தஞ்சை பெரியகோவிலில் சங்க இலக்கியக்கூற்று

பெரியகோவிலின் பெருமையைப் பறைசாற்றும் பல சிறப்பம்சங்களில் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிற்பங்களும் ஒன்று.
ஓங்கி உயர்ந்து கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருக்கும் துவாரபாலகர்கள், உள்ளிருக்கும் சிவபெருமானின் பெருமையைக் குறித்து கை முத்திரைகளைக் காட்டுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். துவாரபாலகர் சிற்பத்தில் உள்ள மற்றொரு சிறப்பு அவர் கையில் இருக்கும் கதையும், அதை சுற்றிய படர்ந்திருக்கும் பாம்பு, அந்த பாம்பு விழுங்கும் யானையுமாகும்.
இதன் மறைபொருள் விளக்கம், மிகப் பெரிய யானையை விழுங்கும் ஒரு மிகப்பெரிய பாம்பு, அந்தப் பாம்பு சுற்றியிருக்கும் அதைவிட மிகப் பெரிய கதை ஆயுதம், அதனை தூக்கும் வலிமை கொண்ட மிகப்பெரிய துவாரபாலகர். அந்த துவாரபாலகர் வியந்து பணிந்து வணங்கும் உள்ளிருக்கும் கடவுள் என்பதாகும்.
சங்க இலக்கியங்களில் விலங்குகள் பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. அதேபோல காடுகளில் மிகப்பெரிய பாம்பு இருந்ததைப் பற்றி மலைபடுகடாமும், நற்றிணையும், திணைபொருள் மாலை போன்ற பல இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது.
யானையையே விழுங்கக் கூடிய அளவிற்கு இந்த பாம்பு இருந்தது என்றும், அதனை மாசுணம் என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மலைபடுகடாம் பாடல்,
“மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்
துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி” 261
இதன் பொருள் களிறு எனும் யானையை அழிக்கும் பாம்பு என மாசுணத்தை குறிப்பிடுகிறது.
நற்றிணைப் பாடல்,
“களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்” 261
இதன் பொருள் பெருஞ்சினம் கொண்ட மலைப்பாம்பு சோறு இல்லாமல் வயிரம் பாய்ந்த மரத்தைப் பற்றிக்கொண்டு, யானையை இரையாக்கிக்கொள்ள வளைத்து இறுக்கும் வழி அது” என படத்தில் உள்ள துவாரபாலகர் கதையை சுற்றி யானையை விழுங்கும் காட்சியை அப்படியே தத்ரூபமாக சங்க இலக்கியம் விவரிக்கின்றது.
திணைமாலை நூற்றைம்பது பாடலில்,
“எரிந்து சுடுமிரவி யீடில் கதிரான்
விரிந்து விடுகூந்தல் வெஃகாப் – புரிந்து
விடுகயிற்றின் மாசுணம் வீயுநீ ளத்த
மடுதிறலான் பின்சென்ற வாறு.” என 75
யானையை சுற்றிவளைத்து அதனைப் பிழிந்து கொன்ற மாசுணம் பற்றி கூறுகின்றது.
இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்கியங்கள் மாசுணம் எனும் பாம்பு யானையை விழுங்கும் காட்சியைப் போலவே தஞ்சை பெரிய கோவிலிலும் ஒரு பெரிய மரத்தை போன்று இருக்கும் கதையில் சுற்றிய மாசுணம், யானையை விழுங்கும் காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டிருப்பது, சங்க இலக்கியத்தை ஒத்தக் காட்சியை 11 ஆம் நூற்றாண்டில் சிற்பமாக சோழர்கள் வடித்துள்ளனர் என நமக்கு புலப்படுகின்றது.
தொடர்ந்து இவ்வாறான வரலாற்று செய்திகளை அறிய மறக்காமல் இப்பதிவை பகிருங்கள், விருப்பத்தை (👍🙂❤️😡😥) பதிவில் தெரிவியுங்கள்.

Thali Heritager Magazine எங்களுடைய பக்கத்தை Follow செய்யுங்கள். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையாக வாழ்த்துக்கள். நன்றி…

Leave a Reply