கோயில் வகைகள்

எந்தவொரு பொருளும் 100 ஆண்டுகளை கடக்குமேயானால் அப்பொருள் தொல்பொருளாக கருதப்படுகிறது. கல்வெட்டுச் சிறப்பு, கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை சிறப்புக் கருதி தமிழகத்தில் பல கோயில்களை வரலாற்று நினைவுச் சின்னங்களாக பராமரித்து வருகிறது. இந்த சமய அறிநிலைத் துறையின் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன.

மத்திய, மாநில தொல்லியல் துறை கோயில்கள் மட்டுமல்லாமல் அரண்மனைகள், கோட்டைகள், கல்லறை என பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்துள்ளன.

கோயில்களை ஒன்றுபோல் அமையாமல் பலவித கோயில்களை கட்டமைத்த காரணமே இறைப்பற்றை வளர்க்கவும், வாழ்க்கை நெறிமுறைகளை நிலைப்படுத்தவும் தான். கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. இலக்கியம், அரசியல், சமயநிலைகள், சமுதாயம், பொருளாதாரம், வாழ்வியல் முறைகள், கலைகளின் வளர்ச்சி என்ற ஒரு நாடு பற்றிய அனைத்துச் செய்திகளையும் வழங்கும் கல்வெட்டுகளைக் கோயில்களில் புறச்சுவர்களில் காணக்கிடக்கிறது.
கட்டடம் மற்றும் சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த இத்தகைய கோயில்களைக் கண்டு மகிழலாம்.

கோயில்:

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழிற்சூழ் ஞாழற்கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே”.

அப்பர் பெருமான் தம் எளிய தமிழில் பெருங்கோயில், கரக்கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என பல்வகைக் கோயில்களைப் பற்றி பேசுகிறார். எனவே பல்லவர் காலத்தொடக்கத்திலும், இறுதியிலும் கோயில்களின் தோற்றத்தை இலக்கியம், மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் மூலமாகவே அறிய முடிகிறது.

இத்தகைய கோயில்களை அறிந்துக் கொள்வதன் வாயிலாக நம்முடைய கலாச்சாரம், பண்பாடு சிற்பிகளின் கட்டுமானத் திறன், தொழில் நுணுக்கம் இவற்றோடு நம்முடைய பக்தியையும் முழுமையாக அறிந்துக்கொள்ள முடிகிறது.

சங்க காலத்தில் முறையோடு வகுத்துக் தொகுக்கப்பட்ட மனை நூல்கள் இருந்தனவெனச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

“நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்,
மயன் பண்டிழைத்த மரபினது தான்”


என்னும் சிலப்பதிகார அடிகள் அக்காலத்தில் சிற்ப நூல்களும் சிற்பிகளும் இருந்தனர் என்பதனை அறிய தருகிறது.

கோயில்கள் யாவும் சிற்ப ஆகம நூல் மரபுபடியே கட்டமைந்தன என்பதனை ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. பொதுவாக விமானமானது ஆறு ஆதார அங்கங்களைக் கொண்டமைவதாகும். அவை முறையே அதிட்டானம் சுவர், பிரஸ்தரம், கண்டம், சிகரம், தூபி என்பதாகும். இவை கால், பாதம், தோள், கழுத்து, தலை, முடி என மனிதனுடைய உடலை அடிப்படை இலக்கணமாக கொண்டு அமைந்தன.

இதனால்தான் திருமூலர்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
என்றுகூறுகிறார்.  இத்தகைய கோயில்களை நிர்மாணம் செய்திட கட்டடக்கலை நூல் அறிந்த புலவர் இருந்தனர். அவர்களை நூலறிபுலவர் என்றழைத்தனர்.

“நூலறிபுவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வநோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
ஒழுங்குடன் வளை இய ஓய்குநிலை வரைப்பின்” (நெடுநல்வாடை)

நூலறிப்புலவர்களே பின்னாளில் பெருந்தச்சன் என்றழைத்து, இந்நாளில் ஸ்தபதி எனவும் அழைக்கப்படுவதாகிறது.

சங்க கால கோயில்கள் சுட்ட செங்கற்களால் கட்டமைந்தன. எனவே இத்தகைய கோயில்கள் காலத்தாலும், இயற்கையின் சீற்றத்தாலும், மக்களின் கவனக் குறைவாலும் அழிந்துவிட்டன. இவ்வாறு அழிந்த செங்கற்கோயிலை

“இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து” – என அகநானூறு பேசும்.

இருப்பினும் பல்லவர் காலத்திலிருந்துதான் நமக்கு கோயில்களின் இலக்கணம், சான்று கிடைக்கப் பெறுகிறது. பல்லவர் கால கோயில்களை குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கற்கோயில்கள், கட்டடக் கோயில்கள் என வகைப்படுத்தலாம். இவற்றையே குடைவித்த கோயில்கள், செதுக்குவித்த கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் எனவும் கூறலாம்.

மண்டகப்பட்டு என்னுமிடத்தில் குடைவரையை தோற்றுவித்த மகேந்திரவர்மர் கல்வெட்டு செய்தியை தருகிறார். எனவே இதற்கு முன்னர் செங்கல், மண், உலோகம், சுதைப் போன்ற மூலப் பொருள்களால் கோயில்கள் கட்டமைக்கப்பட்டன என அறிகிறோம்.

பல்லவர் கால கட்டுமானக் கோயில்களை தொடர்ந்து சோழர்கள் ஏராளமான கோயில்களை எடுப்பித்துள்ளனர். விசயாலயன் தொடங்கி இராசராசன் வரை எடுப்பித்த அனைத்துக் கோயில்களும் சிற்பம் மற்றும் கட்டடக் கலைச் சிறப்புமிக்க எழில்மிகு கோயில்களே இக்காலக் கோயில்கள்யாவும் பல்லவர் கால கலை முறையினை தொடர்ச்சியாக கொண்டு எடுப்பிக்கப்பட்ட கோயில்கள் ஆகும்.

கூரை:

விமானத்தின் மூன்று முக்கிய உறுப்புகளில் கூரையும் ஒன்றாகும். உத்தரம், வாசனம், வலபி, கபோதம், யாளி வரி இதன் உறுப்புகளாகும்.
வலபி பகுதியில் பூத கணங்கள் எல்லா கோயில்களிலும் இடம் பெற்றுள்ளன. மாமல்லபுரம் பல்லவர் காலக் கோயிலான கொற்றவை கற்றளியில் பூதகணம் காட்டப்பட்டுள்ளது. வலபியை அடுத்து கவிழ்ந்த நிலையில் சற்று முன் வந்ததாய் அமையும் பகுதி கபோதம் எனப்படும். இந்த கபோதத்தில் திருப்பங்களில் கோடிப்பாளை எனும் கருக்கணிகளும் இடையே கூடுகளும், கூடுகளில் சிற்பங்களும் கந்தர்வா தலைகளும் சில கோயில்களில் இடம் பெற்றுள்ளன.
யாளி வரி தளமுடிவைக் காட்டுவதாகும். இதனை பூமிதேசம் என்பர். இவ்வரியில் யாளிகள் வரிசையாகவோ அல்லது இணைகளாகவோ காட்டப்படுவதுண்டு. சோழர்கால கோயில்களில் யாளிகள் சிறப்பாக கையாளப் பட்டதற்கு சான்றாக கோயில்கள் பலவுண்டு.

ஸ்தபதி.வே.இராமன் தொல்லியல்துறை (ஓய்வு)

Leave a Reply