ஒரு விறலியின் காதல் – இராஜேந்திர சோழன் சிறுகதைப் போட்டி #3

பகுதி 1

இராஜேந்திர காண்டம்

 

இடம் : சோழப்பனையூர், தளிச்சேரி, பரவை நாச்சியாரின் இல்லம்.

காலம்: 1020 முதல் 1030

 

இராஜேந்திரா நிறுத்து! உன் வார்த்தைகள் எனக்கு வெற்றுக் கூச்சலாக இருக்கின்றன. போர் மட்டுமே வீரம் என்று உனக்குக் கற்பித்தவர் யார்? வாளும், வேலும் மட்டுமே நிறைந்திருக்கும் உன் வாழ்க்கை எனக்குப் பெரும் அயர்ச்சியைக் கொடுக்கிறது இராஜேந்திரா!

அனைத்தையும் உன் பராக்கிரம வீர தீரச்செயலாலும், தினவெடுத்த வெற்றிச் செருக்கினாலும் கடந்துவிடலாம் என நினைக்கிறாயா?

நீ இல்லாத தருணங்களில் உன் உருவத்தை மனக்கண்முன் நிறுத்திப் பார்க்க முயலுகிறேன். இரத்தக் கரைகளால் சிவந்த உன் கரங்கள், போர் உக்கிரம் காட்டும் தோள்கள், நாட்டின் எல்லைகள் விரிவடையப் பயணிக்கும் கால்கள் என்பதான பிம்பங்களாக மட்டுமே நீ எனக்கு எஞ்சி நிற்கிறாய் இராஜேந்திரா. ‘போர்’ என்பதைத்  தாண்டிய ஒரு வாழ்வை நீ என்றைக்காவது வாழ்ந்து பார்த்திருக்கிறாயா?

உத்தமசோழன், விக்கிரமசோழன், அதிசயசோழன், மலைநாடு கொண்டான்…என எத்தனை எத்தனை பட்டங்கள் ஒருவனைக் கொண்டாட? இத்தனையும் போர்களினால் வந்தவையா அல்லது நீ வாழ்ந்த வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டதா?   சொல் இராஜேந்திரா.

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

உதாரணத்திற்கு, நீ என்றைக்காவது, எவரையாவது காதலித்ததுண்டா? எத்தனை முறை என் ஆடலரங்கிற்கு வந்திருக்கிறாய்? என் ஆடலை, அல்லது என்னைக் கவனித்துக் கண்டிருக்கிறாயா?  காதல் என்பதும், கலை என்பதும் நீ வழிநடத்தும் வன்முறைப் போர்களைப் போன்றதாக உனக்குத்  தோன்றுகிறதா?  காதலும் கலையும் கொண்ட வாழ்வு என்பது உன் போர்க்களத்தின் வேகங்களையும் உக்கிரங்களையும் விட வெகு நுட்பமானதும், மென்மையானதும் என்பதை உனக்கு எப்படி நான் புரியவைப்பேன்? ஒரு பெண்ணாக, அத்தகைய வாழ்வில் நான் காணும் ஆண்மையின் சூட்சம நிலை வேறு, இராஜேந்திரா!

நான் ஒரு தளிச்சேரிப் பெண் தானே? ஆனாலும் என் ஆடலின் ஒவ்வொரு அசைவிலும், காதல்ரசம் கொண்டவளாய் இரசித்து, என் பெண்மை முழுமையும் நிரம்பிவழிய, அபிநய பாவங்களுடனும், ஸ்வர தாளங்களுடனும் ஆடலின் ஆண்மையில் கரைந்து போகிறேனே, அதில்தான் அடங்கியிருக்கிறது நான் சொல்லவிழையும் யாவும் இராஜேந்திரா!  காதல், வீரம், கருணை, பயம், கோபம், என வாழ்வின் அனைத்து சூட்சமங்களும் சங்கமமாகும் பிரபஞ்ச மூச்சின் புள்ளியை நீ புரிந்து கொள்வது கடினம்.

பரவை நாச்சியாரின் ஒவ்வொரு சொல்லும் இராஜேந்திரனை  நிறையவே அசைத்திருந்தன.  எங்கும்  எதிலும் ஒருவித கர்வத்தோடு  காட்டின் புலியெனத் திரிந்தவன், ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது எனத் தெரியாது திக்கற்றவனாய் அவளை ஏறிட்டுப் பார்த்தான். இருக்கையில் இடதுபுறமாகச் சாய்ந்த வண்ணம், உருட்டுத் தலையணைகளை முட்டுக்கொடுத்தவளாய் அவள் அமர்ந்திருந்தாள்.   செங்காந்தள் பூவின் இதழென உதடுகள், கள்ளுண்டு செருக்கேறிய கண்கள் எனப் பெண்மையின் திமிருடன் அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.  கண்களில் சிறிதும் அசைவில்லை.   கையில் வைத்திருந்த கலயத்திலுள்ள கள்ளின் நெடி அவளின் முகத்தில் நீர்த்திவலைகளாகத் தெறித்திருந்தது.  கள்ளிருந்த கலயத்தை  அவள் பற்றியிருந்தவிதமே ஒரு அபிநயமாக இருந்தது. அவள் உடம்பில் ஊறியிருந்த ஆடற்கலை அவளையும் மீறித் திமிறிக் கொண்டிருந்தது. அவளின் கள்ளேறிய முகம் இதுவரை அவன் பார்த்திராத பாவத்துடன் இருந்தது.  இத்தனையும் இருக்கும்படி அவள் கர்வமாய் அமர்ந்திருந்தாள்.

ஒருநிமிடம் இராஜேந்திரன்  திகைத்து நின்றான். இராஜேந்திரனை அசைத்துப் பார்த்தது ‘பயம்’ அல்ல.  மாறாக, அவன்  முன்  நடந்துகொண்டிருப்பது அனைத்தும் அவனுக்குப் புதிதாக இருந்ததுதான் அவனது திகைப்பிற்குக் காரணம்.  எத்துணை  பெரிய  படையெடுப்புகளாயினும், பெரும்போர்களாயினும், தன் ஆருயிர் அரசி வீரமாதேவியாரிடம் திரும்பும்போது அவளது பேரன்பு அவனை முற்றிலுமாக ஆசுவாச படுத்திவிடும்.  ஆனால், இன்று இங்கே, அவன் இதுவரை வீரமா தேவியின் வழியாகக் கண்ட பெண்மையின் பேரன்பும், ஆசுவாசப்படுத்துதலும் முத்துமாலையிலிருந்து சிதறி விழும் பரல்களாய் தன்னைச்சுற்றிக் கிடப்பதாகப்  பார்த்தான். முதன்முதலாகத் தான் யாருமற்றவனாய் இருப்பதாய் உணர்ந்தான்.

பரவை நாச்சியாரின் சொற்கள் ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தன.  அவளின் சொற்கோர்வைகளின் வழியாக அவள் சொன்ன ஒவ்வொன்றும் அவனின் உணர்வு முடிச்சுகளை அவிழ்த்துவிட்டிருந்தன. அவனைச் சுற்றிச் சிதறிக் கிடந்தவற்றை வீரமாதேவியாரின் பேரன்பின் முத்துக்களென அவன் நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் அவை ஒவ்வொன்றும் பரவை நாச்சியாரின் மீதான அவனின் உணர்வு முடிச்சுகள்.

இராஜேந்திரன், நேற்று இவளை மண்டபத்தில் பார்த்ததோடு தஞ்சைக்குத் திரும்பியிருக்கலாம். ஏன் காதல் வயப்பட்டான்?  அவள் அவனை விரும்பவில்லையா?

பரவை நாச்சியாரின் இந்த  வெறுப்பிற்குக்  காரணம்?

உண்மையிலேயே அவள் வெறுத்துத் தான் பேசினாளா?

வீர ராஜேந்திரனுக்கு இணையாக வாதிடும் பரவை நாச்சியார்.

யார் இந்த பரவை நாச்சியார்?

 

 

பகுதி 2

பரவை நாச்சியார் காண்டம்

இடம்: சோழ வளநாட்டின் துணைக்கோட்டமான சோழப்பனையூர்.

காலம்: 1016 முதல் 1020

இவளின் பெயர் பரவை.  ஆரூரில் எழுந்தருளியுள்ள சுந்தரேஸ்வரரின் மனைவி பெயரையே கொண்டிருந்தவள். சோழ வளநாட்டின் துணைக் கோட்டங்களில் ஒன்றான பனையபுரத்தைச் சேர்ந்தவள். பனையபுர ஈஸ்வரமுடையார் திருக்கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். பேரழகும், பேரறிவும் கொண்ட நாட்டியமங்கை. திருவாரூர் தியாக விடங்கர் திருக்கோயிலின் தலைக்கோலியாகவும் செயல்பட்டு வந்தவள்.

சோழப் பேரரசு, கிராமங்கள், ஊர்கள் எனவும், இருபது முப்பது ஊர்களும், கிராமங்களும் சேர்ந்தது ‘நாடு’ எனவும் பல நாடுகள் சேர்ந்தது ‘வளநாடு’ எனவும், பல வளநாடுகள் சேர்ந்தது ‘மண்டலங்களாகவும்’ பிரிந்த உள்ளாட்சிமுறையைக் கொண்டிருந்தது. பிராமணர்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். அரசர்கள் வழங்கிய பிரம்மதேயங்களும், இறையிலி நிலங்களும், தேவதானங்களும் தவிரக் கோயில் மற்றும் அரசு சார்ந்த பிறவேலைகளும் பிராமணர்களின்  வாழ்வாதாரங்களாக இருந்தன.

பரவை, தன் தந்தையின் கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். தந்தை, பனையபுர  கிராம மகாசபைக்குக் ‘குடவோலை’ முறைப்படி ஒவ்வொருமுறையும் தவறாமல் தேர்ந்தெடுக்கப்படுபவராகவும், கிராம நிர்வாகத்தில் கோலோச்சுபவராகவும் இருந்தவர். கிராம சபைக்குத் தலைமைகளைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறமற்ற  ஒன்றாகப் பரவை கருதினாள். கிராம சபைக்கான தேர்தலில் போட்டியிடுபவர் செல்வந்தர்களாகவும், பிராமணர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையும், பணம் இல்லாத ஏழைகள் மற்றும் பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடவும் அவர்களது குடியிருப்புப் பகுதிகளில் தேர்தலை  நடத்துவதற்கும் கூட உரிமைகள் இல்லாதவர்களாகவும் இருந்ததைப்  பரவை எதிர்த்தாள்.

ஏற்கனவே சிறுநில உடமையாளர்களின் உரிமையும், உடைமையும் பறிக்கப்பட்டு இறையிலி நிலமாகவும் தேவதானமாகவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் அரசமுறைகளுக்கு எதிராகப் பலவிதங்களில் போராடிக்கொண்டிருந்தாள். சென்ற ஆடித் திருவாதிரைப் பெரியநாள் விழாவின்போது (கி.பி1017) தங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு இறையிலி நிலங்களாக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு பெண்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்தபோது இந்த அறமற்ற செயல்களுக்கெதிராக கிளிர்ச்சி செய்யுமளவிற்குப் போனாள் பரவை. பரவையின் இவ்வகையான போக்கு அவளை அவளது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேற வைத்தது. அவள் தன் தந்தையின் வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

 

 

பகுதி 3

திக்விஜயகாண்டம்

 

இது இராஜேந்திரனுக்குப் புதிது. ஆம், பரவை நாச்சியாளின் பேச்சு முற்றிலும் புதிது.

மதுராந்தகன்! பராக்கிரம பரகேசரி!  இவன் எழுந்து நின்ற இடங்கள் அனைத்தும், எண்ணத்தின் வேகத்தில் இவனுக்கு அடிபணிந்தன. அத்தை குந்தவை நாச்சியாரின் நேரடி வளர்ப்பில் வளர்ந்ததால் அரசவையின் நடப்புகளை மட்டுமன்றி ஒரு அரசனாக எல்லைகளைக் கடந்து தன்னை வியாபித்துக்கொள்ளும் திறன் மிக இயல்பாக அவனுக்கு இருந்தது.

அத்தை குந்தவை நாச்சியாரின் ராஜதந்திரமும், பாட்டி செம்பியன் மாதேவியாரின் நிதானமும் ஒருசேர அவனை புடமிட்டுவார்த்தெடுத்திருந்தபோதிலும், இராஜேந்திரன் ஏதோவொரு வகையில் விரக்தியும், வெறுமையும் கொண்ட ஆளுமையாகவே இருந்தான். மனநிறைவு என்பது அவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. மனநிறைவற்ற மனிதனின் வாழ்க்கை ஆழ்கடலின் ஆழத்தையும், அமைதியையும் போல இல்லாமல் எழுந்து அடங்கி மீண்டெழும் பேரலையின் இரைச்சல் என்பதாகவே இருக்கும். அமைதியின்மையின் வேர்கள் இராஜேந்திரனை இறுக்கிக்கொண்டே இருந்தன.

சோழப்பேரரசிற்காக இல்லாவிட்டாலும் தன் மனநிறைவிற்காக போர்களில் ஈடுபட ஆரம்பித்தான் இராஜேந்திரன். எல்லைகள் கடந்து, கடல்கள் கடந்து நாடுகளை வென்றான். பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொண்டு வந்தான். அவனின் படைத்தலைவரும், அரசியல் ஆலோசகருமான வல்லவரையர் வந்தியத்தேவன், தந்தை இராஜராஜ சோழருக்கும் வலக்கரமாக விளங்கியவர். பல நேரங்களில் இரஜேந்திரனின் அதிதீவிரமான படைத் தாக்குதல்களைக் கண்டு அவர் மிரண்டேபோனார். இராஜேந்திரனைப் பற்றி ‘இராஜேந்திரன் நாடுகளை கைப்பற்றியவன், வென்றவன் என்பதைவிட, அவற்றை அவன் சூரையாடினான், என்பதாகவே தனக்கு தோன்றுவதாக’, அவர் சொல்லியக் கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை இராஜேந்திரனின் போர்களங்களைக் கண்டவர்களுக்குப் புரியும்.

இராஜேந்திரன், வெறிகொண்டவனாய் சேர, பாண்டிய படைகளைத் தன்னடிப்படுத்தி திரும்பியிருந்த நேரம், இராஜேந்திரனை வரச்சொல்லி தந்தையார் இராஜராஜன் செய்தி அனுப்பிருந்தார். இரஜேந்திரன் எவரையும் சந்திக்க மனமில்லாதவனாயிருந்தான். தந்தையார் இரண்டு இரவுகள் காத்திருந்தார். மூன்றாம் நாள் மாலை இராஜேந்திரனைத் தேடி அவன் அரண்மனைக்கே வந்துவிட்டிருந்தார்.

உள்மண்டபத்தில் நுழையும் போதே, மாடத்தின் வழியாகக் கடந்துகொண்டிருந்த மாலை வெயிலினுடைய மென்மையான கதிர்களின் ஊடாக யாழின் இசை, ஏதோவொரு சிந்தனையுடன் உள்நுழைந்த தந்தையார் இராஜராஜனை இழுத்து நிறுத்தியது. கண்கள் மூடியபடி இசையில் இலயித்திருந்த இராஜேந்திரன் தந்தையாரின் வருகையைக் கவனிக்கவில்லை. இசையில் கரைந்தவராய் இராஜராஜன், எதிரில் இருந்த இருக்கையில் அரவமில்லாமல் அமைதியாக அமர்ந்தார். நாழிகள் கடந்தன. இராஜேந்திரன் கண்களை மெல்லத் திறந்தபோது எதிரே தந்தையார் அமர்ந்திருப்பதைக் கண்டான். ‘இராஜேந்திரா… அருமை! அருமை! வாளும் வேலும் பிடித்து இறுகிய உன் கைகள், யாழின் நரம்பிழைகளை கையாளும் இலாவகம் மனதை உருக்கிவிடுகிறது’ என்றபடி பேச்சைத் தொடங்கினார் இராஜராஜன். மெல்ல இராஜேந்திரனுடைய இசையைப்பற்றி ஆரம்பித்த உரையாடல் பல தலைப்புகளுக்குத் தாவித்தாவி பின் சோழப்பனையூர் நிகழ்வுகளுக்கு வந்து நின்றது. சோழப்பனையூர் துணைநாட்டில் கிளர்ச்சிக் குழுக்கள் உருவாகியுள்ளதாக ஒற்றன் மூலம் செய்தி வந்திருப்பதாகவும் அதுகுறித்து என்ன செய்யலாம் என ஆலோசித்து போகவே தான் வந்ததாகவும் சொல்லி நிறுத்தினார், தந்தையார் இராஜராஜன்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, இக்கிளர்ச்சிகள் ஒரு பெண்ணினால் முன்னெடுக்கப்படுவதாவும் செய்தி, எனச் சொல்லி மாடத்தின் வழியாக மறைந்துகொண்டிருக்கும் மாலைச் சூரியனின் கதிர்களை திரைச்சீலைகளைக் கொண்டு இழுத்து மூடினார்.

‘பெண்ணினால் கிளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறது’. அதுவரை யாழின் நரம்புகளை ஸ்பரிசித்தவாறே தந்தையார் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த இராஜேந்திரன் ஒரு துளி நாழிகை நிறுத்திவிட்டு தந்தையாரை ஏறிட்டு பார்த்தான்.

‘இரண்டு நாட்களில் பனையபுரம் புறப்படுகிறேன் தந்தையே’ என்றுசொல்லிவிட்டு தந்தையையின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அரண்மனைக்குள் சென்றுவிட்டான் இராஜேந்திரன். விரிவானதொரு உரையாடல் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த தந்தையார் இராஜராஜன் என்ன செய்வது எனப் புரியாமல், அவரும் தன் அரண்மனைக்குத் திரும்பினார்.

ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன்? தந்தையாரை மதியாதது போல் அல்லவா வெளியேறிவிட்டேன். அந்த பெண் யார்? சோழ பேரரசிற்குள்ளாக ஒரு பெண்ணின் எதிர்ப்பா? இருப்புகொள்ளாமல் அடுத்தநாள் பனையபுரம் புறப்படுவதற்கான ஆயத்தங்கள் குறித்து சிந்தித்தவாறே அன்றிரவு உறங்கிப்போனான்.

 

பகுதி 4

கற்பகக்கா காண்டம்

ஒரு அரசனாக இல்லாமல் ஒரு அரசப் பயணியாக பனையபுரம் வந்திறங்கினான் இராஜேந்திரன். மாலைக் கதிரவன் மறைந்துகொண்டிருந்தான். சிவப்பு கலந்த வானத்தின் பின்புலத்தில் தலமரங்களான பனைமரங்கள் காற்றை நிறைத்து அசைந்துகொண்டிருந்தன. பனைமரக் காடுகள் சூழ அமைந்திருந்தது ஈஸ்வரமுடையார் கோயிலும், கோயிலைச் சுற்றிய ஊரும். இவ்வளவு அமைதியான அழகான ஊரிலிருந்தா சோழ சாம்ராஜியத்திற்கு எதிரான கோபத்தின் துளி? ஆச்சரியமாக இருந்தது. ஊரின் நடுப்பகுதியிலிருந்த விளக்குத்தூணில் பந்தம் ஏற்றினான் ஒருவன். தீப்பந்தத்தின் ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக இரவானது ஊரைக் கவ்விகொள்ள ஆரம்பித்தது.

ஊர் கிராம சபைக்கு மட்டுமே, வந்திருப்பது அரசன் என்பது அறிவுறுத்தப்பட்டிருந்தது. அடுத்தநாள் காலை ஊர்க் கோவிலிருக்கும் அரசமண்டபத்தில் கிராம சபையினர் தவிர்த்த ஊரின் பிற வகுப்புகளுக்கான ஊர்க்கூட்டம் ஏற்பாடாயிருந்தது. இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் பின்னணியில் இருந்தது பரவை நங்கை என்பதை இராஜேந்திரன் அறிந்துகொண்டான்.

ஊர்க் கூட்டத்திற்குப் போவது என முடிவுசெய்தான். மக்களோடு மக்களாகக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிடவேண்டும் எனவும், கூட்டத்தில் வைத்தே பரவையைப் பார்த்துவிட வேண்டும் எனவும் உறுதிசெய்து கொண்டான்.

அடுத்தநாள் கூட்டம் ஆரம்பமாகியிருந்தது. பெரிய நாட்டாரும், ஐந்நூற்றுவர் எனப்படும் வணிகக்குழுவின் பிரதிநிதிகளும், கலணையார் எனப்படும் பல்தொழில் செய்வோரின் பிரதிநிதிக்குழுக்களும் பேசிக்கொண்டிருந்தனர். ஊர் இருக்கையில் ஒரு பெண் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் தான் பரவை நங்கை என யாரும் இராஜேந்திரனுக்கு சொல்லத் தேவையில்லாமல் இருந்தது.

ஒவ்வொரு தனிமனிதனையும், குழுக்களையும் இணைத்து ஒரு சமூக இயக்கமாக அவள் மாற்றிக்கொண்டிருந்தாள். அரசின் பலவகையான வரிச்சட்டங்களைப்பற்றியும், பாதிக்கபட்ட மக்களின் குரலையும் உள்ளடக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றி அரசாங்க மண்டல முதலியிடம் சமர்பிக்க முடிவுசெய்தபின்பு கூட்டம் கலைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கலைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இராஜேந்திரனும் நடக்க ஆரம்பித்தான். ஊர் எல்லையில் தனித்திருந்தவீட்டில் தான் அவன் தங்குவதாய் இருந்தது. ஊரைத் தாண்டி பனைமரங்கள் வரிசையாய் அமைந்த இடத்தில் இறங்கினான். யாரும் தன்னை கவனிக்கிறார்களா எனத் திரும்பி திரும்பி பார்த்தவாறே நடக்கலானான். ஏனெனில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஊர் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பரவை இவனை ஓரிருமுறை பார்த்ததை இவன் கவனித்திருந்தான். ஒருசில மணித்துளிகளே நீடித்த அந்த பார்வையில் வித்தியாசம் இருந்ததை அவன் கவனித்திருந்தான்.

என்னை எதற்காக அப்படி பார்த்தாள்? அவள் பார்த்த அந்த இரண்டு முறையும் அவள் கண்களில் பல கேள்விகள் தோன்றி மறைந்திருந்தாக அவனுக்குப்பட்டது.

குதிரையின் காலடியோசை வெகு அருகாமையில் கேட்டது. அவன் சுதாரிக்கும் முன் குதிரை அவனை மறித்தபடி நின்றது. குதிரையின் மேல் பரவை நங்கை புன்முறுவலுடன் அமர்ந்திருந்தாள்.

“நலமா இராஜேந்திரா? ஏது இவ்வளவு தூரம்? பனையபுரத்திற்கு உன் வரவால் நன்மை விளைந்தால் சரி. என் பெயர் பரவை. தளிச்சேரி பெண்.”

‘என் இல்லத்தில் சந்திக்கலாமா? அல்லது உன் இல்லத்தில் சந்திக்கலாமா இராஜேந்திரா? எனக்கேட்டுவிட்டு, அவன் பதிலை எதிர்பார்க்காமல், ‘என் இல்லத்தில் காலையில் சந்திப்போம் எனச் சொல்லியவாறு குதிரையை ஊரை நோக்கி விரட்டினாள்.’

 

பகுதி 5

முடிவுறுக்காண்டம்

 

அதிகாலையிலேயே பனையபுர ஈஸ்வரமுடையாரை வணங்கிவிட்டு ஊரை சுற்றிப் பார்த்தவனாய் பரவை நங்கையின் இல்லம் வந்து சேர்ந்தான். பரவை நங்கை இவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தவளாய் “வா இராஜேந்திரா”, என்றாள்.

‘இவள் உண்மையிலேயே என்னை யார் என்று தெரிந்துதான் பெயர் சொல்லி அழைக்கிறாளா?  இல்லை அரைகுறை விசயங்களை மட்டும் வைத்துக்கொண்டு அப்படி அழைக்கிறாளா? என்ன ஒரு தைரியம்?’

அவளை  உற்றுப்பார்த்தவாறே அவள் அமர்ந்திருந்த மண்டப அறையினுள் நுழைந்தான்.  அவனின் உடல் மட்டுமே அங்கு இருந்தது, சிந்தனை அத்தனையும் ஆச்சரியமுடன் அலைபாய்ந்து கொண்டிருந்தன. குந்தவை பிராட்டியார் ஒருமுறை அவனிடம் கூறியது அவனது மனக்கண் முன் வந்து போயிற்று.

‘சிந்தைத்தெளிவும், செயல் நேர்மையும் இருக்குமிடத்தில் சொல் துணிவு இருக்கும் இராஜேந்திரா.   இதில் ஆண், பெண் என்கிற பால்பேதம் எதுவும் இல்லை.’

‘ஆம் இராஜேந்திரா’, என்று அவன் சிந்தனையில் குறுக்கிட்டாள் பரவை நங்கை.

‘எதை இவள் ஆம் என்று ஆமோதிக்கிறாள்?  நான் மனதில் சிந்திப்பதைக் கூட அறிந்துவிடும் வித்தை கற்றவளோ?’ என்று ஆச்சரியம் இன்னும் அதிகமாய் மேலிட அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தான்.

‘ஆம் இராஜேந்திரா.   நீ தேடி வந்த பெண் நான் தான்.   என் பெயர் பரவை நாச்சியார்.’

“அறிவேன்.  நேற்று உன்னை கற்பகக்கா மண்டபத்தில் பார்த்தபொழுதே  உறுதி படுத்திக்கொண்டுவிட்டேன். சோழப்பேரரசிற்கு எதிராகச் செயல்படுபவள்.  சோழப்பேரரசின் நலத்திட்டங்களைப் பற்றிப் பேசாமல் மக்களைத்   திசைதிருப்புகிறாய்.

நாட்டின் உள்கட்டமைப்புகளை மத்திய மற்றும் பிராந்திய ஆட்சிமுறைகளை குறை கூறிக்கொண்டு, மக்களை அரசுக்கும், நாட்டிற்கும் எதிராகத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறாய்.   அரசு நிலங்களை மக்களுக்கு அரசு கொடுப்பதைத் தடுத்து மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறாய்.  மக்களை அரசுக்கு எதிராக வழிநடத்தும் உன் தேசத்துரோக செயல்களை நன்றாக அறிவேன் நான்.

இராஜேந்திரனின் கண்கள் கொஞ்சமாய் சிவந்திருந்தன. பரவை நிதானத்துடன் இராஜேந்திரன் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆக, மக்களுக்கானதை அரசு செய்துகொண்டிருக்கிறது என நீ கண்மூடித்தனமாய் நம்புகிறாய் அல்லவா? அதன்பொருட்டு மக்கள் அத்தகைய அரசிற்கு உண்மையுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறாய்.  உன் கணக்கின் படி, அரசுக்கு எதிரான கேள்விகளோ, செயல்பாடுகளோ, அவை எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், அவை தேசத்துரோகங்கள் இல்லையா?

ம்ம்…ம் நியாயமானது தான்.

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை இராஜேந்திரா.  ஏனெனில் நீ நிற்கும் இடம் வேறு. எனவே உனது பார்வைகளும் வேறு.  நீ மேலே அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு கீழே இருக்கும் மக்களைப் பார்க்கிறாய்.

ஆனால் நான் மக்களிடையே நிற்கிறேன். உன் அரசு மக்களுக்கானது எனச் சொல்லும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அரசு தன் மக்களை மறந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக, வர்க்கத்திற்காகவே உன் அரசு செயல்படுகிறது.  இது புரியவேண்டுமென்றால் நீ நின்று பார்க்கவேண்டிய தளம் வேறு இராஜேந்திரா.

நீ தேசத்துரோகம்  பற்றிப் பேசுகிறாய்.  நானோ மக்கள் துரோகம்  பற்றிப்  பேசுகிறேன். மக்களே தேசமாகிறது. மக்கள் தான் தேசம். மக்களின்றி வெறும் தேசம் மட்டும் அந்தரத்தில் ஊசலாட இயலாது இராஜேந்திரா.

உங்கள் அரசன் இங்குக் கடவுளுக்கு நிகரானவனாகப்  பார்க்கப்படுகிறான். ஆனால் அக்கடவுள் யாரின் கடவுளாக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட,  ஓரங்கட்டப்பட்ட குடியானவனின் கடவுளா? அல்லது உயர்தர, மேல்தட்டு வர்க்கத்தினரின் கடவுளா?

அரசன் மேல்தட்டு வர்க்கத்தினருக்கானவனாக இருக்கும்பட்சத்தில் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தனக்கானதைக் கேட்டுப் பெறுவது அரசுக்கு எதிரான செயல்பாடா அல்லது அது அவர்களின் உரிமை மீட்பா?

இந்த உரிமைகோரலின் கழுத்தைப் பிடித்து நிறுத்தவே நீ வந்திருக்கிறாய் என்பதை எப்படி உனக்குப் புரிய வைப்பேன். சொல்…இதை ஒடுக்கத்தான் நீ வந்திருக்கிறாயா?

இராஜேந்திரனுக்கு எங்கோ ஒரு ஓரத்தில் நெருட ஆரம்பித்தது.  அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறதா? அவ்வாறு மக்களுக்கான அரசாக இருக்கவேண்டித் தானே அத்தனை உள்ளாட்சி முறைமைகளையும், மக்களே தங்கள் கிராமங்களை நிர்வகித்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் எந்நாட்டிலும் இல்லாத வகையில் சோழ நாட்டில் நிர்மாணித்தோம்.

இருந்தும், நாட்டின் மற்றும் நிர்வாகத்தின் மீதான அவனுடைய அதீத நம்பிக்கையும் அதனுடன் கூடிய தன்மானமும் அவளை விடுவதாய் இல்லை.  கடைசியில் எல்லா ஆண்களையும் போல் அவனும் வெகு இயல்பாய் “ஆண்” என்கிற கவசத்தைக் கையில் எடுத்துக்கொண்டான்.

அரசின் பிரதானிகள், அரசின் அடுக்குகளில் இருந்து கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத பொறுப்பும் அக்கறையும் ஒரு பெண்ணான உனக்கு மட்டும் எப்படி? ஆடல் மகளிருக்கான இலட்சணங்களும் பொறுப்புகளும் இதுவல்லவே?

நீ சொல்வது சரிதான் இராஜேந்திரா.  நீ கடைசியில் இந்த ஆயுதத்தைத் தான் எடுப்பாய் என எனக்குத் தெரியும்.

சரி நீ சொன்னபடியே, ஒரு ஆடல் மகளிராக நான் பேசட்டுமா? சோழ நாட்டில் கோயில்கள் எதற்குக் கட்டப்பட்டிருக்கின்றன?

கோவில்கள் ஊர்ப்பஞ்சாயத்து கூடும் இடங்களாகவும், நீதி வழங்கும் நீதி மன்றங்களாகவும் செயல்படுவதற்காக எனச் சொல்லுகிறீர்கள். ஆனால், பொதுமக்களுக்கும் சமுதாயத்தின் பல்வேறு நிலையில் இருப்போருக்கும் கடவுள் பற்றிச் சொல்லி அவர் தொடர்பான நம்பிக்கையை விரிவுபடுத்துவதும் அவற்றிற்கு ஏற்பாகக் கோவில் அமைப்பதும் கோவில்களைப் பெருக்குவதும் அரசின் ஆன்மீகத் தேவையாக மட்டுமின்றி அரசியல் தேவையாகவும் தானே அதைப் பார்த்தீர்கள். இதோ! கோவில்கள் பிரகாரம் பிரகாரமாய் கட்டப்பட்டுள்ளன. கடவுளைக் காப்பாற்றுவதற்காக என்பதற்காகவும் போர்க்காலத்தில் உங்களுக்குப் பாதுகாப்புத்தரும் இடங்களாகவும் கோட்டைகளாகவும் மட்டும் அல்லவா கோவில்கள் திகழ்கின்றன. கோவில் பாதிக்கப்படக்கூடாது, கோவில் சொத்து திருடப்படக்கூடாது, கோவில் நகைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்னும் அறங்கள் பொதுமக்களிடையே சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டுள்ளன – எதற்காக?  இந்த ஒரு விசயத்திலேயே உங்களின் இராசதந்திர ஆட்சிமுறை கோவில் அமைப்பில் அடங்கியுள்ளது எனத் தெற்றெனத் தெளிவாகின்றது இல்லையா?

இதற்கு மாற்றாக நாட்டின் கருவூலங்கள், சபைக் கூடங்கள், கல்விச் சாலைகள், மருத்துவமனைகள், கடன் தரும் வங்கிகள், வேலை தரும் அமைப்புகள் போன்று வெவ்வேறு பயன்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு கோவில்கள் திகழ்ந்தால் எப்படி இருக்கும் என நான் கேட்கிறேன். கோவில்கள் அரசு நிறுவனங்களாக மாறும்போதே வெறும் வழிபாட்டுத் தலம் என்பது அடிபட்டுப் போகின்றது இல்லையா?

வெறும் ஆடல் அரங்கமாக நான் கோவிலைப் பார்க்கவில்லை.  அதற்கு மேலானதாக அதை நான் பார்க்கிறேன்.

இராஜேந்திரன் அவளைப் பார்த்தான். எத்தனைத் தெளிவு அவளிடம்?  அவள் இவன் முன் இங்கும் அங்கும் நடந்தவாறு பேசிக்கொண்டிருந்தாள். அவளின் அறிவும் அழகும் அதற்கு மேலான சமூகச்சிந்தனையும் அவனை அவளிடம் நிலைநிறுத்தியிருந்தன.

அவள் அதைக் கவனித்திருந்தாள். போதும் இராஜேந்திரா….

உன் மக்களின் ஏற்றத்தில் உன்னை நிலைநிறுத்திக்கொள். அவள் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.  அவளின் பேச்சு அவனைப் புடமிடப்பட்டத் தங்கம் என மாற்றியிருந்தது.

காட்டாற்றின் நடுவே எந்தவொரு அசாத்தியமும் இல்லாமல் வெகு எளிதாய், இயல்பாய் நீந்தித்திரியும் அயிரை மீன் குஞ்சென அவள் தெரிந்தாள்.

 

பகுதி 6

காதல் காண்டம்

இடம்: ஆரூர், பரவை நாச்சியாரின் ஆடல் அரங்கு

காலம்: கிபி.1018 மார்கழி திருவாதிரை

இராஜேந்திரன் ஆவலுடன் காத்திருக்கப் பரவை நாச்சியார் அரங்கம் ஏறினாள். சோழரின் காவல் தெய்வம் நிசம்பசூதனியின் சிவந்தமேனியலாய், இடையும் நடையும் கம்பீரத்துடன் அசைந்திட, அரங்கத்தின் நடுப்பகுதிக்கு வந்தவளின் கண்கள் மட்டும் நிதானமின்றி தவித்திருந்தன.

நேற்று என்னிடம் பேசிய பரவையா இவள்? ‘பரவை’ என்று அவனையுமறியாமல் அவள் பெயரை இராஜேந்திரனின் உதடுகள் உச்சரித்தன. உச்சரித்த கணத்தில் தன்னை மறந்த கற்சிற்பமொன்று சுயவுணர்வு பெற்றுத் திரும்புவதைப் போல மெல்லத் திடுக்கிட்டுத் திரும்பினாள். அங்கே இராஜேந்திரன் அமர்ந்திருந்தான்.

உறுதியான பார்வை, தெளிந்த நெற்றியில் வரிவரியாய் திருநீற்றின் கோடுகள், அகன்ற மார்பில் திருநூல் படிந்திருக்க, புன்முறுவலின் இருமாப்பில் அமர்ந்திருந்தான் இராஜேந்திரன். அவள் உறுதியை சிறுகச்சிறுக வென்றுவிடுவதயாய் இருந்தது அவனின் பார்வை.

ஆடல் தொடங்கியது. பைரவி இராகத்தில் ஆரூரின் தியாக விடங்கரை நோக்கிப் பக்தை பாடும் பாடலாக அமைந்திருந்த பாடல் அது.

‘உன் அழகிய திருமுகத்தை மட்டுமே எனக்குத்  தரிசனம் தருகிறாய் உன் பொன்னிற திருமேனியை முழுவதுமாய் நான் காணமுடியாதபடி மறைத்திருக்கும் மூடுமந்திரம் ஏதய்யா? அவ்வாறு நான் காணமுடியாததன் காரணம் நான் ஏழை என்பதாலா அல்லது வேதங்கள் எனக்குத் தெரியாது என்பதாலா?

இந்த உலகமே வியந்து பாடுகிற உன் அழகியத் திருமேனியில் ஊனம் ஏதேனும் இருக்கிறதா? அதை என்னிடமிருந்து நீ மறைத்துக்கொள்ளும் பொருட்டுதான் உன் திருமேனியின் தரிசனத்தை எனக்கு மறுக்கிறாயா?

உன் திருமேனியின் அழகை இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டுமே நீ எனக்குக் காண்பிக்கிறாய்.

மாலை வேளையில் உன் முழுமையும் தரிசிக்க நான் வரும்பொழுது எனக்கும் உனக்குமிடையில் நிறையபேர் இருக்கின்றனர். என்னால் உன் காதணியை மட்டுமே காணமுடிகிறது. உன் கரங்களைக் கூட முழுமையாகத் தரிசித்துவிட முடிவதில்ல, அவைகளும் கூட ஒன்றையொன்றை மறைத்துக்கொண்டிருக்கின்றன.

வளைந்து நெளிந்து உன் திருமேனியைப் பார்த்துவிட முயலுகிறேன். ஆனால் உன் திருமேனியைச் சுற்றியிருக்கும் பாம்பினிடையே நீ மறைந்துகொள்கிறாய். இறுதியாக எனக்குக் காணக்கிடைப்பது உன் ஒற்றை பாதம் மட்டுமே.

இப்படியாகச் செல்கின்றன அவள் நடனமாடிய பின்வரும் பாடலின் வரிகள்.

 

பல்லவி

முகத்தைக் காட்டியே தேகம் முழுமையும்

காட்டாத மூடுமந்திரம் ஏதய்யா               (முகத்தை)

அனுபல்லவி

ஜகத்தில் அதிகமான ஆரூரில் வாசரே

செழித்த மேனியில் ஊனம் உண்டோ தியாகேசரே?  —  (முகத்தை)

சரணம் 1:

சாயரட்சையில் வந்து சலிக்கப் பார்ப்போம் என்றால்

சாந்தணிந்த செவ்வந்தி தோட்டைக் காட்டி மயக்கி

மாயாவித்தனமுள்ள மந்தஹாசத்துடனே

மான்மழுவேந்திய கரத்தைக் கூட மறைத்து     (முகத்தை)

சரணம்2:

கூத்தாடும் போதங்கே குனிந்து பார்ப்போம் என்றால்

குதித்து குதித்து முன்பின் ஓடும் விதத்தை உற்றுப்

பார்த்தால் பசிகள் தீரும் பரவசமாகச் செய்யும் பணியால்

மறைத்துக் கொண்டொரு பாதம் காட்டுவதல்லாமல்       (முகத்தை)

சரணம்3:

அபிஷேகக் காலத்தில் அருமைத் திருமேனியை

அதி ரகசியமான தோட்டால் மறைக்கிறீர்

விபவம் தந்து ரக்ஷிக்கும் திவ்ய மங்கள ரூப

விடங்க தியாகராஜரே பாபவிநாசரே                     (முகத்தை)

ஆடல் முடிந்தது. இராஜேந்திரன் இருக்கையிலிருந்து எழமனமில்லாமல் அமர்ந்திருந்தான். இப்பாடலை ஏன் பரவை இங்கு அரங்கேற்றியிருக்கிறாள் என்பது பிடிபடாமல் அமைதியற்றவனாய் இருக்கையை இறுக்கமாக அவன் பற்றியிருந்தவிதம் அவனின் முறுக்கேறிய புஜங்களிலும் புடைத்திருந்த கழுத்து நரம்புகளிலும் தெரிந்தது.

உடனடியாக பரவையை பார்த்தாகிடவேண்டும். இப்போதே அவளை நான் சந்தித்தாகவேண்டும். தேரில் பூட்டியிருந்த புரவிகளை ஆரூர் வீதிகளின் வழியே விரட்டினான். அசுரவேகத்தில் அவனின் புரவிகள் புழுதியுடன் பறந்தன. வெகு சீக்கிரத்தில் பரவையின் இல்லத்திலிருந்தான் இராஜேந்திரன். ஆனால், பரவையிடத்தில் எந்த ஒரு சலனமுமில்லை. அவள் அவன் வருகையை எதிர்பார்த்து ஒருவித தீர்க்கத்துடன் காத்திருந்தாள்.

அன்று தன் இல்லத்தில் அவனுடன் உறுதியாய் உரையாடியதின் தொடர்ச்சியாய், அவனைத் தஞ்சைக்கு புதிய மனிதனாய் அனுப்புவதற்காய் அவள் காத்திருந்தாள்.

அவனுக்காய் தாமரையில் தண்ணீராய் வாழ காத்திருந்தாள்.

– ஆபுத்திரன்

 

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

One comment

  1. இந்த கோவிட் கால கட்டாய ஓய்வில் தான் பொன்னியின் செல்வனை முழுமையாக வாசிக்கக் கிடைத்தது.. காலம் தாண்டி புகழுடன் திகழும் அந்தக் காவியம் ஏற்படுத்திய தாக்கம் ‌இன்னும் விடவில்லை.. அதனால் இந்தக் கதையை இன்னும் நெருக்கமாக உணர்கிறேன்.. அருமை அந்து..

Leave a Reply