காதலும் துரோகமும் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #1

கரும்பெண்ணை நதிக்கு தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணமிருந்தன. துங்கபத்ரை சிவப்பு வண்ணத்தில் உயிரற்ற உடல்களை தூதனுப்பிக்கொண்டே இருந்தது. கரும்பெண்ணை, பயத்தில் வேக வேகமாக குணக்கடலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. எவ்வளவு வேகமாக விரைந்தாலும், துச்சாதனன் உரித்த பாஞ்சாலியின் சேலை போல், தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது.

துங்கபத்ரையும் கரும்பெண்ணையும் இணையும் இடத்தில் தண்டிறங்கி இருந்தது சோழர் படை. கரைபுரண்டோடும் பரந்து விரிந்த இரண்டு நதிகளின் நடுவே, எங்கும் மனிதத் தலைகள். யானை குதிரை கால்நடைகளின் நாற்றங்கள். துங்க பத்ரையின் ஒரு சிறு கிளையின் கரையோரம், உடல் முழுக்க சேற்றை அப்பிய யானை ஒன்றிற்கு நீராட சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான் ஓர் இளைஞன்.

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

திடீரென குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டது. ஐந்து குதிரைகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. முன்னால் வந்த குதிரை, இடிப்பது போல நெருங்கி நின்றது. குதிரை மீதிருந்த ஆள், இறங்காமலேயே, “அடேய்..நீ சோழர் படையில் பணிபுரிபவனா?” கேட்டான்.

“ஆமடா.. யானை மேய்க்கும் பணி வழங்கப்பட்டிருக்கிறது எனக்கு..” இளைஞனிடமிருந்து குறும்பு கலந்த பதில் வந்தது.

“தம்பி.. சொல்லில் கவனம். சோழர்களுக்கு மரியாதை என்பது தெரியாதா?”

“பராமரர்களுக்கு புதியவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது தெரியாதா?”

“நாங்கள் பராமரர்கள் என்று எப்படி கண்டுபிடித்தாய்?”

“இடையில் தொங்கும் வாளின் கைப்பிடியில் தேவநாகரி எழுத்துகள்..”

“தேவநாகரி பராமரர்களுக்கு மட்டும் சொந்தமல்ல..”

“ஆனால், சாளுக்கியர்களுக்குரிய இந்த பகுதியில் பராமரர்கள் உலாவுவதாக கேள்வி..”

“சோழர் படையில் யானை மேய்க்கும் சிறுவனுக்கும் இவ்வளவு ஞானம். பலே…அது சரி, யானையை நீராட்டாமல் செய்து கொண்டிருக்கிறாய்?”

“மனிதனோ விலங்கோ.. தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதனால், யானைக்கு நீராட பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். அதுவோ நீரில் தன் அழகை இரசித்துக் கொண்டிருக்கிறது”

“என்ன? யானை தன்னுணர்வு கொள்ளுமா?”

“யானையின் குணாதிசயங்களை அறியாதவர் அதற்கு உற்றத் தோழனாக இருக்க இயலாது..”

“போகட்டும் மேய்ப்பனே…படை முகாமிட்ட இடம் இன்னும் எவ்வளவு தூரம்”

“வந்த காரியம்..?” இளைஞன் அதிகாரத் தோரணையோடு கேட்டான்.

பின்னாலிருந்த குதிரையிலிருந்த ஒருவன், உருவிய வாளோடு வந்தான். “மண்டியிடு முதலில்.. விந்தியம் சாத்புரம் கட்டி ஆளும் பராமர சக்ரவர்த்தி போஜரிடம் இப்படி பேச என்ன துணிச்சல்?”

இளைஞன் மெல்ல முறுவலித்தான். “சோழர்கள் மண்டியிடுவதில்லை..”

“உன் பெயரென்ன..” முதல் குதிரைக்காரன் கத்தினான்.

“உங்கள் தேசத்தில் நீ வகிக்கும் பொறுப்பென்ன?” இளைஞன் சலனமில்லாமல் கேட்டான்.

“இன்னொரு முறை மரியாதை குறைவாக, பேசினால் நா துண்டிக்கப்படும். சோழப் பணியாள் என்பதால் பொறுமையாக பேசுகிறோம். இவர் எங்கள் ராஜன்” வாளை உருவியன் அதட்டலாகச் சொன்னான்.

“நான் ராஜனுக்கு ராஜன்..” என்று சொல்லியபடியே “மேகா..மூப்பா” என குரல் கொடுத்தான்.

மேகன் நீருக்குள்ளிருந்து மெல்ல அசைந்து வந்தது. இளைஞன் அநாயாசமாக, அருகிலிருந்த விழுதை பிடித்தபடி ஒரே தாவில் மேகனின் மீதமர்ந்தான். மூப்பன் என்கிற வேட்டைநாய்  நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருந்தது. பராமரர்களை பின் தொடருமாறு சொல்லிவிட்டு, அவர்களின் பதிலுக்கு காத்திராமல் மேகனை செலுத்தினான் இளைஞன். வழியெங்கும் சோழ வீரர்கள் இளைஞனுக்கு வணங்கி மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர். இளைஞன் படையில் ஏதோ முக்கிய பொறுப்பிலிருக்கலாம் என பராமரர்கள் நினைத்துக்கொண்டார்கள்.

மேகன் ஒரு பெரிய கூடாரத்தின் முன் நின்றது. இளைஞன் பராமரர்களுக்கு சைகை காட்டிவிட்டு நடந்தான். கூடாரத்தினுள் ஐம்பது வயதை ஒத்த, கம்பீரத் தோற்றத்துடன் கீழாடை மட்டும் அணிந்தபடி தோளில் ஒரு வஸ்திரத்தை சாய்த்துக்கொண்டு, இலைகளை விரித்து பழங்களை பரிமாறிக்கொண்டிருந்தார் இராஜேந்திரச் சோழர். பராமரர்களை கண்டதும் முறுவலுடன் வரவேற்றார், “தக்காண இமயத்தினை ஆளும் போஜ சக்ரவர்த்தி அவர்களை வரவேற்கிறேன்..”

“தாங்கள்..” போஜன் தடுமாறினான்.

“அலைகடல் நடுவே கலம் பல செலுத்தி, கடல் கடந்த நாடுகளை நடுங்கச் செய்தவர், முக்கடல் கொண்டோன், மும்முடிச் சோழன் களிறு…ஷாட்சாத்…ஸ்ரீ ஸ்ரீ இராஜேந்திரச் சோழச் சக்ரவர்த்தி..” இளைஞன் பேரரசரை போஜனுக்கு அறிமுகப்படுத்தினான்.

“அவ்வளவு நீளம் வேண்டாம் இராஜாதி ராஜா…நான் இராஜேந்திரன். அவ்வளவே..”

“இவன்…ர்..பட்டத்து இளவரசர் இராஜாதி ராஜரா?” பராமரர்கள் வியந்தார்கள்.

“இப்படி ஒரு சோழச் சகர்வர்த்தியையும், இளவரசரையும் நாங்கள் எதிர்நோக்கவில்லை. நமக்கு முன்பின் அறிமுகம் கிடையாதே…எங்களை எப்படி ஊகித்துக் கொண்டீர்கள்?” போஜன் வியப்பு மேலிடக்கேட்டான்.

பெரிய குடுவையுடன் உள்ளே நுழைந்த அருள்மொழி, “நாங்கள் இரண்டு தினங்களுக்கு முன்பே எதிர்பார்த்தோம் . பராமரர்களின் மான்யகேட பயணத்திற்கான தயாரிப்புகளையும் கண்காணித்தே வருகிறோம்” சொல்லிக்கொண்டே அனைவருக்கும் சிறிய குடுவைகளை அளித்தான்.

“பழங்களுடன்..குடுவையிலுள்ள தேறலையும் பருகுங்கள்..களைப்பு நொடியில் பறந்துவிடும். எங்கள் ஊர் ஊறல் இது..ஆ..மறந்துவிட்டேன். இவன் சோழச் சேனாதிபதி கிருஷ்ணன் ராமனின் புதல்வன் அருள்மொழி…” சொல்லிவிட்டு, “அரையன் எங்கே?” என்பது போல அருள்மொழியைப் பார்த்தார் இராஜேந்திரர்.

“பயிற்சியிலிருக்கிறார்..சற்று நேரத்தில் வந்துவிடுவார்” அருள்மொழி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, சேனாதிபதி அரையன் ராஜராஜன் “பராமரச் சக்ரவர்த்தி இனி தொடங்கலாம்” என்று வணக்கத்தை தெரிவித்துவிட்டு அமர்ந்தார்.

சில நொடிகள் மௌனத்திற்குப்பின், “மான்யகேடம் தீக்கிரையாக வேண்டும்..புல்பூண்டுகள் முளைக்கவும் ஆண்டுகள் பலவாக வேண்டும். மனிதர் வாழத் தகுதியற்ற இடமாக வேண்டும்” பராமரச் சக்ரவர்த்தியின் குரலில் ஒரு வித வெறி தெறித்தது.

“போஜரே..என்னவாயிற்று..அமைதி. தங்களின் பெரிய தந்தைக்காகவா..?” இராஜேந்திரர் புரிந்து கொண்டார்.

சோழச் சக்ரவர்த்தி முழு விவரங்களை அறிய விரும்புகிறார் என புரிந்துகொண்ட பராமரத் தளபதி நடந்தவற்றை விளக்கினான். “இராட்டிரக் கூடர்களின் கடைசி மன்னன் இரண்டாம் கர்கனை கொன்ற பின், மான்யகேடமும் அவர்களின் பெரும்பகுதிகளும் சாளுக்கிய தைலபனிடம் வந்தன. பராமரர்களுக்கும் சில பகுதிகள் கிடைத்தன. நர்மதை நீர் யாருக்கு சொந்தம் என்பதில் தொடங்கிய பகை நீருபூத்த நெருப்பானது. எங்கள் சக்ரவர்த்தி வாகபர், தைலபனை பல போர்களில் தோற்கடித்தார். இறுதியாக அவர் செய்த பிழை, வானிலை புவியியல் அமைப்புகளை அறிந்து கொள்ளாமல் நர்மதையை கடந்து படை நடத்தி மான்ய கேடத்திற்குள் நுழைந்ததுதான்..கடும்போரில் அமைச்சன் ஒருவனின் துரோகத்தில் கைதானார் சக்ரவர்த்தி வாகபர். அவரை தனி மாளிகையில் சிறை வைத்து கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, தைலபனின் விதவைத் தங்கை மிருனாளினி தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. மிருனாளினி தேவியின் எழிலும், வாகபர் என்கிற முஞ்சாவின் கவிதையும் ஒன்று கலந்தன. காதல் தீவிரமானது. அதே நேரத்தில், வாகபரை மீட்க நம்பிக்கை மிக்க தளபதிகள், அமைச்சர்கள் கொண்ட குழாம் மாறுவேடத்தில் மான்ய கேடத்தில் நுழைந்தது. மீட்பு திட்டம் தயாரானது. முஞ்சா மிருனாளினி தேவியையும் அழைத்துச் சென்றுவிட எண்ணினார். தேவியிடம் திட்டத்தை விளக்கினார். மறுநாள் தயாராக இருக்கும்படி சொல்லி வைத்தார்.

ஆனால், மறுநாள் முஞ்சா சொன்ன இடத்தில் தயாராக இருந்தது தைலபன் தன் படைகளோடு. மான்யகேடத்தை விட்டு, வர விருப்பமில்லையென்றும், பகை நாட்டிற்கு வந்தால் தனக்கு ஆபத்து எதாவது நிகழுமோ என்று பயந்ததாகவும், நீங்களும் எனக்கு மான்யகேடத்திலேயே வேண்டும் என்றும், அதனால் திட்டங்களை தன் சகோதரனிடம் சொல்லிவிட்டதாகவும் சொல்லி மன்னிப்புக்கேட்டாள் மிருனாளினி தேவி.

அதற்கு பிறகு நடந்தது தான் கொடுமை. வாகபரை, நகரத்தின் வீதிகளில் சாட்டையாலடித்தபடி வீடு வீடாக பிச்சை எடுக்க வைத்தார்கள். கடைசியாக அவர் தலையை கொய்து, கோட்டை வாசலில் தொங்கவிட்டார்கள்..

தொடர்ச்சியான துரோகத்தால் வீழ்ந்தார் வாகபர். துரோகத்தின் சின்னமான மான்ய கேடம் சின்னாபின்னமாக வேண்டும்”

கொஞ்ச நேரம் இறுக்கமான சூழல் நிலவியது. “மிக இழிவான செயல்..” இராஜேந்திரரே பெருமூச்சு விட்டு மௌனத்தை கலைத்தார்.

“தாங்கள் எதிர்பார்க்கும் உதவி?” அருள்மொழி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கேட்டான்.

“ஜகதேகமல்லனின் படை காலாட்கள், குதிரைகள், யானைகள் என ஐந்து லகரத்தை தொடும்.. எங்களிடமும் அதே எண்ணிக்கையில் இருப்பினும், மேற்கே லடா சாளுக்கியர்களை நோக்கி ஒரு பிரிவு சென்றுள்ளது. கிழக்கே இந்திரரதனை எதிர் நோக்கி, தலைநகர் தாராவை காக்க ஒரு நிலைப்படை அவசியம். மேலும், வடக்கிலிருந்து கஜனி முகமதுவின் சூறையாடலை தற்காத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இரண்டு உதவிகளை எதிர்பார்க்கிறோம். ஒன்று மான்யகேடத்தை அழிக்க ஒரு துணைப்படை… இன்னொன்று, கஜனி முகமது இனி சிந்து நதியை கடப்பதை கனவிலும் நினைத்து பார்க்கக்கூடாது. வடமேற்கின் இந்து அரசர் திரிலோச்சன பாலருக்கு உதவி புரிவதாக வாக்களித்துள்ளோம்..அதற்கும் உதவி” பராமரர்களின் தளபதி விளக்கினான்.

“எங்களுக்கு என்ன கிடைக்கும்..?”அருள்மொழி இளமையின் துடுக்குத்தனத்தின் வெளிப்பாடாக சற்றும் யோசியாமல் பதில் கேள்வியைக் கேட்டுவிட்டான்.

” சோழச் சக்ரவர்த்திக்கு,  கங்கையை கடக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக கேள்விப்படுகிறோம்..தங்களின் வட புல படையெடுப்பில், புவியியல் காரணிகள் முதற்கொண்டு உணவுப்பொருட்கள் வரையிலான வழிகாட்டுதல்களை தக்க துணைப்படையுடன் செய்வேன்..மற்றபடி மான்யகேட படையெடுப்பில் தாங்கள் விரும்புவதை எடுத்துக்கொள்ளலாம்” பராமர சக்ரவர்த்தி அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

“சிறப்பான ஒற்றர்களை வைத்துள்ளீர்கள்…எங்களின் வருங்கால திட்டங்கள் வரை அறிந்திருக்கிறீர்கள்”அரையன் இராஜராஜன் புகழ்ந்தார்.

” சற்று ஓய்வெடுங்கள்..ஒப்பந்தம் தயாராகட்டும். மாலையில் மீண்டும் சந்திப்போம்” இராஜாதிராஜன் அவைக்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தனித்தான்.

“சக்ரவர்த்திகள் ஏதும்…” பராமரர்களின் தளபதி இழுத்தான்.

“சிவபெருமானின் முக்கண்களை போன்றவர்கள் இவர்கள் மூவரும் எனக்கு…இந்த படையெடுப்பில். நான் பார்க்க நினைப்பதை, பேச நினைப்பதையே செய்தார்கள்” இராஜேந்திரர் சுருக்கமாக முடித்தார்.

“துணைப்படைகளின் எண்ணிக்கை குறித்து..” பராமரர்களின் பேச்சை குறுக்கே வெட்டி, “நாங்கள் எண்ணிக்கையை வைத்து போர் புரிவதில்லை. வெற்றி எண்ணிக்கையில் இல்லை. வியூகங்களிலும், சூழ்நிலைகளிலும் உள்ளது. தேவையான உதவி கிடைக்கும்..” இராஜாதிராஜன் ஆணித்தரமாக சொன்னான்.

“துர்க சிம்ஹர்..” போஜரின் குரலில் சற்று கவலை தொனித்தது.

துர்கசிம்ஹரின் பெயரைக்கேட்டதும்..சிறிது நேரம் அமைதி நிலவியது. இராஜேந்திரரே

முற்றுப்புள்ளி வைத்தார். “பஞ்ச தந்திர கதைகளை எழுதியிருக்கலாம்..ஆனால், அவரின் தந்திரங்கள் சோழர்களிடம் பலிக்காது. துர்கசிம்ஹரை நான் பார்த்துக்கொள்கிறேன். சாளுக்கிய தளபதிகள் கண்டர் தினகரன், மதுசூதனன் இருவரையும் நமது சேனாதிபதி பார்த்துக்கொள்வார்”

ஒப்பந்தம் படிக்கப்பட்டவுடன், பராமர சக்ரவர்த்திக்கு இராஜேந்திரர் விடையளித்தார். “இன்றிலிருந்து அடுத்த அமாவாசைக்குள், இராஜாதிராஜனும் அருள்மொழியும் தலைமையேற்றத் துணைப்படை உங்களுடன் இணைந்து கொள்ளும். அதற்குள், சாளுக்கிய தளபதிகள் வீழ்ந்திருப்பார்கள்”

பராமரச் சகர்வர்த்தி வியந்து கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார். சோழர்களுக்கு எத்தனை தீர்க்கமான முடிவெடுக்கும் திறனுள்ளது. அதுவே போரின் பாதி வெற்றியை நிர்ணயித்துவிடுகிறது.

அடுத்த நான்கு தினங்களுக்குள், படை மெல்ல நகர்ந்தது. அதே நேரத்தில், ககினா நதிக்கரையோரம் மான்யகேட கோட்டையில் ஜெயசிம்மன் என்கிற ஜகதேக மல்லன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கர்ஜித்துக் கொண்டிருந்தான். “கோழைப்பயல்கள்..கூட்டு சேர்ந்து சுற்றி வளைத்துக்கொண்டார்கள். தலைநகரத்தை விட்டு அகன்றால், பின்னாலிருந்து தாக்குவார்கள்..துர்கசிம்ஹரே.. என்ன செய்யலாம்?”

“ஒன்றும் செய்யவேண்டாம்..சில தினங்கள் அமைதிக்காப்போம். முன்னோடிப்படையை அனுப்பி, சோழர்களை கரும்பெண்ணைக்கு இந்த பக்கம் இழுத்து வருவோம்..பிறகு அவர்கள் கதை முடிந்தது” துர்க்கசிம்ஹர் அமைதியாகச் சொன்னார். கண்டன் தினகரனும், மதுசூதனனும் ஆமோதித்தனர்.

“சரி செயல்படுத்துங்கள்..யாதவர்களின் நிலையென்ன?” ஜெயசிம்மன் முடிக்குமுன், “பில்லமா படைகளோடு புறப்பட்டுவிட்டான். போஜன், காங்கேயதேவனோடு வருவான். வந்தபிறகு, நம்மோடு இணைந்து கொள்வான்” துர்க்கசிம்ஹர் யாதவ அரசன் பில்லமாவை தன் பக்கம் இழுத்துவிட்டதை தெரிவித்தவுடன், ஜெயசிம்மன் மகிழ்ச்சியில் ஓடோடி வந்து கட்டிக்கொண்டார்.

“இதோடு அந்த பராமரர்களை தொலைத்துவிடுகிறேன். நீங்கள் சோழர்களின் வாலை நறுக்கிவிட்டு வாருங்கள்..” தளபதிகளுக்கு விடைகொடுத்தான்.

ஆனால், அரையன் இராஜராஜன் கரும்பெண்ணை நதியை கடப்பதாய் இல்லை. மாறாக ரெய்ச்சூரில் எரிபரந்தெடுத்தலை கையிலெடுத்தது சோழர் படை. வயல்கள் கொளுத்தப்பட்டன. யானைகள் புகுந்தன. மக்களை துன்புறுத்தவில்லை. ஊர்களை காலி செய்து, மான்யகேடம் நோக்கிச்  செல்ல பணிக்கப்பட்டனர். நாளாக நாளாக, தலைநகரம் பெருகிவரும் மக்கள்தொகையால் தொல்லை நகரமாகிப் போனது. சோழ காலாட்கள், ரெய்ச்சூருக்கும் முயங்கிக்கும் நடுவில், இரண்டு கல் தொலைவு மூலைவிட்டமாய் குழி தோண்டிக்கொண்டிருந்தனர். எரிபந்தெடுத்தலுக்கு முன் வயல்களிலிருந்து பெறப்பட்ட தானியங்கள் அரைக்கப்பட்டு மூட்டை மூட்டைகளாய் வண்டிகளில் கொண்டுவரப்பட்டு கூழாக காய்ச்சப்பட்டு, தோண்டிய பள்ளத்தில் நிரப்பப்பட்டு சமதளத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இருநூறு குதிரைகள் கொண்ட ஒரு சிறு படைப்பிரிவு, சாளுக்கியர்களின் முன்னோடி குதிரைப்படையை வம்பிக்கிழுத்து கோபமூட்டி இழுத்து வந்தது. கூழ் பள்ளம் நெருங்கிய உடன், லாவகமாக சோழப்படை விலகி ஓரமாக சென்றது. சாளுக்கியரின் முன்னோடிப்படை துரத்திப் பிடிப்பதாக எண்ணி, கூழ் பள்ளத்தில் சிக்கியது. பின்னால் வந்த குதிரைகளும் ஒன்றின் மேல் ஒன்று விழத்தொடங்கின. சாளுக்கியப் படை மொத்தமும் நகர இயலாமல் சிக்கித் தவித்தது. எதிர்பார்த்து காத்திருந்த சோழ வில்லாளிகள் சுற்றி வளைத்து, மிச்சம் வைக்காமல் கொன்றுபோட்டனர்.

மான்யகேடம் மக்களால் நிரம்பி வழிவதையும், முன்னோடிப் படைகள் முழுதும் அழிந்ததையும் கண்டு சினங்கொண்டு கண்டன் தினகரனும், மதுசூதனனும் படைகளோடு முயங்கி நோக்கி புறப்பட்டனர்.

சாளுக்கியப் படைகள் புறப்பட்ட இரண்டு நாளில், பராமரர்களும், காலச்சூரிகளும் இராஜாதி ராஜன், அருள்மொழியின் துணைப்படையுடன் தலைநகரத்தை தாக்கினான். யாதவ பில்லமா, ஜெயசிம்மனோடு இணைந்து கொண்டாலும் விளைவுகளில் பெரிதாக மாற்றமில்லை. கோட்டை ஒரே நாளில் வீழ்ந்தது. பராமரர்கள் வெறியோடு கண்ணில் பட்டதையெல்லாம் கொளுத்திக்கொண்டிருந்தனர். ஜெயசிம்மன் யாதவ பில்லமாவுடன், கோட்டையை விட்டு வெளியேறி இருந்தான்.

தலைநகரத்தை பராமரர்களிடம் விட்டு, இராஜாதிராஜனும், அருள்மொழியும் சாளுக்கியப்படைகளை பின் தொடர்ந்தனர். முயங்கியை அடையும்போது, அரையன் இராஜ ராஜன்  கிட்டத்தட்ட போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். கண்டன் தினகரனும், மதுசூதனனும் களத்தில் வீழ்ந்து கிடந்தனர்.

சோழர்களுக்கு பெரிய சேதமின்றி பெரும்வெற்றி. துரோகத்தின் சின்னமாய் பராமரர்களின் மனதில் பதிந்துவிட்ட மான்யகேடம் தீக்கிரையாகிக்கொண்டிருந்தது. தலைநகரம் தன் கண்முன்னால், எரிந்து கொண்டிருப்பதை கண்ட ஜெயசிம்மன், தன் கண்ணீரால் அணைக்கமுடியாமல் உள்ளத்தில் எரிந்துகொண்டே கல்யாணி நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருந்தான்.

 

*மு.ச.சதீஷ்குமார்*

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

10 Comments

 1. மனிதனோ விலங்கோ சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற வரி மிகவும் அருமை சதீஷ் சார் அருமையான கதை

 2. *சோழர்களின் வெற்றி, வீரத்தை நன்கு பறைசாற்றுகிறது.
  *கதை படிக்கும் ஆர்வமும்
  மேலிடுகிறது.
  *சங்க கால போர் தந்திரங்கள், ராஜ தந்திரங்களை நன்கு எடுத்துரைக்கிறது.
  *கதைக்கு தலைப்பு (பொருத்தமாக)கொடுத்திருந்த விதமும் அருமை.
  *அக்கால அரசாட்சியில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து போரில் வெற்றி பெற்ற விதத்தை கதையில் எடுத்துரைத்த விதம் அருமை.
  * கதையை கொண்டு சென்ற விதமும் அருமை.
  *அதிகமான அரசியல் பிரிவுகள் இடம் பெற்றிருந்தது படித்து புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்தாலும் ஆழ்ந்து படித்தால் புரியக் கூடியதாகவே உள்ளது.
  *இன்னும் அதிகமாக படைப்புகள் வெளியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 3. காதலும் துரோகமும்
  வரலாற்றுப் பின்னணியில் அழகான கதை. காதலும் அதைத் தொடர்ந்த துரோகமும் பழி வாங்கப் பட்ட சிறப்பான நிகழ்வு.
  சோழரின் வீரமும் இறுமாப்பும் மதியூகமான போர்த் திட்டங்களும் படிக்கப் படிக்க மனதில் பெருமிதம் பொங்குகிறது.
  அழகான நடை. சுவாரஸ்யமான கதைப் போக்கு. கூழ்க் குழியில் எதிரிப் படையினரை விழ வைக்கும் புதுமையான போர்த் தந்திரம். வரலாற்று நாவலை விட வரலாற்றுச் சிறுகதை புனைவது மிகவும் கடினம். அதையும் சுவாரஸ்யமாகத் தந்திருக்கும் கதாசிரியருக்கு எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.
  வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

 4. வரலாற்று சுவடுகளில்
  சுவாரஸ்யமான நடை கதைகளமும் தலைப்பும்
  அருமை அண்ணா
  தங்கள் எழுத்தோவியத்தில்
  அடுத்து வரப்போகும்
  வரலாற்று நாவலூக்காண முன்னோட்டமாகவே இந்த சிறுகதையில்
  இராஜாதி ராஜனோடு சிலிர்ப்பான
  சிறு பயணம் வேகமாக அமைந்தது. சோழர் தேசத்தில் நெடும்பயணம் அழைத்து செல்வீர்கள் என்று எதிர்நோக்கி…

Leave a Reply