சோழர்கள் கொண்டாடிய இராஜராஜனின் சதயநாள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் அமைந்துள்ள 108 சிவாலயத்தில் சோழ சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு உருவச்சிலை எடுத்துப் பிறந்த நாள் கொண்டாடியது கல்வெட்டுத் தகவலாக அக்கோயிலில் உள்ளது.

இக்கல்வெட்டைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சோழர் வரலாறு ஆய்வு சங்கத் தலைவர் வரலாற்று ஆய்வாளர் அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் நேர்காணல்.

சோழ சக்கரவர்த்தி மாமன்னர் ராஜராஜ சோழர் பிறந்த வருடம் நாள் இவற்றை உறுதிப்படுத்திட சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அவர் பிறந்த மாதம் ஐப்பசி என்றும் பிறந்த நட்சத்திரம் சதயம் என்றும் தஞ்சைத் தவிர வேறுசில கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

ஐப்பசி சதய விழாவில் எடுப்பிக்க பின் வந்த சோழ மன்னர்கள் அரசிகள், அதிகாரிகள், போன்றவர்களால் நிவந்தம் அளிக்கப்பட்ட செய்திகளும் கல்வெட்டு சாசனமாக உள்ளன.

இராஜராஜ சோழனின் வாழ்நாள் சாதனை தஞ்சைப் பெரியக் கோயில் இராஜராஜனின் அமைச்சர் பொய்கைநாட்டுடைய கிழவன் ஆதித்த சூர்யனான தென்னவன் மூவேந்த வேளான் ராஜராஜர் இருக்கும் காலத்திலேயே அவருக்கும் அவரது பட்டதரசி லோகமாதேவிக்கும் செப்புத் திருமேனிகள் செய்து இக்கோயிலில் வைத்துள்ளனர் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

ஆனால் தஞ்சைப் பெரிய கோயிலில் இராஜராஜ சோழருக்குப் ஐப்பசி சதய விழாவை ஆண்டுதோறும் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் ஏதுமில்லை என்பது வியப்பான செய்தியாகும். அதுமட்டுமல்ல வேறு எந்தக் கோயில்களிலும் இராஜராஜ சோழன் சதயவிழா கொண்டாடப்பட்ட செய்தி இல்லாத நிலையில் பாபநாசம் 108 சிவாலயத்தில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகத் தகவல் பதிவாகியுள்ளது. அது என்ன என்று பார்ப்போம்….

இக்கோயிலில் நான்கு சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று அம்மன் சந்நிதி வலப்புறம் உள்ள நிலைக்காலில்தான் சதய விழாபற்றிய தகவல் உள்ளது. தொடக்கமும், முடிவும் இல்லாக் இக்கல்வெட்டு, எழுத்தமைதி, கல்வெட்டுத் தரும் தகவல்களைக் கொண்டு இது இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராஜேந்திர சோழரின் கல்வெட்டு என்று யூகிக்க முடிகிறது.

சோழர் கல்வெட்டுகளில் இக்கோயில் இருப்பிடம் திருஅரபுறம் என்றும் இறைவன் ராமலிங்கேஸ்வரர் என்றும் காணப்படுகிறது. திருஅரபுறம் இன்று அரயபுறம் என்று மருவி இக்கோயிலுக்கு மேற்கில் ஒரு கிராமமாக உள்ளது. பாபநாசம் என்பது விஜயநக நாயக்கர் மன்னர் காலத்தில்தான் பெயர் சூட்டப்படுகிறது.

ஒரு வரிகளுள்ள கல்வெட்டுத் தரும் தகவல்கள் என்ன என்று பார்ப்போம். ஐப்பசி சதயத் திருநாளில் பெரியதேவர் (இராஜராஜசோழன்) அபிஷேகம் கொண்டருளும் திருமேனி (பஞ்சலோக விக்ரகம்) மண்டபத்தில் எழுந்தருள்கிறார். திருக்காப்பு (சந்தனக் காப்பு போன்றவை) சாத்தப்படுகிறது. பின் சிவசுந்தாடல் என்னும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இராஜராஜர் திருமேனி பெருந்திருவமது. (அன்னப்படையல்) படைக்கப்படுகிறது. (நைவேத்யம்).

இந்தச் சதய விழா நிகழ்வுகள் தன் முன் நிகழ்ந்ததைக் கண்டுகளித்த விழா நாயகன் மாமன்னர் ராஜராஜ சோழருக்குப் பரிவட்டம் கட்டி ராஜமரியாதையும் ராஜ உபசாரமும் செய்யப்படுகிறது. இந்த விழா செலவுகளை ஈடுகட்ட நாற்பது காசுகள் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு ஒரு காசுக்கு வட்டி காசு வீதம் ஆண்டுதோறும் நாற்பது காசுக்குப் பத்து காசுகள் வட்டியாகக் கிடைக்கும். இந்தப் பத்துக் காசுகளைக் கொண்டுதான் இந்தச் சதய திருவிழாவை நடத்த வேண்டும்.(அன்று 1 காசுக்கு 150 வாழைப்பழங்கள் கிடைக்கும்).

இந்தப் பத்து காசு வழா செலவுகள் தவிர, தூணி அரிசி, நெய் தயிரமுது அடைக்காயமுது (வெற்றிலை பாக்கு) அலங்காரத்திற்கு வேண்டிய செங்கழுநீர் மலைகள், அன்றைக்கு மட்டும் வேண்டும்.விளக்கெண்ணெய் பெரியதேவர் பரிவட்டம் உட்பட ஏனைய செலவுகளுக்கு இந்தப் பத்து காசையும் ஆலய நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மறைந்த மன்னரைத் தான் அவரது மைந்தர்கள் பெரியதேவர் என்று கல்வெட்டுகளில் குறிப்பது மரபு.எனவே இங்கே பெரியத்தேவன் எனக் குறிக்கப்படுவது மாமன்னர் இராஜராஜ சோழர் தான். திருமேனி எடுப்பித்து விழா ஏற்பாடுகளைச் செய்த வைத்தும் இராஜேந்திர சோழன்தான். ஆனால் இக்கோயிலில் இன்று இராஜராஜ சோழத் திருமேனி என்று சொல்லிக் கொள்ளும் படியாக ஏதும் இல்லை. இக்கோயிலில் சதய விழா நடந்தது பழங்கதையாய் போனது.

“மாமன்னன் இராஜராஜசோழன் மறைவுக்குப் பின் அவரது மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் பாபநாசம் திரு அரபுரம் 108 சிவாலயத்தில் தன் தந்தைக்குப் பஞ்சலோக திருமேனி எடுப்பித்து அவர் பிறந்த ஐப்பசி சதய நாளன்று திருமேனி முன்பாக விழா கொண்டவும் ராஜராஜர் சிலைக்கு பரிவட்ட மரியாதைகள் செய்யவும் நிரந்தர வைப்புத் தொகை வைத்தும், அதன் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் சதய விழா நடைபெற்றதும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டியத் தகவல்களாகும்.” என்று அறிஞர் அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள் தெரிவிக்கின்றார்.

– அய்யம்பேட்டை செல்வராஜ்

நேர்காணல்: பார்த்திபன் பாஸ்கரன், ஈரோடு.

Leave a Reply