காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில், தில்லைத் திருக்கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், தென்குடித் திட்டை கோயில் உள்பட பல கோயில்களின் சிறப்புகள், அருளாளர்தம் உயர்வு, அவர்களது கூற்றுகள், கம்போடிய நாட்டோடு தமிழ்க் கலாசாரத்தின் தொடர்பு, தல மரங்கள், தீர்த்தங்கள் போன்ற முழு விவரங்களை 25 கட்டுரைகளாக நூலாசிரியர் தொகுத்துள்ளார்.
திருப்பனங்காடு, நடுநாட்டு பனையபுரம், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருமழபாடி ஆகிய ஐந்து தலங்களுக்கும் பனை மரங்களே தலமரங்களாக இருக்கின்றன என்றும், திருப்போரூர் முருகன் கோயிலில் பனை மரத்தின் அடிப்பாகம் தெய்வம் உறையும் புனிதமுடையதாகப் போற்றப்படுகிறது என்றும் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். தமிழகத்தில் உள்ள சிவன் கோயிலில் இராமாயணச் சிற்பங்கள், சோழ மன்னர்கள் படைத்த கோயில்கள், அந்தக் காலத்தில் விவசாயத்தின் சிறப்பு, தமிழகச் சிற்பக் கலைகளின் சிறப்பு, என்று வரலாறு, ஆன்மிகம், தமிழ்க் கலாசாரம்… என்று பலவகைப்பட்ட நூலாக இதை உருவாக்கியுள்ளார். செய்யுள் வடிவில் சேர்க்கப்பட்ட வரிகளுக்கு அதற்கான விளக்கம் தமிழில் அழகுற தெரிவிக்கப்பட்டுள்ளதும், கட்டுரைகளுக்கு உரிய படங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதும் சிறப்பு.