பழமையான வரலாறும், சிறந்த பாரம்பரியமும், உயர்ந்த பண்பாடும். அரிய பழக்க வழக்கமும் உடைய நம் கொங்குச் சமுதாயத்தில் பல நடைமுறைகள் காலப் போக்கில் மறைந்தன. சில மாற்றம் பெற்றன. சில புதியன புகுந்தன. ஆனால் அன்றும் இன்றும் மாறாமல் நிலைத்து நிற்பது குல தெய்வ வழிபாடு ஒன்று மட்டுமே.
கொங்கு நாட்டில் உள்ள அனைத்துச் சமுதாயத்திற்கும் குல தெய்வக் கோயில்கள் உள்ளன. பலர் ஆண்டுக்கு ஒரு முறையேனும் குடும்பத்தோடு குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பலர் சுபச்சடங்குகளைத் தங்கள் குலதெய்வக் கோயில்களில் நடத்துகின்றனர். பலர் தங்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கக் குல தெய்வத்தின் அருளை வேண்டிப் பெறுகின்றனர்.
பலர் போக்குவரத்துக் குறைவு, போதிய காலம் இன்மை காரணமாகத் தங்கள் குடியேறி வாழும் பகுதியிலேயே தங்கள் குலதெய்வக் கோயிலை அமைத்து வழிபடுகின்றனர். அதற்காக மூலக் கோயில் பிடிமண் எடுத்து வந்து புதுக் கோயில் கட்டுவர்.
பல காரணங்களால் சொந்த ஊரை விட்டு வேறு பகுதிகட்கு மக்கள் குடியேறும் போது குல தெய்வத்தைக் கல் உருவில் எடுத்துச் செல்வதும் உண்டு. அதனைக் குடியேறும் பகுதியில் பிரதிட்டை செய்து கோயில் கட்டுவர்.
கொங்கு நாட்டில்தான் கோயில் திருப்பணிகள் மிகுதியாக நடைபெறுகின்றன. குல தெய்வக் கோயில்களில்தான் அவை பெரும்பாலும் நடைபெறுகின்றன. குலக் கோயில் குடிப்பாட்டு மக்கள் ஒன்றிணைந்து குலதெய்வக் கோயில்களில் அறக்கட்டளை, நற்பணிமன்றம், சங்கம் என்ற பெயரில் பொது அமைப்புக்கள் தொடங்கிப் பல சமய, சமூகப் பணிகள் ஆற்றிவருகின்றனர். இதனால் பல நன்மைகள் விளைகின்றன.
அத்தனூர்-பத்ரகாளிஅம்மன் :
இராசிபுரம் – சேலம் சாலையில் பன்னிரண்டாவது கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையின் மேல்புறம் வடக்குநோக்கி அத்தனூர் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது.
அத்தனூர் :
இராசிபுரம் நாட்டிலுள்ள 24 ஊர்களில் ஐந்தாவது ஊராக அத்தனூர் குறிக்கப்பட்டுள்ளது. அத்தன் என்பது சிவபெருமானைக் குறிக்கும் சொல். சுந்தர மூர்த்தி நாயனார் தாம் பாடிய பித்தாபிறைசூடி எனத் தொடங்கும் பாடலில் சிவபெருமானை ‘அத்தா’ என்று அழைக்கிறார். ஊர் என்பது மருதநில உழவர்கள் வாழும் இருப்பிடங் களுக்குப் பெயர். அவர்கள் ஊரன் என அழைக்கப்பெறுவர். அத்தன் + ஊர் = அத்தனூர் ஆயிற்று. ஆதன்பதி என்றும் ஒரு குறிப்புக் கூறுகிறது.
அத்தனூர் ஒரு தொன்மையான ஊர். கி.பி. 1443 ஆம் ஆண்டு கொங்கு வேளாளர்களில் விழிய குலம் சார்ந்த கரியபெருமாள் என்பவர் அத்தனூர் நான்கு எல்லைக்குட்பட்ட ஊர் முழுவதையும் இராசிபுரம் கைலாசநாதர் கோயிலுக்குக் கொடையாக அளித்துள்ளார்.
இதைக் குறிக்கும் கல்வெட்டு இராசிபுரம் கைலாசநாதர் கோயில் மகாமண்டப வட சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் அத்தனூர் கிராமத்தின் நான்குபக்க எல்லைகளும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன.