்திரன்.

அன்று முழுக்க அயர்ந்து இருந்தவனை  ஆதிரையின் முந்தைய நாள் கேள்விகள் எழுப்பி அமர்த்தின.

அறையை விட்டு வெளியேறி ஆதுலர் சாலையைச் சுற்றி வரத் தொடங்கினான்.

சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தான். சில ஆணைகளையும் பணியாளர்களுக்குப் பிறப்பித்தான்.

பேரரசரும் பிராட்டியாரும் தலைமை மருத்துவரும் அகமகிழ்ந்து போனார்கள்.

*****

காலத்தின் விரல்கள் இளவரசனை தீண்டத்தீண்ட குணமாகத்தொடங்கியது கரம்.

ஆதிரையின் ஆதுர ஸ்பரிசம் இளவரசனைத் தீண்டத் தீண்டத் 

அவனுள் பிரவகிக்கத் தொடங்கியது காதல்

சீராளனின் மருத்துவமும் ஆதிரை அளித்த பயிற்சிகளும் ஓவியம் தீட்டும் அளவு கர வலிமையை அளித்திருந்தன வீரராஜேந்திரனுக்கு.

இளவரசனின் நலமறிய வந்த வல்லபன் ஓவியச் சீலையில் இளவரசனின் கரத்திலிருந்து உயிர்பெறும் ஆதிரையைக் கண்டு அதிர்ந்தான்.

*********

பேரரசே…!இங்கு  பெரும் சதி நடக்கிறதுநம் இளவரசருக்கு குணமாவதைத் தாமதப்படுத்துவதற்கென்றே சீராளன் அவர் கையை மடக்கி மடக்கி தினமும் துன்பப்படுத்துகிறான். அவன் தமக்கையோ இளவரசரை தம்வலையில் வீழ்த்தப் பார்க்கிறாள்

பேரரசருக்கு எப்படி சினம் கூட்டவேண்டும் எனத்தெரிந்திருந்த வல்லபன் அதில் ஓரளவு வெற்றியைக் கண்டான்.

பிராட்டியார் முகத்தில் அமைதி மட்டுமே தவழ்ந்திருந்தது.

நாளை இங்கு அனைவரும் கூடி இது குறித்து விவாதிப்போம்வல்லபா…. அனைவருக்கும் இதனை அறிவித்து விடு

*****

பேரரசர், பிராட்டியார்தலைமை மருத்துவர் சவர்ணன்இளவரசன் ஆகியோர் அமர்ந்திருக்கும் அவையில் சீராளனுக்கும் ஆதிரைக்கும் கூட இருக்கை அளிக்கப்பட்டிருந்தது வல்லபனுக்கு சினத்தை கூட்டியது.

பேரரசரே தொடங்கினார்சீராளா, கையை மடக்கி வலிக்க வலிக்க நீ இளவரசனுக்கு அளித்த மருத்துவம் குறித்து வல்லபனுக்கு ஐயம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கில்லை. உனது மருத்துவத்தாலும் ஆதிரையின் கவனிப்பாலுமே சோழத்தின் எதிர்காலம் எங்களுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது‌. நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புவதெல்லாம் இளவரசனுக்கு உன் தமக்கை மேல் இருக்கும் விருப்பம் அவளுக்குள்ளும் இருக்கிறதா என்பது குறித்தே

நாசூக்காக வெளிப்படுத்திவிட்டார் பேரரசர். மாவீரன் என்றாலும் காதல் என்று வந்தபின் வீரராஜேந்திரன் முகத்தில் செம்மை படர்ந்தது. தந்தைக்கும் பாட்டிக்கும் முன்னால் இருப்புக்கொள்ளாமல் தவித்தான்

ஆதிரையின் முகத்தில் படரும் தம் கண்களையும்  அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பேரரசே.. இளவரசரின் தற்போதைய உடல் நலம் குறித்து நானே தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தாங்களே அழைத்து விட்டீர்கள். இளவரசர் பூரண நலம் பெற்று விட்டார். இனி அவர் மெல்ல மெல்ல வாள் பயிற்சிகளில் கூட ஈடுபடலாம்ஒரு வைத்தியனாக இதை மட்டுமே என்னால் கூற இயலும். தங்களின் அடுத்த ஐயத்திற்கான பதில் என்னிடமில்லை. பொறுத்தருள்க

சீராளனின் புத்திசாலித்தனமான பதிலால் புன்னகைத்த பிராட்டியார்ஆதிரை நீ சொல்லம்மா..”

இளவரசனின் மனம் படபடத்தது

அவையை மறந்தான்..

அவனியாளும் அரசனை மறந்தான்.

அறம் கற்பித்த பாட்டியை மறந்தான்..காதலுடன் ஆதிரையின் இதழ்களை நோக்கினான்.

நோய் நாடி நோய்முதல் நாடி குடிகளின் நலம் பேணும் குலத்தில் பிறந்தவள் நான்.

இனி ஏதுமில்லை எனத் தங்களைத் தாங்களே கைவிடுவோரை தாங்கிப் பிடிக்கவே என் சொற்கள்

பிணி கொண்ட உடலை பிண்டமென்று மனமுடைவோரை தேற்றவே என் ஸ்பரிசம்

வலுகுறைந்த மனிதர்களின் ஆழ்மன உறுதியை மீட்டளிப்பதே நான் இப்பிறவி கொண்டதன் நோக்கம்கோன் முதல் குடி வரை வழுவாமல் நான் கடைபிடிக்கும் நியதி இது. நான் இளவரசருக்கு ஆற்றிய பணிவிடைகளும் அவ்வாறே”  கருணையும் கம்பீரமுமான ஆதிரையின் மொழியில் அவை பேரமைதியுற்றது.

மகிழ்ச்சி மகளேஉன்னாலும் உன் தம்பியாலும் சோழ நாட்டிற்கேப் பெருமை. தலைமை மருத்துவர் சவர்ணன் பட்டருக்கு வயது மூப்பால் ஓய்வு அளிக்கப்படுகிறது. மருத்துவ ஆலோசனை குழுவில் அவர் அங்கம் வகிப்பார். இன்று  முதல் இவ் ஆதுலர் சாலையின் முழு பொறுப்பையும் உங்கள் இருவரிடமும் ஒப்படைக்கிறேன். சோழர் குடிமக்கள் பிணி பயமற்று நல்வாழ்வு வாழ உங்கள் பணித்தொடரட்டும்….. நீங்கள் செல்லலாம்

வணங்கி வெளியேறிய ஆதிரையின் விழிகள் தம்மேல் படியாதா என ஏக்கத்தோடு எதிர்பார்த்தான் இளவரசன்.

அனைவருக்குமான ஆதவச்சுடரொளி அவள், அவனையும் அனைவருள் ஒருவனாகவே பார்த்து விடைபெற்றாள்.

மகனின் மனதுள் உடைந்த ஒன்றை உணர்ந்து தோளணைந்தார் தந்தை. அடுத்த கணம் பேரரசராக ஆணையிட்டார்வல்லபா இன்றே பழையாறை திரும்ப வேண்டும். ஏற்பாடுகளை உடனே செய்

மருத்துவ பல்கலைக்கழகமாக மாறிவரும் வீரசோழன் ஆதுலர் சாலைக்கு செய்யாற்றங்கரை சோலையின் பறவையொலிகள் உயிர்ப்பைக் கூட்டின.

அன்று இளவரசனாக நீங்கிய திருமுக்கூடலில் இன்று மன்னனாக

முதல் காதல் மீட்டளித்த வலக்கரத்தை அனிச்சையாகத் தடவியது இடக்கரம்

-சுசித்ரா மாரன்

2 Comments

  1. மிகவும் அருமை. புனிதமான தீர்த்தம் குறித்த தகவல்…காயத்தை ஆற்றுதல்… வாழ்த்துக்கள்.

Leave a Reply