மலேசியாவின் பொய்க்கால் குதிரை – சிதனா மங்களகௌரி

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு எழுத்தாக்கத்துக்காகப் பல்வேறு நாட்டின் நடனங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்த போதுதான், நமது தென்னிந்திய நகரங்களிலும் பட்டித்தொட்டிகளிலும் ஆடப்படும் சில நடனங்கள் இங்கேயும் (மலேசியா) உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆடுகளமும் ஆடலுக்கானத் தேவையும் வெவ்வேறாகவே இருந்தாலும், அதனூடே மெல்லிய ஒற்றுமைகளைத் தௌ¢ளத் தெளிவாகவே காண நேர்ந்தது.

 

இருப்பினும் தொன்றுதொட்டுக் கலை, கலாச்சாரம், உணவு, உடை, பண்பாடு எனத் தன் பங்களிப்பை உலகம் முழுக்க தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கும் நமது முப்பாட்டனின் மண்ணிலிருந்து, இங்கே தடம் பதித்துக் கொண்டிருக்கும் இந்த நடனங்களுக்கும் இந்த மண்ணிலேயே ஆடப்படும் நடனங்களுக்கும் இடையே தென்படும் கலாச்சார அதிர்வுகளே இந்தத் தேடலை மேற்கொள்ளத் தூண்டியது!

பொய்கால் குதிரை:

குதிரை போன்ற தோற்றமுடைய கூடு ஒன்று. அதன் முதுகுப்பகுதியில் ஒரு ஆள் தன்னைப் பொருத்திக் கொள்ளும் அளவுக்கு இடைவெளி. அந்த இடைவெளிக்குள் உட்புகுந்து கொண்டு அல்லது அந்தக் கூட்டினைத் தனது இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டு, குதிரை சவாரி செய்வது போலப் பாசாங்கு செய்து ஆடப்படும் நடனமே பொய்க்கால் குதிரை நடனம்! குதிரையின் நான்கு கால்களுக்குப் பதில் இரண்டு கால்களுடனேதான் ஆட்டம் வெளிப்படுத்தப்படும்.

காலம்:

தஞ்சாவூரில் தோன்றியதாக நம்பப்படும் இவ்வாட்டத்தின் பூர்விகம் மராட்டியம் என்றும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் தென்நாட்டிற்கு வந்திருக்கலாம் என்றும் ஒரு கணிப்பு உண்டு. நடனத்தின் கருவானது ராஜபுத்திர மன்னன் ராஜாதேசிங்கு அவர்களின் புகழ், கீர்த்தி இவற்றை எடுத்துச் சொல்லும்படியாக இருக்குமாம். சில இடங்களில் புராண கதைகளே நாட்டிய கருவாகவும் அமைவதுண்டாம்.

அதே சமயத்தில் சேர சோழ பாண்டிய காலத்திலிருந்து வழக்கத்தில் இருந்து வந்த கலை இதுவெனவும், அரசவையிலும் இந்நடனம் தனக்கான இடத்தைப் பெற்றிருந்தது என்பதாகவும் கூட ஒரு செய்தியைக் காண நேர்ந்தது. எது உண்மை?

சிலப்பதிகார மாதவி ஆடிய மரக்காலாட்டம்

சிலப்பதிகார காதையில் வரும் மாதவி எனும் கதாபாத்திரம் ஆடல் கலையில் சிறந்தவள். அவள் ஆடிய பதினொரு வகை ஆட்டங்களில், துர்க்கை ஆடிய மரக்காலாடலும் ஒன்றாகும் எனும் தகவலைக் கண்ணுற்றபோது, இஃது என்ன புது பெயர் என்று தேடலில் இறங்க வேண்டியதானது. அப்படி நூல் பிடித்துக் கொண்டு போகும்போது, இந்துக்களின் பெண் தெய்வமான துர்க்கை ஆடிய நடனம் இந்த மரக்காலாடல் என்கிற செய்தி நமக்குக் கிடைக்கிறது. துர்க்கையைக் கொல்ல அவளின் எதிரிகளானவர்கள் கொடிய விஷமிகு பாம்பாகவும், தேளாகவும் உருமாறி வந்த போது, அவர்களை அழிக்க தன் கால்களில் மரத்தால் ஆனப் பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடியதாகவும், அந்தக் கணமான கட்டையினால் தாக்கப்பட்டு அந்த நச்சு ஜந்துக்கள் உயிர் இழந்ததாகவும் புராண கதைகள் வழங்கப்படுகின்றது. அது மட்டுமல்ல, பொய்க்கால் நடனம் என்ற பெயரும் துர்க்கை ஆடிய இந்த மரக்காலாடல் என்ற நடனத்தின் பின்புலனே என்பதும் தெரியவருகிறது. அந்த வகையில் இந்நடனம் சேர சோழ பாண்டிய காலத்திலிருந்தே தொன்று தொட்டு வருகிறது எனும் கூற்றினை நாம் உண்மையெனக் கொள்ளலாம்! ஒருவேளை, மராட்டியர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்தப்பின் இந்நடனம் பரவலாகப் புகழ் பெற்றிருக்கவும் கூடும்! (இந்தக் கால வேறுபாட்டினை யாரேனும் உறுதிப்படுத்தினால் நாம் ஏற்றுக் கொள்வோம்.)

இதையும் தவிர்த்து, காதலால் கட்டுண்ட தன் மகளை அந்தக் காதலனுக்கு மணமுடிக்கப் பெண்வீட்டார் மறுத்த போது, காதலன் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க, இலைகளால் ஆன பொய்க்குதிரை ஒன்றைத் தயார் செய்து, அதைக் கட்டிக் கொண்டு தெருவில் நின்று ஆடினான் எனவும் ஒரு செய்தி இருக்கிறது. இது தொல்காப்பியத்தில் வருகிற செய்தியாகும்.

நான் நேரிடையாக சந்தித்த திருமதி சந்திரா சந்திரன் என்பவர், நாகர்கோயிலைப் பிறந்தகமாக கொண்டவர். இவரின் சொந்த ஊரான தாழைக்குடியில் பொங்கல் முடிந்து வரும் திருக்கல்யாணம் எனும் வைபவத்தில், கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு விஷயமே இந்தப் பொய்க்கால் குதிரை ஆட்டம்தான் என தகவல் தெரிவித்தார். இன்றுவரை தொடர்கிறதாம் இந்த விழாவும் பொய்க்கால் நடனமும்!

குதிரை வடிவமைப்பு:

மூங்கில் தப்பைகளாலும், காகித அட்டையாலும் வடிவமைக்கப்பட்டு, எடுப்பான வர்ணங்களாலும் பட்டுத் துணிகளாலும் மற்றும் குஞ்சலம் போன்ற அலங்கார பொருட்களாலும் அழகு செய்யப்பட்ட குதிரைக் கூடே பொய்க்கால் நடனத்துக்குப் பிரதானம். இக்கூட்டினை மாட்டிக்கொண்டு ஆடும் இந்நாட்டியத்தின் சிறப்பே, கலைஞர்கள் பொய்கால்களைத் தங்கள் கால்களோடு இணைத்துக் கொண்டு ஆடுவதுதான். உற்றுக் கவனித்தால் அப்பொய்க்கால்கள் குதிரையின் குளம்பினை ஒத்திருப்பதை அறியலாம். இதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது!

ஆணும் பெண்ணுமாய் ஜோடி சேர்ந்து ராஜா ராணியாய் வேடமிட்டு ஆடும் இவ்வாட்டத்திற்குப், புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் எனப் பல பெயர்கள் இருப்பது போல, மற்ற மாநிலங்களில் இடத்திற்குத் தகுந்த பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரிசாவில் – சைத்திகோடா அல்லது கெயுதா என்றும் ஆந்திராவில் திலுகுர்ரம என்றும் அழைக்கப்படும் இந்நடனம் ராஜஸ்தானில் கச்சி கொடியெனவும், கேரளத்தில் குதிரைக்களியெனவும் நாமகரணம் பெறுகிறது!

பொதுவாக நடனக் கலைஞர்கள் நடனத்துக்கு முன்பு செய்து கொள்ளும் ஒப்பனை நாட்டார் நடனக் கலையில் வண்ணமயமாக இருக்கும். மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம் போன்ற பளபள வர்ண உடையில், ஆண்கள் தலையில் கிரீடம், இடையில் வாள் போன்ற அலங்காரத்துடனும், பெண்கள் ஒரு மகாராணிக்குறிய சகல அம்சத்துடன் கழுத்து, காதுகள் மற்றும் கரங்களில் நீள முத்து மாலை, ஜிமிக்கி, மாட்டல், கண்ணாடி வளையல், நீள ஜடையில் பல வண்ணங்களில் சுற்றிவிடப்பட்டிருக்கும் காகிதப்பூ அலங்காரத்திலும் பார்ப்போரைப் பாதி மயக்கிவிடுவர். போதாக்குறைக்குக் காலில் கொஞ்சும் சலங்கையும் நையாண்டி மேளமுமாக காண்போரின் கண்களைச் சுண்டி இழுப்பதோடு அவர்களையும் தாளத்திற்கேற்ப ஆட வைத்துவிடுகிறது இந்த நாட்டுப்புறக் கலை.

“கொக்கலி ஆட்டமென்ற
உயரக்கால் ஆட்டத்தில்
பொய் கால்களைப் பூட்டி
கொக்கின் கால் போல்
நீண்ட கட்டையோடு
ஆறடி உயரம் வரை
ஆகாயத்தில் நின்றாடும்
ஆட்டமிது தழன் கலை…”

இசைக்கேற்ப ஆண் நடன கலைஞர் பெண் கலைஞரை நோக்கி முன்னேறவும், பெண் கலைஞர் தள்ளித் தள்ளிப் போவதுமாக, பார்ப்போரை மயங்க வைக்கும் அசைவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்நடனம் கோயில் திருவிழாக்களில் தேருக்கு முன்பு ஆடப்படுவதாலும், பொதுமக்களை மகிழ்விப்பதாலும் இஃது “பொதுமக்கள் கலை”யெனவும் வழங்கப்படுகிறது.

இந்நடனத்திற்கென்று பிரத்தியேகமாக பாடல்கள் ஏதும் உண்டா எனத் தெரியவில்லை. இணையத்தில் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், சேலம் கலைக் கல்லூரி மாணவி செல்வி அனிதா ராஜேந்திரன் அவர்கள் ஒலி வடிவில் அனுப்பித் தந்த ஒரு பாடலின் சில வரிகள் பின் வருமாறு:

“வௌ¢ளக் குதிரையிலே ஐயனாரே
வேகமாய் வந்தருளும் ஐயனாரே
எல்லையில் கோயில் கொண்ட ஐயனாரே
எல்லையுண்டோ உந்தனக்கு ஐயனாரே..”

இப்படிக் காலத்தைத் தின்று காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரை நடனம் ‘கூட கேப்பாங்’ எனும் பெயரில் மலேசியா, மலாயாவாக அறியப்படுவதற்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பது செய்தி.

கூட கேப்பாங்:

ஜோகூர் மாநில மக்களின் மனங்கவர் நடனமாக இருக்கும் “கூட கேப்பாங்” (kudakepang) ஜாவாவிலிருந்து இங்கே 15ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த நடனமாக அறியப்படுகிறது. காலத்தை விழுங்கிய கலை என்கிறார்கள் இந்த கூட கேப்பாங் பற்றி அறிந்தவர்கள்! இந்த நடனம் முழுமையாக இந்தோனிசியாவின் ஜாவா வழி தோன்றல் எனவும், இசுலாமிய தாக்கம் நிறைந்தது எனவும் வரலாறு சொல்கிறது. நடனமணிகளின் ஆடைகளில் ஜாவாவின் பாரம்பரியமும், கதை நகர்வில் இசுலாமிய தாக்கமும் வெளிப்படுவதை ஆய்வாளர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

கூட கேப்பாங் – அறிமுகப் படலம்:

வாலி சோங்கோ என்பவரால் பதினைந்தாம் நூற்றாண்டில் ஜாவாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது இக்கலை. ‘வாலி சோங்கோ” இசுலாமிய மதத்தை பரப்பும் முயற்சியில் இருந்தவராதலால், பொதுமக்களை அவ்வளவு எளிதில் நெருங்க முடியவில்லை. அவர்களைக் கவர்வதற்காகவே, நடனமும் குதிரையேற்றமுமாக தன் மேல் கவன ஈர்ப்பு ஏற்படும் வண்ணம் அவர் நடந்து கொள்ள, குதிரை எனும் அவ்வளவு எளிதில் காணக்கிடைக்காத மிருகத்தால் ஈர்க்கப்பட்டு, மக்கள் இவர்பால் தங்கள் கவனத்தைத் திசைத்திருப்பச், சிறிது சிறிதாக தன் முயற்ச்சியில் வெற்றி அடைகிறார். நாளாவட்டத்தில், நிஜ குதிரையின் மறைவிற்குப் பின், மிருகங்களின் தோல், மற்றும் மூக்கில்களால் ஆன குதிரை பொம்மைகளை வடிவமைத்து இக்கலையினைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர் அக்கால குருமார்கள்.

இந்த கூட கேப்பாங் பற்றிய இன்னொரு மாயா உலகக் கதையும் உண்டு. அதாவது தனது துணையை இழந்த தேவலோக குதிரை ஒன்று, (kudasembrani) துணையைத் தேடி மத்திய ஜாவா பகுதிக்கு வந்ததாகவும், துணையைத் தேடி கண்டடைந்ததும் ஜோடியாக நடனம் புரிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும், அதன் பின்னரே இக்கலை வெளிப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நமது தென்னிந்தியாவில் பல பெயர்களில் அழைக்கப்படுவது போல ஜாவாவிலும் இக்கலை பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது! ஜாரான் கேப்பாங் (jarankepang), கூட லும்பிங் (kuda lumping), ஜாத்திலான் (jathilan), ஈபெக் (ebeg) போன்றவை அவற்றுள் சில. ஜாவா மொழியில் ஜாரான் என்றால் குதிரை என்றும் கேப்பாங் என்றால் முடைதல் (மூங்கிலால் முடைந்த குதிரை பொம்மை) என்று அர்த்தம்.

உருவமைப்பும் ஆடல் கருவும்

ஒரு குதிரை போல மூங்கில் அல்லது மிருகங்களின் தோலால் உருவமைக்கப்பட்டு, வர்ணங்களால் அழகூட்டப்படும் இந்தப் பொம்மைகளுக்குக் கால்கள் கிடையாது. இடுப்பின் பக்கவாட்டில் கட்டிக் கொண்டு, ஒரு கையால் அந்தக் குதிரையைப் பிடித்தபடியே நடனமணிகள் ஆடுவர். ஆரம்ப காலங்களில் நடனத்தை ஆட்டி வைக்கும் குருவானவர், கையில் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு, அந்த கயிற்றினை முன்னும் பின்னும் அசைத்து நடனமணிகளுக்கு அசைவுகளைச் சொல்வாராம். அனைத்து நடன அசைவுகளும் அந்த குருவின் கட்டளைபடியே நிறைவேற்றப்படும். நடனத்தின் மூல கரு, இசுலாமிய வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். உதாரணமாக நபிகளார் அவர்களும் அவரது உடனுறை பரிவாரங்களும் மேற்கொண்ட போர்களை மையப்படுத்தியே இந்நடனம் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது வரலாறு.

மாந்திரீக சக்தியும் கூடா கேப்பாங் நடனமும்
ஆதி கால நம்பிக்கையின் படி, இந்த கூட கேப்பாங் நடனத்துக்குப் பயன்படுத்தப்படும் குதிரை பொம்மைகள், ஏதோ ஒரு மந்திர சக்தியால் கட்டுண்டிருக்கின்றன. அதன் தொடர்பில், இந்த நடனம் ஆரம்பிக்கும் முன்பு ஒரு ஆன்மீக சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கு நடைப்பெறவில்லையெனில், நடன கலைஞர்களுக்கும் நடனத்தைக் கண்டு களிக்கும் பார்வையாளர்களுக்கும் தீங்கு விளையும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில், முதலில் “ஆத்மாக்களுக்கு” சாந்தி பூஜை செய்யப்படுகிறது. பின்புதான் 40 அடிக்கு 60 அடி நீள அகலமான நாட்டிய அரங்கு திறக்கப்படுகிறது.

இந்தச் சடங்கை நடத்தி வைக்கும் பாவாங் (Pavang) எனப்படுபவர் மாந்திரீக கலையில் தேர்ச்சி பெற்றவராய் இருப்பார். கூடா கேப்பாங் நடனத்தின் அதிர்வினால் தங்களின் இயல்பு நிலையின் அமைதியை இழந்து விடக்கூடிய ஆத்மாக்கள், எந்த வித தீங்கையும் இழைக்கக் கூடும். ஆகவே அந்த ஆத்மாக்களுக்கு முதலில் படையலிடுவர். படையலில், தேங்காய், அரிசி, பழுத்த வாழைக் கனி, வௌ¢ளைத் துணி, ஊசி, நூல், சாம்பிராணி, வௌ¢ளை நிறக் கோழி, நெல், முட்டை, பூக்கள் ஆகியவை வைக்கப்படும். ஆட்ட கலைஞர்கள் குறைந்தது 9லிருந்து அதிகபட்சம் 15 பேர்வரை இருப்பர். இந்நடனத்தை வழங்குபவர்கள் அனைவரும் ஆண் கலைஞர்களே!

இந்த நடனத்தின் உச்சக்கட்டமாக ஆடல் கலைஞர்கள் வினோத உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது சகஜம். எல்லா கலைஞர்களும் அப்படிச் செய்வதில்லை. ஆனால் ஒரு சிலர் தங்களை மறந்த நிலையில், திடீரென 6அடி உயரத்துக்கு குதித்து மேலெழும்புதல், கயிற்றில் தொங்குதல் போன்ற சராசரி மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களைச் செய்வர். இவர்கள் உடலில் வேறொரு ஆன்மா புகுந்து இவ்வாறு செய்யத்தூண்டும் என நம்பப்படுகிறது. இவர்களின் அந்தச் செய்கைக்கு ஏற்ப சரணை, கெண்டாங் போன்ற இசைக்கருவிகள் ஓங்கி இசைக்கப்படும். சக கலைஞர்களும் விடாது நடனமாடுவர். இல்லையென்றால், வேறொரு ஆன்மாவால் பீடிக்கப்பட்டவர்களால் சக கலைஞர்கள் தாக்கப்படுதலும் நடக்கும். வெறியாட்டம் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் போகும் பட்சத்தில், மந்திரவாதிகள் (போமோக்கள்) மந்திர உச்சாடனம் செய்து, அவர்களை ஒரு கட்டுக்குக் கொண்டு வருவர்.

கலா ரசனைக்கு அப்பாற்பட்டு, உடலுக்குள் புகுந்த தீய சக்திகளை விரட்டவும், நாள்பட்ட நோய்களைக் குணபடுத்தவும்கூட இக்கலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, நடனத்துக்குப் பயன்படுத்தப்படும் குதிரை பொம்மைகள் பாதுகாப்பாக, தனிப்பட்ட இடங்களில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிட்டால் கோபம் கொள்ளும் “பொம்மை குதிரைகள்” அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளை நடத்த விடாமல் செய்துவிடும்.

இசைக்கருவிகள்

இந்நடனத்திற்கு பின்னனி இசையாக கெண்டாங் (Gendang) முக்கிய இசைக்கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனூடே அங்லுங் (angklung,), கோங் (gong), கினோங் (kinong), ஜிடோர் (jidor) ஆகியவை வாசிக்கப்படும் வாத்திய கருவிகளாக இருக்கின்றன. ஆனால் இவையனைத்தும் ஒரே நிகழ்வில் வாசிக்கப்படுவதில்லை. கலையை கற்றுக் கொடுத்த ஆசிரியர் எந்த வகையான இசைக்கருவிகளை பயன்படுத்தினாரோ அவையே மாணவர்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும். ஆடை அணிகலன்கள் நடனக் கலைஞர்களின் விருப்பத்தைப் பொருத்தது என்றாலும்கூட அவை சீருடை பாணியில் இருக்க வேண்டியது அவசியம்.

முன்பே பார்த்தது போல, போமோ அல்லது தலைவரால், வேண்டிய பொருட்கள் படைக்கப்பட்டு, அதன் பின் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு ஆத்மாக்களைச் சாந்தி படுத்திய பின்பே ஆடுகளம் முறைப்படி திறக்கப்படும். அப்படி திறக்கப்படும் போது சில உச்சரிக்கப்படும்.

இங்கே ’NiniDayang’ மற்றும் ’Kiki Danyang’ எனப்படுபவை ஆடுகளத்தின் கண்ணுக்குப் புலப்படாத ஆதி ஆன்மாக்கள் அல்லது ஜின் என்று அறியப்படுகிறது. அந்தப் பகுதி இவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளவை. இவற்றைச் சாந்த்திப் படுத்தவே படையல் இடப்படுகிறது. இவற்றின் அனுமதியைப் பெற்ற பின்பே நடனம் அரங்கேற்றப்படுகிறது. பூமியில் இருப்பதாக நம்பப்படும் இவர்களின் அனுமதியோடு வானவீதியில் வாழ்வதாக நம்பப்படும் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய ஆத்மாக்களின் அனுமதியையும் வேண்டி, பாவாங் மந்திர உச்சாடணம் செய்வார்.

பாவாங் எனப்படுபவர் மேலுலகத்தில் வாழ்வதாக நம்பப்படும் ஆன்மாக்களை அழைத்து, தங்களின் நிகழ்வில் எந்த விதமான பங்கமும் வராமலிருக்க ஆசி புரியும்படி வேண்டிக்கொள்வார். அத்துடன் நடன கலைஞர்களுக்கும், நடனத்தைக் காண வந்திருக்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான தீங்கும் நேரா வண்ணம் காத்தருளும்படியும் வேண்டிக் கொள்வார்.

இதன் பின்னரே, கோங் எனப்படும் இசைக்கருவியை மூன்றுமுறை இசைத்து நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைப்பர். இப்படி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்படும் நிகழ்வின் போது, தன்னை மீறிய சூழலுக்குப் போய்விடும் நடனக்கலைஞரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, “பாவாங்” மந்திர உச்சாடனம் செய்வார். ஏனையோர் சம்பந்தப்பட்டவரின் கைகளையும் கால்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்வர். இருப்பினும் மொத்த நிகழ்வின் போதும் சிவப்பு வர்ண துணி முற்றாக விலக்கப்படும். கண்ணாடித் துண்டுகள் இல்லாமலும் பார்த்துக் கொள்வர். தன்னை மறந்த நிலையில் உள்ளவர் அவற்றை உட்கொண்டுவிடும் அபாயம் இருப்பதே இதற்குக் காரணம்.

பொதுவில் “கூட கேப்பாங்” என்றே இந்நடனம் வழக்கத்தில் சொல்லப்பட்டாலும், உட்பிரிவுகளாக, தாரியான் சோலோ (tarian solo), தாரியான் செலெண்டாங் (tarianselendang), தாரியான் பூச்சோக் ரெபுங் (tarianpucukrebung), தாரியான் லெங்காங் கிப்ரா (tarianlenggangkiprah), போன்றவை சொல்லப்படுகின்றன. இவை ஆடல் கலையைக் கற்பிக்கும் குருவின் பாடங்களுக்கு ஏற்ப மாறுபடும். (தாரியான் என்றால் நடனம்).

பாவாங் எனப்படும் தலைவரால் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடத்தி வைக்கப்படுவதால் அவருக்கு தட்சணை வழங்குதலும் முக்கிய அங்கமாக கொள்ளப்படுகிறது, சில சாம்பிராணி கட்டிகள், தூபக்கால், கோழி இறைச்சி மற்றும் காய்கறி கலவைகளால் சேர்த்து பிசையப்பட்ட கலவை சோறு, பலகாரங்கள், ஒரு கேட்டில் நீர் மற்றும் RM2.25 தட்சணை ஆகியவை முக்கியமாக வழங்கப்பட வேண்டிய பொருட்கள். ஒவ்வொரு முறையும் நடன அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யும் குடும்பத்தினர்., இந்த ஆட்ட குழுவிற்கு 200 ரிங்கிட் சன்மானம் வழங்குவர்.

தற்சமயம், கூடா கேப்பாங் கலை அவ்வளவு சிறப்பான இடத்தில் இல்லை என்பதைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு ஒலி/ஒளி ஊடகங்களின் தாக்கமும், சமூக வலைத்தலங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் மூல காரணங்கள் எனினும், ஆதி காலத்தின் வழிமுறையானது இசுலாமிய நம்பிக்கைக்குப் புறம்பானது எனும் பட்சத்தில், அந்நடனம் இப்பொழுது அதே பாரம்பரியத்துடன் வழங்கப்படுவதும் இல்லை. சாதாரணமாகவே மேடையில் தோன்றி, அங்க அசைவுகளுடன் அரங்கேற்றி வருகிறார்கள். இதுவும் இக்கலையின் சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. மேலும் இக்கலையை முறைப்படுத்தவும் நெறிப்படுத்தவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் தற்போது இல்லை என்பதும் ஒரு காரணியே.

நன்றி:
1. புவான் ஹனிபா – கோத்தாபாரு, கிளந்தான்
2. இஞ்சே ஹாடி – கோலாலம்பூர்
3. செல்வி. அனிதா ராஜேந்திரன் – சேலம் கலைக்கல்லூரி
திருமதி. சந்திரா சந்திரன் – கோம்பாக்

Leave a Reply