கடாரம் கொண்ட சோழன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #13

டும்டும்டும்…  இதனால் சோழப் பெருநாட்டின் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நமது மகா மன்னர் கோப்பரகேசரி வர்மன் இராஜேந்திர சோழன் நமது நாட்டின் நால்வகைப் படைகளுக்கும் புதிதாக படைவீரர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளார். எனவே தகுதியுள்ள வீரர்கள் நாளை மறுநாள் நடைபெறும் தேர்வில் கலந்துகொள்ள அறைகூவல் விடுத்துள்ளார்... டும்.டும்... டும்... 

முசறைபவன் கூறிய செய்தியைக் கேட்ட கண்ணம்மாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. அமிர்தனை உடனே சந்தித்து பேச வேண்டும் போல் இருந்தது. எப்பொழுது மாலை ஐந்து மணி ஆகும் என்றே ஆவலோடு இருந்தாள். மாலையும் ஆனது. அமிர்தனும், கண்ணம்மாவும் எப்பொழுதும் சந்தித்து பேசும் வண்டிக்காரன் தோட்டத்து மரத்தடியில் சந்தித்துக் கொண்டனர். 

 

அவர்களிருவரும் வந்து சில மணித்துளிகள் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தனர். கண்ணம்மாவே உரையாடலை ஆரம்பித்தாள். 

என்ன முடிவு செய்துள்ளீர்கள்“.

பலமுறை கூறியது தான் கண்ணம்மா... இந்த வாய்ப்புக்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன்“.

அப்படியானால் என் நிலைமை? “

நீ ஏன் பயப்படுகிறாய் கண்ணம்மா.. எனக்கு எதுவும் ஆகாது. நான் வீரனென்று நீ அறிவாய் தானே..! என்னை எவராலும் தீண்ட இயலாது. பிறகென்ன? நாட்டிற்கு நான் பணி செய்யும் வேளை வந்துவிட்டது.

அமிர்தன் கூறி முடிப்பதற்குள் கண்ணம்மாவின் கண்கள் குளமாகியது.எதுவுமே பேசாமல், அமிர்தனிடம் கூறிக் கொள்ளாமல் அங்கிருந்து வந்துவிட்டாள். 

அமிர்தனின் மாமன் மகள் தான் கண்ணம்மா. உறவினர்கள் என்பதாலோ , வேறு காரணமோ என்னவோ இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலுற்றனர். சில திங்கள் வரை வீட்டிற்கு தெரியாமலே காதல் வளர்த்தனர். வீட்டிற்கு தெரிந்த பிறகும் எந்த எதிர்ப்பும் கூறவில்லை இருவர் வீட்டிலும்.

 இருவரும் உறவினர்கள், அமிர்தனும் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டுபவன்.சம்மதம் தெரிவித்து திருமணமும் நிச்சயம் ஆனது. அதுவரை இனிதாக இருந்த காதல் சந்திப்பு அன்று தான் கண்ணம்மாவிற்கு கசந்தது.

அன்றும் வழக்கம் போல் தான் சந்தித்தனர். மரத்தடியில் அமர்ந்து பேசத் துவங்கினர். 

கண்ணம்மா.... செம்புலப்பெயல் நீரார் பாடலுக்கு உதாரணமாக என் காதல் இருக்க வேண்டும் என எண்ணினேன். என்னவோ தெரியவில்லை உன்னைப் பார்த்தவுடன் காதலுற்று விட்டேன். எனவே இனி பாதி பாடலுக்குத்தான் உதாரணமாக இருக்க முடியும்.என்று கூறியவாறே அவள் விரல்களை வருடினான். 

என்ன பாடல் அது? “

அதுவா, என்னைப் போல் காதலுற்ற தலைவன் தலைவியிடம்

                   யாயும் ஞாயும் யாராகியரோ? 

                     எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? 

                      யானும் நீயும் எவ்வழி அறிதும்? 

                   செம்புலப் பெயல் நீர் போல

                      அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே… 

என்று கூறுகின்ற பாடல் தான் அது. 

நம் இருவருக்கும் ஏற்கனவே பந்தம் உள்ளது. உறவுக் காரர்கள். ஆனால் அப்பாடலில் வரும் தலைவனும் தலைவியும் யாரென்றே அறியாமல் காதலுற்று செம்மண்ணில் விழுந்த நீரில் இருந்து செம்மையை நீக்குவது எப்படி முடியாத காரியமோ அப்படி தான் அவர்களிருவருக்குமான அன்புறவு பிரிக்க இயலாத ஒன்று என்று தலைவன் கூறுகிறான்“.

யாரென்று அறியாமல் வந்தாலும், யாரென்று அறிந்து வந்தாலும் காதல் வந்த பிறகு செம்புலப் பெயல் நீர் போல தான் இருக்கும் இருவர் உள்ளமும் “.

அதையேதான் நானும் கூறினேன், பாதி பாடலுக்கு உதாரணமாக  “என்று கூறிச் சிரித்து எழுந்தான் அமிர்தன். 

என்ன? சீக்கிரம் புறப்படுகிறீர்கள்“.

நேரமாகிவிட்டது.நீயும் புறப்படு. கண்ணம்மா நான் வியாபாரத்தை விட்டுவிட்டு அரசுபணிக்கு செல்ல விரும்புகிறேன். “

நல்லது தான். என்ன பணி? “

போர் வீரன்

சொன்னதுதான் தாமதம். கண்ணம்மா “முடியாது” என்று கத்தினாள். 

அரசுப் பணியில் போர் வீரன் மட்டும் தான் உள்ளதா? வேறு எந்த பணிக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். இது வேண்டாம்”. கோபத்துடன் கூறிய கண்ணம்மாவை கலவரமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அமிர்தன். 

நீங்கள் போர் வீரனாக செல்வதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டேன் ” கூறியவள் விருட்டென்று எழுந்து அவனைப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தாள். 

போய்க் கொண்டிருந்த கண்ணம்மாவின் மனதுக்குள் சகோதரனின் முகமும் அவன் நினைவுகளும் நிழலாடியது. அவன் சிவஞானம். குடும்பத்தின் மீது அதீத அன்பும், நாட்டின் மீது அளவுகடந்த பற்றும் கொண்டவன். அவனும் படைவீரனே. வங்க தேசத்து அரசன் மகிபாலனை வென்று வங்காள தேசத்தில் புலிக்கொடியை நாட்டி, கங்கை கொண்ட சோழபுரம் தலைநகரை உருவாக்கி சோழ தேசமே வெற்றிக்களிப்பில் இருந்த போது, கண்ணம்மாவின் குடும்பமே மீளாத் துயரில் ஆழ்ந்தது. ஆம். அந்தப் போரில் சிவஞானம் வீரமரணம் அடைந்திருந்தான். தன் மீது அன்பாயிருந்த சகோதரனின் இழப்பு அவளுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சொந்த நாட்டுக்காகவே உழைத்தாலும் படைவீரன் பணியை வெறுக்கத்தான் செய்தாள்

எனவேதான் இன்று இந்த செய்தியைக் கேட்டவுடன் அவளுக்குள் அத்தனைப் படபடப்பு. எவ்வளவோ கூறியும் கேட்காமல் அமிர்தன் படைவீரன் தேர்வுக்குச் சென்றான். அவன் உடல் வலிமையும், வாள்வீச்சும், குறி மாறாத அம்பு எய்தலும் அனைவரையும் கவர்ந்தது. அவன் மன்னர் இராஜேந்திரனின்  படையில் படைவீரன் ஆனான். அமிர்தனுக்கு அளவுகடந்த சந்தோஷம் நாட்டிற்காக உழைக்கப் போகிறோம் என்று. மறுபக்கம் எப்படி கண்ணம்மாவை சமாதானப்படுத்தப் போகிறோம் என்று ஆதங்கம். 

கண்ணம்மாவை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். 

 “கண்ணம்மா... உன்னை எந்த அளவிற்கு நேசிக்கிறேனோ அந்த அளவிற்கு என் நாட்டையும் நேசிக்கிறேன். இருவரும் எனக்கு வேண்டும். அனுமதி கொடு”.

போர் வீரனாக இருந்து நாட்டிற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? ” கேள்வி எழுப்பினாள் கண்ணம்மா. 

என்ன கேள்வி இது? நாட்டை வேற்று அரசின் படைகளிடமிருந்து பாதுகாப்பேன்

சரி, அப்படியானால் நம் நாட்டின் மீது வேற்று அரசு படையெடுத்து வரும் போது தான் தாங்கள் போருக்குச் செல்ல வேண்டும். அது தான் நாட்டை பாதுகாப்பதற்கு அர்த்தம். நம் நாட்டிலிருந்து வேறு நாட்டை நோக்கி எல்லையை விரிவாக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ போருக்குச் சென்றால் தாங்கள் செல்லக் கூடாது. இதற்கு தாங்கள் சம்மதித்தே ஆக வேண்டும் ” என்று கூறி சத்தியம் வாங்குவதற்காக தன் கையை நீட்டினாள். 

அமிர்தன் குழப்பத்துடன் “என்ன கண்ணம்மா இது? எப்படியாயினும் ஒரு படைவீரன் போருக்குச் சென்று தானே ஆக வேண்டும், என்னை ஏன் இக்கட்டான சூழலில் தள்ளுகிறாய்?என்றான்

இறுக்கமான முகத்துடன் கண்ணம்மா இதற்குச் சம்மதமானால் தாங்கள் தாரளமாக படைவீரனாகச் செல்லலாம். இல்லையென்றால் வேண்டாம். என்னால் மற்றொரு இழப்பைத் தாங்க இயலாது “என்று கூறும் போதே அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. 

அவனும் கண் கலங்கி ” சரி, சம்மதம் கண்ணம்மா “என்று அவளுக்கு சத்தியம் செய்தான். 

அந்த கணம் கண்ணம்மாவிற்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஆனாலும் அன்று அவள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருந்தாள்.

அடுத்த மாதம் 14ம் நாள் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அடுத்த சில தினங்களில் கண்ணம்மாவிடம்

கண்ணம்மாஈழ அரசன் மகிந்தன் நம் நாட்டின் மீது போர் கொடுத்துள்ளான். நம் நாட்டைக் காக்க நான் செல்ல வேண்டும் “என்று கூறினான். 

அப்படியாஎதற்கு இந்த போர்?

இது இராஜராஜ சோழ மன்னன் தொடங்கி வைத்த போர். மகிந்தனை வென்று சில இடங்களைக் கைப்பற்றி நம் நாட்டுடன் இணைத்தாயிற்று. தற்பொழுது அந்த இடத்தை மீட்பதற்காக அவன் நம் மீது போர் கொடுத்துள்ளான்“.

சரி” என்று முகவாட்டத்துடன் கூறினாலும் வெற்றியுடன் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்

போருக்காக பெரும் படைகள் ஈழ தேசத்திற்கு கடல்வழிப் பயணம் மேற்கொண்டது. அமிர்தன் கடல்வழிப் பயணத்திலும் இராஜேந்திர சோழனின் திறமை கண்டு வியந்து தான் போனான். கடலின் தன்மை அறிந்து, காற்றின் தன்மை தெரிந்து இரவு பகல் பாராமல் ஆமைகள் போகிற நீரோட்டத்தின் பாதை அறிந்து தன் மரக்கலங்களைச் செலுத்தி வெற்றிகரமாக அயல்நாடுகளை கைப்பற்றும் இராஜேந்திரனின் திறமையை தன்னுள் எண்ணி மெய்சிலிர்த்து கொண்டான்  அமிர்தன். 

            சில நாட்கள் கழித்து சோழ தேசமே வெற்றிக் களிப்பில் துள்ளியது. ஈழ தேசத்தில் மகிந்தனை வென்று அங்கும் ஆட்சியைக் கைப்பற்றியதை அறிந்து தான் இவ்வளவு ஆனந்தம். கண்ணம்மா அமிர்தனின் வருகைக்காக காத்திருந்தாள். தூரத்தில் அமிர்தனின் வருகை தெரிந்தது. கண்ணம்மாவின் கண்களில் பேரானந்தம். அவனை வரவேற்று அவனுக்காக ஏற்பாடு செய்திருந்த பலவகைப் பதார்த்தங்களையும் பரிமாறி விருந்தளித்தாள். 

         அமிர்தன் தன் போர் அனுபவங்களை விளக்கிக் கொண்டிருந்தான். 

         “கண்ணம்மா. நம் மன்னரின் திறமைக்கு முன்னால் எவருமே இல்லை. எவ்வளவு மதிநுட்பம், எவ்வளவு போர்த் திறமை, எவ்வளவு பயண அனுபவம்... வியந்து தான் போனேன். அவருடைய படையில் வீரனாக இருப்பது எனக்குக் கிடைத்த வரம் தான்என  பெருமையாக கூறினான்

           “அவரின் திறமை நம் நாடு அறிந்தது தானே, இனி உலகமும் அறியும்என அமைதியுடன் கூறினாள். 

           “நிச்சயமாக...நம் மூதாதைய அரசர்களால் கைப்பற்ற இயலாத, விலைமதிக்க முடியாத பொருள், இந்திரன் பாண்டியனுக்கு அருளிய முத்துமாலையும் இரத்தினங்கள் பொறித்த வாளையும் கைப்பற்றியது தான் இந்தப் போரின் உச்ச பட்சம். அப்பெருமையும் நம் மன்னரையே சாரும்” என்று அமிர்தன் சாப்பிட்டு முடித்து வெகுநேரம் கண்ணம்மாவிடம் பேசி, பிறகு உறங்கப்போனார்கள்

           நாட்கள் சென்றது. குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருவரையுமே வாட்டியது. ஒருவர் கவலையை மற்றவரிடம் காட்டிக் கொள்ளாமல் இன்பமான இல்லறம் கொண்டனர். 

          அடுத்த சில மாதங்களில் அடுத்த போருக்கு தீவிர பயிற்சி செய்து கொண்டிருந்தான். 

           “ஏன் இந்த தீவிர பயிற்சி, சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறியபடியே கண்ணம்மா மோர் கொடுத்தாள், 

             ” ஓய்வா..?? இந்தப் போரில் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். என் பங்களிப்பும் அதிகம் இருக்க வேண்டும்  என்பதால் தான்  வீட்டிலும் பயிற்சி மேற்கொள்கிறேன்.” என்று கூறிக்கொண்டே வாள் வீசிக் கொண்டிருந்தான் அமிர்தன். 

“இந்தப் போர் எதற்காக ? எந்த தேசத்துடன்..? கேள்வியுடன் பார்த்தாள் கண்ணம்மா.

” கடாரம். எதற்காக என்பது ராஜ ரகசியமாக உள்ளது.”

அந்த இடத்திற்கா ? அவ்வளவு தூரமா..??”

என்ன இவ்வளவு ஆச்சர்யம் ? நம் மன்னரின் திறமை அனைவரும் அறிந்த ஒன்று தானே. கடல் வழியே அயல்நாட்டுக்குப் பெரும் படைகளுடன் சென்று வெற்றி கொண்ட முதல் தமிழ் மன்னன் நம் மன்னர் தான். நிச்சயம் இப்போரிலும் நமக்கு வெற்றியே. சரி நான் பயிற்சி  மேற்கொள்கிறேன். நீ சென்று உன் பணிகளைக் கவனி“.

 கண்ணம்மாவிற்கு என்னவோ போல் இருந்தது. போருக்குச் செல்ல  சம்மதம் கூற முடியாமலும், தடுக்க முடியாமலும் தவித்து வந்தாள்.

அமிர்தன் சோழ நாட்டின் பெரும் படைகளுள் ஒருவனாக கடாரம் புறப்பட்டான். கடாரம் சென்று , போரும் ஆரம்பமாயிற்று.  அங்கே சோழ நாட்டிற்குப் பெரும் வெற்றி கிட்டியது. ராஜேந்திர சோழன் தம் படைகள் மூலம் கடாரத்தை ஆண்ட சங்கிரமவிஜயோதுங்க வர்மனையும் அவன் படைகளையும் பிடித்துக் கொண்டான்மேலும் அங்கே 13 இடங்களையும் கைப்பற்றினான். பெரும் வெற்றி பெற்ற இராஜேந்தின் அங்கே சில கட்டுப்பாடுகளுடன் விஜயோதுங்க வர்மனையே மீண்டும்  மன்னனாக முடிசூட்டினான். 

சோழ தேசம் ஆரவாரமாய் இருந்தது. இராஜேந்திரனை  “கடாரம் கொண்டான் வருகிறான் என்றே  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். சோழ படைகள் நாடு திரும்பியது. தேசம் அவனை ‘ கடாரம் கொண்டான், கடாரம் கொண்டான் ‘ என்றே அழைத்தது

அமிர்தனுக்காக காத்துக் கொண்டிருந்த கண்ணம்மாவிற்கு தலையில் இடி இறங்கியதைப்  போல இருந்தது அவள் கேள்விப்பட்ட செய்தி. ஆம். அமிர்தன் வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி தான் அது. அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அலறி அழுது புலம்பி பார்த்தாள். எதுவும் நிகழவில்லை. தன் காதல் கணவன் வருவான் என்று நான்கு நாட்கள் உண்ணாமல் குடியாமல் காத்துக் கிடந்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமிர்தன் வரவில்லை.

அங்கே சோழ தேசத்தில் குடிமல்லூர்க்கு அருகில் கடாரம் கொண்ட சோழபுரம் அமைக்கப்பட்டது . அங்கே கடாரம் கொண்ட சோழீஸ்வரம் கோயிலும் அமைக்கப்பட்டது. 

அன்று கடாரம் கொண்ட சோபுரத்தில் வெற்றியை கொண்டாட பெரும் விருந்தளிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதே நாளில் கண்ணம்மா தன் வீட்டின் முன்பு நெருப்பினால் ஒரு சிதையை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.  

ஊரே கடாரம் கொண்ட சோழபுரத்தில் இருந்தது. அங்கே இராஜேந்திர சோழன் மக்கள் முன்னிலையில் ஒரு தீப்பந்தத்தை உயர்த்திக் காண்பித்தான். அனைவரும்  ” கடாரம் கொண்ட சோழன் , கடாம் கொண்ட சோழன்,” என்று ஊரே அதிர ஆர்ப்பரித்தனர். 

 கண்ணம்மா சில கண்ணீர்த் துளிகளை பூமியில் உதிர்த்து விட்டு மன்னன் மட்டும் கடாரம் கொண்ட சோழன் அல்ல .. என் காதல் கணவனும் கடாரம் கொண்ட சோழன் தான் என்று கூறியவாறே தீக்குள் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். 

ஆம். இருவருமே கடாரம் கொண்ட சோழன் தான்.

இராஜேந்திர சோழன் கடாரத்தைக் கொண்ட சோழன்… அமிர்தன் கடாரம் எடுத்துக் கொண்ட சோழன்.

– தே. ஆக்னஸ் ஃபிரீடா

மூலங்கள்:

        ➊  இராஜேந்திர சோழன்- https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

       ➋ இராஜேந்திர சோழன்- https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

        ➌ இராஜராஜனின் ஆட்சியின் 14 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, திருவாலங்காட்டுச் செப்பேடுகள் – Wikipedia 

        ➍ இராஜராஜனின் ஆட்சியின் 14 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, திருவாலங்காட்டுச் செப்பேடுகள் Wikipedia 

            இராஜேந்திர சோழன் – மா.இராசமாணிக்கனார்.

Leave a Reply