இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு அமிர்தப் பெருவிழாவையொட்டி, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை மையப்படுத்தி, பொதிகை தொலைக்காட்சியில் நூலாசிரியர் எடுத்தியம்பிய 45 தியாகிகளின் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும். 1857-இல் மீரட்டில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம்தான் முதல் சுதந்திரப் போர் என இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னரே தமிழகத்தில் 1750-இல் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய பூலித்தேவன், அவருக்குத் துணைநின்ற ஒண்டிவீரன், தீரன் சின்னமலை, தளபதி சுந்தரலிங்கம், விருப்பாட்சி நாயக்கர், கோபால் நாயக்கர், தளி எத்தலப்பா போன்றவர்களின் தியாக வரலாறு அறியப்படாத தகவல்களைக் கொண்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய இரட்டைமலை சீனிவாசன், தாழ்த்தப்பட்டோரை தனது தலைமையில் மதுரையில் ஆலயப் பிரவேசம் செய்ய வைத்த வைத்தியநாத ஐயர், 650 ஏக்கர் சொத்துகளைப் பகிர்ந்தளித்த ஜி.எஸ்.லட்சுமண ஐயர் போன்றவர்கள் செய்த சாதனைகள் வியக்க வைக்கின்றன. வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றோர் எதிர்கொண்ட பொய் வழக்குகளும், தண்டனைகளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தியாகியாக வாழ்க்கையைத் தொடங்கி முதல்வராக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், காமராஜர், பி.சுப்பராயன், வி.எம்.உபயதுல்லா, டி.எஸ்.அவினாசிலிங்கம், என்.எம்.ஆர்.சுப்பராமன், பி.கக்கன், எம்.ஏ.ஈஸ்வரன், கடலூர் அஞ்சலையம்மாள், தேனி என்.ஆர்.தியாகராஜன், சர்தார் வேதரத்தினம் பிள்ளை, கோவை என்.ஜி.ராமசாமி போன்ற தியாகச் சுடர்களின் வரலாறு இன்றைய தலைமுறையினருக்கு வாழ்க்கைப் பாடமாகும்.