சென்னையில் நடந்தப் போர்

வெயில் சாயும் நேரம் என்றாலும் கதிரவன் சற்று காட்டமாகவே இருந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கினோம்.

இடது புற சந்தையைக் கடந்த பின் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் வந்தவண்ணம் இருந்தன. பச்சை அம்மன் ஆலயம் என்பதே அடையாளம். ஆட்டோவில் பத்து ரூபாய்.

சிறிது தூரம் கடந்த பின் இடம் வந்தது. இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நாம் தேடி வந்த இடம் பச்சை அம்மன் ஆலயத்திலிருந்து சற்று தூரம். கருங்கற்கள் நிறைந்த பாதை, சாலையோரம் எங்கிலும் கடைகள். சாலைக் கடினமாக இருந்தாலும் சாலையோர சந்தைக் கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே கடந்தோம். 15 நிமிட நடைப் பயணம். வந்தது மாசிலாமணிசுவரர் ஆலயம்.

ஆம். தொண்டைமான் எழுப்பிய அதே ஆலயம் தான். தெரு முனையிலேயே கோபுர தரிசனம் பாவ விமோட்சனம் என்ற பழமொழிக்கு ஏற்ப நம்மை வரவேற்கிறது தொண்டைமானின் கைங்கரியம். பராமரிப்பு பணி நடப்பதால் கோபுரம் துணிகளால் சற்று மூடப்பட்டே உள்ளது.

கோயிலின் நேர் எதிரே மண்டபம். யானை கால்களைப் போன்ற கனமான தூண்கள். தூணெங்கிலும் உயிரோட்டம் உண்டு. பைரவர், பசுபதிநாதர், தொண்டைமான், தலபுராணம், காதலர்கள், களவி, அழகிய நங்கை எனக் கொஞ்சி பேசி விளையாடுகிறது சிற்பியின் விரல்கள்.

மண்டபம் தாண்டி வலபுறம் தெப்பம். கட்டிடக் காடான சென்னையில் இருந்தாலும் பழமை மாறாத இந்தத் தெப்பத்தை பார்க்கக் கண் கோடி வேண்டும். கோயிலின் உள்ளே முதற்கடவுள் வீற்றிருக்க, இடப்புறம் பைரவர், சூரியன் ,கொடி மரம், முல்லைக் கொடி நெய் தீபம் என மணம் கமழ இருந்தது. அன்று சோமவாரம் வேறு. சொல்லவா வேண்டும், பாராயணமும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

நந்தி நந்தனுக்கு வழிவிட்டுச் சற்று நகர்ந்தே இருந்தது. முதல் ஆளாய் தொண்டைமான் சக்கரவர்த்தி நான்கு அடி உயரத்தில் கம்பீரமாய் புன்னகையோடு நிற்க, துவாரபாலகர்கள் சண்டன் பிரசண்டனை வணங்கி உள் செல்ல.. வாயிலிலே இடங்கையின் மேற்புறத்தே ஒரு கல்வெட்டு.

வட்டெழுத்து என்பது மட்டும் தெரிகிறது. அதைக் கடந்தால் மாவீரனின் இரு புஜங்களை போன்ற வலிமையான இரண்டு எருக்கம் தூண் . வலமும் இடமும் ஓங்கி நிற்க நடுவே சிவ லிங்கம் மாசிலாமணிசுவரராகக் காட்சியளிக்கிறார்.

‘மனம் விரிந்து குவிவது மாதவம்’ என்னும் சித்தன் பாடல் படி மனம் சன நேரம் சரணாலயத்தில் நின்றபின் ” நகருங்கம்மா ” என்ற குரலுடன் நகர்தோம். வெளியே மேல் தலத்தில் நாத விந்து மற்றும் பாம்பின் உருவமும் உள்ளது.

மூலவர் பிரகாரம் சுற்றிலும் தமிழே !!! .

படிக்க இயலாமல் கண்கள் மட்டும் சற்று கலங்கின. பின் நாட்களில் கீறப்பட்ட தெலுங்கும் ஓரிரு வரி இருந்தது.

அடுத்த மூலவர் கொடிவுடை நாயகி. இடப்பக்க மூக்குத்தி மட்டும் பிரகாசிக்க, மயிர்க் கூச்சும் அவளது ஆழ்நிலை தியானமும் புண்சிரிப்புமும் ஏகாந்தமே ! தொண்டைமானுக்கும் பழங்குடிகளுக்கும் இடையே நடந்த போரைப் பறைசாற்றும் விதமாய் எருக்கம் தூணும் தொண்டைமானும் இன்னும் சில தல புராண சிற்பங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

தொண்டைமான் மற்றும் பழங்குடிகளுக்கு நடுவே நடந்த போரில் தொண்டைமான் யானையின் மீது தப்பி செல்கையில், முல்லைக் கொடிகள் நிறைந்த வனப்பதியில் யானையின் காலில் முல்லைக் கொடி ஒன்று சிக்கிக்கொள்ள, அவர் வாளால் அவற்றை வெட்ட இரத்தம் பீரிட்டு வருகிறது. திடுக்கிட்ட தொண்டைமான் கீழிறங்கிப் பார்க்கையில் அங்குச் சுயம்பு லிங்கத்திலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு அழுது புரள்கிறான்.

அப்போது சிவபெருமான் காட்சி தர நந்தியின் உதவியோடு போரில் வெற்றி பெறுகிறான் என்று தல புராணம் கூறுகிறது. அத்தனை பலம் கொண்ட பழங்குடி குறும்பர்களின் செல்வமான எறுக்கம் தூணை வாகை சூட்டிய சின்னமாய் இறைவன் பாதம் சமர்ப்பித்துள்ளான் தொண்டைமான்.

இந்தக் கோயிலில் நவக்கிரகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  கிளம்பும் தருவாயில் சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் ஒரு தம்பதியர் வழங்கக் கோயிலின் வெளியே பருத்தி பாலோடு ஆகத் திருப்தியாய் இருந்தது பயணம்.

இது வடதிருமுல்லைவாயிலில் எமது பயணம்.

– திவ்யா குமாரி

Leave a Reply