தமிழகத்தின் அடிமை முறை நூல் , பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டின் காலம் வரையிலும் தமிழ்நாட்டில் நிலவிய அடிமைமுறையை கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆகியவற்றின் துணையுடன் ஆராய்கிறது. இந் நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.
இந்நூலின் முன்னுரையிலேயே தமிழ்ச் சமுதாயத்தில் நிலவி வந்த கொத்தடிமை முறையினைப் பற்றி சொல்லுகிறபோது, அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியான், பண்புசாலியான், குடிப்பறையன், கொத்தடிமை என பல்வேறு பெயர்களில் தமிழர்களில் ஒரு பிரிவினர் அடிமைகளாய் அல்லல்பட்டு ஆற்றாது அழுது மடிந்த துயர நிகழ்ச்சிகள் மறக்க முடியாத வரலாற்றுண்மைகளாகும் என்கிறார். இத்தகைய வரலாறு இன்னும் முடிந்து போகவில்லை. இன்றும் புதிய வடிவில் பல்வேறு தொழில்களில் அடிமைநிலை நீக்கமற நின்று நிலவுகிறது என்கிறார். ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் கிடைத்த உணவை இனக்குழுக்கள் சமமாகப் பகிர்ந்து உண்டன; பட்டினி என்றாலும் பகிர்ந்து கொண்டனர். அன்று உற்பத்தி முறை மிகக் கீழாக இருந்த காலம். ஆகவேதான் ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழு மீது போர் தொடுத்த போது, தோற்றுவிட்ட போர்க் கைதிகளைக் கொன்று போட்டார்கள்.உற்பத்தி முறையில் மாற்றம் வந்தபோதுதான் தேவைக்கு அதிகமான உபரி உற்பத்தி மெல்ல மெல்ல வளர்ச்சியுற்ற போதுதான் போர்க் கைதிகளைக் கொல்லுவதற்கு பதிலாக அவர்களை உற்பத்தியில் ஈடுபட வைத்து, உபரி உற்பத்தியை மேலும் மேலும் பெருக்கினார்கள். போர்க் கைதிகள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.வேதகால இந்தியாவில் தயூ அல்லது தா என்ற சொல் முதலில் பகைவரையும், பின்னர் தாஸர் என்ற சொல் அடிமையையும் குறித்தது என்கிறார்.
சோழர் கால ஆட்சியில் அடிமைமுறை பற்றிய ஏராளமான தகவல்களை கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.காரணம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பிற்கால சோழர்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். நிலவுடமை முறை இறுக்கமடைந்த காலம். சோழர் ஆட்சி விரிவடைந்த காலம்.அடிமையை வாங்கும் போதோ, விற்கும் போதோ எழுதப்படும் அடிமைப் பத்திரத்தைக் குறிக்க ஆளோலை என்ற சொல்லைச் சோழர் காலத்தில் வாழ்ந்த சேக்கிழாரும் பயன் படுத்தியுள்ளார் என்பதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட வழக்கையை ஆய்வு செய்து கீழ்க்கண்ட முடிவுக்கு வருகிறார்.
அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது.
அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை.
அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு; இதற்கு ஆளோலை என்று பெயர்.
ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிகளின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும்.
தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையைக எழுதிக் கொடுக்கும் பழக்கம் உண்டு.
அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றங்களில் முறையிடலாம்.
தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையினை ஊரவை உறுதிப்படுத்தும்.
ஆ.சிவசுப்பிரமணியன் (ஆசிரியர்)
Categories: தமிழர் வரலாறு , Essay | கட்டுரை , Racism | இனவாதம் , மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books
Edition: 5
Year: 2012
ISBN: 9788189359089
Page: 160
Format: Paper Back
Language: Tamil
Publisher:
காலச்சுவடு பதிப்பகம்