கோனேரிராஜபுரத்தில் வீதியுலா

வேலை நிமித்தமாக கோனேரிராஜபுரம் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது, இந்த வருடம். மிக பழமையான ஊரைப் பார்க்க போகும் ஆசையில், கொஞ்சம் அவ்வூரின் வரலாற்று பக்கங்களை புரட்டினோம்.

உமா மகேஸ்வரர் கோயில், ஊரின் மத்தியில் உள்ள பெரிய கோயில். ஆறடி உயர நடராஜர் சிலை, அக்ரஹார வகை வீடுகள் என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எங்களின் தேடல்.

பல புகைப்படங்கள் கிடைத்தது இணையத்தில், அதில் செம்பியன் மாதேவி அம்மையார் அமர்ந்த நிலையில், இறைவழிபாடு செய்யும் புடைப்பு சிற்பம் என்னை அதிகம் கவர்ந்தது. சில இடங்களில் இப்படியான புடைப்பு சிற்பங்கள் அளவில் சிறியதாய் இருந்து, பார்க்க தவறியிருக்கிறோம். அதனால் நிச்சயம் தேடி பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அதிகமாய் இருந்தது.

ஒரு வழியாய், கோனேரிராஜபுரத்தை அடைந்து விட்டோம். காலை உணவை முடித்துக்கொண்டு, கோயிலை நோக்கி பயணப்பட்டோம். மிக பிரமாண்டமான ராஜகோபுரம் எல்லாம் இல்லை, அதனால் கோயிலின் அருகில் செல்லும் வரை கோயில் அருகில் இருப்பதை அறிய முடியவில்லை. மிக பெரிய கோயிலின் குளம் வற்றி, வெடித்து கிடந்தது.

 ராஜகோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தோம், நந்தி மண்டபம் தாண்டி, நடராஜர் சன்னதி முன்பு நிற்கின்றோம். என்ன அழகு, இந்தச் சிலையை சுற்றி ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

மன்னன் ஒருவன் ஆறடி உயர நடராஜர் சிலையை செய்ய சொல்லி சிற்பிக்கு உத்தரவிட்டார். எவ்வளவு முயன்றும் சிற்பியால் அவ்வளவு பெரிய சிலையை செய்ய முடியவில்லை. மன்னரிடம் சென்று முறையிடுகிறான். ஆனால் மன்னனோ, “அதெல்லாம் தெரியாது. நாளை காலை எனக்கு சிலை தயாராக வேண்டும், இல்லை என்றால் உன் தலை சீவப்படும்” என்று உத்தரவிடுகிறான்.

மனம் உடைந்த சிற்பி, இறைவனை பிராதித்து விட்டு வேலையை துவங்குகிறார், சிறிது நேரத்தில், ஒரு கணவனும், மனைவியும் “தாகமாய் உள்ளது, அருந்த நீர் கிடைக்குமா?” என்று சிற்பியை அணுகுகின்றனர். மிகுந்த கோபத்திலும், சலிப்பிலும் இருந்த சிற்பி கொதிக்கும் சிலை செய்யும் குழம்பை காட்டி, இதை தவிர இங்கொன்றும் இல்லை, வேண்டும் என்றால் குடியுங்கள் என்று கூறுகிறார். ஒரு நொடியும் தாமதிக்காமல், இருவரும் அதனைக் குடித்துவிட்டு, சிற்பியின் கண் முன்னரே நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் ஆறடிக்கும் நிற்கின்றனர்.

பயந்து போன சிற்பி, மன்னரை அழைத்து வந்து காட்டுகிறான். இறைவனின் விரலில் ஒரு சிறு பிசிறு இருக்க, அதை நீக்க சிற்பி முயல, அங்கிருந்து குருதி வழிகிறது. இறைவனின் திருவிளையாடலைப் புரிந்து கொண்ட மன்னரும், சிற்பியும் நடராஜரையும், சிவகாமி அம்மையையும் வழிபடுகின்றனர். இது நடராஜர் சிலையைப் பற்றி கிராமத்தில் சொல்லப்படும் செய்தி.

அங்கிருந்து சிவன் சன்னிதியையும், அம்மன் சன்னிதியையும், சுற்று பாதையில் சோழர் கால கல்வெட்டுகள், தட்சிணாமூர்த்தி, நடராஜர், பிள்ளையார் சிலைகளையும் பார்த்துவிட்டு சென்றோம். அடுத்ததாய் நான் புகைப்படங்களில் பார்த்து வியந்த செம்பியன் மாதேவி புடைப்பு சிற்பத்தைப் பார்த்து வியந்தோம்.

கோயிலை பார்த்துவிட்டு, ஊரையும் பார்க்க தெருக்களில் ஒரு நடைபோட்டோம். கோயிலையும், குளத்தையும் சுற்றி வீடுகள் உள்ளன. அதிகபட்சம் ஒரு இருபது, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவையாக உள்ளன.

அங்கிருந்து அக்ரஹார தெருக்களை நோக்கி நடந்தோம். மூன்று தெருக்கள் முழுக்க  பெரிய திண்ணைகளை கொண்ட வீடுகள். ஒவ்வொரு வீடும், இந்த தெருவில் ஆரம்பித்து அடுத்த தெரு வரை நீண்டது. முதல் தெருவில் வலதுபுறத்தில் மட்டுமே வீடுகள் உள்ளன. ஒரு பள்ளிக்கூடமும், வங்கியும் உள்ளன. மேலும் ஊரின் எல்லையில் அய்யனார் கோயிலும், பிடாரி அம்மன் கோயிலும், துர்க்கை கோயிலும் உள்ளன.

கிராமத்திற்கே உரிய குணமாய், யார் வீட்டு வாசலில் வேண்டுமானாலும் அமர்ந்துக் கொள்ளலாம். ஒரு பெரிய திண்ணையாய் பார்த்து அமர்ந்தோம். அறுவடை முடிந்து நெல் மணிகளை மூட்டைகளில் கட்டிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் அருகில் விளையாடிக்கொண்டிருந்தனர். ஊரின் கடைசியில் இருந்த குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் ஆக்ரஹாரம் மிக அமைதியாய், அரவமற்று கிடந்தது. சிறுவர்கள் இல்லை, தெருவில் எந்த போக்குவரத்தும் இல்லை. என்னவென்று தெரியவில்லை.

அடுத்தநாள். இங்கு யாருமே இல்லையா என்று பார்க்க வேண்டும். ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டோம், சில வீடுகள் திறந்திருந்தன, பல இன்றும் பூட்டியே கிடந்தன. தெருவில் காய்கறிகள், பழங்கள், பாத்திரங்கள், சமையல் பொருட்கள், எண்ணெய் , குப்பைகளை அகற்றுபவர் என பலரும் வந்தனர்.

நாங்கள் அமர்ந்திருந்த திண்ணையின், வீட்டின் உள் இருந்து ஒரு பெரியவர் வந்தார். நாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம் என்பதெல்லாம் கேட்டுவிட்டு செல்ல எத்தனிக்கையில், எங்களுக்கு இருந்த பெரிய கேள்வியை கேட்டுவிட்டோம்.

ஏன் பல வீடுகள் பூட்டியே கிடக்கின்றன? யாரும் இல்லையா?

கிடைத்த பதில், “பலர் வீட்டை விற்று விட்டனர், சிலர் பூட்டி விட்டு சென்னைக்கோ, வெளிநாடுகளுக்கோ தங்களின் பிள்ளைகளைப் பார்க்க சென்றுவிட்டனர்.” இன்னும் சிலர் தனியாக தாத்தா, அல்லது பாட்டி ஒவ்வொரு வீட்டிலும் வாழ்வதால் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதில்லை.

உணவிற்கு என்ன செய்கிறார்கள்? என்று கேட்டோம், தம்பதிகளாய் இருப்பவர்கள் அவர்களே சமைத்து உண்டு கொள்கின்றனர். ஆனால் தனியாய் இருப்பவர்களின் நிலை கடினம். அப்படியும், முதல் தெருவில் உள்ள ஒருவர் சில வீட்டில் உள்ளவர்களுக்கு கூட்டாக சமைத்து தருகிறார்.

இந்த வீடுகள் எல்லாம் மூன்னூறு வருட பழமையானது. பல பராமரிப்பு செலவுகள் ஆண்டு தோறும் வருகிறது, அதை சமாளிக்க முடியாமலும் மக்கள் வீடுகளை விற்கின்றனர். பல பாரம்பரிய நிகழ்வுகளைக்கொண்ட ஊரின் இத்தகைய நிலை பார்க்கவும், உணரவும் மிக வேதனையாக இருந்தது. நம் பாரம்பரியங்களை காக்க குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் தான், இத்தகைய பழைய குடியிருப்புகளையும் நாம் இழந்து வருகிறோம். முடிந்த வரையில், நமக்கு எங்கேனும் இத்தகைய பழைய வீடுகள் எங்கேனும் இருந்தால், அதை இடித்து விடாமல் நல் முறையில் பாதுகாப்போம்.    

Ar. வித்யா லட்சுமி

Leave a Reply