தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன்,

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன், தொல்லியல் துறை (ஓய்வு)

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் மண்ணச்சநல்லூர்க்கு மேற்கேயுள்ள சிற்றூர் கோபுரப்பட்டி பழம் பெருமைவாய்ந்த மேற்றளிசுவரர் கோயிலும், பெருமாள்கோயிலும், அமைந்து தெய்வீக மணம் கமழும் ஊராக இன்றும் விளங்கிவருகிறது.

இவ்வூர் பெருமாள் கோயிலுக்கருகில் வாழை, பூஞ்சோலை, செந்நெல் வயல்களுக்கிடையில் இயற்கையான சூழ்நிலையில் ஆயிரம் ஆண்டு பெருமை வாய்ந்த கட்டுமானக் கற்கோயில் ஒன்றினைக் காணமுடிகிறது.

உத்தம சோழர் கலைமுறையிலான இக்கோவில் மேற்குப் பார்த்த பார்வையில் கருவறை மற்றும் முகமண்டபத்தோடு அமைந்துள்ளது. இக்கோயில் மூலவரை திருஅவனிசுவரம் உடைய மகாதேவர் என்று கல்லெழுத்துக்கள் குறிப்பிடுகின்றன.

கோயிலுக்கு முன்பு சோழர் கலை முறையிலான பெரிய நந்தி சிறிது சேதமடைந்த நிலையிலும் அசைபோட்டவாறு அந்தத்¢ தரையையே பீடமாகக் கொண்டு கம்பிரமாய் காட்சியளிக்கிறது.
சிற்பநூல் மரபுபடி கட்டமைக்கப்பட்ட இக்கோயில் உபபீடம், அதிட்டானம், சுவர் மற்றும் கூரைப்பகுதி வரை கல்லாலும் மேற்பகுதி செங்கற்சுதையினாலும் அமையப் பெற்றதாகும். இப்பகுதி தற்சமயம் முற்றிலும் அழிந்துவிட்டது.

கருவறை புறச் சுவர்ப் பகுதி பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முன் பின் வந்ததாய் அமைந்து அழகுற காட்சியளிக்கிறது. அதிட்டான கண்டப்பகுதியிலும், வேதிகை கண்டப்பகுதியிலும் இடம் பெறும் அளவில் குறைந்த சிற்றுருவச் சிற்பங்கள் யாவும் சிற்பியர்களின் கைத்திறன், கலைநுணுக்கம், கற்பனைத்திறன் கொண்டவைகளாக செதுக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிலும் இடம் பெற்றுள்ள சுமார் 160 சிற்றுருவச் சிற்பங்களில் பல இராமாயண நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்றன.

கோயிலின் முத்திசைகளிலும் தெற்கே ஆலமர் செல்வன், கிழக்கே அரிஅரண், வடக்கே நான்முகன், முகமண்டபத்தின் வடக்கே கொற்றவை என கலைச் சிறந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சிற்பங்கள் அமைந்த நிலை, உடலமைப்பு, முகப் பொலிவு, மேனியின் அழகு, ஆயுதம் தாங்கிய கரங்கள், ஆயுதங்களின் தன்மை, அணிந்துள்ள ஆபரணங்கள், ஆடைகள் யாவும் சீரிய கலைத்திறன் கொண்டதாக மிகச் கவனமாக, கலைநுணுக்கம் வெளிப்படும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் யாவும் நேரில் கண்டு இன்புறதக்கனவாகும்.

சமய ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துமாறு வலப்புறம் சிவனும், இடப்புறம், திருமாலும் இருபெரும் இறைத்தத்துவங்களை ஒரே கல்லில் வடித்து கடவுள் தோற்றத்திற்கே ஒர் அதிசயப் பொருளாய் இந்திரன் திசையான கிழக்கு தேவ கோட்டத்தில் அமைத்து தந்த தமிழக சிற்பியரின் உளித்திறனை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

இக்கோயிலின் கலையழகு ஒருபுறமிருக்க இங்கு செதுக்கப்பட்டுள்ள கல்லெழுத்துக்களில் மறைந்திருக்கும் செய்திகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவனவாகும். இலக்கியம், அரசியல், சமயநிலைகள், சமுதாயம், பொருளாதாரம், வாழ்வியல் முறைகள், கலைகளின் வளர்ச்சி என்று அனைத்துச் செய்திகளையும் தொகுத்துத் தருவன கற்கோயிலின் கல்லெழுத்துக்களே.

எழில் வாய்ந்த இக்கோயிலில் கி.பி.1006-ஆம் ஆண்டு முதல் தமிழ்பேரரசி குந்தவைப் பிராட்டி பிறந்த திருஅவிட்டத்திலும், பேரரசன் இராசராசன் பிறந்த திருசதய நாளிலும் மாதந்தோறும் விழாக்கள் கொண்டாடப் பெற்றன என்ற அரிய செய்தியைத் தாங்கிய கல்லெழுத்துக்கள் இத்திருக்கோயிலில் மட்டுமே காணக்கிடைக்கிறது.

“உடையார் ராஜராஜ தெவர்க்கு முன் பிறந்தருளின ஆழ்வார் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியர் பிறந்தருளின அவிட்டத் திருநாளால் திங்கள் ஒரு நாள் திருவிழா எழந்தருளும் பெருந்திரு அமுது செய்தருளவும்”. எனப் பேசும் கல்லெழுத்துக்களால் அறியலாம். இந்த விழா சிறப்பாக மாதந்தோறும் அவிட்டம் திருநாள் கொண்டாடவும், இறைவனுக்குத் திருவமுது படைக்கவும், அதுசமயம் முப்பது பிராமணர்களுக்கும், முப்பது தவசீலர்களுக்கும் உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 180 கலம் நெல் ஒதுக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் மிகச்சிறப்பாக இவ்வூர் விழாக்கோலம் பூண்டு விளங்கும்படி செய்யும் நிர்வாகப் பொறுப்;பை ஏற்றுக் கவனித்தவன் ராஜாஸ்ரய வளநாட்டை வகை செய்யும் அதிகாரி ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் என்பவராவார் எனவும் கல்லெழுத்துக்கள் மிகத் தெளிவாக பேசுகின்றன.

சோழர்குல பேரரசிகள் செம்பியன் மாதேவி, அவரின் மருமகளும் உத்தம சோழனின் மனைவியுமான வீரநாயணியார் நேரடி கவனத்தாலும் அன்பான கொடைகளாலும் சிறப்புப் பெற்றது இத்திருக்கோயில்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் மக்களால் வழிபட்டு பெருமைக் கொண்ட இக்கோயில் இன்று தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.

தற்சமயம் இக்கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்களின் முயற்சியால் வழிப்பாட்டிற்கு வந்துள்ளது என அறியும்போது மன மகிழ்வும் கட்டடக்கலை, சிற்பக்கலையால் விளங்கும் அற்புதமான இந்த சிங்கார கற்கோயில் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நிலைத்து நின்று புகழ்பரப்பும் என்பதிலும் ஐயமில்லை. நமக்கு மிகவும் அருகிலுள்ள தெய்வீக சூழலில் அமைந்துள்ள இக்கற்கோயிலை கண்டு மகிழ்வோமே.

Leave a Reply