அன்பே இறைவழிபாடு கண்ணப்ப நாயனார் கதை – ரா. வித்யாலட்சுமி

நான் மிக அதிகமாய் நேசிக்கும், வியக்கும் நாயன்மார்களில் ஒருவர் கண்ணப்ப நாயனார். அவருக்குப் பரிட்சியம் இல்லாத ஒரு அன்பை, ஒரு இறையை மனம் முழுக்க நிறைத்துக்கொண்டு முழு மனத்துடன் அவரைச் சரணடைந்து அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார்.

சரி அவர் எப்படி நாயன்மார்களில் ஒருவரானார்?

பொத்தப்பி என்ற நாட்டில் வேடர்களின் தலைவன் நாகனும், அவன் மனைவி தத்தையும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் முற்பிறவியில் செய்த தவத்தினால் “திண்ணன்” என்னும் மகவைப் பெற்றனர். திண்ணன் தளிர் நடையிட்டு, மழலை பேசி, அழகாய் வளர்ந்து வரலானார்.

விற்பயிற்சி விழாவிற்கான வயதை அவர் எட்டவும், நாகன் எல்லாக் காட்டு தலைவர்களுக்கும் சொல்லி அனுப்பினான். எல்லாரும் பலவித பரிசுப்பொருள்களோடு வந்து விழாவைச் சிறப்பித்தனர். ஏழு நாள்கள் பலவித கொண்டாட்டங்களோடு விழா இனிதே நிறைவுற்றது. ஏழாம் நாள், ஆசிரியர் வில் எடுத்துத் தரத் திண்ணனார் திறம்பட வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தார். பதினாறு ஆண்டு பருவமும் எய்தினார்.
வனவிலங்குகள் பயிர்களை நாசம் செய்வதாய் வேடர்கள் நாகனிடம் முறையிடுகின்றனர். மூப்பின் காரணமாகத் தன்னால் ஏதும் செய்ய இயலாத நிலையால் வருந்தும் நாகன், திண்ணனாரைத் தலைவனாக ஆக்கிவிட்டால் அவர் காட்டைப் பராமரித்துக்கொள்வர் என்று கூறுகிறார்.

அதன் பொருட்டு தேவராட்டியை அழைத்து குறி கேட்டுத் திண்ணனாரிடம் வரையாட்சியை அளிக்கிறார். தகப்பனாரின் பேச்சைத் தட்டாது வரையாட்சியை ஏற்கிறார் திண்ணனார் . தேவராட்டியும் தாம் வரும் வழியில் நல்ல சகுனங்களையும், குறிகளையும் கண்டதாக கூறித் திண்ணனாரை வாழ்த்துகிறார். அன்றைய இரவைச் சுனைநீரில் முழ்கிக் கழிக்கிறார்.

அடுத்த நாள் காலை, வேட்டை கோலங்கொண்டு, வில் எடுத்துப் பிற வேடர்களோடு சேர்ந்து வேட்டைக்குப் பெற்றோரின் ஆசிகளோடு காட்டை நோக்கி புறப்பட்டார். பல மிருகங்களை வேட்டையாடிய பின்னர், மிக வலிமை பொருந்திய ஒரு பன்றி வலைகளை அறுத்துக்கொண்டு ஓடியது. ஓடிய பன்றியைத் திண்ணனாரும் , அவர் நண்பர்களும் துரத்திக்கொண்டு ஓடினர். ஓரிடத்தில் பன்றி நிற்க, அம்பு எய்து கொல்லாமல் திண்ணனார் உடைவாள் கொண்டு பன்றியை வெட்டினர். உடன் வந்த நண்பர்கள் வியக்க, அந்த பன்றியைக் கொன்றார்.

அதிக தூரம் ஓடி வந்த காரணத்தினால் களைப்பும், பசியும் , தாகமும் மிகுந்து காணப்பட்டனர் மூவரும். அருகில் காளாத்தி மலை சாரலில் பொன்முகலி ஆறு ஓடுவதால் அங்கு சென்று தாகம் தீர்த்துக்கொண்டு , அந்தப் பன்றியைச் சுட்டு உண்டு பசியையும் போக்கிக்கொள்ளலாம் என்று மூவரும் கிளம்பினர்.
களைப்புடன் நடந்தாலும் காளத்தி தேவர்பால் கொண்ட முன்வினை அன்பினால் திண்ணனார் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். முகலி ஆற்றங்கரையில் நண்பரிடம், தீ மூட்டி பன்றியை வதக்கச் சொல்லி, அவரும் நாணனும் ஆற்றில் நீராடிக், காளத்தி நாதரை வழிபட்டு வருவோம் என்று கூறிச் சென்றார்.

அழகிய மலர்களின் நறுமணம் கமழும் முகலி ஆற்றில் இறங்கி மூழ்கிய திண்ணனாருக்கு உடனே இறைவன்பால் அன்பு மிகுந்து காண வேண்டி ஆசை பிறந்தது. தன் நண்பரோடு குளிர் மலைசாரல் ஏறிச் சிவனது பேரன்பை நோக்கிச் சென்றனர். தொலைவில் வரும் போதே பேரருள் ஈசனை , அவன் அன்பை அவர் புரிந்துக்கொண்டார். நடந்து வந்தவர், ஓடி வந்து இறைவனைத் தழுவிக்கொண்டார், உச்சிமுகர்ந்து அன்பால் கண்ணீர் விட்டுக் கதறி நின்றார்.

தான் நிற்பது இறை முன் என்பதும் மறந்து, ’ஐயோ என் ஐயனே கொடுமை செய்யும் காட்டு விலங்குகள் வாழும் இக்காட்டில் தனியே உள்ளீரே’ என்று கதறினார். ஐயன் மீது பச்சை இலைகளையும், பூவையும் யார் போட்டது என்று கோவத்தோடு வினவினர். அதற்கு நாணனும் முன்பொரு சமயமும் இப்படியே ஒரு பூசை செய்பவர் செய்தார், என்று கூறினார்.

இவை எல்லாம் இருந்தும், ஐயனுக்கு இறைச்சியை யாரும் ஏன் தரவில்லை? இனி அதை நானே தரவேண்டும், இவரைப் பிரியாது இவருக்கு இறைச்சியைப் படைக்க யான் இங்கு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் திண்ணனார்.
இறைச்சியைக் கொணர அங்கிருந்து நகர்ந்தார், ஆனால் இறைவன் தனியாய் இருப்பாரே என்று மீண்டும் வந்தார், ஆரத் தழுவினார், மீண்டும் சென்றார், வந்தார் தழுவினர். விட்டுப் பிரிய மனமின்றிக் கதறினார். ஆனாலும் சுவையான மெல்லிய இறைச்சியை உனக்குக் கொண்டு வந்து தருவேன் என்று கூறிக் கிளம்பினார்.

அவர் மலையின் கீழ் வரவும் காடன் அவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது. பன்றியைச் சுட நெருப்பிட்டிருந்தான். ஏன் இவ்வளவு நேரம் என்று நாணனைக் கேட்டான். இது ஏதுமே கேளாது , திண்ணனார் அந்தப் பெரிய பன்றியை நெருப்பில் வாட்டி , நல்ல ருசியான துண்டுகளை இலையில் வைத்து, இனிப்பான துண்டுகளை வாயில் இட்டுச் சுவைத்துத் தேர்ந்தெடுத்தார். அருமையான இளங்கறியை மட்டுமே எடுத்துக்கொண்டார்.

திண்ணனார் குடுமி நாதரைச் சேரப்போகிறார் என்ற செய்தியைச் சொல்ல நாணனும், காடனும் நாகனை நோக்கி விரைந்தனர். திண்ணனாருக்கு ஏதும் தெரியவில்லை. ஈசனுக்கு அபிசேகம் செய்ய சிறிது தண்ணீர் வாயிலும் , அவருக்குச் சூட்டக் கொஞ்சம் மலர்களைத் தன் குடுமியிலும் சொருகிக்கொண்டர். வில்லையும் அம்பையும் ஒரு கையில் கொண்டு இலையில் இன்னொரு கையில் இறைச்சியைக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் குடுமி நாதரை அடைந்தார்.

மேலே தனித்து விடப்பட்ட இறைவன் எப்படி இருகிறாரோ? எவ்வளவு பசியில் இருகிறாரோ? என்று எண்ணி, விரைந்து வந்தார். ஏற்கனவே இறைவன் மீது இருந்த மலர்களைத் தன் செருப்புக் கால்களால் அகற்றி, வாயில் கொண்டு வந்த நீரை இறைவன் மேல் அபிசேகம் செய்து, தனது குடுமியில் இருந்த மலர்களை இறைவன் மீது போட்டு, வில்லை ஒரு கையில் ஏந்தி தான் பார்த்துப் பார்த்துச் சமைத்த அருமையான இனிய ஊனை இறைவனுக்குப் படைத்தார். ஒருவேளை இந்த உணவு ஈசனுக்குப் பற்றாமல் போனால் என்னாவது என்று எண்ணி மீண்டும் கொஞ்சம் கொண்டு வர எண்ணிய சமயத்தில், ஆதவன் மறைந்ததால் அங்கேயே இருந்துவிட்டார்.

அடர்ந்த காடு, இருள் சூழ்ந்த பொழுது கொடுமை செய்யும் விலங்குகள் என்று இருக்கும் இந்த இடத்தில் இறைவன் தனித்து எங்ஙனம் இருப்பர் என்று அஞ்சி இரவும் பகலும் ஐயனைக் காவல் காத்துக் கிடந்தார் திண்ணனார். பல தவங்கள் புரிந்து பல காலம் காத்திருந்தும் பெற முடியாத இறைவனின் பேரருளுளைத் தன் அன்பால் பெற்றார்.

அன்றைய பொழுது இனிதே புலர்ந்தது. காலை விடிந்ததும் இறைவனுக்குப் பசிக்குமே என்று, சுவை மிகுந்த இறைச்சியைக் கொண்டுவரத் தனிவேடனாய்க் கிளம்பினர். அவர் கிளம்பிய பொழுதில், தினமும் ஈசனுக்குப் பூசைகள் செய்யும் சிவாச்சாரியார் அங்கு வந்து சேர்ந்தார். ஈசன் முன் இறைச்சித் துண்டுகளும், எலும்புத் துண்டுகளும், செருப்புக் கால் அச்சும் இருந்தது கண்டு துடிதுடித்துப் போனார். ’ஐயோ, யார் இந்த கொடுமையைச் செய்தது’ என்று மனம் நொந்து, அதை எல்லாம் பெருக்கிச் சுத்தம் செய்து முடித்துத் திருமுகலி ஆற்றில் குளித்துவிட்டு வந்தார்.
மீண்டும் தன் பூசைகளைத் தொடங்கி, வரிசைப்படி அனைத்துத் துதிகளையும் செய்து முடித்தார். பின் விடைபெற்றுத் தன் தபோவனத்தை அடைந்தார். காலையில் வேட்டைக்குச் சென்ற திண்ணனார் கொழுத்த பன்றி, கலைமான், மான், மரை , கடமை போன்ற விலங்குகளைக் கொன்றார். அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஓர் இடம் சேர்ந்தார். தீயை மூட்டி நல்ல சுவை மிகுந்த இறைச்சியை வதக்க ஆரம்பித்தார், தைக்கப்பட்ட இலைகளில் சுவை மிகுந்த இனிமையான தேனைச் சேகரித்தார். வெந்த கறியை ருசிப் பார்த்து வைத்துக்கொண்டார். அதில் தேனைச் சேர்த்தார். முன் போல இறைவனுக்கு வேண்டிய நீரையும், மலர்களையும் எடுத்துக்கொண்டு மலை மேல் ஏறினார்.

முன் போல சிவாச்சாரியர் செய்த பூஜையை அகற்றி, தான் கொண்டு வந்த இறைச்சியையும், நீரையும், மலர்களையும் கொண்டு பூசையை முடித்தார். இனிமையான இறைச்சியும், தேனும் கலந்திருக்கிறேன் முன்னையதை விட இது அருமையானது என்று கூறினார். இரவு முழுதும் இறைவனுக்குக் காவல் புரிந்தார். பகலில் வேட்டைக்குச் சென்றார். பகலில் சிவாசாரியார் வந்து பூசைகள் செய்வதும் மாலையில் அதைத் திண்ணனார் அகற்றுவதும் தொடர்ந்து நடந்தது.

இதற்கிடையில் காடனும், நாணனும் நாகனை அழைத்துக்கொண்டு திருகாளத்தி மலையை அடைந்தனர். திண்ணனாரைச் சமாதனப்படுத்தி அழைத்துக்கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் இறைவன்பால் அன்பு கொண்டு, அவர் பேரருளைப் பெற எத்தனிக்கும் திண்ணனார் அதற்கும் இசையவில்லை. வந்தவர்கள் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டனர்.

திண்ணனாரும், சிவாச்சாரியாரும் அவர் அவருக்குத் தெரிந்த வகையில் பூசையைத் தொடர்ந்தனர். ஆனால் சிவாச்சார்யார் இந்தக் கொடுமையைச் சிவனுக்குச் செய்வது யார் என்று அறிய முற்பட்டார். மனம் அதிக வேதனை கொண்டார். அதனால் இறைவன் அவர் கனவில் வந்து, ”நமக்கு பூஜை செய்யும் வேடனைச் சாதாரணமாக நினையாதே, அவன் மிகுந்த அன்பு கொண்டவன். அவன் அன்பு என்னை அடையும் அன்பு மட்டுமே, அன்பு வௌ¢ளம் பெருகியது போன்றது அவன் பூஜை, என் மகன் முருகனது காலடியை விடவும் சிறந்தது அவன் செருப்படிகள், கங்கை தீர்த்தத்தினும் உயர்ந்தது அவன் வாயில் இருந்து உமிழும் நீர், பிரம்மனும் திருமாலும் பூசித்த மலர்களினும் அவன் குடுமி மலர்கள் சிறப்புடையன, அவன் எச்சில் பட்டுச் சுவைத்த இறைச்சி தேவர்கள் தரும் அவிர்பாகத்தினும் சுவை மிகுந்தது என்று கூறினார். நாளை நீ அங்கு மறைந்து நின்று அவன் செயலைக் கண்டால் அவன் அன்பைப் புரிந்துக்கொள்வாய்” என்று கூறி மறைந்தார்.
இரவு முழுதும் உறக்கம் இன்றித் தவித்தார் சிவாச்சாரியார். காலையில் எழுந்து குளித்து முடித்து, முகலியாற்றை அடைந்து குடுமிநாதரைப் பூசை செய்து ஒரு மரத்தின் பின் மறைந்துகொண்டார். சிவாச்சாரியார் வருவதற்கு முன்பே வேட்டைக்குச் சென்ற திண்ணனார், வேட்டையை முடித்து இறைச்சியைச் சுட்டு, ருசி பார்த்து எடுத்துக்கொண்டு, மலர்களைக் கொய்து குடுமியில் சொருகிக்கொண்டு , தாமதமாகிவிட்ட படியால் ஓட்டமும், நடையுமாய் வந்தார். ஆனால் வழியில் தான் கண்ட சகுனங்கள் ஏதுமே சரியில்லை. ஆறாம் நாள் காலை முதலே சகுனங்கள் அவரைப் பயங்கொள்ள செய்தது, ஈசனுக்கு ஏதோ துன்பம் நேர்ந்ததாய் நினைத்தார். வரும் வழியில், கெட்ட பறவைகள் குருதி தோன்றுவதற்கான அறிகுறியைக் காண்பித்தன.

திண்ணனது அன்பை உணர்த்த இறைவன், தனது ஒரு கண்ணில் குருதியை வழிய விட்டார். அதைத் தொலைவில் இருந்து கண்ட திண்ணனார் ’ஐயோ என்ன கொடுமை’ என்று ஓடி வந்தார் , வந்த வேகத்தில் கொண்டு வந்த இறைச்சியையும், நீரையும் தவறவிட்டார், பூக்கள் தலையில் இருந்து சிதறி கீழே விழுந்தது. அழுது புரண்டார். செய்வதறியாது நின்றார். மலரினும் மெல்லிய மனதினராயின திண்ணனார். கடிய பாறையில் வீழ்ந்து அழுதார்.
ஈசனைக் கட்டிக்கொண்டு அழுதார். இக்குற்றத்தைச் செய்தது யாராக இருக்கும் என்று, மலை முழுதும் வேடர்களையும், கொடிய விலங்குகளையும் தேடி அலைந்தார். யாரையும் காணாது சோர்ந்து போனார். கண்ணில் குருதியை நிறுத்த மலைக்காடுகளைச் சுற்றி மருந்து கொணர்ந்து கண்ணில் விட்டார். குருதி நின்றபாடில்லை! அய்யோ என் செய்வேன் என்று புலம்பினர்….

“ஊனுக்கு உண்டான நோயை ஊனே தீர்க்கும்” என்று இறைவனின் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்குத், தன் கண்களைத் தோண்டி அங்கு வைப்பதே சரியான மருந்து என்று நினைத்தார். தன் அன்பால் கண்களைத் தோண்டி , குருதி வழிந்து கொண்டிருக்கும் கண்களில் அப்பினர். என்னே ஆச்சரியம், குருதி நின்றது. அகமகிழ்ந்து போனார் திண்ணனார். ஆகா, என்ன காரியம் செய்தேன், இறைவனின் வலியைப் போக்கினேனே என்று குதித்தார், கூத்தாடினார்.

ஆனால் இன்னும் இவரின் அன்பை உலகிற்கு உணர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டார், இன்னொரு கண்ணிலும் குருதி பெருக்கெடுத்தது. அஞ்சவே இல்லை திண்ணனார் அதுதான் மருந்து உள்ளதே. ஆனால் கலங்கினர், கண்களைத் தோண்டிய பின் இறைவனின் கண் எங்கே இருக்கிறது என்று தெரியாதே என்ன செய்வது என்று தன் காலை, வலக்கண்ணில் ஊன்றி அம்பால் தன் இன்னொரு கண்ணையும் தோண்ட எத்தனித்தார்.
ஆனால் அப்போது அன்பே இறைவனாகிய, சிவனது திருக்கரங்கள் திண்ணனாரது கைகளைத் தடுத்துக் “கண்ணப்ப நிற்க” என்று கூறி அருளினார். “என் வலப்பக்கத்தில் நிலையாக நிற்பாய் “ என்று கூறி அருளினார், தேவர்கள் சூழ் தலைவன் சிவபெருமான். இவை அனைத்தையும் மறைந்து நின்று பார்த்த சிவாச்சாரியாரும் , வானத்து தேவர்களும் பூமாரி பொழிந்தனர்.

உண்மையான அன்பில் இறைவனை அடைந்த கதை “கண்ணப்ப நாயனாருடையது” . ஆறு நாள்களில் இறைவன்பால் கொண்ட அன்பால் இறையை அடைந்துவிட்டார். சிவாய நம!

குறவஞ்சியைத் தழுவி…

காடெல்லாம் ஆண்டுவந்தான் எங்கவூரு நாகன்,
அவன் பொஞ்சாதி தத்தையும் பெத்து எடுத்தா ,
திண்ணனு ஒரு புள்ள!
கட்டுத் திட்டா வளந்தாரையா அவரும் இங்கே மண்ணில்,
வில்லு வித்த கத்து முடிச்சு ஆனாரையா தலைவர்!

கூட்டத்தோட வேட்டைக்குதான் போனாரையா அவரு,
குண்டு கொழுத்த பன்னியத்தான் கொன்னாரையா தனியா!
சுட்டுத் தின்ன நெருப்பு மூட்ட போனானங்கே காடன் !
களைப்பு தீர தண்ணி குடிக்க முகலிஆத்து பக்கம் போனார்!
விட்ட குறை தொட்ட குறையா ,
பாத்தாரையா ஈசனையும்
அன்பாலே அங்கு!

பச்சை இலயும் பூவும் போட்டு வெச்சதிங்கு யாரு?
முறச்சு பார்த்துக் காலால தட்டிவிட்டார் அவரு!
கீழ போயி இளங்கறியும் சுட்டுச் சுட்டு எடுத்து,
வாய் நெறைய தண்ணியையுமா தலை நெறைய பூவுமாவும்
வந்தாரையா இவரு !

படைச்சு முடிச்சு பாதுகாப்பா இருந்தாரையா கூட,
விடிஞ்சதுமே மறுபடியும் வேட்டைக்குத்தான் போனார்!
அங்கே வந்த பூசாரியும் பாத்தாரையா கறியைப்
பதறிபோயிப் பெருக்கித் தள்ளிச் செஞ்சாரையா பூசை!

அஞ்சு நாலு இப்படியே போனதையா நிலைமை,
பூசாரி கனவுல வந்து ஆறாநாலு நடக்கறதை மறைஞ்சிருந்து பாரு
சொன்னாறையா சிவனும்!
வழக்கம் போல வேட்டைக்குத்தான் போனாரையா திண்ணன்,
மறஞ்சிருந்த பூசாரியும் காத்திருந்தார் அங்கு!

நல்லாத் தானே இருந்தாரு சிவனும் அதுவரைக்கும்,
திண்ணன் வர நேரத்துல கண்ணுல வெச்சாரையா ரத்தம் !
பதறிப் போனான், கதறி நின்னான் வேடத் தலைவன்,
ஓடிப் போய்ச் செஞ்சதாருனு தேடி நின்னு பாத்தான் !

யாருமில்ல எங்குமில்ல அந்தக் காட்டில் அவனைத்தவிர,
ஓடிப் போயி மருந்து எடுத்துக் கண்ணுலேயே வெச்சான்!
நின்ன பாடில்லை அந்த ரத்தம் !
கண்ணுக்குக் கண்ணே மருந்தோனு ,
தோண்டி எடுத்தான் அவன் கண்ண!

ரத்தம் வழிஞ்ச கண்ணுல இவன் கண்ண வெச்சான்,
அய்யோ என்ன இது, நின்னு போச்சு ரத்தம்!
குதிச்சுப் போனான் ரசிச்சு சிரிச்சான் என்னனு சொல்லமுடியாது,
குதூகலத்துல கூத்தாடினான்!

விட்டுடு வாரா சிவனு, திரும்ப திரும்ப சோதிச்சாரு,
இன்னொரு கண்ணுல ரத்தம் வருது!
பயமே இல்ல திண்ணனுக்கு அதான் இன்னொரு கண்ணு இருக்கே!
ஆனாலும் கூட கண்ணத் தோண்டி எப்படி வெக்க?

அடையாளம் வெக்கக் கால எடுத்து வெச்சு,
அம்பெடுத்துக் கண்ணத் தோண்டும் போது !
“கண்ணப்ப நிற்க” குரலோடு சேர்ந்து
வந்தாரையா அங்கு ஈசன்!
எப்போதும் என்னோடு இரு என்று,
சேர்த்துக் கொண்டாரு அவரு !
ஆறு நாலு பக்தியிலே
ஆனாரையா நாயன்மாரா
கண்ணப்பனும் அன்று!

இறைவனைச் சேர்ந்தாரடி எங்க சாமீ அம்மே,
ஆறு நாளில் அன்பு செய்தார் உலகிலேயே அம்மே,
கல்லிலே கடவுள் கண்டார் திண்ணனார் அம்மே,
கண்ணுக்குக் கண்ணு தந்து உயர்ந்து போனார் அம்மே!

Leave a Reply