தமிழக நாணயங்களும் சாதனைகளும் – திரு. மன்னர் மன்னன்

தமிழ் இணைய கழகத்தின் மாதாந்திர சொற்பொழிவில், ’நாணயவியல் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் இரா.மன்னர் மன்னன் அவர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. குறுகிய நேரத்திற்குள் மிக அழகாக மிகப் பெரிய வரலாற்றைச் சொல்லிமுடித்துவிட்டார் நாணய ஆராச்சியாளர் திரு. மன்னர் மன்னன். எனக்கு நாணயவியல் பற்றிய ஆய்வுகள் புதிது, எனினும் அவரின் தெளிவான சொற்பொழிவின் மூலம் நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. அவருடைய உரையில் நான் அறிந்தனவற்றை இங்கு தொகுத்திருக்கிறேன்.

முதலில் மிகத் தெளிவாய், காசுகள் பற்றிய தமிழகத்தின் பதிப்புகளைப் பற்றிய செய்தி. சங்க காலந்தொட்டு பதினேழாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் எவ்வளவு காசுகள் இருந்தன, அவற்றை எந்தெந்த ஆட்சியாளர்கள் என்ன காரணங்களுக்காய் வெளியிட்டனர் என்பதை விளக்கினார். தமிழகத்திற்கு இரண்டாயிரம் ஆண்டு நெடிய வரலாறு , நாணயவியல் துறையில் உள்ளது.

நாணயவியல் பற்றிய தகவல்கள் எதற்கெல்லாம் பயன் தருகின்றது என்று பார்த்தால் ,
1. வடிவம் – ஆரம்பக் காலத்தில் சதுர வடிவ, செவ்வக வடிவ காசுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. வட்ட வடிவ காசுகள் பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தவை.
2. உலோகம் – ஈயம் – பேரரசுகள் வெளியிட்டவை, தங்கம் – மன்னர்கள் வெளியிட்டவை, வௌ¢ளி – ஓரளவு செழிப்பான இடங்கள்.
3. உருவம் – காசுகளில் சில உருவங்கள் வடிக்கபடுகின்றன, இவை காசுகளை வெளியிட்ட மன்னர்களின் போர், திருமண உறவுகள் பற்றிய தகவல்களைத் தருகின்றன
4. எழுத்துகள் – காசுகளில் உள்ள எழுத்துகளில் மன்னர்களின் பெயரைப் பார்க்க முடிகிறது . அதைக் கொண்டு வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.
5. இடம் – மேலும் காசு எங்கு கிடைக்கிறது என்பதை வைத்து, அதன் காலத்தைக் கணிக்க முடியும். நாடுகளுக்குள் இருந்த உறவுகளை அறிந்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

இந்தியாவில் அதிக அளவில் நாணயங்கள் புழங்கிய இடம் தமிழகம். காசு என்ற வார்த்தை முதலில் பணத்தைக் குறிக்கவில்லை. காசு என்பது உருண்டையாக உள்ள மணியைக் குறிக்கும். வர்த்தகம் வழியாக கிரேக்கர்கள் தந்த நாணயங்களைக் கோத்துக் காசு மாலையாக, அணிகலனாக அணிந்துகொள்கின்றனர். அதன் பிறகே காசு என்பது நாணயத்தின் பெயராக மாறியுள்ளது.

இன்றும் பதினைந்து ஐரோப்பிய நாடுகளில் Cash /காசு என்ற வார்த்தை உபயோகத்தில் உள்ளது. தமிழக நாணயவியலின் வரலாறு 1868, பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் முற்று பெறுகிறது. அதற்குப் பிறகு தமிழகத்தில் நாணயங்கள் ஏதும் அச்சடிக்கப்படவில்லை.
நாணயவியல் சம்பந்தப்பட்ட சில சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்துக்கொண்டார். அண்ணாதுரை அவர்களின் பெயரில் நினைவு நாணயம் வெளியிட்ட போது அதில் ’அண்ணாதுரை’ என்று அவருடைய கை எழுத்து அச்சானது.

1. சங்ககாலக் காசுகள் –

சங்ககாலச் சேரர்கள்

சங்ககாலச் சேரர் காசுகளில், ஒருபுறம் யானையும், மறுபுறம் சேரர்களின் கொடியில் உள்ள வில்லம்புக் குறியும் உள்ளது. சில காசுகளில் அம்பு பூட்டிய வில்லும், சில காசுகளில் வில் மட்டுமேயும் காணப்படுகின்றன. முக்கியமான காசு என்று ஒரு காசை விவரிக்கையில், “Compound Bow” “சுருள் வில்“ என்று ஒரு வகை வில்லை ஒரு காசில் காண்பித்தார். அது சிறிய அளவை உடையது, மடித்துக்கொள்ளக் கூடியது , மேலும் குதிரையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது அம்பைப் பூட்டி எய்யக் கூடிய அம்பு ஒன்று காசில் காணப்படுகிறது. பிற்காலத்தில், செங்கிஸ்கானின் பல வெற்றிகளுக்கு மூலக் காரணமான இவ்வகை வில் அமைப்பு முறையை, அவர்களுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது சேரர்கள் பயன்படுத்தினர் என்பது கூடுதல் தகவல்.

சங்ககாலச் சோழர்கள்

சோழர்களின் காசுகளில் ஒரு புறம் புலியும், மற்றொரு புறம் யானை , ஸ்ரீவத்சம், வெண்கொற்றக் குடை, அங்குசம் போன்றவை உள்ளன. “காவல் மரம்” இவை அரசருக்கான மரம் என்று சொல்லப்படுகிறது. மிக சிரத்தையாக பாதுக்காக்கப்பட்ட மரம். இதன் உருவமும் ஒரு காசில் உள்ளது. சங்ககாலக் காசில் ஸ்ரீவத்சம் போன்ற உருவம் உள்ளது. இது வளமைச்சின்னங்களின் ஒன்றாகும். அடையாளங்களில் ஒன்றாகும்.
சங்ககாலப் பாண்டியர்கள்:

பாண்டியர்களின் காசுகளில் மீனின் சின்னம் சிறிய, பெரிய அளவில் காணப்படுகிறது. முதலில் செம்பிலும், பிறகு வௌ¢ளியிலும் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. “எண் மங்கள சின்னம்“ – எட்டு மங்கள சின்னங்கள் உள்ளன, “Darin” இது எருமையின் தலையைக் குறிக்கும் குறியின் பெயர். பேச்சாளரின் கூற்றுப்படி இந்தச் சின்னம் ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் பழமையான சின்னம். சில காசுகளில், ஆறு சதுரங்களைக்கொண்ட தொட்டி உள்ளது, அது விவசாயத்தின் சின்னம். யானைகள், மீனின் கோட்டுருவமும், மலைகளின் முகடும் காணக்கிடைகின்றன.

1. மலையமான் காசுகள்

மலையமான்கள் வாழ்ந்த பகுதிகளில் யானைகள் அதிகம் காணப்படவில்லை, அதற்குப் பதில் குதிரைகள் அதிக பயன்பாட்டில் இருந்துள்ளன. அதை அவர்களின் காசுகளைக்கொண்டு அறிய முடிகிறது. அவர்களின் காசுகளில் குதிரைகளும், “வேள்வித் தொட்டி”, குதிரைக்கு உணவு அளிக்கும் தொட்டி ஒரு புறமும், மறுபுறம் மலையமான் நாட்டின் வரைபடமும் உள்ளன. ஒவ்வொரு காசிலும் அவர்களின் வரைபடங்கள் உள்ளன. சில காசுகளில் அங்குசமும், கோலும் காணப்படுகின்றன.

2. பல்லவர் காசுகள்

பல்லவர்கள் “போடின் “ என்னும் உலோகத்தினை பயன்படுத்தினர். இது மிக மெல்லியது. அரிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டது. பல்லவர்களின் காசுகளில் “பகாபிடுகு” என்று பொறிக்கப்பட்டடுள்ளது , அதாவது பிடுகு என்றால் மின்னல் – கிளைகளே இல்லாத மின்னல், இது இந்திரனது வஜ்ராயுதம் போன்றது என்ற பொருள் படும். நிற்கும் காளை ஒரு பக்கமும், வட்டத்தின் உள்ளே பூரண கும்பம் மற்றொரு பக்கமும் காணப்படுகின்றன. சக்கரத்தின் உள்சாவி போன்ற வடிவங்களும் உள்ளன.

3 .மூவேந்தர்கள் பிற்காலக் காசுகள் –
பிற்காலச் சேரர்கள்

இக்காலக்கட்டத்தில் நாகரி எழுத்துகள் காசுகளில் காணப்படுகின்றன. முதலை, சிலந்தி, சக்கரம், யானை , குத்துவிளக்கு, சாய்சதுர வடிவம் போன்றவை உள்ளன. மேலும், “ஈழ மனிதன்” என்று சொல்லப்படும் மனிதனின் உருவம் இக்காசுகளில் காணக்கிடைக்கிறது. இலங்கையை ஆண்ட மன்னர்களைச் சோழர்கள் வெற்றி கொண்டதன் நினைவாய் ஒரு மனிதன் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் இக்காசுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில காசுகளில் அந்த மனிதனின் கைகளில் சங்கு உள்ளதைப் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. குத்துவிளக்கு, அதன் அருகில் சூரியசந்திரர்கள், ஆயுதங்கள், “ஸ்ரீ யக்கி “ என்ற பெண் தெய்வத்தின் சிலை போன்றவையும் காணப்படுகின்றன.

3. பிற்காலச் சோழர்கள்

அதிக அளவில் தங்க நாணயங்கள் வெளியிட்டவர்கள் பிற்காலச் சோழர்கள், அதிலும் முக்கியமாக இராஜராஜனும், இராஜேந்திரனும் ஆவார்கள். சோழர்கள் செம்பு, தங்கம், வௌ¢ளிக் காசுகள் வெளியிட்டனர். ஆனால் சோழர்களின் தங்கக் காசுகள் அதிக அளவில் கிடைக்கப்பெறவில்லை. உலகின் சிறந்த நாணயத் தொழில்நுட்பத்தைக் கொண்ட சோழர்கள், தங்கம் விலை அதிகமானதால் உலகில் முதன்முதலில் தங்கமுலாம் பூசும் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களாக இருந்தனர். இன்றும் அத்தங்க நாணயங்களில் உள்ள முலாம் பொலிவு குறையாமல் இருப்பது சோழர்களின் பல தொழில்நுட்ப ரகசியங்களுள் ஒன்றாகும்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு: பதினைந்தாம் நூற்றாண்டில், “ஹென்றி “ முதல் முறையாக வௌ¢ளிக் காசுகளில், தங்கமுலாம் பூசி மக்கள் புழக்கத்திற்கு விட்டாராம், ஆனால் சில மாதங்களில் அக்காசில் அவரின் மூக்கில் இருந்த தங்கமுலாம் மட்டும் சிதைந்து, அந்த முயற்சி தோல்வியுற்றதாம். ஆனால், சோழர்களின் காசுகள் அப்படி இல்லை. மூலிகைகள் மூலம் இவை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இக்காசுகளில், “பாதம் காசு “ என்ற சின்னம் உள்ளது, வேணாடு சேரர்களின் திருவடி சாம்ராஜ்யம், அது சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்ட போது அவர்கள் இந்தக் காசுகளை வெளியிட்டுள்ளனர். நாட்டைக் கைப்பற்றிய பிறகு அங்கு புழக்கத்தில் உள்ள நாணயங்களைச் செல்லாக் காசாக்கிவிட்டுப் புதிய பணத்தை வெளியிடுவது இன்றுவரை நம் நாட்டில் நடந்து வருவது சிறப்பாகும். சில காசுகளில் பாதம், மலர், மீன், ஈழ மனிதன், சங்கு, நாகரி எழுத்துக்கள், சாட்டை, வெற்றிக் காசுகள் போன்றவை உள்ளன. “யுத்த மல்லன் காசு” ராசேந்திரன் காசு இது, இதில் அமர்ந்த நிலையில் புலியும், இரண்டு பாண்டியர்களை வென்றதன் குறிப்பாய் இரண்டு மீன்கள், வில், வெண்கொற்றக் குடை, “யுத்த மல்லன்” என்ற பெயர் ஆகியனவும் காணப்படுகின்றன.

4 பிற்காலப் பாண்டியர்கள்
“கச்சி வழங்கும் பெருமாள் காசு” இது முதலாம் சடையவர்மன் காசு, இது நாட்டின் ஆட்சி மாற்றத்தை மக்களிடம் கொண்டு செல்லப் பதித்த காசு. அதாவது, அக்காலத்தில், ஆட்சி மாற்றத்தை மக்களிடம் கொண்டு செல்லக் காசுகள் பயன்பட்டன. அதிலும், இக்காசு காஞ்சியைக் கைப் பற்றி அதன் அக்கன் சாலையில் புதிய காசுகளாய் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இக்காசில் நின்றவாக்கில் ஒரு மீனும், படுத்தவாக்கில் ஒரு மீனும் உள்ளன. பின்பக்கம் “கச்சி வழங்கும் பெருமாள் காசு” என்று தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில காசுகளில், வெண்கொற்றக் குடை, சாமரங்கள், மீன்கள், செங்கோல், ஈழ மனிதனின் உருவம், அரசர்களின் பெயர்கள் போன்றவை உள்ளன.

5. தென்னிந்திய விஜயநகர காசுகள் –

தஞ்சாவூர் நாயக்கர்கள்

இவர்களின் காசுகளில் காளை , சூரியன், சந்திரன், நாகரி எழுத்துக்கள், அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, நின்ற நிலையில் திருமகள், லிங்கம் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அமைச்சருக்காக காசுகள் வெளியிட்டுள்ள ஒரே அரசர் தஞ்சை நாயக்கர்கள்தான்! அவர்களின் அமைச்சரான “கோவிந்த தீட்சதர் “ என்பவருக்குக் காசு வெளியிட்டுள்ளனர்.

மதுரை நாயக்கர்கள்
மதுரை நாயக்கர்களின் காசுகளில் ஈழ மனிதன், இரண்டு மீன்கள், நடுவில் செண்டு, பிறை, போன்றவையும் , அரசர்களின் பெயர்களும், மதுரை என்ற பெயரும் காணப்படுகின்றன.

செஞ்சி நாயக்கர்கள்
இக்காசுகளில், வேணு கோபாலர் நின்ற நிலையிலும், தெலுங்கு எழுத்துகளும், காளை உருவமும், விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி உருவங்களும் காணப்படுகிறது.

6. மாவலி வாணாதிராயர் காசுகள்
இக்காசுகளில் கருடன் உருவம், தமிழ் எழுத்துகள், குடை போன்ற உருவங்கள் உள்ளன.

7. சாளுவ திருமலைராஜன் காசுகள்
இக்காசுகளில் காளை, அதன் முன்பு ஒரு குத்துவாள், பிறை மற்றும் கடாரி, பரசு, அரசனின் பெயர்களும் காணப்படுகின்றன.

8. சேதுபதிகள் காசுகள்
பன்நெடுங்காலமாக போர் மறவர்களாக மட்டுமே இருந்தவர்களை, அரச பதவியளித்துச் சேதுபதிகளாக அமர்த்தியது நாயக்கர்கள் என்ற தகவல் புதியதாகக் கிடைத்தது. காளையின் மேல் லிங்கம், அதற்கு மாலை சூட்டப்பட்டுள்ளது, மயிலின் உருவம், மனித உருவம் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.
9. ஆற்காடு நவாப்பு காசுகள்

இவர்களின் காசுகளில் “முனவர் “ என்று தமிழிலும், மறுபக்கம் இரண்டு இதழ்களைக் கொண்ட மலர் ஒன்றும் உள்ளது. சிங்கம், ஆறு இதழ்களைக் கொண்ட மலர் ஒன்றும், கயிற்றில் இரண்டு முடிச்சு போன்ற அமைப்பு, புனிதப்பிறை, ஐந்து புள்ளிகள் போன்றவை உள்ளன. உலகில் முதன்முதலில் மதநல்லிணக்கத்திற்காக “முருகன் துணை” என்று வேற்று மத நாணயங்களை வெளியிட்ட பெருமை இசுலாமிய நவாப்புகளையே சேரும்.

10. மராட்டியர் காசுகள்
நாகரி எழுத்துகள் கொண்ட காசுகள், தமிழகக் கூட்டெழுத்து, சிவ லிங்கம், போன்றவை இக்காசுகளில் உள்ளன.

11. மதுரை சுல்தான்கள் காசுகள்
அரசர்களின் பெயர்களை பாரசீக மொழியில் இரண்டு பக்கங்களிலும் அச்சிட்டுள்ளனர்.

12. பிறரது காசுகள்

தமிழகத்தில் ஹோய்சாலர்களின் காசுகள், தாரமங்கலம் கட்டி முதலி காசுகள், தருமபுரி ரமணன் காசுகள், பீஜப்பூர் சுல்தானின் காசுகள், திப்பு சுல்தானின் திண்டுக்கல் காசுகள், மொகலாயர்களின் காசுகள், கிரேக்கர்களின் காசுகள், ஐரோப்பிய தமிழ்க் காசுகள், கும்பினி நாணயங்கள், ஆங்கிலேய தமிழ்க் காசுகள் , பிரஞ்சுகாரர்களின் தமிழக காசுகள், டச்சுக்காரர்களின் தமிழக காசுகள் போன்றவை பிற காசுகள் ஆகும்.

பண்டைய காலத்தில் காசுகள் வணிக மற்றும் அரசாங்க பரிமாற்றங்களுக்காக மட்டுமே பயன்பட்டது எனவும், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே சாதாரண மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது என்பது கூடுதல் தகவல்.

உலகின் ஆறு நாடுகளுக்கு மட்டுமே நாணயவியல் வரலாறு உள்ள நிலையில் இந்திய நாணயவியல் துறையில் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன எனவும், இத்துறையில் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதும் அவரின் கூற்று. அவருடைய சேகரிப்பில் இருந்து சில காசுகளைக் காட்சிக்கும் வைத்திருந்தது மிக அருமை.

மிக நெடிய தமிழக வரலாற்றை நாணயங்கள் மூலம் திரு. மன்னர் மன்னன் அவர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறினார். அதை முடிந்த அளவிற்குச் சுருக்கி நான் இங்கு எழுதியுள்ளேன். பிழைகள் இருப்பின் அது எனது கவனக்குறைவாக மட்டுமே இருக்கலாம். (எழுத்து ரா. வித்யலட்சுமி)

Leave a Reply