அழகன் குளத்தின் சங்ககாலத் தமிழர் ரோமானிய வணிகம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்

ஆர்ப்பரித்து வரும் வைகை ஆறு கடலைச் சேருமிடம் அது. அங்கு ஒரு அழகிய துறைமுகப் பட்டினம். உள்நாட்டிலிருந்து சரக்குகளைக் கொண்டுவர, வந்த சரக்குகளை எடுத்துச் செல்ல வசதியாக இருப்பதற்காக, துறைமுகங்களைத் தமிழர்கள் ஆறுகள் சங்கமமாகும் இடங்களிலேயே அமைத்திருந்தனர்.

கடலில் பல நாட்டுக் கலன்கள் வரிசையாக நிற்கின்றன. சற்றே வித்தியாசமான வடிவத்தில் இரு யவனக் கப்பல்கள்.

அதைப் பார்க்கிறான் ஒரு கலைஞன். அலைகடலினூடே பாய்களைப் பரப்பி நிற்கும் அம்மரக்கலன்களைப் பார்த்தவுடன் அவனது கலை உள்ளம் பரபரக்கின்றது. வரையத் தூரிகையோ துணியோ இல்லை.

அருகிலிருந்த பானையைப் பார்க்கிறான். கீழே கிடந்த மங்கையர் மையெழுதப் பயன்படுத்தும் உலோகக் குச்சியை எடுக்கிறான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அன்றோ? பானையில் இரு கப்பல்கள் பவனி வருகின்றன.

மனத்தை மயக்கும் மாலை நேரம். ஆற்றங்கரையின் அருகே ஓர் அழகிய மாளிகை. தமிழகத்து வீரர்களுடன், ஓங்கு தாங்குவென்றிருக்கும் யவன வீரர்கள் என்று காவல் பலமாக இருக்கின்றதே! ஆமாம், துறைமுகத்தைப் பார்வையிட பாண்டிய மன்னன் வந்திருக்கிறான்.

சில்லென்று கடற்காற்று சாளரத்தின் வழி வீச, மஞ்சத்தில் அமர்ந்திருக்கிறான் அரசன். வண்ணம் தீட்டப் பட்டுப் பளபளவென்றிருக்கும் யவன மதுக் குடுவையிலிருந்து மதுவைப் பொற்கிண்ணங்களில் ஊற்றி மன்னன் முன் வைக்கின்றனர் அழகுப் பெண்கள்.

அங்கே வருகிறாள் அரசி. அவள் கழுத்தில் ரோமானியத் தங்கக் காசுகளைக் கோத்துச் செய்த ஆரம், யவனப் பாவைவிளக்கின் ஒளியில் தகதகவென்று மின்னுகின்றது. முத்துக்கள், மிளகு, பருத்தி – இவற்றைக் கொடுத்துப் பெற்ற காசுகளின் மேல் இந்தப் பெண்களுக்கு என்னதான் ஆசையோ! எண்ணிச் சிரிக்கிறான் அரசன்.

உலகின் மறுபுறம். ரோமானிய நாடாளுமன்றத்தில் மூத்த பிரமுகர் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவ்வூர்ப் பெண்கள் தமிழக முத்துக்களை அதிக அளவில் வாங்குவதால், நாட்டு வருமானத்தில் பெரும் பகுதி அதற்கே செலவிடப்படுகின்றது, அதைத் தடுக்கவேண்டும் என்று அவர் பேசியது ’செனட்’ எனப்படும் அவ்வவைக் குறிப்பில் பதியப்படுகிறது.

தொல்லியல் அறிஞர் முனைவர் வேதாசலம் அவர்களின் உரையை, ஆத்தங்கரை என்ற வைகை கடலுடன் கலக்கும் இடத்தில், பண்பாட்டுச் சிறப்பிடங்களின் நண்பர்கள் குழுவினர் சுற்றுலாவில் கேட்டபோது, என் மனக்கண்ணில் விரிந்த காட்சிகளே இவை.

“யவனர் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து ஓங்குமதி ஓங்குவாழ் மாற”

என்றும், அரசர்களிடம் காவலர்களாக இருந்தது, யவனப் பாவை விளக்கு பற்றியும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

அக்காலத்து வணிகம் செய்ய வந்த ரோமானியர் யவனர் என்று அழைக்கப்பட்டனர்.

ரோமிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக வந்து, இடைப்பட்ட பாலைவனப் பகுதியைத் தரைமார்க்கமாகக் கடந்து, செங்கடல், அரபிக்கடல் வழியாகத் தமிழகம் வந்திருக்கிறார்கள். தென்மேற்குப் பருவக் காற்று வீசும் காலத்து, அதன் துணையுடன் கடல்கடந்து, வடகிழக்குப் பருவக் காற்றுடன் திரும்பி இருக்கிறார்கள்.
மேலும் வியன்னா நகரின் அருங்காட்சியகத்தில் முசிறி வணிகன் ஒருவனுடன் எழுதப்பட்ட பழைய உடன்படிக்கை ஆவணம் உள்ளது. முசிறி பெரியாறு கடலில் கலக்குமிடத்தில் அரபிக் கடலோரம் இருந்த சங்ககாலத் துறைமுகப் பட்டினம். மிளகு, துகில் போன்றவற்றை முசிறியிலிருந்து அரபிக்கடல் செங்கடல் பாலைவனம் கடந்து, நைல்நதியில் சென்று, அலெக்சாண்டிரியாவிற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அப்பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கியத்தில் காணப்படும் பழந்தமிழர் நாகரிகத்தையும், கடல் வணிகத்தையும் உறுதிப் படுத்தச் சான்றுகள் வேண்டுமே!

வைகை கடலோடு சேரும் இடமான ஆத்தங்கரை அருகே உள்ள அழகன்குளத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால், பொ.பி. 1986-முதல் 2017-வரை பலமுறை அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
பூமியின் மேற்புறம் கிடைக்கும் மண்பாண்டத் துண்டுகளை வைத்து, மேடாக உள்ள இடங்களிலும் தொல்நகரங்கள் புதைந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இதன்படி ஆய்ந்து, அழகன்குளத்தில் “கோட்டை மேடு” என்ற சுமார் 30 ஏக்கர் பரப்பளவுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

இப்பகுதியின் பழம்பெயர் தெரியவில்லை. பொ.மு. 300-க்கும், பொ.பி. 500-க்கும் இடைப்பட்ட காலத்தில் முக்கிய துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கிறது.

பொ.மு. 300-களில் கங்கைக்கரையுடன், பாடலிபுத்திரம் போன்ற நகரங்களுடன் வணிகத்தொடர்பில் இருந்திருக்கிறது. இங்கு கிடைத்த மௌரியர் கால வடஇந்திய பளபளப்பான கருப்பு மட்கலன்கள் ( NCB Ware – Northern Black Polished Ware), மௌரியர் முத்திரை குத்தப் பெற்ற வௌ¢ளிக் காசுகள் ( Punch Mark Coins) உறுதி செய்கின்றன.

பொ.மு. முதல் நூற்றாண்டிற்குப் பிறகு ரோமுடன் வாணிபம் நடந்துள்ளது. அவர்களது மதுஜாடிப் பகுதிகள் ( Amphorare pieces), ரௌலெட்டட் மட்கலன்கள் ( Rouletted Ware), அரிட்டைன் மட்கலன்கள் ( Arrettineware), ஆண் பெண் உருவங்கள் உள்ள பானையோடுகள் (Stamped Potteries) கிடைத்துள்ளன.

இரு ரோமன் கப்பல்கள் உருவம் பொறித்த பானையோட்டுத் துண்டும் கிடைத்திருக்கிறது. அதில் இருந்த கப்பலின் உருவத்தை ரோமிற்கு அனுப்பி, பண்டைய கப்பல்களோடு ஒப்பிட்டு, அவர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

பொ.பி. 4ம் – 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் வெலண்டைன் ( Valentine2nd), அரக்கேடியஸ் ( Arcadius), தியோடியஸ் (Theodosius) போன்ற அரசர்கள் காலப் பிற்கால ரோமானியச் செப்புக் காசுகள், மீன் சின்னம் ஒருபுறமும், யானை உருவம் மறுபுறம் உள்ள சங்ககாலச் சதுர வடிவப் பாண்டியர் காசுகள், சங்ககால வண்ண மணிகள், வதுபவழ மணிகள், தக்கிளி, இரும்பு செப்புக் கருவிகள், முத்திரைகள் என்று ஆயிரக் கணக்காண தொல்பொருட்கள், 70க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் கிடைத்துள்ளன.

சங்கினை அறுத்த எச்சங்கள் சங்கு வளையல்கள் செய்யும் தொழிலகங்கள் இருந்ததைக் காட்டுகின்றன.

பொ.பி. 500 வரை அழகன்குளத்தில் சிறப்பாக இருந்த ரோமானிய வணிகம், அரபு நாட்டு வணிகர் வருகையாலும், ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியாலும் நின்று போயிருக்கிறது. இவற்றையெல்லாம் விவரித்து, அகழ்வாராய்ச்சி என்பது அங்குலம் அங்குலமாக, மிக மெதுவாகச் செய்யப்படும் முறை என்று கூறி விளக்கினார்.

வைகை கடலில் கலக்கும் சங்கமத்துக்கு அருகில், இருள் கவிந்த நேரத்தில், வெண்மணற் பரப்பில் அமர்ந்து, முனைவர் வேதாசலத்தின் உரையைக் கேட்டது ஓர் இனிய அனுபவம்.

அத்துடன் மறுநாள் கோட்டை மேட்டின் கட்டடங்கள் வராத பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று, அங்கே கிடந்த பலவித மட்கலத் துண்டுகளைத் தேடி எடுத்து, வேறுபாட்டை விளக்கினார்.

ரோமானிய மதுஜாடித் துண்டுகள், கருப்பு சிவப்பு ஓடுகள், சங்கின் மிச்சம் என்று பழமையின் எச்சங்களைத் தேடி அலைந்தது, வயதை மறந்த மகிழ்ச்சியான தருணங்கள்.

பொற்செல்வி ஜெயபிரகாஷ்

Leave a Reply