ரகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் சேது நாட்டில் நிகழ்ந்த போர், மதமாற்றம், அரசியல் என பிரமிப்பூட்டும் தகவல்களைப் புதினமாகப் படைத்துள்ளார் நூலாசிரியர். மூவேந்தர்களுக்குப் பின்பு சுதந்திரமாக ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களான சேதுபதிகள் மறவர் சீமை எனப்படும் ராமநாதபுரத்தை கி.பி. 1604 முதல் 1795 வரை ஆட்சி செய்தனர்.
1678-இல் முடிசூட்டப்பட்ட ரகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சிக் காலம் ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் போன்று நீடித்தாலும் உட்பகையால் அவரது சாதனைகளை விஞ்சி சாதனைகள் படைக்க முடியவில்லை.
சேதுபதி காலத்தில் வங்காளத்துடன் சங்கு வர்த்தகத்தையும், யாழ்ப்பாணத்துடன் அரிசி வர்த்தகத்தையும் செய்து வணிகத்தைப் பெருக்கினார். அதே காலத்தில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் மூலம் கிறிஸ்தவ மத மாற்றங்கள் மிகுந்த அளவில் மறவர் சீமையில் நடந்ததை இந்த நூல் வழி அறிய முடிகிறது. மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கரை விடுவிக்க கிழவன் சேதுபதி மேற்கொண்ட போருக்காக ‘பராஜ கேசரி’ எனும் பட்டத்தைப் பெற்றார்.
போர்க்களமும் ஆன்மிகமும் இணைந்த சேதுபதியின் வரலாறும் நாயக்க மன்னர்களின் வரலாறும் பின்னிப் பிணைந்த சரித்திரத்தின் நெடிய பக்கங்களாக உள்ளன. சேதுபதிக்கு உற்ற நண்பராக இருந்த வள்ளல் சீதக்காதியின் பொருள் உதவி மூலம் ராமநாதபுரத்தில் கோட்டை கட்டியதற்கான ஆதாரங்களை இந்நூல் கூறுகிறது.
ஒவ்வொரு பக்கமும் சுவையூட்டும் வரிகளுடன் விறுவிறுப்பாகச் செல்லும் புதினமாகவும், அதே நேரத்தில் சேது சீமையின் பல்வேறு தரவுகளை தரும் ஆவண நூலாகவும் இந்நூல் விளங்குகிறது.