தமிழகக் கோபுரக்கலை மரபு – முனைவர் குடவாயில் (புத்தக அறிமுகம் )

தமிழக கோபுர கலை மரபு, ஆசிரியர்- முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், வெளியீடு- அகரம். 

இந்த புத்தகம் கோபுர கலையின் தோற்றம், வடிவங்கள் மற்றும் அதன் தத்துவங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதிலும் “கோபுரம்” என்ற சொல்லின் ஆய்வு, இந்தியக் கலை மரபில் கோபுரங்களின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் கோபுரம் உணர்த்தும் தத்துவங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களை எவ்வாறு கட்டுகிறார்கள் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கோபுரங்களின் வளர்ச்சியைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், கட்டிடக்கலை பொருட்களின் வழியில் செங்கற் கோபுரங்களை பற்றியும், இதுவே அரண்மனைகளிலிருந்தால் அதன் வாயில்களைப் பற்றியும், இக்கோபுரங்கள் எவ்வாறு புணரமைக்கப்பட்டு உள்ளன என்பதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில எடுத்துக்காட்டுகளாக குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில் கோபுரம், கண்டியூர் வீரட்டானத்துக் கோபுரம், குடந்தை சாரங்கபாணி கோபுரம், செந்தலை ராஜகோபுரம் போன்றவை எப்படி இடம்பெயர்ந்து மாற்றம் பெற்றுள்ளன என்பதையும் அறிய முடிகிறது. ஒரு கோபுரத்தில் என்ன வகையான கலை அம்சங்களை நாம் காணமுடியும் என்று பார்த்தால், தெய்வ உருவச் சிற்பங்கள், மனித உருவச் சிற்பங்கள், நாட்டிய சிற்பங்கள், அரசனின் அரிய சிற்பக் காட்சிகள், சுதைச் சிற்பங்கள், செங்கல் சிற்பங்கள், மரச்சிற்பங்கள், ஸ்தூபி மற்றும் ஓவியங்கள் போன்றவை பற்றியும்  பேசப்பட்டுள்ளன. கோபுரங்களில் நமக்குக் கிடைக்கும் பிற வரலாற்றுத் தரவுகளாகக் கோபுரத்தில் உள்ள  உலகளந்த கோல், கோபுர திருப்பணியில் மக்களின் பங்களிப்பு, மன்னர்களின் பெயர்களில் உள்ள கோபுரங்கள், கல்வெட்டுப் பாடல்கள் வரலாற்று பதிவுகள், மன்னர் மோகன பள்ளி போன்றவற்றைப் பற்றியும் மிக விரிவாக இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த புத்தகத்திற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கோவில்கள் கொண்ட தமிழக வரைபடத்துடன் ஆரம்பமாகிறது இந்நூல்.  பல அரிய தமிழ் நூல்களிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளுடன் கோபுரம் என்ற சொல்லின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சாஞ்சி ஸ்தூபியில் ஆரம்பித்து அல்லது தோரணவாயில் என்றழைக்கப்பட்ட முற்கால கோபுர நிலையின் தோற்றம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள கோபுரம் குறித்த சிற்பங்கள், காசுகள், புடைப்பு சிற்பங்கள் போன்றவற்றின் அரிய புகைப்படங்கள் இப்புத்தகத்தில் உள்ளது. மல்லையில் உள்ள கோபுரங்களை ஒத்த விமானங்கள் தனி ஆய்வாகவே பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல அரிய புகைப்படங்களுடன் நிறைய வரைபடங்கள் ஓவியங்கள் துணைகொண்டு கோபுரங்களின் வளர்ச்சியை பற்றிய ஒரு அரிய பொக்கிஷமாக இந்த புத்தகம் திகழ்கிறது.

– Ar. Vidhyalakshmi Rajasekar

புத்தகம் வாங்க: http://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81?id=5%204400

Leave a Reply