ஜம்முவில் மரபுத் தேடல் – 2 – Ar. வித்யா லட்சுமி

ஜம்முவில் 2009-2010 ஆம் ஆண்டில் நடந்த அகழ்வாய்வில்  முதன் முதலாக ஒரு ஸ்துபா கண்டுபிடிக்கப்பட்டது. அது வெளித்தோற்றத்தில் நாகர்ஜுனகொண்டாவில் உள்ள ஸ்துபாவை போல உள்ளது. இது குசானர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. இங்கு அதை தவிர சுடுமண் பொம்மைகள், அலங்கரிக்கபட்ட பானை ஓடுகள், மணிகள், இரும்பு மற்றும் செம்பு பொருட்கள், இந்திய-கிரேக்க காசுகளும் கிடைத்துள்ளது.

குப்தர்களின் காலத்திற்குப் பிறகும் இந்த இடம் செழிப்பாக இருந்ததற்கு இந்த புத்த ஸ்துபா ஒரு எடுத்துக்காட்டு. இங்கு உள்ள கலைப் பொருட்கள் காந்தார கலை பாணியோடு தொடர்பில் இருந்தது தெரிகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக சார்லஸ் பாப்ரி செய்த அகழ்வாய்வில் அவர்” பாம்பரன் என்னும் இடத்தில் கண்டறிந்த சுடுமண் சிற்பங்களுக்கு “அக்ஹ்னுர் சுடுமண் சிற்பங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல வியாபார வழி பாதைகளான, பட்டு பாதை, முகலாயர்களின் பாதை, தக்சில்லாவிற்கு செல்லும் பாதை, பிள்ளவாரா செல்லும் பாதை, போன்றவை ஜம்முவை கடந்து செல்வதாலும் இவ்விடத்தின் கலையும், கட்டிடக்கலையும் சிறந்து விளங்கியது. சீன பயணி “இவான் சுவாங்” இவ்வழியாகவே இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகிறார்.

வியாபார பாதையாக மட்டுமல்லாது இது ஒரு பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வழிபாட்டு தளங்களுக்கான பாதையாகவும் இருந்துள்ளது.

கிரிம்சியில் ஹரிஹரர் கோயில், காலா தேரா கோயில், நன்ற கோவில், தேரா கோயில், பகவதி தேவி கோயில் போன்ற கோயில்கள் உள்ளது. இவை அமைப்பில் ஒரிசாவில் உள்ள கோயில்களை ஒத்திருக்கிறது.

ஒரிசாவில் காணப்படும் கட்டடக்கலையின் சாயல் ஜம்முவில் பார்க்கப்படும் போது இதற்கான காரணங்களை ஆராய வேண்டியுள்ளது. இது கோயிலை பார்த்து அதைப் போலவே இன்னொன்று செய்யும் முயற்சியாகவும் இருக்கலாம், அல்லது அங்கு வேலை செய்த நிபுணர்களை அழைத்தும் செய்ய வைத்திருக்கலாம்.

மேலும் இவை வியாபாரக் குழுக்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

எங்களுக்கு கிடைத்த சிறிது நேரத்தில் ஜம்முவின் சில கோயில்களையாவது பார்க்கலாம் என்று, ஜம்முவில் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கோயில்களின் பட்டியலைத் தயார் செய்தோம். காலையில் நாங்கள் சென்றது, கிரிம்சியில் உள்ள கோயில்களுக்கு.

இரண்டு ஆறுகளுக்கு நடுவில் இருந்த நிலப் பகுதியில் உள்ள கோயில் அது. மிக குறுகலான மலைப்பாதை. பழக்கம் இல்லாததால் அதிக பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஓட்டுனர் மிக நேர்த்தியாக வண்டியை செலுத்தினார்.

ஆற்றுக்கு அந்தப் பக்கம் வரைதான் வண்டிகள் செல்லும். ஆற்றைக் கடக்க ஒரு இரும்புப் பாலம் உள்ளது. அத்தனைப் பெரிய ஆற்றில் தண்ணீர் உள்ள போது கடந்திருந்தால் நிச்சயம் அவ்வளவு அழகாக இருந்திருக்கும். குழாங்கற்களால் நிறைந்துள்ளது அந்த ஆறு.

ஒரு வழியாக அந்தப் பாலத்தைத் தாண்டி அந்தப்பக்கம் சென்றால், ஒரு சிறிய மலை பாதை. வருபவர்களுக்கு தண்ணீர், தேநீர் விற்க ஒரு சிறிய கடை. உள்ளது. வேகமாக நடந்து அந்த கோயில்களை காணும் ஆவலில் நாங்கள் பாதையில் ஏறி சமதளத்தை அடைந்தோம். எங்கள் கண்களுக்கு அந்த கோயில்கள் காணக்கிடைத்தன.

இந்தக் கோயில்கள் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஐந்து கோயில்கள் ஒரு மேடை மீது இருந்தன. ஐந்தும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டதில்லை. அது அதன் தோற்றத்திலும், வடிவமைப்பிலும், அலங்கார வகையிலும் தெரிந்தது.

உள்ளுரில் இவற்றைப் பாண்டவர் கோயில் என்று அழைக்கின்றனர், நம்மூரை போலவே ஐந்து கோயில்கள் உள்ளத்தால். ஒரு கோயிலைத் தவிர, மற்ற அனைத்தும் கிழக்கு திசையை நோக்கி உள்ளது.

அதிக வேலைப்பாடுகள் கோயில்களின் சுவற்றில் காணப்படுகின்றது. சிவன், பார்வதி மற்றும் கணேசரின் சிலைகள் காணக்கிடைகின்றன. அங்கு கிடைக்கப்பெற்ற சிலைகளின் எச்சங்கள் ஒரு அறையில் தனியாக பாதுகாக்கப்படுகிறது.

மிக அழகான ஜம்முவின் மிகப் பழைய கோவிலை கண்ட மகிழ்ச்சியில் படங்கள் எடுத்துக்கொண்டு, அடுத்ததாய் நாங்கள் ஒரு கிரேக்கக் கோவிலை ஜம்முவில் காணச் சென்றோம்.

Leave a Reply