சங்ககால தமிழர் அறுசுவை விருந்துகள்

நவிர மலை(பர்வத மலை) நாட்டை ஆண்ட நன்னனைப் பார்க்கப்போகும் கூத்தன் ஒருவனுக்கு, வழியில் நேரக்கூடும் சில அனுபவங்களை அவனுக்கு எடுத்துரைப்பதே ‘மலைபடுகடாம். அப்படிச் சொல்லும்போது, கூத்தனுக்கும் அவன் உடன் செல்பவர்களுக்கும் கிடைக்கக்கூடும் சில உணவுகளை இந்த நூல் விவரிக்கிறது..

திருமண வீடு போல மணம் கமழும் பெரிய மலைச் சாரலில் உள்ள கானவர்களின் வீடுகளில் தங்கினால்,அவர்கள் வைத்திருக்கும் தேன்,கிழங்கு,நல்ல பன்றியின் மாமிசம், கூடை நிறைய மற்ற மாமிசம் ஆகியவற்றை மிகுதியாகத் தருவார்கள்.

மண இல் கமழும் மாமலைச் சாரல்

தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்

சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கி

பொருது தொலை யானைக் கோடு சீர் ஆக

தூவொடு மலிந்த காய கானவர்

செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே

இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர்

மலை அருகே இருக்கும் ஊர்களுக்கு செல்லும்போது, நன்னனின் கூத்தர்கள் என்று சொன்னால் போதும், தங்கள் வீடு போல வாசலில் நிற்காமல் நேராக அவர்கள் வீட்டிற்கு உள்ளே செல்லலாம்.நீண்ட தூரத்தில் இருந்து வந்தவர்களின் வருத்தம் நீங்க, இனிதாகப் பேசி, பருத்த தசைத் துண்டுகளில் நெய்யைப் பொழிந்து வேகவைத்து, நிறத்தோடு தோன்றும் தினைச் சோற்றோடு விருந்தளிப்பார்கள்.

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விறல் வேள் வயிரியம் எனினே

நும் இல் போல நில்லாது புக்கு

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

நன்னனின் மலை நாட்டிற்கு செல்பவர்கள், மலை தரும் பண்டங்களோடு, மூங்கிலில் ஊற்றி முற்ற வைக்கப்பட்ட இனிய கள்ளை வடிகட்டி எடுத்த ‘தேறல்’ என்னும் தெளிவைக் குறைவின்றிப் பருகலாம். பின் ‘நறவு’ என்னும் நெல்லால் செய்த கள்ளையும் மகிழ்ச்சியுடன் அருந்தலாம்.

அதிகாலையில் முன் இரவில் மகிழ்ச்சி அடைந்த மயக்கம் தீர, சிதைந்த பழங்களின் வெள்ளை விதைகள், கடமானின் பருத்த கறி, முள்ளம்பன்றியின் பசுமையான கொழுப்பை உடைய பிளக்கப்பட்ட கறி, பெண் நாய் வேகமாக ஓடி கடித்த விலங்கின் கறி, வெண்மையான பக்கங்கள் கொண்ட பஞ்சு போன்ற தலையும் உடைய முற்றிய பழத்தின் இனிய புளி கலந்து சிறந்த மோர், உலையில் வேகவைத்த மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசி, துழாவி ஆக்கிய  வெண்மையான அவித்த உணவு ஆகியவற்றை தங்கள் பிள்ளைகள் போல எண்ணி பரிமாறுவார்கள்.    

ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு

வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல்

குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை

பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர

அருவி தந்த பழம் சிதை வெண் காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை 

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ

வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்

இன் புளிக் கலந்து மா மோர் ஆக

கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து  

வழை அமல் சாரல் கமழத் துழைஇ

நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக்

குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ

மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்

வழியில் இருக்கும் காடுகளில் கோவலர்கள் இருப்பார்கள். அவர்களின் வளையல் அணிந்த பெண்கள் செல்பவர்களின் மனம் மகிழும்படி,சங்கு போன்ற வெண்மையான இனிய பசும் பாலைத் தாராளமாகத் தருவார்கள். அது ஊரை விட்டு நீண்ட தூரம் செல்பவர்களுக்கு, வருத்தத்தை நீக்கி புத்துணர்வு தரும்.

வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த

வளை ஆன் தீம்பால் மிளை சூழ் கோவலர்

வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்

பலம் பெறு நசையொடு பதிவயின் தீர்ந்த நும்

புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்

அதுமட்டும் அல்ல, அங்கு  இரவு நேரத்தில் சென்றால், பாலும் தங்களுக்காக சமைத்த ‘மிதவை’ என்னும் வெந்த சோறையும்  அளித்து உபசரிப்பார்கள்.

எல்லினிர் புகினே

பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்

வழியில் கூப்பிடும் தொலைவில் வேடுவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் நன்னனிடம் போகின்றோம் என்று கூறினால், உடனே கறிகளையும், கிழங்குகளையும் வற்புறுத்தித் தருவார்கள்.

கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின்

கொடுவிற் கூளியர் கூவை காணின்

படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை

கொடியோள் கணவற் படர்ந்திகும் எனினே

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை

குடிசை வீடுகளில் மூங்கில் அரிசியால் ஆன சோற்றை ஊற்றி, நெல்லரிசியையும் கலந்து, அவரையைப் புளி கரைசலில் போட்டு புளி கூழ் சமைத்து வைத்திருப்பார்கள்.நடு இரவில் அங்கு செல்ல நேர்ந்தால் கூட, பசி  தீர அதை அனைத்து வீடுகளிலும் பெறலாம். 

அரிசி மிதவை சொரிந்த

சுவல் விளை நெல்லின் அவரை அம்புளிங்கூழ்

அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட

அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய

புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்

குடிசைகளில் ஒரே மாதிரியான நுண்மையான அரிசியில், வெட்டிய வெள்ளை ஆட்டின் கறியைப் போட்டு கறிசோறு சமைத்து வைத்திருப்பார்கள்.அதில் குளுமையான நுண்மையமான நெய்யையும் ஊற்றியிருப்பார்கள்.இளைப்பாறத் தங்கும் இடங்களில் இதனை எல்லா நாட்களிலும் பெறலாம்.

மேலும், நுண்மையாக இடிக்கப்பட்ட தினை மாவில்,வெல்லத்தைப் போட்டுத் தருவார்கள். அதை உண்ட பின்பு, வேறு எந்த உணவையும் சுவைக்க முடியாது, அத்தகைய சுவைமிக்கதாக அது இருக்கும்.

நுண் நேர் அரிசி

வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை

தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக

அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்

விசையம் கொழித்த பூழி அன்ன

உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை

நன்னனைப் பார்க்க செல்லும் வழியில் இருக்கும் மலைகளிலும், காடுகளிலும் நல்ல விருந்து கிடைக்கும்போது வயல்கள் இருக்கும் இடங்களில் நல்ல உணவு கிடைக்காமலா இருக்கும்!

கண்பு மலி பழனம் கமழத் துழைஇ

வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை

நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில்

பிடிக்கை அன்ன செங்கண் வராஅல்

துடிக்கண் அன்ன குறையொடு விரைஇ

பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்

ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த

விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ

வளம் செய் வினைஞர் வல்சி நல்க

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்

இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவிர்

வயல் நிலங்களில் கள் விற்கும் பெண்கள் இருப்பார்கள்.அவர்கள் வாளை மீன், வரால் மீன்  துண்டகளையும் அரிசி சோறையும் பரிமாறுவார்கள். பசுமையான நெல் முலையின் தெளிவில் இருந்து தயாரிக்கப்பட்ட கள்ளையும், சூரியனின் இளம் கதிர்கள் பரவும் நேரங்களில் வயல்கள் எங்கும் பெறலாம்.

மேலும் உழவர்கள் முள்ளை நீக்கி ஆக்கிய வெள்ளை மீன் துண்டுகள் உடைய வெண்மையான சோற்றையும் தந்து உபசரிப்பார்கள்.

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு

வழியில் கிடைக்கும் இந்த உணவுகளை உண்டு வெற்றிகரமாகக் கூத்தன் நன்னனை சந்திக்கலாம். சென்றவுடன் மற்ற பரிசுகளோடு நன்னன், கொழுப்பு சேர்ந்த இளம் தசையோடு, நீண்ட வெள்ளை நெல்லின் அரிசியைத் தந்து விருந்தளிப்பான்.

முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு

நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது

மேலும் நன்னனின் அரண்மனை வாசலில் இருந்த  நல்ல மூங்கில் குழாயில் முற்றிய தேனால் செய்த கள்ளின் தெளிவு மற்றும் மூங்கிலில் ஊற்றி வைக்கப்பட்ட காட்டு எருமையின் பாலில் இருந்து தயாரித்த இனிய தயிர் பற்றிய குறிப்பும் மலைபடுகடாமில் உண்டு.

திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல்

கான் நிலை எருமைக் கழைபெய் தீம் தயிர்

மேலும் உழவர்கள் முள்ளை நீக்கி ஆக்கிய வெள்ளை மீன் துண்டுகள் உடைய வெண்மையான சோற்றையும் தந்து உபசரிப்பார்கள்.

இப்படி மலைபடுகடாம் பாடிய இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் தந்த தகவல்கள், சங்ககாலத்தில் நவிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள் உண்ட  உணவு வகைகளை விவரிக்கும் சான்றாக விளங்குகிறது.

 – மீனாட்சி தேவராஜ்

Leave a Reply