சதீ – பிரதிக் முரளி (ஆய்வு மாணவர்)

பொய்கையும் தீயும் ஓரற்றே !

“பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவோம் இஃதை எமக்கில்லை ஈடே”

என்று போற்றி பாட்டிசைத்த பாரதியின் பாரதம் கடந்து வந்த பல கோடி ஆண்டு வரலாறு வியக்கத்தக்கது. பற்பல பொற்காலம் கடந்தும், சமூக அவலங்கள் களைந்தும், தன் மக்களை பேணி அரவணைக்கிறாள் பாரத அன்னை.

“களையப்பட்டுவிட்டனவே” என்ற ஒரே வார்த்தையோடு பல பழைய பழக்கங்கள் மூடிவிடப்படுகின்றன. அப்படி அடிக்கடி பேச்சடிப்படாத பழக்கம்தான் உடன்கட்டை ஏறுதல் எனப்படும் “சதீ”.

சாத்திரக்கூற்றென்பர் சிலர், பேயர் செயல் என்பர் சிலர், பெண்டிரின் மாண்பென்பர் சிலர். எதுவாயினும், மங்கைக்கும் மரவிறகிற்கும் பேதமறிய பல நூறாண்டாயின நமக்கு.

சமூகத்தின் கண்ணாடி- இலக்கியம். இப்படிப்பட்ட பழக்கத்தை தீந்தமிழ் புறநானூறு எங்கனம் கையாளுகிறது என்பது இக்கட்டுரையின் ஆய்வு நோக்கம்.

புறநானூற்று பெதும்பை முத்துதிர்த்த செய்யுள் இது:

“பல் சான்றீரே பல் சான்றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே
அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்
வௌ¢ எள் சாந்தொடு புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரல் பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே” –

(246- பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு)

விருப்பும் வெறுப்பும் கலந்த இந்த பாடல்வரிகள் ஒரு பேதையின் கடைசி வாயுதிர்வுகள். தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் முன் தமிழ் பாடியவள் என்ற நினைவு உள்ளத்தை உருக்குகிறது .

அவள் தீயேகியதைப்பாடும் மதுரை பேராலவாயர், “நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழப் பேர் அஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரும் அம்ம” என்று வியக்கிறார் ! தனது கூந்தலில் நீர் சொட்டச்சொட்ட, கண்கள் துயரெய்தி, தனது கணவனின் பூதவுடல் எரியுமிடம் சென்றாள் அம்ம!

இப்படிப்பட்ட துயர் ஒரு நொடியில் வரவிருக்க, தென்னவன் தன்னகத்தாள் தமிழ்ப்பாடினாள் என்பது நெகிழ வைக்கிறது.

பாண்டியப்பெண்டு, தன்னை அரசாளச்சொல்லும் நபர்களை “சான்றீர்” என்று விளிக்கும் தொனியே மிடுக்காய் அமைகிறது. “நீர் சான்றோரா? என்னை செல் எனச்சொல்லாது, வாழச்சொல்லும் நீரா?” என்ற விளி வேற்றுமை கர்ஜ்ஜிக்கிறது. வெளிப்படையாக அடுத்த வரியில், “பொல்லாச்சூழ்ச்சி பல்சான்றீர்” என்று சாடியே விட்டாள். தொண்டையை அடைத்த துக்கத்தைப் பிளந்து வந்த தமிழ் வரி அது. அதன் ஆழம் ஆரறிவர் ?

படம் – கன்னட நாட்டில் ஒரு ‘சதீ-கல்’. உடன்கட்டை சென்ற ஒரு பெண்ணை தெய்வமாக ஒரு கல்லில் வழிபடுதல். அவளது தலையில் மலர்க்கிரீடம் தந்து, அவளை தெய்வமாக காட்டுகிறது. மேலும், கையை அவள் மேலே காட்டுகிறாள், சுவர்க்கத்தை நோக்கி. கையில் ஒரு எலுமிச்சம்பழம், தெய்வீகத்தை உணர்த்த.
(படம் நன்றி – திரு.தாமஸ் அலக்சாண்டர்)

“வெள்ளரி விதையை பிழிந்திட்டாற்போல், நெய்யில்லாத, பழைய சோற்றை பிழிந்த பிண்டமும், புளியிட்ட வேலைக்கீரையும், உப்பில்லாத எள் துவையலும் உண்டு, பாயின்றி கல்மேல் உறக்கம் பேண நான் வாழவும் வேணுமோ?” என்கிற ஏக்கத்தின் ஒலி “சான்றோர்” செவி கேட்டிலது போலும்.

இப்படிப்பட்ட வாழ்விற்கு அஞ்சிய மனமும், அரசபோக விருப்பும் தான் பாண்டியப்பெண் வீரசுவர்க்கம் ஏக காரணம் என்று வரலாறு நினைக்கும் என்று அஞ்சினளோ? அறியேன்! சாதுர்யமாய் அடுத்த வரி சமைக்கிறாள்,

“நன்குலர்ந்த கட்டைகளைக்கொண்டு எரியும் சிதையானது, எனது பெருந்தோள் கணவனோடு எரிகிறது. அது எனக்கு தாமரைப்பூத்த தடாகமாக காட்சியளிக்கிறது” என்று அழகாய் செந்தமிழ் மரபு வழுவா பாட்டிசைத்துப்போனதோர் தமிழை. அவளுக்கு அரசபோகமே தந்து, ஓலையும் தந்திருந்தால், அகமும் புறமும் பிரவகித்திருக்குமோ? தமிழ் கூறும் நல்லுலகம், பைந்தமிழ்ப்பாடிய கவிமணியாயினும் பிண்டமிட்டு, அஞ்சவைத்து, அஞ்சுவர்க்கம் ஏற்றுமோ ?

Leave a Reply