சான்றோன் யார் – அறிஞனா , வீரனா ? – மயிலை சீனி வேங்கடசாமி

தமிழ் நூல்களிலே சான்றோன் என்னும் சொல் பயின்று வருகிறது . கல்வி கேள்விகளில் சிறந்தவன் , நற்குண நல் லொழுக்கம் உடையவன் , அறிஞன் என்று இக்காலத்தில் சான்றோன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது . அதாவது , அறிஞன் என்னும் என்னும் பொருள் மட்டும் இச் சொல்லுக்குப் பொருளாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது . பண்டைக் காலத்திலே சான்றோன் என்னும் இச்சொல் போர்வீரன் என்றும் அரசன் என்றும் வேறு இரண்டு பொருள்களையும் கொண்டிருந்தது .

ஆனால் , இந்தக் காலத்திலே சங்க காலத்தில் வழங்கிய வீரன் , அரசன் என்னும் பொருள்கள் மறக்கப்பட்டன; மறைந்துவிட்டன . ஆகையினாலே , பழைய இலக்கியங்களிலே சான்றோன் என்னும் சொல் பயின்று வரும்போது , அறிஞன் என்னும் பொருள் கொண்டு உண்மைப் பொருள் காணமாட்டாமல் இக்காலத்துப் பலர் இடர்ப்படுகிறார்கள் .

சங்க நூல்களிலும் அதையடுத்த காலத்து நூல்களிலும் சான்றோன் என்னும் சொல் காணப்பட்டால் அச்சொல்லுக்கு வீரன் என்றும் அரசன் என்றும் அறிஞன் என்றும் இடத்திற் கேற்ப வெவ்வேறு பொருள். கொள்ளவேண்டும் . இவ்வாறு கொள்ளாமல் , எல்லா இடங்களிலும் அறிஞன் என்னும் பொருளை மட்டும் கொள்வோமானால், நூலாசிரியர் கருத்துக்கு மாறுபட்ட தவறான கருத்தைக் கொள்ள நேரிடும் . ஆகவே , சான்றோன் என்னும் சொல்லுக்கு இடம் அறிந்து செம்பொருள் காணவேண்டியது அறிஞர் கடமையாகும் . வீரன் என்னும் பொருளில் சான்றோன் என்னும் சொல்லைத் திருவள்ளுவர் வழங்கியிருக்கிறார் . இந்தப் பொருளில் இந்தச் சொல்லை வழங்கியுள்ள குறட்பா இது ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தா இந்தக் குறட்பாவில் சான்றோன் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது . இந்தச் சொல்லுக்கு இவ்விடத்தில் வீரன் என்று பொருள் கொள்ளாமல் அறிஞன் என்று பொருள் கொள்ளுகிறார்கள் இக்காலத்தவர் பலர் . உரையாசிரியர்களும் அறிஞன் என்றே உரை கூறிச் சென்றார்கள் . ஆனால், இச் சொல்லுக்கு இவ்விடத்தில் வீரன் என்று பொருள் கொள்வது சாலச் சிறந்ததென்று தோன்றுகிறது .

இவ்வாறு கூறுவதனாலே உரையாசிரியர்களைக் குற்றஞ் சொல்லுவதாகக் கருதவேண்டா. உரையாசிரியர்கள் நிறைந்த கல்வியும் விரிந்த அறிவும் உடையவர்கள் . அவர்களுக்குத் தலைவணங்கி வணக்கமும் நன்றியும் செலுத்தவேண்டுவது எமது முதற்கடமை . ஆனால் , அவர்கள் அனைத்தையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்வது அறிவுடைமை ஆகாது . என்னை ? நூலாசிரியர் கருத்தையே உரையாசிரியர் தமது உரையில் கூறவேண்டுவது கடமை என்றாலும் , சிற்சில சமயங்களில் சோர்வினாலோ, தமது சொந்தக் கொள்கையைப் புகுத்தவேண்டும்

என்னும் எண்ணத்தினாலோ , காலப் போக்கையொட்டியோ உரையாசிரியர் தமது உரைகளில் நூலாசிரியர் கருத்துக்கு மாறுபட்ட கருத்தையும் எழுதுவதைக் காண்கிறோம் . ஆகையினால் , யார் எதைக் கூறினாலும் அதை ஆராய்ந்து பார்த்துக் கொள்ளவேண்டியதைக் கொள்ளவும் தள்ளவேண்டியதைத் தள்ளவும் வேண்டுமே யல்லாமல் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வது அறிவுடைமை ஆகாது .

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவரும் அறிவுரை புகட்டுகிறார் அன்றோ ? ஆகவே , சான்றோன் என்னும் சொல்லுக்கு இவ்விடத்தில் யாது செம்பொருள் என்பதை ஆராய்வோம் . ஆராய்வதற்கு முன்னர் , பரிமேலழகர் இதற்கு என்ன உரை கூறுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வோம் .

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் இதற்குப் பரிமேலழகர் உரை வருமாறு : ” தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும் , தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தானென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய் . ”

இவ்வாறு உரை எழுதிய பரிமேலழகர் , மேலும் கீழ் வருமாறு விளக்கம் கூறுகிறார் : “ கவானின்கண் ( துடைமீது ) கண்ட பொது உவகையினும் சால்புடையன் எனக் கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின் பெரிதுவக்கும் எனவும் , பெண்இயல்பால் தானாக அறியாமையின் , கேட்ட தாய் எனவும் கூறினார் . ”

பரிமேலழகர் கூறிய இவ்வுரையில் சில நிகழ்கின்றன. பெண் இனத்துக்கே தாமாக அறியும் அறிவு இல்லை என்று பரிமேலழகர் முடிவுகட்டி விட்டார். என்னை ? ” பெண் இயல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் எனவும் கூறினார் ” என்று அவர் விளக்கம் கூறுவது காண்க .

ஆண்களிலும் தாமாக அறியும் சுய அறிவு இல்லாதவர் பலர் இருக்கிறார்கள். பெண்களிலும் தாமாக அறியும் சுய அறிவுள்ளவர் பலர் இருக்கிறார்கள் . இதனை உலகத்தில் காண்கிறோம். ஆனால் , பரிமேலழகர் பெண் மக்களுக்குச் சுய அறிவு இல்லை என்று கூறுகிறார். இதனை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது ? பரிமேலழகர் கூறுவது திருவள்ளுவர் கருத்துக்கு முரண்படுகிறது . என்னை ?

தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றும் ,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற என்றும் திருவள்ளுவர் பொதுப்பட மக்கள் என்று கூறுகிறபடி யினாலே ஆண் மக்கள் , பெண் மக்கள் ஆகிய இருபால் மக்களும் அறிவுடையராய் இருத்தல் வேண்டும் , இருபால் மக்களையும் அறிவுடையராக்க வேண்டும் , இருபால் மக்களும் அறிவுடையராய் இருக்க முடியும் என்பதே திருவள்ளுவர் கருத்து . இக்கருத்துக்கு மாறுபடப் பரிமேலழகர் கூறுவது பொருந்தாது .

வாசகர் இங்கு எம்மை ஒரு கேள்வி கேட்கவிரும்புவர் . திருவள்ளுவர் கேட்ட என்றுதானே இக்குறளில் கூறுகிறார் ; கண்ட தாய் என்று கூறவில்லையே . ஆகவே , பரிமேலழகர் உரையில் என்ன தவறு உண்டு என்று வாசகர் கேட்க விரும்புவர் . மேலும் , பெண்களைப் பிரித்து ஆண்மகனை மட்டுந்தானே சான்றோன் என்று திருவள்ளுவர் றுகிறார் . இதனால் பரிமேலழகர் உரையில் குற்றம் என்ன இருக்கிறது எனவும் வாசகர் கேட்க விரும்புவர் .

இந்தக் கேள்விகள் சரியான கேள்விகளே . இவற்றிற்கு விடை கூறவேண்டியதும் எமது கடமையே . இக்கேள்விகளுக்கு விடை கூறும் முன்னர் , சான்றோன் என்னும் சொல்லுக்கு வீரன் என்னும் பொருள் உண்டா , இப்பொருளில் இச்சொல் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் . பின்னர் வாசகர் கேட்கும் இக்கேள்வி களுக்கு விடை கூறுவோம் .

சான்றோன் என்னும் சொல்லுக்கு வீரன் என்னும் பொருளும் உண்டு என்பதற்குச் சான்று காட்டுவோம் . பதிற்றுப்பத்து , இரண்டாம் பத்து 14 ஆம் செய்யுளில் எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து

நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை என்று , இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் பாடுகிறார் . இச்செய்யுளடியில் சான்றோர் என்னும் சொல் வந்துள்ளது . இச்சொல்லுக்குப் பழைய உரையாசிரியர் , வீரர் என்று உரை கூறியுள்ளார் . என்னை ? “ ஈண்டுச் சான்றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை ” என்று அப்பழைய உரையாசிரியர் உரையெழுதி இருப்பது காண்க.

என்றும் போர்க்களம் சென்று போர் செய்வது மட்டுமல்லாமல் பேராபத்துள்ள யானைப் படையுடன் போர் செய்து வெற்றியுடன் திரும்பிவர வேண்டும் என்றும் முடிவுகட்ட வேண்டும் . இவை அறிஞர் தொழில் அல்ல ; இவை போர் வீரர்களின் இன்றியமையாக் கடமையாகும். ஆகவே , சான் றோன் என்னும் சொல்லுக்கு இவ்விடத்தில் அறிஞன் என்னும் பொருள் சிறிதும் பொருந்தவில்லை. போர்வீரன் என்னும் பொருள் சாலவும் பொருத்தமாயிருக்கிறது .

இச்செய்யுளின் திணையும் துறையும் இதனை வலியுறுத்து கின்றன. திணை , வாகை ; போர்ச் செயலுக்குச் சம்பந்தப்பட்டது . துறை , மூதின் முல்லை , அதாவது , மறக்குடியில் பிறந்த வீரமகளின் வீரத்தைக் கூறுவது. என்னை ?

“அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அக்குடி

மடவரல் மகளிர்க்கும் மறம்மிகுத் தன்று” என்று புறப்பொருள் வெண்பாமாலை மூதின் முல்லை யைப்பற்றிக் கூறுவது காண்க .

இந்தப் புறநானூற்றுச் செய்யுளில் , மறக்குடியில் பிறந்த வீரமகள் ஒருத்தி தன் மகனுடைய போர்க் கடமையைப் பற்றிப் பேசுகிறாள் . இச்செய்யுளின் பொருள் இது :

“ வீரர் குடியில் பிறந்த நான் வீரமகனைப் பெற்றெடுக்க வேண்டியது என்னுடைய கடமை . அந்த மகனைச் சான்றோன் ( வீரன் ) ஆக்குவது அவனுடைய தந்தையின் கடமை . வேல் வாள் முதலிய படைக்கலங்களைச் செய்து கொடுக்கவேண்டியது ஊர்க் கொல்லனுடைய கடமை . நல்ல நடைகளை ( அதாவது போர் முறைகளை ) க் கற்பிக்கவேண்டியது அரசனுடைய

( சங்க காலத்தில் போர்வீரர்களுக்குப் போர்ப் பயிற்சியை அரசாங்கத்தார் பயிற்சி செய்வித்தனர் என்பது இதனால் தெரிகிறது . ) போர்க்களத்தில் சென்று போரிட்டு வெற்றியுடன் திரும்புவது , அதிலும் யானைப் படையுடன் போர் செய்து வெற்றியுடன் திரும்புவது , இவ்வாறு பயிற்சி பெற்ற சான்றோனாகிய ( வீரனாகிய ) அக்காளையின் கடமையாகும் ” என்பது இச்செய்யுளின் கருத்தாகும் .

எனவே , சான்றோன் என்னும் சொல் , போர் வீரன் என்னும் பொருளில் இச்செய்யுளில் வந்துள்ளது காண்க .

ஈன்றாள் மகள் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றோர் தமித்தா உறையற்க ஐம்புலனும்

தாங்கற் கரிதாகலான்”

என்பது ஆசாரக்கோவைச் செய்யுள் . இச்செய்யுளில் சான்றோர் என்னும் சொல் வந்துள்ளது . இவ்விடத்தில் இச்சொல்லுக்கு அறிஞர் என்று பொருள் கொள்ளக்கூடாது . அறிஞர் என்று பொருள் கொண்டால் , அறிவாளிகள் அனைவரையும் இழிவு படுத்தி அவமானப்படுத்துவதாக முடியும் . என்னை ? அறிஞர் தாயுடனும் மகளுடனும் உடன்பிறந்த தங்கை தமக்கை களுடனும் தனியே வசித்தல் கூடாது . ஏனென்றால் அவர்கள் காமத்தை அடக்க முடியாதவர்கள் என்று பொருள் கூறினால் , அறிஞர் உலகத்தைக் காமுகர் என்றும் ஒழுக்கயீனர் என்றும் கூறி அவர்களை இழிஞர் என்று முடிவுகட்டுவதாகும் அல்லவா ? அறிஞர்கள் காமத்தை அடக்க முடியாமல் ஒழுக்கந்தவறி நடப்பவர்கள் என்றால் , அவர்கள் அறிவினால் என்ன பயன் ? மிருகங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு என்னை ?

இவ்வாறு அறிஞரை இழிவுபடுத்துவது ஆசாரக்கோவை ஆசிரியரின் கருத்தன்று . ஆகவே , இச்செய்யுளில் வந்துள்ள சான்றோர் என்னும் சொல்லுக்கு வேறு பொருள் இருக்க வேண்டும் . அப்பொருள் யாது ? அதுதான் வீரன் என்னும் பொருள் .

வீரர்கள் ( தேகபலம் மிகுந்தவர்கள் ஆகையினாலே ) ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் . ஆகவே , அவர்கள் தாய் , மகள் , உடன் பிறந்தாள் இவர்களுடனும் தனித்து வசிக்கக்கூடாது என்பது இச்செய்யுளின் செம்பொருள் ஆகும் .

வேறு செய்யுள்களையும் சான்று காட்டுவோம் : கூற்றுறழ் முன்பி னிறைதலை வைத்தபின் ஆற்றி யவனை யடுதல் ; அடாக் காலை ஏற்றுக் களத்தே விளிதல் ; விளியாக்கால் மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தம் தோற்றமும் தேசும் இழந்து காலாளாய்க் காலாள் எறியான் ; களிற்றெருத்தின் மேலாள் எறியான் ; மிகநாணக் – காளை கருத்தினதே யென்று களிறெறியான் அம்ம

தருக்கினனே சான்றோர் மகன் இச்செய்யுள்கள் தகடூர் யாத்திரை என்னும் நூலைச் சேர்ந்தவை . போர் வீரர்களின் இயல்பைக் கூறுகின்றன. இச்செய்யுள்களில் போர்வீரர் , சன்றோர் என்று கூறப்படுதல் காண்க

இதுகாறும் காட்டிய சான்றுகளால் , சான்றோன் சான்றோர் என்னும் சொற்களுக்குப் போர்வீரன் , போர் வீரர் என்னும் பொருள் உண்டென்பதை ஐயமறக் கண்டோம் .

இனி , இக்கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்துக் கொண்ட

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் என்னும் குறளுக்கு உரை காண்போம் .

தன் மகனை வீரன் ( சான்றோன் ) என்று பிறர் கூறக் கேட்ட தாய் , அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைப் பார்க்கிலும் அதிகமாக மகிழ்ச்சியடைவாள் என்பது இக் குறளுக்குச் செம்பொருள் ஆகும் .

இனி வாசகர் கடாவிய கடாவிற்கு விடை கூறவேண்டுவது எமது கடமையாகும் . சான்றோன் எனக் கண்ட தாய் என்று கூறாமல் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று ஏன் கூறினார்? தன் மகனுடைய வீரச் செயலைத் தாயானவள் தானே நேரிற் கண்டு மகிழும் அறிவு அவளுக்கில்லையா என்று வாசகர் கேட்கக் கூடும் . இதற்கு விடை கூறுவோம் .

மகளிர் போர்க்களம் செல்வது தமிழ் நாட்டு மரபு அன்று . மறக்குடியிற் பிறந்த வீரத் தாயாக இருந்தாலும் போர் நடக்கும் போது போர்க்களம் சென்று தன் மகன் செய்யும் போரைக் காண்பது தமிழ் மகளிர் மரபு அன்று . என்னை ?

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம் அம்பு கடிதுவிடுதும் நும் அரண் சேர்மினென

அறத்தாறு நுவலும் ….. என்பது புறநானூறு 9 ஆம் செய்யுள் .

நாட்டில் போர் ஏற்பட்டால் இன்னின்னவர் போர்க்களம் செல்லக்கூடாது என்று அரசன் பறையறைந்து தெரிவிப்பது பண்டைக் காலத்து வழக்கம் . போர்க்களம் செல்லக்கூடாதவர் இன்னின்னார் என்பதை இப்புறப் பாட்டுக் கூறுகிறது . இதில் , போர்க்களம் செல்லக்கூடாதவர் பெண்டிரும் ஆவர் என்று கூறப்பட்டிருப்பது காண்க . எனவே , மறக்குடியிற் பிறந்த வீரத் தாயாக இருந்தாலும் , போர் நடக்கும்போது அவள் போர்க்களம் சென்று தன் மகன் எவ்வாறு போர் செய்கிறான் என்பதை நேரில் காண முடியாது . கண்டவர் பிறர் சொல்லக் கேட்டுத்தான் அறியவேண்டும் . இது தமிழர் மரபு : ( போர் முடிந்த பிறகு போர்க்களம் சென்று இங்கு இறந்து கிடக்கும் தன் மகனைக் காண்பது மறக்குடியிற் பிறந்த வீரத் தாய்மார்க்கு இயல்பு. ஆனால் , போர் நடக்கும்போது போர்க்களம் செல்லக் கூடாது . )

போர் நடக்கும்போது போர்க்களம் சென்று தன் மகனுடைய வீரத்தை நேரில் காணும் வாய்ப்புப் பெறாத வீரத்தாய் , போர்க்களம் சென்று போரை நேரிற் கண்டவர் யாரேனும் பிறர் சொல்லக் கேட்டுத்தானே அறியவேண்டி யிருக்கிறாள் ? இது பற்றித்தான் , சான்றோன் எனக் கண்ட தாய் என்று கூறாமல் , சான்றோன் எனக் கேட்ட தாய் என்று கூறினார் .

வாசகர் இங்கு இதைக் கூறவிரும்புவர் . மகனுடைய வீரத்தைக் கேட்ட தாய் , பெரிதும் மகிழ்வது போல , தன் மகனுடைய அறிவுடைமையைக் கேட்டும் தாய் மகிழ்ச்சி ய்டைய மாட்டாளா ? மகனை அறிஞன் என்று கூறக் கேட்ட தாய் பெரிது மகிழ்வாள் என்று பொருள் கூறினால் என்ன இழுக்கு என்று வாசகர் கேட்கலாம் .

இதற்கு விடை என்னவென்றால் , இது சிறந்த பொருள் அன்று என்பதே. என்னை ? கற்றறிந்த அறிஞர் சபையிலே கற்றறிந்த மகளிரும் செல்வது தமிழர் மரபு . அவ்வையார் , நச்செள்ளையார் , கழார்க்கீரனெயிற்றியார் , இளவெயினியார் , வெண்ணிக் குயத்தியார் , வெள்ளிவீதியார் , ஆதிமந்தியார் முதலிய பல பெண்மணிகள் சிறந்த புலவராகத் திகழ்ந்தனர் . இவர்களைப் போன்ற பெண்மணிகள் பெயரறியாதவர் பலர் இருந்தனர் , இருக்கின்றனர் . பெண்மணிகள் கற்றவர் சபையில் சென்று சபையில் பங்கு கொள்வது அன்றும் இருந்தது ; இன்றும் இருக்கிறது . ஆகவே , தமது மகனுடைய அறிவுடை மையைக் கேட்டு மகிழும் தாய்மார் , நேரில் கண்டு மகிழவும் வாய்ப்புடையவர்கள் . ஆகையால் , கேட்ட தாய் என்று கூறவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் , மகனுடைய வீரத்தைத் தாயானவள்

தாயானவள் கேட்டுத்தான் அறியவேண்டுமே யல்லாமல் கண்டு அறிய வாய்ப்புள்ளவள் அல்லள் . இதனால் தான் கேட்டதாய் என்று கூறவேண்டியதாயிற்று .

மேலும் , தன் மகன் வீரன் என்று கேட்ட தாய் , ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தனள் என்று நூல்கள் கூறுகின்றன வல்லாமல் , தன் மகன் அறிஞன் என்று கேட்ட தாய் ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தனள் என்று நூல்கள் கூறவில்லை . தன் மகனுடைய வீரத்துக்காகத் தாயானவள் அவனை ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தனள் என்பதற்குப்

என்பதற்குப் பழைய நூல்களில் சான்றுகள் உள்ளன . அச்சான்றுகள் ஆவன :

மீனுண் கொக்கின் தூவியன்ன வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே என்பது புறநானூறு 277 ஆம் செய்யுள் .

தன் மகன் போரில் இறந்தான் என்பதற்காக வருந்தாமல் , அவன் வீரமாகப் போர் செய்து இறந்தான் என்று அறிந்து , அவனைப் பெற்றபோது அடைந்த உவகையைவிட அதிகமாக உவகையடைந்தாள் என்று இச்செய்யுள் கூறுகிறது .

நரம்பெழுந் துலறிய நிரம்பாமென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்று பலர்கூற மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவேன் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே என்பது புறநானூறு 278 ஆம் செய்யுள் . இதில் தன் மகன் வீரத்தோடு போர் செய்தான் என்பதற்காகத் தாயானவள் அவனை ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள் என்று கூறப்படுவது காண்க . மகனுடைய வீரத்தை அறிந்து , அவனைப்

பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சி யடைவது வீரத் தாய்மார்க்கு மரபாகலின் அந்த மரபைப் பின்பற்றியே திருவள்ளுவரும் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்று கூறினார் என்பதில் ஐயமில்லை . எனவே ,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் என்னும் குறளுக்கு நாம் கூறிய பொருளே பொருத்தமானது எனத் தோன்றுகிறது . அதாவது , தன் மகனை வீரன் (சான்றோன் ) என்று பிறர் கூறக் கேட்ட வீரத் தாய் , அவனை ஈன்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாக மகிழ்ச்சி யடைவாள் என்னும் பொருள் செம்பொருள் உடையதாகத் தெரிகிறது . இப்பொருளைத்தான் வில்லிப்

புத்தூராரும் கூறுகின்றார் . வில்லிபாரதம் விராட பர்வம் நிரைமீட்சிச் சருக் கத்தில் இந்தக் குறளை இந்தப் பொருளில் அவர் வழங்கியுள்ளார் .

விராட நாட்டரசன் நாட்டில் இல்லாத சமயம் துரியோதனன் விராட நாட்டில் சென்று ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு போனான் . ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வரும் வீரர் அப்போது விராட நாட்டில் இலர் . அச்சமயம் உத்தரன் என்னும் அரச குமாரன் தான் போய் நிரை மீட்டு வருவதாக அரசியாகிய தாயினிடம் கூறினான் . அவளும் அவனை அனுப்ப இசைந்தாள். ஆனால் , தேரைச் செலுத்தேர்ப் பாகர் ஒருவரும் இலர் . இச்செய்தியை யறிந்து அரண்மனையில் பேடி உருவத்துடன் அஞ்ஞாத வாசம் செய்திருந்த அர்ச்சுனன் , தான் தேரைச் செலுத்துவதாகக் கூறித் தேரை ஓட்டிச் சென்றான் .

போர்க்களம் சென்று போர் வீரர்களைக் கண்டபோது உத்தர குமாரன் அச்சமடைந்தான் . கை கால்கள் நடுங்க , உடல் வியர்க்க , மனம் பதற அச்சத்துடன் போர்க்களத்தை விட்டு ஓடினான் . அப்போது அர்ச்சுனன் உத்தர குமாரனுக்குத் தைரியம் கூறி ஓடாமல் இருக்கச் செய்து , தான் ஒருவனாகவே நின்று போர் செய்து பகைவரை வென்று ஆனிரைகளை மீட்டான் . பிறகு அர்ச்சுனன் தூதுவரை விராட நாட்டிற்கு அனுப்பி , உத்தர குமாரன் போர் வென்று ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வெற்றியுடன் வருகிறான் என்று செய்தி தெரிவித்தான் . விராட நாட்டினரும் உத்தர குமாரன் தாயாகிய சுதேட்டிணை என்னும் அரசியும் இச்செய்தி கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சி யடைந்தார்கள் . உத்தர குமாரன் விராட நாட்டிற்குத் திரும்பி வந்தபோது – அவன்தான் போர் வென்றான் என்று அவர்கள் நம்பினபடியால் அவனை

எல்லோரும் வரவேற்றுப் புகழ்ந்தனர் . உத்தர குமாரன் அரண்மனைக்குச் சென்று தனது தாயை வணங்கினான் .

தன் மகன் போர் வென்று திரும்பி வருகிறான் என்று கேள்விப்பட்டிருந்த சுதேட்டிணை அவனைக் கண்டபோது , ஈன்ற பொழுதினும் எண்மடங்கு அதிகமாக உவகை அடைந்தாள் என்று வில்லி புத்தூரார் கூறுகிறார் . அச்செய்யுள்

ஆன்றமைந் தடங்கு கேள்வி

யண்ணலும் அவனைப் பெற்ற தோன்றலும் பின்னர்ச் சென்று

சுதேட்டிணை கோயில் எய்த ஈன்றவப் பொழுதின் ஓகை

எண்மடங் காக விஞ்சச் சான்ற தன் மகனைக் கண்டோம்.

பரிமேலழகருக்கு இந்தப் பொருள் தெரியாதா ? சான்றோன் என்பதற்கு

வீரன் என்னும் பொருளும் உண்டென்று அவர் அறியாரா ? பரிமேலழகர் கல்வியிற் சிறந்த பெரியார் . நல்ல உரையாசிரியர் . இந்தப் பொருளை அவர் நன்கறிவார் . ஆனால் , ஏன் அவர் இந்தப் பொருளைக் கூறாமல் வேறு பொருள் கூறினார் ?

இதற்கு இரண்டு விதக் காரணங்கள் இருக்கவேண்டும் . ஒன்று , இவர் தமது சொந்தக் கருத்தைப் புகுத்துவதற்காக இருக்கலாம் . மற்றொன்று , இவர் காலத்தில் பயின்று வந்த கருத்தைத் தம் உரையில் கூறியிருக்கலாம் . சொந்தக் கருத்தாக இருந்தாலும் , இவர் காலத்தில் நிலவியிருந்த கருத்தாக இருந்தாலும் , அக்கருத்துக்கள் எவை ? அவை , பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை இருத்தல் ஆகாது என்பது ஒன்று . வீரர்களுக்கும் அறிஞர்களுக்கும் சம உரிமை இருத்தல் ஆகாது என்பது மற்றொன்று .

இவற்றை அவர் எழுதிய உரையிலிருந்து அறியலாம் . ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் சம உரிமை உண்டென்பது திருவள்ளுவர்

கொள்கை . பழந்தமிழரின் கொள்கையும் இதுவே . பரிமேலழகர் , ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் சம உரிமை கூடாது , பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்னும் பிற்காலத்துக் கொள்கையைப் போற்றுபவர் . இக்கொள்கை யுடைவரா யிருந்தபடியினால் , திருக்குறளில் மக்கட்பேறு என்றிருந்த அதிகாரப் பெயரைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றி அமைத்துவிட்டார் . அன்றியும் , பெண்களுக்குத் தாமாக அறியும் அறிவு இல்லை என்று தமது உரையிலும் எழுதிவிட்டார் .

மக்கட்பேறு என்றிருந்த பெயரைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிவிட்டது போலவே , அந்த அதிகாரத்தைச் சேர்ந்த “ ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் ” என்னும் குறளுக்கும் தமது கொள்கைக்கேற்ப உரையை மாற்றி எழுதிவிட்டார் . வீர னுடைய வீரத்தையும் அறிஞனுடைய அறிவையும் சமமாகப் போற்றுகிறார் திருவள்ளுவர் ; பழந்தமிழர் கொள்கையும் அது தான் . ஆனால் , பிற்காலத்தவராகிய பரிமேலழகர் , வீரர்களுக்குச் சிறப்புத் தருதல் கூடாது , அறிஞர்களுக்கே சிறப்புத் தருதல் வேண்டும் என்னும் மிகப் பிற்காலத்துக் கொள்கையைப் போற்றுகிறவர் . ஆகவே , சான்றோன் என்னும் சொல்லுக்கு வீரன் என்று பொருள் கூற உடன்படாமல் அறிஞன் என்று பொருள் எழுதினார் . பரிமேலழகர் தமது சொந்தக் கொள்கை காரணமாக இவ்வாறு மாறுபட உரை எழுதினாரேயல்லாமல் , பொருள் தெரியாமல் எழுதினார் என்று கருதுதல் கூடாது. ஆனால் , திருவள்ளுவர் கருத்துக்கு மாறுபட்டது இவர் உரை என்பது கருதத்தக்கது .